செவ்வாய், 24 ஜனவரி, 2017

நந்தினி

ஒரு போராட்டம் நடத்த எவ்வளவு வலியை, எவ்வளவு அழுத்தத்தை , எவ்வளவு துரோகத்தை , எவ்வளவு அடக்குமுறையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அறிந்திருப்பர்..
ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ, பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என அஞ்சி மறைமுக தாக்குதலை நடத்திய இந்த ஆட்சியிலேயே, (அதுவும் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் )இவ்வளவு சதிகள், அடக்குமுறைகள் இருக்கிறதென்றால், வாழும் வரை அனைவரும் அஞ்சக்கூடிய அளவில் ஆட்சி நடத்திய, மறைந்த முன்னாள் மு...தல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தனியாளாக போராடி பல முறை சிறை சென்ற இந்த பெண் போராளி நந்தினி எவ்வளவு போற்றுதலுக்குரியவர்..
22-ம் தேதி கோவை கொடிசியாவில் நடந்த ரேக்ளா பந்தயத்தின்போது இருவர் தடுப்புக்கு அந்தப்புறம் இருந்து கோஷம் எழுப்புகின்றனர்.. ஒரு பெண் காவலர் அதட்டியதும் அடங்கி பின்புறம் செல்கின்றனர்.. பின் சிறிது நேரம் கழித்து ஒரு இளைஞன்(நீல நிற சட்டை ) தடுப்பை மீறி முதல் ஆளாக உள்ளே வருகிறார்.. அவரை தொடர்ந்து வரிசையாக பலர் உள்ளே குதிக்கின்றனர்..
முதலில் குதித்த ஒரு போராட்டக்காரருக்கு துணையாக யாரும் வரவில்லை என்றால் , போராடிய சுவடு தெரியாமல் மறைந்து போய் இருக்கும்.. ஆனால் தனியாளாக இருந்து இவர் போராடிய போராட்டங்கள், மது ஒழிப்பு என்றவுடனே இவரையும் நினைவுக்கு கொண்டு வருமளவுக்கு செய்திருக்கின்றனவே...
ஒற்றை ஆளாகவும், குடும்பத்துடனும், மதுவால் பாதிக்கப்பட்டவர்களின் பெண்களுடனும், சக போராட்டக்காரர்கள் சிலருடனும் என எத்தனை முறை உண்ணாவிரத போராட்டம் இருந்திருக்கிறார்.. எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்.. மதுஒழிப்பு போராட்டத்துக்காக மறைந்த சசிபெருமாளுடன் இணைத்து இவர் எடுத்த போராட்டங்கள் எத்தனை..
இதையெல்லாம் எந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.. எவ்வளவு பேர் அவருக்கு துணையாக இருந்து போராடினோம்? அதுவும் ஆளும் அரசுக்கு சொந்தமான மது ஆலை முன்பே போராட்டம் .. நமக்கு அந்த துணிச்சல் இப்போது கூட இருக்குமா?
பெரும் குழுவுடன் இணைந்த ஒரு போராட்டமே பல சதி பின்னல்களை சந்திக்கும்போது தனியாளாக போராடி வருகிற நந்தினி எவ்வளவு சாதிகளை, அடக்குமுறைகளை கண்டிருப்பார்... அதை தாங்கிக்கொண்டு போராடும் இவர் உண்மையில் துணிச்சலான வீர மங்கைதானே.. இந்த நேரத்தில் நந்தினியை பற்றி பதிவு போடுவதை பெருமையாக நினைக்கிறேன்..
நடந்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இப்போது ஒரு நம்பிக்கையை தருகிறது.. இனி தங்கை நந்தினி எடுக்கும் போராட்டத்துக்கு பல இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும்,.. மதுவில்லா தமிழகமும் இன்னொரு போராட்டத்தின் முடிவில் சாத்தியமாகும்...
அந்த நம்பிக்கை மிகவும் பிரகாசமாகவே மின்னுகிறது...