வியாழன், 27 ஆகஸ்ட், 2015

டைரி

ஒவ்வொரு வருட ஆரம்பத்தின்போதும் கிடைக்கும் டைரிகளில் அந்த வருட நிகழ்வுகளையெல்லாம் எழுதி விட வேண்டும் என எழுத தொடங்குவேன்.. மிஞ்சி போனால் ஒரு வார நிகழ்வுகள் மட்டுமே அதில் குடி கொண்டிருக்கும்.. மற்ற நாள் தாள்கள் எல்லாம் வெறுமையாகதானிருக்கும்..  ஒரு சில டைரிகளில் மட்டும் அதன்  பிறகு ஓரிரு பக்கங்களில் ஏதுனும் வரவு செலவு கணக்கோ அல்லது முக்கிய விழாக்கள் குறிப்போடோ டைரி முடிக்கப்பட்டிருக்கும்..

டைரி எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவோடு கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் முக்கிய சம்பவங்கள், நினைவு கொள்ள வேண்டிய தருணங்கள் நிகழும்போதெல்லாம் அவற்றை  என் டைரியில் எழுத்துக்களாக நிரப்பிக் கொண்டிருக்கிறேன்...

ஒவ்வொரு நாளிலும் நடந்த சம்பவங்களை எழுதியே ஆக வேண்டும் என்ற இந்த கட்டாயத்திற்கு காரணம் என் நியாபக மறதிதான்.. பல மனிதர்கள் தந்த  ஏமாற்றங்களை , துரோகங்களை, அவமானங்களை எல்லாம் மறந்து விடுவேன், எப்போது தெரியுமா, அவர்கள் திரும்ப என்னிடம் பேச வரும்பொழுது.. அவர்கள் என்னிடம் சிரித்து பேசி விட்டால் அவேர்கள் முன் செய்த எல்லா கெட்டவைகளையும் மறந்து விடுவதில் எனக்கு நன்மையுமுண்டு, தீமையுமுண்டு..

நன்மை, அவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்கள் தரும் வலி அதன் பிறகு தெரிவதில்லை, அவை மனதிலிருந்து மறைந்து விடுவதால் நிம்மதியான மனசிலை சாத்தியமாகிறது..

தீமை, திரும்ப அவர்களிடம் இருந்தே அவற்றையே பெற நேரும்போது "எவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையே" , என என்னை நானே நொந்து கொள்ள வேண்டியும் உள்ளது..

மனக்காயங்களை தந்தவர்களை மன்னித்து மறந்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் ஏற்படுத்திய காயங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டைரி எழுதும் பழக்கம்..


இன்னொன்று கடந்த காலங்களில் நடந்த சில நல்ல சம்பவங்கள், சந்தோஷ நிகழ்வுகள் கூட  யோசித்தால் மட்டுமே நினைவில் வருவதே..

நான் இதுவரை எழுதிய டைரிகளில் பாதியளவாவது சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்தது 2001-ம் வருட டைரியில்தான்.. எனவே அவற்றை திரும்ப படித்து பார்ப்பதால் அந்த  வருடத்திய பல சம்பவங்கள் எல்லாம் மனதிற்கு அத்துப்படி.. கவலை, சந்தோஷம், நெகிழ்ச்சி என பல உணர்ச்சிகளை அந்தந்த நிகழ்வுகள் அந்த காலகட்டத்திற்க்கே நம்மை அழைத்து சென்று  ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் அப்படியே  அந்த உணர்ச்சிகளோடு நம் மனதை சேர்த்திருக்கும்.. அப்படி திரும்ப படிக்க நேரும்போது  அந்த காலகட்டத்தில் இருந்த மன ஓட்டதிற்க்கே மனம்  செல்வது ஒருவித சுகம்.. படித்து முடித்து வைக்கும்போது அந்த காலத்திலிருந்து இன்றைய காலகட்டத்திற்கு திடீரென அடி எடுத்து வைத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்..

பல முந்தைய நாட்கள், இந்நாட்களை ஒப்பிடும்போது ஏக்கத்தை கொடுப்பவையாகவே இருக்கக் கூடும்...

கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க ஒரு ஞாபகமூட்டி தேவை..

சில சினிமா பாடல்களும், சில இடங்களும், சில மனிதர்களும், சில நிகழ்வுகளும் ஞாபகமூட்டியாக இருந்து  பல சம்பவங்களை  நினைவூட்டினாலும், நம் வாழ்வை அலசி பார்க்க வைக்குமளவுக்கு ஒரு ஞாபகமூட்டி அவசியம் தேவைதான்....

"டைரி" அப்படி ஒரு சிறந்த ஞாபகமூட்டியாகவே எனக்கு படுகிறது...

புதன், 26 ஆகஸ்ட், 2015

பாபநாசம்

பாகுபலி படம் நன்றாக இருக்கிறதென்று கேள்விப்பட்டு குழந்தைகளுடன் திரையரங்கிற்கு சென்றோம்..திரையரங்கிற்கு பயணித்துக் கொண்டிருக்கும்போதே "அம்மா, சிமகாகா (சிவகார்த்திகேயன்) படத்துக்கா போறோம்" என்ற மகனின் கேள்விக்கு "இல்லடா தங்கம், நாம வேற ஒரு பைட் சீன் நிறைய உள்ள படத்துக்கு போறோம்" என நான் சொல்ல அவன் பைட்-க்கும் விளக்கம் கேட்க, அவனுக்கு விளக்கிகொண்டிருக்கும்போதே அங்கு சென்றடைந்தோம்..

ஆனால் பார்க்க சென்ற படத்தை வேறொரு திரையரங்கில் மற்றொரு நாள் சென்று பார்க்கலாம் என்று திட்டத்தை மாற்றி போடும்படி ஆயிற்று, அப்படத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பால். அதன் பின் அங்கேயே திரையிடப்பட்டு இருந்த பாபநாசம் படத்திற்கு டிக்கட் எடுத்தோம்..

ஏற்கனவே பாபநாசம் படம் நன்றாக இருக்கிறது, சென்று பாருங்கள் என நண்பர்கள் சிலர் கருத்து கூறியிருந்தனர்.. அதை பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுந்திருந்த நேரத்தில், முகநூலில் அப்படத்தைப் பற்றிய முழு கதையையும் விமர்சனமாக படித்து முடித்தபோது இனி பார்க்க சென்றால் ஒரு த்ரில் இருக்குமா என்ற சந்தேகமே பாபநாசம் படம் பார்க்கும் ஆவலை பின்தள்ளி இருந்தது.. தமிழ் தவிர மற்ற மொழி படங்களை திரையரங்கிற்கு சென்று பார்த்ததில்லை, அதற்கு ஆர்வமும் இருந்ததில்லை என்பதால் த்ரிஷ்யம் பற்றிய பேச்சு பலமாக இருந்தபோதும் அதை சென்று பார்க்கவில்லை...

படம் வெளியாகி நாட்கள் அதிகமாக ஆகி இருந்ததால் தியேட்டரில் எங்களையும் சேர்த்து 15 பேர்தான்.. ஓரளவு முழு படத்தின் கதையும் விமர்சனங்களின் வாயிலாக படித்ததுதானே, என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது என்று பார்க்க ஆரம்பித்த படம்தான்.. ஆனால் ஆரம்ப காட்சிகள் சிலவைக்கு பிறகு பட இறுதி வரை ஆர்வத்துக்கு சிறிதும் குறைவில்லாமல் படம் நகர்த்தப்பட்டிருந்தது...

படத்தில் கமலைப் பார்க்க முடியவில்லை, சுயம்புலிங்கம் தான் தெரிகிறார் என்ற விமர்சனத்தைப் படித்ததில் இருந்து கமலா, சுயம்புவா என்ற தேடல் படம் முடியும் வரை எனக்கிருந்தது.. அதிகமாக சுயம்புதான் தென்பட்டார்.. அதேபோல்தான் கவுதமி, மீனா ஒப்பீடும்.. ஒன்று புரிந்தது, அது, இனி படத்தைப் பார்ப்பதற்கு முன் முழு விமர்சனமும் படிக்கக்கூடாதென்பதே....!!!

உடைந்த மூக்கு கண்ணாடி ப்ரேம்-ஐ சரி செய்யும்போது , அதைபார்த்து மனைவி கண்டிக்க பின் அதைத் தூக்கி (உடையாதவாறு )எறியும் காட்சி, அணைக்க மறந்த மின் விளக்கை அணைக்க எழும்புதல் உள்ளிட்ட சில காட்சிகள் மனசை விட்டு அகலவில்லை..ஒரு நடுத்தர வர்க்கத்து தந்தையை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருந்தனர்..

நம் நெருங்கிய உறவு தெரிந்தோ , அறியாமலோ ஒரு குற்றத்தை புரிந்த பிறகு, சமூகத்தின் பார்வைகளுக்கும், பேச்சுக்கும் பயந்து, எப்படி யாருக்கும் தெரியாமல் அதில் இருந்து சம்மந்தப்பட்டவரை வெளிக்கொணர்வது என்ற எண்ணங்கள் மட்டுமே முதலில் தோன்றும்.. அதனாலும், அழகாக , சாமர்த்தியமாக பழியிலிருந்து வெளிவந்ததிலுமே படத்தின் வெற்றி அடங்கியிருந்திருக்கிறது...

திடீரென வருணைத் தாக்க தன் தாயிடம் இழிவாக நடக்க சொல்லுவதே காரணம் என்றாகும்போது , ஏனோ அந்த பாத்திரத்திற்கு கவுதமியின் முதிர்ச்சி தெரியும் தோற்றம் ஏற்புடையதாகவில்லை... மற்றபடி கவுதமியின் நடிப்பும், பிள்ளைகளாக நடித்த பெண்களின் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படிதான் உள்ளது..

கமலின் நடிப்புப் பற்றி சொல்ல வேண்டியதில்லை, அனைவரும் அறிந்ததே.... ஆனால் என்னை மிகவும் ஈர்த்தது, வருணின் பெற்றோர்களாக நடித்தவர்களின் நடிப்புதான்.. அதிலும் வருணின் தாயாக வரும் ஆஷா சரத்தின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அபாரம்.. அவர் மற்ற கதாபாத்திரங்களுடன் இணைந்து காணப்படும் காட்சிகளில் கூட அவரின் நடிப்பை மட்டுமே கவனிக்க வைத்து விட்டார்..

படத்தின் ஆரம்பத்தில் கிரிமினல் என காவல்நிலையத்தில் உட்கார வைத்திருக்கும் சுயம்புலிங்கம் கதாபாத்திரமே கடைசியில் தானே குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நினைப்பு கடைசியில் பொய்த்து போய், மிக அழகாக முடிந்தது..


அப்படத்தைப் பார்த்து முடித்து வெளியே வந்தும், அப்படத்தைப் பற்றிய தாக்கம் மனதில் இருந்து அகலாமல் இருந்தது.எந்த ஒரு படமுமே நம் வாழ்வியலோடு சிறிதேனும் சம்பத்தப்பட்டு நகர்த்தப்பட்டிருந்தாலே அது மக்கள் மனதில் இடம்பிடிக்கும் சிறந்த படமாக இருக்கும்..அதற்கு சற்றும் விதிவிலக்கல்ல பாபநாசம்..

நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது...

எம்ஜிஆர்

கடந்த பல வருடங்களுக்கு முன் டிசம்பர் 24-ம் தேதி-ல் நாங்கள் குடியிருந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து எங்கள் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் வைத்து இருந்தனர்.. அடுத்த காலனியில் அங்குள்ளவர்கள் ஒரு படத்தை வைத்திருந்தனர்..எங்கள் பகுதியில் எம்ஜிஆர் அவர்கள் முதல்வரானதற்கு பின் உள்ள (தொப்பி அணிந்து உள்ள புகைப்படம்) புகைப்படமும், அடுத்த தெருவில் எம்ஜிஆர் அவர்கள் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் உள்ள புகைப்படமும் வைத்து மாலை அணிவித்து இருந்தனர்.. ரெண்டு எம்ஜிஆர்-க்கு மாலை போட்டு இருக்காங்க பாத்தியா, அவங்க வச்சு இருக்க போட்டோ-ல இருக்க எம்ஜிஆர் தம்பி.. சினிமாவில் நடிச்சு இருக்கார்.. நம்ம காலனி-ல வச்சு இருக்க கண்ணாடி போட்டு இருக்க எம்ஜிஆர் அண்ணன்.. இவர் நம்ம CM-ஆக இருந்தார் என என் தோழிக்கு நான் கொடுத்த மேதாவித்தனமான விளக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது.. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும்...

அந்த எம்ஜிஆர் பின்னாளில் என் மனதிற்குள் வாழ அவரின் கொடை வள்ளலை எடுத்துரைத்த பத்திரிக்கைகளும் காரணம்.. அதுவும் வாரமலரில் அவரை பற்றி நான் நிறைய படித்ததுண்டு... அது என்னவோ என் மனதில் எளிதில் வந்து அமர்பவர்கள் தர்மவான்களே....கலைவாணர் NSK அவர்கள் , திரு.கல்யாணசுந்தரம்(தன் 30 வருட முழு ஊதியத்தையும், 10 லட்சம் ஓய்வூதிய பணத்தையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்த எளிமையான இந்தியர்)என இன்னும் சிலர் உள்ளனர் அந்த வரிசையில்....
எம்ஜிஆர் அவர்களின் தர்ம குணத்தையும் இரக்க குணத்தையும் படிக்கும்போதும், கேள்விப்படும்போதும் மெய் சிலிர்த்துப் போவேன்..இல்லையென்று கூறாமல் கொடுத்தவர்.. அவருக்கு நெருங்கிய மருத்துவ நண்பர் என நினைக்கிறேன், வெளிநாட்டில் இருந்து வரும்போது உங்களுக்கு என்ன வேண்டும் என எம்ஜிஆரிடம் கேட்டதற்கு இதுவரை எல்லோரும் கேட்டுதான் வந்திருக்கிறார்கள், நீங்கள்தான் முதன் முதலில் எனக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளீர்கள் என கண்ணீர் மல்க எம்ஜிஆர் கூறியதாக படித்த போதும், என் அண்ணனுக்கு நிறைய பிள்ளைகள், ஆனால் எனக்கு ஆண்டவன் ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லை என வருந்தியதாக படித்த போதும் என்னாலும் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை..
அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த மறைந்த நடிகர் நம்பியார் அவர்கள் மறைவதற்கு முன் எம்ஜிஆர் அவர்களுடனான சண்டை காட்சிகளை அந்த காலத்திலுள்ள சிறுவர்கள், எம்ஜிஆர்-ஆகவும், நம்பியாராகவும் எப்படி சண்டை போடுவார்கள் என குழந்தை தனத்துடன் நடித்துக் காட்டியதையும் என்னால் மறக்க முடியவில்லை.. அவருடன் இணைந்து நடித்தவர்கள், அவருடன் நெருங்கிய நட்பிலிருந்தவர்கள் என அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றவர்..
பாரபட்சம் பார்க்காமல் அன்பை செலுத்தியவர்.. ஒரு கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தவர்களிடம் மேடையில் இருந்த தடுப்பை தாண்டி, குனிந்து தானாக கைப்பட மனுக்களை பெற்றவர்.. வேறு எந்த முதல்வர் இப்படி செய்து இருக்கிறார்.. இப்படி இன்னும் பல...

அவரின் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என சொன்னாலும், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற குறையும் மனதில் நிழலாடுகிறது... உண்மையில் அவரை தரிசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... 


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்...
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்...
- கவிஞர் கண்ணதாசன்..
அப்படி சரித்திரத்தில் மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் திலகம்..  
அவரை போல் இனி எவரும் பிறக்கவும் முடியாது, அவரை போல் ஆகவும் முடியாது.... தர்மவான்கள் இறந்தும் வாழ்வர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புரட்சி தலைவர் அவர்கள்.... 

காலத்தை வென்றவர்...மறைந்தாலும் இன்றும் என்றும் மக்களின் மனதில் வாழ்வார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.....

சந்திப்பு

பழைய நண்பர்களை சந்தித்து, பழகிய அந்நாட்களை அசைபோடுவது என்பது சுகமான அனுபவம்... அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் ஒருவகையில் பாக்கியசாலிகள்.. ஏனெனில் அச்சந்திப்புகள் அவர்களுக்கு பழைய இனிமையான நினைவுகளுடன் சேர்ந்து இப்போது சந்திக்கும் தருணத்தையும் பின்னாளில் மலரும் அழகிய நினைவுகளாக அசை போட வைக்கும்... ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்கு வாழ்வின் சக்கரத்தை உற்சாகமாக ஓட்ட உதவும் ஊக்க பானமாக இருக்கும்...

அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி...நான்கு மாதங்களுக்கு முன் அவர் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.. அப்பாவுக்கு எப்படியேனும் செல்ல வேண்டும் என ஆசை.. ஆனால் நலம் குன்றி இருந்த அவரின் உடல் நிலை அப்போதுதான் சீரடைய தொடங்கி இருந்தது.. ஆதலால் என்ன செய்வது என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம்...

அவருக்கு பழைய நட்புகளை, உறவுகளை சந்திப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம்.. அதற்கு தோதான திருமண நிகழ்ச்சிகள் அவர் பிறந்த ஊரில் நடப்பதாக இருந்தால் , குடும்பத்தில் எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும் , அம்மா குடும்பத்தை பார்த்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் சென்று விடுவார்.. உடல்நிலை சிறிது முடியாமல் இருந்தாலும் அவரால் அந்த சந்தர்ப்பங்களின் போது வீட்டில் இருக்க முடியாது... இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்.. ஒருவர் அவருடன் செல்ல வேண்டும் என்ற நிலையில் அவரின் உடல் நிலை இருந்தது... எனக்கு வீட்டில் வேலை உள்ளது, பிள்ளைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ அப்பாகூட போயிட்டு வா என அம்மா கூறியதால் நான் அவரை அழைத்து சென்றிருந்தேன்...

அங்கு ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் குறித்தும், புதிய சங்க உறுப்பினர்கள் தேர்வு பற்றியும் மேடையில் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.. இந்த பக்கம் அமர்ந்து இருந்தவர்களில் சிலர் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து தங்களின் குடும்பத்தை பற்றியும், வராத நண்பர்களின் நிலை குறித்தும் , இடையில் மரணம் அடைந்த நண்பர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்...அப்பாவும் அவரின் பல நண்பர்களை சந்தித்து சந்தோசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.. சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தும் கொண்டிருந்தார்...அதில் ஒருவர் என்னிடம் , உன் அப்பாவை போல் நேர்மையான மனுஷனை என் சர்வீசில் பார்த்ததில்லை என சொன்னார்.... இதற்கு முன்னும் நான் என் அப்பாவுடன் வெளியிடங்களுக்கு செல்லும்போது வழியில் தென்படும் அப்பாவின் சில நண்பர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள். அப்போது அப்பாவை நினைத்து ஏற்படும் பெருமை இப்போதும் எட்டிப்பார்த்தது.... ஒரு முறை ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடத்துக்கு ஆய்வுக்கு சென்றபோது அப்பாவின் உயரதிகாரி அங்கு கூடுதலாக வாங்கி போடப்பட்டிருந்த டேபிள், சேர் மற்றும் பக்கெட் உள்ளிட்ட சாதனங்களை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டதாகவும், அவற்றை தன் எழுத்தின் மூலம் திரும்ப கொண்டு போய் வைக்க வைத்ததாகவும் இன்னொருவர் கூறினார்.... இப்போதும் சில விஷயங்களுக்காக பெட்டிசன் போடும் பழக்கம் அப்பாவிடம் உள்ளது என பெருமை பொங்க அவருக்கு திரும்ப கூறினேன்..

அங்கேயே வந்தவர்களுக்கு உணவும் தயாரிக்கப்பட்டு இருந்தது... உணவருந்தி கொண்டிருந்தபோது என் பக்கத்தில் அமர்ந்து இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னை பற்றியும் , நான் முன்பு வேலை பார்த்த இலாகாவில் உள்ள அவருக்கு தெரிந்த சில நபர்களை பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்.. தன் வீடு சேரன் மாநகரில் இருப்பதாக கூறினார்.. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என கேட்க எழுந்த வார்த்தையை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன்.. இந்த கேள்வியால் பிள்ளை இல்லாத சிலரது மனதை தெரியாமல் காயப்படுத்தியுள்ளேன்.. பின் வருத்தப்பட்டு அம்மாவிடம் புலம்பும்போது, முன் பின் அறியாத சிலரின் குடும்ப விவரங்களை நாம் கேட்க கூடாது .. அவர்களாக சொன்னால் கேட்டுக்கொள்ளலாம் , ஏனெனில் அதில் இழப்பு உள்ளவர்களுக்கு அவர்கள் மனதை அது காயப்படுத்தும் என அம்மா சொல்வார்..அதனால் இப்போது அந்த கேள்வியை முன் பின் அறியாதவர்களிடம் கேட்பது இல்லை... பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது அவரிடத்தில் புதிய உற்சாகம் குடி கொண்டிருந்தது....

இங்கு வந்திருக்க வேண்டிய சிலர் சில காரணங்களால் வர முடியாமலும் , போக விடப்படாமலும் இருந்திருக்கலாம்.ஆனால் அவர்களில் பலரின் எண்ணம் இச்சந்திப்பின் மீது மட்டுமே கூட இருந்திருக்கும்.. இதில் கலந்து கொள்ளாமல் விட்டத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான, சந்தோசமான பொழுதை நிச்சயமாக தவற விட்டிருக்கிறார்கள்.. நல்லவேளை உடல்நிலையை காரணம் காட்டி அப்பாவை நாங்கள் நிறுத்தவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது...

வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பயணத்தின்போது தன்னிடம் வந்து பேசியவர்களை பற்றியும், மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்களைப்பற்றியும் அப்பா சொல்லிக் கொண்டு வந்தார் .. அப்போது என் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு குழந்தை இல்லை எனவும் , வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் யாராவது குழந்தையை பற்றி கேட்டாலே மிகவும் மனமுடைந்து போவார் என்றும் கூறினார்.. நல்லவேளை நான் கேட்கவில்லையென நிம்மதியடைந்தேன்...

நியாபகச் சின்னங்கள்

வீடு முழுக்க உன் துணிகளே அடைச்சிருக்கு.. அதனால பீரோ-ல உள்ள வேண்டாததுகள வெளிய போட்டுட்டு துணிகளை பீரோவில் அடுக்கி வைன்னு நான் இங்க வந்ததில் இருந்தே அம்மா சொல்லிட்டு இருந்தாங்க... எந்த வேலையையும் சொன்ன உடனே செய்ய எனக்கு நேரம் இல்லாததால (சொன்ன உடனே செஞ்சு பழக்கம் இல்லாததுனாலன்னு நீங்க மாத்தி படிச்சுட்டா நான் பொறுப்பில்ல) பீரோ என் அம்மா சொன்ன வேண்டாததுகளை சுமந்துட்டே இத்தனை நாளா எனக்காக காத்துட்டு இருந்தது...

சரி, இன்னைக்கு அதுல இருந்த வேண்டாததுகளை அப்புறப்படுத்தி அதுக்கு ஒரு விமோசனம் கொடுக்கலாம்னு வேலையில் இறங்க ஆரம்பிச்சேன்..

அம்மா சொன்ன வேண்டாததுகள்ல முதலிடம் பிடிக்கிறது புத்தகங்கள்..

நான் படித்த துறை சார்ந்த புத்தகங்கள் என் பீரோல பின்பக்க வரிசைல அணிவகுத்துட்டு இருக்கும்.. படித்த(?) பாட புத்தகங்கள் பின்னால் வேலைக்கு போகும்போது உதவும்னு எடுத்து அடுக்கி வச்சது.. ஆனால் நான் போன வேலைகளுக்கு நான் எடுத்து வைத்த புத்தகங்களை நான் ஒருபோதும் தீண்டிக் கூட பார்த்ததில்லை.. உண்மையில் நான் படித்தது நான் பார்த்த வேலைக்கு பயன்படவில்லை என கூட சொல்லலாம்.. அனுபவத்தின் மூலமே வேலையை கற்றுக் கொண்டேன்..

இப்போ, அவைகளை எடுத்து போடலாமான்னு யோசிச்சப்போ, இனி பின்னாலே வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தா, இந்த இடைவெளியில் வேலை செய்வதில் விட்ட தொடர்பை போக்க, இந்த புத்தகங்கள் தேவைப்படுமே என்ற எண்ணம் தோனுச்சு.. உடனே அவைகள் அந்த இடத்தை தக்க வைக்க ஒத்துக்கிட்டேன்...

அடுத்த வரிசைல அவள் விகடன் இதழ்கள் 2 பெரிய பைகளிலும் , அதன் சமையல் இணைப்புகள் இரு சிறிய பைகளிலும் ஆக்கிரமித்து இருந்தன..
இதுக்கு முன்னே சொல்ல ஒரு பெரிய கதையே இருக்கு..(இதுவே பெரிய பதிவு, இதுக்கு உள்ளேயும் பெரிய கதையான்னு நினச்சு சோர்ந்து போகாதீங்க, சுருக்கமா சொல்லிடறேன்..) அந்த இதழ்களை நான் கிட்டத்தட்ட 13 வருடங்களா தொடர்ந்து வாங்கி படிக்கிறேன்.... நான் இப்போ வெளிநாட்டில் இருக்கும் நேரங்களில் என் அப்பா எனக்காக இங்கு வாங்கி வைப்பார்.. வாங்கிய புத்தகங்களை எல்லாம் (சிலது தெரிந்தவர்களுக்கு படிக்க கொடுத்து திரும்ப வந்ததில்லை..) சேமித்து வைத்துக் கொள்வேன்.. அதை வெளியில் போட மனமிருக்காது.. 7 வருடங்களுக்கு முன் நான் வேலைக்கு சென்றிருந்த சமயம், பரண் மேல் இரு பெரிய பைகளில் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் என் தந்தை எடைக்கு போட்டு விட்டார்.. இது ஒரு மாதம் கழித்துதான் எனக்கு தெரியும். அன்று நான் வீட்டில் போட்ட ஆர்ப்பாட்டத்தை பார்த்த என் அப்பா, திரும்ப எடைக்கு போட்ட கடைக்கே சென்று கேட்டிருக்கிறார்.. ஆனால் கொட்டிக் கிடந்த புத்தகக் குவியல்களில் எப்படி தேடிக் கொடுப்பது என கேட்கவும் , ஏதும் செய்ய முடியாமல் திரும்பி வந்து விட்டார்.. அதிலிருந்து தினசரி நாளிதழ்களை விலைக்கு போடும்போது கூட தப்பித் தவறி நான் வாங்கிய புத்தகங்கள் ஏதேனும் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வார்..

ஆனால் அதற்கு பின்னான காலங்களில் பலர் இரவல் வாங்கி சென்ற புத்தகங்கள் திரும்ப வராததினால் கிடைக்கும் புத்தகங்களை மட்டும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேன்.. ஆனால் சமையல் இணைப்புகளை யாருக்கும் கொடுக்காததால் அவைகள் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும்.. (அவ்வளவு சமையல் புத்தகங்கள் இருந்தும், என் அம்மாவிடம் கேட்டு எழுதி சென்ற சாம்பார், மீன்/கருவாட்டுக்குழம்பு, கறிக்குழம்பு மற்றும் புளிக்குழம்புதான் மாறி மாறி என் வீட்டு சமையல் அறையில் சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்..)

இவைகளை வெளியில் போட மனம் வரவில்லை.. காரணம் என்னதான் படித்த புத்தகங்களாக இருந்தாலும், சில வருடங்கள் கழித்து அவைகளை மீண்டும் படிக்கும்போது, ஏற்கனவே படித்த போது நிகழ்ந்த பழைய சம்பவங்கள் வந்து தாலாட்டுவதோடு, படிக்கும் விஷயங்களும் ஒரு மலர்ச்சியை கொடுக்கும்.. இதை உணர்ந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்..
வளர வேண்டிய பிள்ளைகள் இருப்பதால் எப்போதும் போல இப்போதும் சமையல் இணைப்புகளும் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டன...

அடுத்து பொன்மொழிகள்,தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஜோதிடம், என் கணிதம், அழகுக்கலை, சமையல் கலை , தன்னம்பிக்கை நூல்கள், சில நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள் , சுய முன்னேற்ற நூல்கள்,சித்த வைத்தியம், அக்குபஞ்சர் என ஒரு வரிசை.......

உண்மையில் இவற்றில் சில புத்தகங்களை மட்டுமே முழுமையாக படித்து முடித்து இருக்கிறேன்.. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்கு வரும் போதும் , இம்முறை இந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என நினைப்பேன்.. ஆனால் இங்கு வரும்போது பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் பட்டுப்புடவைகளை கூட தவறாமல் மடிப்பு கிழியாமல் இருக்க மறுபக்கம் திருப்பி மடித்து வைக்க புரட்டியிருக்கிறேனே தவிர , இந்த புத்தகங்களை அதன் பிறகு ஒரு முறை கூட புரட்டி பார்த்தது இல்லை..( இந்த முறை ஒன்னையாவது படிச்சு முடிக்கணும்..,ம்ம்ம், பார்ப்போம்..)

அடுத்து ... அடுத்து, அடுத்துன்னு ரொம்ப நீளமா இழுக்கறேன்னு சலிச்சுக்காதீங்க.... இன்னும் ரெண்டு பத்தி-தான்.....

அடுத்து முழுவதும் உபயோகப்படுத்த நினைத்து சில தேதிகளை மட்டுமே நிறைத்து இருக்கக்கூடிய டைரிகள் மற்றும் வாழ்த்து அட்டைகள்.......

படிக்கும் காலத்தில் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள்களின் போதெல்லாம் தோழிகளிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள்.. ஒவ்வொன்றை பிரிக்கும்போதும் அவர்களின் எழுத்துக்களில் உள்ள வாழ்த்து ஆயுளுக்குள் வரும் எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்தான வாழ்த்துக்களாக தோன்றும்.. எனவே அவைகள் பத்திரமாக மீண்டும் அந்த கவருக்குள் எடுத்து வைக்கப்பட்டன..

டைரி.....அன்று நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொரு முறை டைரிகளை பிரித்து படிக்கும்போதும், இன்றும் காட்சியாகி விட்டு செல்லும்.. அதே போல அதில் உள்ள பழைய தொலைந்த நண்பர்களின் காலாவதியான தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள்.... அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என தெரிந்தும், ஒரு சின்ன ஆசை, என்றேனும் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கிக் கொண்டால் தேவைப்படுமே என்று.. கல்லூரியின் கடைசி நாள் அன்று தன் நட்பின் அடர்த்தியை தாள்களில் பதிந்து விட்டு சென்ற தோழிகளின் ஆட்டோக்ராப் ஒரு டைரி முழுவதும்...

இப்படி நினைவுகளை தாங்கும் இவைகளை இழக்க எப்படி மனம் வரும்...??????????

ஆக மொத்தம் எடுத்தத எடுத்தபடியே வச்சுட்டு பீரோவ சாத்திட்டேன்..

இனியும் என் அம்மா வேண்டாதவைகளை அப்புறப்படுத்த சொல்வாங்க, அந்த வேண்டாதவைகள் என் மனதிற்கு வேண்டியவைகள் என அறியாமல்...........


கருக்கலைப்பு


பூமியில் உலவும் ஓர் உயிரை கொலை செய்வதை கொடுஞ்செயல் என எண்ணும் இந்த சமூகம்தான் வெளியுலகை காண்பதற்குள் கருவறைக்குள்ளே கொல்லப்படும் செயலை கருக்கலைப்பு என சுலபமாக கடந்து விடுகிறது..

தெரிந்தவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு தெரிந்த பெண் ஒருவரை குறிப்பிட்டு, அவருக்கு இரு குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் மூன்றாவது பிறப்பதாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் 5-வது மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதுவும் பெண்குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறினார்..

இதேபோல் திருமணமான உடனே சிறிது காலத்திற்கு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் போது குழந்தை உண்டானால் கருக்கலைப்பு செய்வது (இவ்வாறு கருக்கலைப்பு செய்துகொண்டவர்களில் பலருக்கு அதன் பின் குழந்தை பாக்கியமே இல்லாமல் போயிருக்கிறது..)திருமணத்திற்கு முன் தவறான நடவடிக்கைகளால் கரு உண்டானால் கலைப்பது என கருக்கலைப்பு ஒரு சாதரணமான விஷயமாக நம்மால் பார்க்கப்படுகிறது... சம்பத்தப்பட்ட பெண்ணே அதனால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகாத வண்ணம் அது எங்கெங்கும் சர்வசாதரணமாக நடந்து வருகிறது.. அதிலும் பெரும்பாலான பெண்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் , குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கும் அடங்கி தீர வேண்டிய நிலையிலேயே இதற்கு சம்மதிக்கின்றனர்..

பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக அரசாங்கம் கருவில் இருப்பது என்ன குழந்தை என தெரியப்படுத்த தடை விதித்திருந்தும் சில மருத்துவமனைகள் கருக்கலைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக சட்டத்தை மீறிக் கொண்டுதான் இருக்கின்றன... கருக்கலைப்பின் முழு நிலையையும் அறிந்திருக்கும் மருத்துவர்களே மனசாட்சியில்லாமல் இச்செயலை செய்து கொண்டுதானிருக்கின்றனர்..

என் விஷயத்திலேயே முதல் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே அடுத்த கரு உண்டானதறியாமல், நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதும், அங்கிருந்த மருத்துவர் ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களிற்குள்ளேயே, அடுத்த கரு உண்டாகி இருப்பதை அறிந்தவர் :கரு 3 மாதங்கள் கடந்து விட்டது, கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அபார்சன் பண்ணியிருக்கலாம், இப்பவும் கெட்டு போகல, உங்களுக்கு விருப்பம்னா பண்ணிடலாம்" என கூற , வயிற்றில் இருக்கும் குழந்தை நாங்கள் ஆசைப்பட்ட பெண்குழந்தையாக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தோன்ற மறுத்து விட்டு வந்தேன்.. ஆனாலும் எனக்கும், உடனே அடுத்த குழந்தை பிறந்தால் முதல் குழந்தை எல்லாவிதத்திலும் ஏங்குமோ என்ற எண்ணமும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமும், இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள இயலுமா என்ற எண்ணமும் சேர்ந்து அழுத்த என் பெற்றோரிடம் டாக்டர் சொன்னதை கூறினேன்.. ஆனால் என் பெற்றோர் உடனே அதை கடுமையாக மறுத்தனர்.. இன்று அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.. ஒருவேளை அவர்களும் மருத்துவர் சொன்னதையே கூறி இருந்தால் , என் வாழ்நாள் முழுவதும் அழுது தீர்க்க முடியாத ஒரு பாவத்தை செய்திருப்பேன்...

ஆம், நிறைய பேர், சம்பத்தப்பட்ட பெண்கள் உட்பட ஒரு கரு எவ்வாறு கலைக்கப்படுகிறது என்பதனை அறியாததால்தான் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கும் செயல் இங்கு மிகுதியாகிக் கிடக்கிறது... கரு ஒரு உயிர் என்ற எண்ணம் பலருக்கு இல்லாததும் ஒரு காரணம்..

இதோ கரு எவ்வாறான முறைகளில் எல்லாம் கலைக்கப்படுகிறது என படித்துப்பாருங்கள்..

1. நுணிப்பகுதி கூர்மையான, மெல்லிய குழாய் வடிவிலானதொரு உபகரணம் தாயின் கர்ப்பப்பையினுள் செலுத்தப்படும். இதனுடன் பலமாக உறிஞ்சி இழுக்கும் வகையில் இயந்திரமொன்று வெளியே பொருத்தப்படும். இது வீடு சுத்தம்செய்யப் பயன்படுத்தும் நவீன இயந்திரமொன்றைவிட 29 மடங்கு உறிஞ்சும் சக்தியில் பலமிக்கது. இவ்வியந்திரத்தை இயங்கச்செய்தவுடன் சிசுவின் உடலுறுப்புகள் யாவும் வேகமாக உறிஞ்சப்பட்டு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்படும்.

2.கூர்மையானதோர் உபகரணத்தின் மூலம் இரத்தம் வழியவழிய சிசு உயிருடன் வெட்டி வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்தெடுக்கப்படும்.

3.மயிர்பிடுங்கிபோன்றதொரு உபகரணத்தின்மூலம் சிசுவின் கைகளும் கால்களும் பிடுங்கி எடுக்கப்படும். இவ்வாறு சிசுவின் உடலுறுப்புகளனைத்தும் கர்ப்பப்பையிலிருந்து முழுமையாக நீக்கப்படும். இதன்போது அச்சிசு வேதனையை உணரும் தறுவாயிலேயே இருக்கும். வெளியே எடுத்துப்பார்த்தால் மண்டையோடு நொறுங்கியிருக்கும். முதுகுப்பகுதி ஒடிந்திருக்கும். இந்த மானக்கேடான செயலின் இறுதியில் தாதியின் பங்கு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்பட்ட சிசுவின் உடற்பகுதிகளை ஒன்றுசேர்த்து பொருத்திப்பார்த்து கர்ப்பப்பையிலிருந்து சிசுவின் முழுஉடலும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்வதாகும்.

4.தாயின் வயிற்றினூடாக குழந்தையின் இதயத்துக்கு விசஊசி ஏற்றப்பட்டு கொல்லப்படும். இது இரட்டைக்குழந்தைகள் கருத்தரித்தால் அதில் ஒரு குழந்தையைக் கலைப்பதற்கே பெரும்பாலும் செய்யப்படும். ஆனால் ஒன்றுக்கு ஏற்றப்பட்ட விசம் மற்றைய சிசுவுக்கும் பரவி இரண்டுமே இறக்கும் சாத்தியப்பாடுதான் அதிகம்.

5.குறை மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தை அது முழுமையாக வெளிப்படாத நிலையில் அதன் மண்டையோட்டின் பின்பகுதியில் சிறியதொரு துளையிடப்பட்டு உறிஞ்சு குழாயின்மூலம் மூளை முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும். பின்பு குழந்தை மரணித்தே பிறக்கும்.

இதை தெரிந்துகொண்ட பின்பாவது ஆன் குழந்தை, பெண் கூழந்தை என்ற பாகுபாடுக்காகவும், நம் வசதிக்காகவும் கருவை கொலை செய்வதை தவிர்ப்போம்..

ஆண் குழந்தைதான் வம்சத்தை வளர்த்துச் செல்லும் என்ற கருத்தையும் விட்டொழிப்போம்.. அதே போல் ஆண் குழந்தைதான் பிற்காலத்தில் நம்மை காக்கும் என்ற எண்ணமும் வேண்டாம்.. பல இடங்களில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே பெற்றோரிடம் அதிக பற்றுதலாக இருக்கின்றனர்.. அது அவர்கள் திருமணம் முடித்தாலும் மாறாது.. வயதான காலத்தில் எந்த பிள்ளைகளையுமே எதிர்பார்க்க முடியாத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என நீங்கள் சொன்னாலும் அதை நான் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன்..

அந்நிய உயிர் கொல்லப்படுவதை கேள்விப்பட்டே கண்ணீர் வடிக்கும் நாம், நம் ரத்தம் , நம் வாரிசு உலகத்தை பார்க்கும் முன்னமே நம்மாலேயே கொல்லப்படுவதை அறிந்து கொண்டு, இனிமேலாவது இக்கொடும் செயலை தவிர்ப்போம்.. நம் வயிற்றில் வளரும் ஓர் உயிரை கொன்றாலும், நம் சந்ததியினருக்கு சந்ததியினரே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்ற விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட உண்மையையும் அறிவோம்.. உலகத்தில் பிறந்ததுதான் குழந்தை என்றில்லை.. கருவறையை உலகமாக எண்ணி வாழும் ஜீவனும் ஒரு குழந்தைதான்.. கருக்கலைப்பு நடக்கும்போது அது தன்னைக் காத்துக் கொள்ள எவ்வாறெல்லாம் ஓடுகிறது என அத்துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்..

இப்பதிவின் மூலம் ஒரு சில நண்பர்களுக்காவது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் அதை விட எனக்கு மகிழ்ச்சி வேறில்லை..

தீண்டாமை

தம்பியின் திருமண விஷயம் சம்பந்தமாக நானும் என் அம்மாவும் சிவானந்தா காலனி வரை சென்றிருந்தோம்... வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள பஸ் ஷெல்டர் அருகே ஒரு பெட்டிக் கடையில் இளநீரும் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து , இளநீர் குடிக்கலாம் என அங்கு சென்று, வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்...

அப்போது கண் பார்வையற்ற ஒருவர் , சிவானந்தா காலனி பஸ் ஸ்டாப்தானே இது" என கேட்கவும் "ஆம் இதுதான், உங்களுக்கு பின்னால் பெஞ்ச் இருக்கிறது, உட்காருங்கள்" என கூறினேன்.. அவரின் வார்த்தைக்கு நான் உடனே பதில் கூறியதாலோ என்னவோ, அவர் மேலும் "பஸ் இப்படி போகுமா, இல்ல அப்படி போகுமா" என இடது பக்கத்தையும், வலது பக்கத்தையும் தம் கையால் சைகை காட்டி, தான் ரோட்டின் எந்த புறம் நின்று கொண்டிருக்கிறோம் என அறிவதற்காக கேட்டார்.. "பஸ் இங்கிருந்து காந்திபுரம் நோக்கி இடதுபுறம்தான் போகும்" என கூறியவுடன், "இங்க பெட்டி கடை இருக்கா" என கேட்டார்.. "ஆம்" என கூறியவுடன் "டீ இருக்கா" என அவர் கேட்கவும், வேறு ஒருவருக்கு இளநி சீவிக் கொண்டிருந்த கடைக்காரரிடம் "டீ இருக்கிறதா" என கேட்டேன்.. அவரும் இருக்கிறது என கூறவும், திரும்ப அந்த மனிதர் "இது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்க (ஒரு பெயரை சொல்லி- அது தெளிவாக என் காதில் விழவில்லை) கடைதானே" என கேட்கவும் "பஸ் ஸ்டாண்டுக்கு பக்கம் இருக்கறதுதான்" என கூறிவிட்டு , அவர் ரெகுலராக போகும் கடையை கேட்கிறாரோ என நினைவு வந்தவளாக, வேறு ஏதேனும் பெட்டிக்கடை அருகில் இருக்கிறதா என பார்த்தேன்.. நாலைந்து கடைகள் தள்ளி சிறு இடைவெளியில் இரு வேறு பெட்டிக் கடைகளும் இருந்தன.. அதை சொல்ல வருவதற்குள், அவர் ஸ்ட்ராங்கா ஒரு டீயும், வடையும் என கூறவும், இளநி சீவிக் கொண்டிருந்தவர், அதற்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அதை கொடுத்து விட்டு பெட்டி கடைக்குள் நுழைந்தார்..

இதனிடையே நாங்கள் சாப்பிட்டு முடித்ததால் பணம் கொடுத்து விட்டு கிளம்ப எத்தனிக்கையில், அவர் என்னிடம் "தயிர் சாதம், தக்காளி சாதம் போல் ஏதும் பொட்டல சாப்பாடு இங்க இருக்கா" என கேட்டார்.. இல்லீங்க, இங்க எதுவும் இல்லை என கூறிக்கொண்டிருந்த போது , கடைக்காரர் ஏற்கனவே போட்டு வைத்திருந்த டீயை ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் (Transparent Plastic Cup) கொண்டு வந்து அவரிடம், இந்தாங்க என நீட்டினார்.. நான் உடனே , இங்கு கண்ணாடி டம்ளர் ஏதும் இல்லையோ என கடைக்கு உள்ளே பார்த்தால், கண்ணாடி டம்பளர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..
அப்போது பிளாஸ்டிக் கப்பை வாங்கியவர், " என்னங்க இதுல கொடுக்கறீங்க" என கேட்கவும், நான் அந்த கடைக்காரரின் முகத்தை பார்த்தேன்.. அப்போது அதை நான் கவனிப்பதை பார்த்த அந்த கடைக்காரர், "குடிங்க, குடிங்க" என சொல்லி உள்பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டார்..

அதற்குள் பஸ் வரவே,அம்மா வா என அழைக்க பஸ்ஸில் ஏற சென்றேன்.. (அங்கு அடிக்கொருமுறை முறை பேருந்து இருந்தாலும், வீட்டில் சிறு குழந்தைகளை உடல் நலம் தேறி வரும் அப்பாவிடம் விட்டு வந்த பதட்டம் வேறு) அப்போது அவர், எனக்கு இதுலதான் தருவீங்களா என இரண்டு முறை பரிதாபமாகக் கேட்டது காதில் விழுந்தது..

நான் ஏறிய பேருந்து அக்கடையை கடக்கும்போது பார்த்தேன்.. வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. ஒரு வார்த்தை ஏன் இப்படி செய்கிறீர்கள் என அவரை கேட்டிருக்கலாமோ என மனம் அடித்துக் கொண்டது.. இது அந்த கண்பார்வற்றவருக்கு பழக்கமாகிக் கூட போயிருக்கலாம்.. அதனால் அவர் ஒருவேளை, இந்த சம்பவத்தில் இருந்து சீக்கிரம் மனதை நிகழ் சம்பவத்துக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கலாம்..

நமக்கே சிறிய பிளாஸ்டிக் கப்பில் சூடாக தேநீர் அருந்தும் போது கொஞ்சம் சிரமப்படுவோம்.. அப்படி இருக்க கண்பார்வையற்றவருக்கு, இப்படி பாகுபாடு பார்த்து கொடுக்கிறாரே என்ற வருத்தம் என்னை சூழ்ந்து கொண்டது.. அவர் வழக்கமாக செல்லும் கடையையோ அல்லது வேறு கடையையோ அவருக்கு காண்பித்து இருக்கலாம் என தோன்றியது... இப்படி பட்டவர் கடையில் போய் இளநீர் குடித்தோமே என்ற சங்கடமும் என்னை வாட்டி எடுக்க, பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை என் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருந்தேன்..

இதே போல் நான் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தேநீர் குடிக்க KG பக்கம் உள்ள கடைக்கு சக தோழி ஒருவருடன் சென்றிருந்தேன்.. அப்போது பசிக்குது என வயிறைக் காட்டி, ஒருவர் காசுக்காக கை நீட்டினார்.. அவரை பார்த்தால் சிறு வயதில் இருந்தே பிச்சை எடுப்பவர் போல் தோன்றவில்லை..நன்றாக வாழ்ந்து வறுமையாலோ அல்லது ஏதேனும் பிரச்சனையாலோ வீட்டை விட்டு வந்து இங்கு சுற்றிக் கொண்டிருப்பவர் போல் தோன்றியது.. வெட்டாத முடியும், வழிக்காததால் நீண்டிருந்த தாடியும், அழுக்கேறிய அவரின் ஆடையும் அவர் அப்படி வீட்டை விட்டு வந்து நாட்களாகி இருக்கும் என உணர்த்தின..

உடனே கடைக்காரரிடம் அவருக்கும், ஒரு டீயும் போண்டாவும் கொடுக்குமாறு கூறினேன்.. உடனே காசு கேட்டு வந்தவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.. (அதை நினைக்க நினைக்க இன்னும் எனக்கு மனதில் சிறு சந்தோஷம், ஆத்ம திருப்தி வரும்.... இதுக்கே இப்படி என் மனம் சந்தோஷப்படுகிறதென்றால், பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற உள்ளங்களுக்கு எவ்வளவு ஆத்ம திருப்தி கிடைக்கும்.. இது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்..)
அப்போது அக்கடைக்காரரும் இது போலவே அவருக்கும் பிளாஸ்டிக் கப்பில்தான் கொடுத்தார்.. அப்போதே இது எனக்கு நெருடியது...

அவர்கள் பார்வையில் சுகாதாரமாக தோன்றும் மனிதர்களின் எச்சில் பட்டால் அசுத்தமாகாத டம்பளர்கள் , அவர்கள் ஆளையும், உடையையும் பார்த்து ஒதுக்கும் மனிதர்களின் எச்சில் பட்டால் மட்டும் அசுத்தமாகி விடுமோ அல்லது அதை கழுவினால் கூட நோய் தோற்றும் என்ற அச்சமா இல்லையெனில் அவர்கள் குடித்த டம்ப்ளரை கழுவ அருவருப்பா?.... ஒருவேளை , அவர்களுக்கு டம்ளர்களில் குடிக்க கொடுப்பதை பார்த்தால் வேறு யாரும் டீ குடிக்க வர மாட்டார்கள் என்ற அச்சமா? (இத்தனைக்கும் அந்த கண்பார்வையற்றவர் டீசன்ட்டாகத்தான் இருந்தார்..)

எது எப்படியோ,
தீண்டாமை வழக்கம் வழக்கொழிந்து விட்டது என நாம் சொல்லிக் கொண்டிருக்கையில், பலர் இது போல ஆளை பார்த்தும், உடையை பார்த்தும் தீண்டத்தகாத காரியங்களை செய்து தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதனை சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்.....

யாசகம்

"அம்மா" என்ற ஒரு யாசக குரல் வாசலில் இருந்து கேட்டாலே, அந்த குரலின் கரகரப்பை வைத்தே அந்த குரலுக்கு சொந்தக்காரரான அந்த வயதான பெண்மணிதான் யாசகம் கேட்டு வந்து இருக்கிறார் என உறுதி செய்து கொள்வோம்... அவரின் அந்த திகைப்பூட்டும் குரலைப் போலவே அவரின் தோற்றமும் பார்த்தவுடன் பயமுறுத்தக் கூடியதாகவே இருக்கும்..

பொதுவாகவே யார் யாசகம் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காசு கொடுப்பது அப்பாவின் வழக்கம்.. ஆனால் உழைக்க முடியாத நிலையிலுள்ளவர்கள், வயதானவர்கள் வந்தால் அவர்களின் நிலையை காரணியாக எண்ணி யாசகம் இடலாமே ஒழிய ,உழைக்க வலு இருந்தும் பிச்சை கேட்பவர்களுக்கும் , பிச்சை கேட்கும் குழந்தைகளுக்கும் காசு போடுவதில்லை என்ற என் தீர்மானமோ சில இடங்களில் ஆட்டம் கண்டு விடுவதும் உண்டு... பேருந்து நிலையங்களில் சில குழந்தைகள் பசிக்குது என காசு கேட்பார்கள் அவர்களின் தாயை சில அடி தூரம் பின்னால் வைத்துக் கொண்டே.. சில்லறை இல்லை என அனுப்பினாலும் கையை பிடிப்பார்கள், காலில் விழுவார்கள், உடையை பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.. அவர்களின் இச்செயலால் அங்கு உள்ள பலருக்கும் நான் காட்சிப் பொருளாகியிருப்பேன்... எப்படியோ விட்டால் போதும் என காசு கொடுத்து அனுப்பிய சம்பவங்களும் உண்டு.., நன்றாக உள்ள சிலருக்கு கொடுக்காததால் அவர்களிடமிருந்து திட்டு வாங்கிய சம்பவமும் உண்டு...

மேலே குறிப்பிட்ட பெண்மணியை காணும்போதெல்லாம் எனக்குள் வருத்தம் குடிக்கொள்ளும்.. குடும்பம் , குழந்தைகள் இருக்குமா, அப்படி இருந்தும் இந்த தள்ளாத வயதில் இவர் பிச்சை கேட்க அவர்களே காரணமாக இருப்பார்களோ என எண்ணியதும் உண்டு.. ஏனெனில் வயதானவர்கள் பிச்சை எடுத்தால் வீட்டில் அவரை கவனிக்கவில்லை போல என்ற எண்ணமே நம்முள் தலை தூக்கும்.. நான் சூலூரில் பணி புரிந்து கொண்டிருந்த நேரம்.... பணி முடிந்து பேருந்து நிலையத்துக்கு ஒரு தெரு வழியாக திரும்பிக் கொண்டிருந்த வேளையில் என் எதிரே, சிறு அழுக்கும் இல்லாத வெள்ளை நிற வேட்டி , சட்டை அணிந்த ஒரு வயதானவர் தலையில் ஒரு சில்வர் சம்படத்தை வைத்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்.. உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவர் திடீரென பக்கத்தில் வந்ததும், டீ சாப்பிட காசு கொடும்மா என கூனிக் குறுகிக் கேட்கவும் நான் மெல்ல அதிர்ந்துதான் போனேன்.. எப்போதும் நான் பேருந்து ஏறுவதற்கு முன்பே காசை கையில் வைத்திருபேன் என்பதால் என் கையில் இருந்த 10 ரூபாயை உடனே நீட்டினேன்.. தான் பெறுவதை மற்றவர் பார்த்து விடுவார்களோ என்ற அவஸ்தையில் உடனே அதை பெற்றுக் கொண்டு வேகமாக என்னை கடந்து போனார். பேருந்து நிலையம் வந்து அடையும் வரை அவரின் மருமகள் (நல்ல நிலையில் உள்ள வயதானவர்கள் யார் இப்படி கேட்டாலும் முதலில் நாம் தப்பாக நினைக்கும் கதாபாத்திரம் மருமகள்தானே) சரியாக கவனிப்பதில்லையோ, மனைவியை இழந்திருப்பாரோ என்றே என் சிந்தனை இருந்தது...

நான் முன்னர் கூறிய வயதான பெண்மணிக்கு , நான் வீட்டில் இருக்கும்போது எப்போது அவர் வந்தாலும் நானே சென்று காசு கொடுப்பேன், அப்பா அப்போது இருந்தாலும் கூட என்னிடம் காசு கொடுத்து கொடுக்க சொல்வார்.. அப்போது காசை பெற்றுக் கொண்டு இரு கைகளையும் கூப்பி விட்டு பேசாமல் சென்று விடுவார்.. ஒரே ஒருமுறைதான் காசு கொடுக்கும்போது , தோசை என்கிட்டே இருக்கு, அதுக்கு ஏதாவது குழம்பு கிடைக்குமா என கேட்டார்.. வீட்டில் அன்று சுண்டைக்காய் குழம்பு.. அதை கொண்டு சென்று கொடுக்கும்போது தோசைக்கு இது நல்லா இருக்காதும்மா, சோறு கொண்டு வரட்டுமா என கேட்டேன்.. உடனே அவர் முக மலர்ச்சியுடன் இதே போதும்மா என சிரித்தவாறு பெற்றுக் கொண்டு திரும்பினார்.. அதுவே நான் அவரை பார்த்த கடைசி முறை என நினைக்கிறேன்.. இனி பார்ப்பேனா என தெரியவில்லை..

கடந்த முறை கோவை சென்றபோது அப்பாவிடம் அந்த பெண்மணி இப்போது வருவதுண்டா என கேட்டேன்.. இப்போது அதிகம் வருவதில்லை, ஒருமுறை ரயில்வே கேட் பக்கம் பார்த்தேன், ஒரு பெண்ணுக்கு சில்லறைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. அந்த பெண் சென்றவுடன் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு காசு கொடுக்க போனேன்.. காசை கொடுத்து விட்டு, சில்லறைகளை அந்த பெண்ணிடம் கொடுத்து ரூபாய் நோட்டு வாங்குவீர்களா என கேட்டேன்.. அதற்கு அவர், அது என் பொண்ணுங்க, புருஷன் இறந்துட்டான் , சின்ன பிள்ளைகளை வச்சுட்டு கஷ்ட படுது, அதுதான் நான் எனக்கு கிடைக்கிற காசை அவளுக்கு கொடுப்பேன் என கூறியதாக அப்பா என்னிடம் கூறினார்.. அதிலிருந்து தள்ளாத வயதிலும் தன மகளுக்காகவும் பிச்சை எடுக்கும் அந்த அம்மாவின் மேலுள்ள பரிவு மேலும் அதிகமானது..

உக்கடம் , காந்திபுரம் பேருந்து நிலையங்களில் அந்த முதியவர் பிச்சை கேட்டு வருவதை நான் வேலைக்கு சென்று கொண்டிருந்த காலம் (ஐந்து வருடங்களுக்கு முன்) வரை அதிகம் பார்த்திருக்கிறேன்.. 50 , 55 வயதிருக்கும்..காலில் ஒரு சின்ன கட்டு போட்டிருப்பார், கையில் ஒரு தடி வைத்து ஊன்றி நடந்து வருவார்.. ஆரம்பத்தில் அவருக்கு நான் காசு கொடுத்திருக்கிறேன்.. ஆனால் அவரை நன்றாக கவனிக்கும்போது பெரிதாக நடக்க முடியாமல் எல்லாம் இல்லை, அது மட்டுமல்லாமல் அந்த காயம் இன்னுமா ஆறாமல் இருக்கும் என்ற சந்தேகம் எழவே அப்போதிருந்து அவருக்கு காசு கொடுப்பதை விட்டு விட்டேன்.. ஒரு முறை அப்பாவிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது , அவரின் மேலும் சில அங்க அடையாளங்களைக் கூறி அவர்தான் என உறுதி படுத்திய பின்பு அவரைப் பற்றி கூறினார்.. அவரின் மகன்கள் இப்போது சொந்தமாக ஹோல்சேல் செருப்புக்கடை வைத்து நல்ல நிலையில் இருப்பதாகவும், இப்போது பிச்சை எடுக்க போக வேண்டாம் என அவர்கள் வற்புறுத்தியும், கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டும் , இப்படி கிடச்ச காசுலதான் உங்களை வளர்த்தேன் , இப்ப என்னால் பிச்சை எடுப்பதை விட முடியாது என மறுத்து , அவர் அதை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்   கூறினார்..

ஹும்ம், என்ன சொல்றது...அப்படி ஒருவர் , இப்படியும் ஒருவர்...

உமா சங்கர் ஐஏஎஸ்

சமீப செய்திகளில் எங்கும் நிறைத்து வழிந்து கொண்டிருக்கிறார் திரு.உமா சங்கர் ஐஏஎஸ்.... எதனால் என்ற செய்தி அறிந்திருந்தும் ஈடுபாடு காட்ட ஏனோ மனம் வரவில்லை நேற்று தந்தி டிவி-யின் "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியை யூ டியூபில் பார்க்கும் வரை....

அரசு அதிகாரங்களில் இருப்போர் மதத்தை மற்றவர்களுக்கு பரப்பக் கூடாது என்ற கேள்விக்கு அவரால் நியாயமான பதில் சொல்ல முடியவில்லை... அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவை முன்னிறுத்தி மட்டுமே அதற்கான பதில் கூற முற்படுகிறார்... அந்த பிரிவும் சாதாரண மக்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசு பொறுப்புகளில் உள்ளோருக்கு பொருந்தாது என்ற தெளிவும் அவரை தெளிவு படுத்தவில்லை...இதை விடுத்து அவர் இப்படி மாறுவதற்கான காரணங்களை குறித்து ஆராயும்போது உண்மையில் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது...

நேர்மையான அதிகாரியாய் இருந்த காரணத்தால் பல இடமாற்றங்களுக்கும், தற்காலிக பணியிடை நீக்கத்திற்கும், தகுதி , திறமைக்கேற்ற பணி கொடுக்கப்படாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.. மன அழுத்தம் உச்சத்தில் இருந்த சமயத்தில்தான் ஆறுதலுக்காக ஏற்கனவே தன் தாயாரின் மூலம் சிறிது பழக்கப்படுத்தப்பட்டிருந்த கிறித்துவ வேதபுத்தகத்தை கையிலெடுக்கிறார்.. அதை வாசிக்கும்போது அவருக்கு தேவைப்பட்ட ஆறுதல் அங்கு கிடைக்கிறது.. வேத புத்தகத்தில் உள்ள வாழ்க்கைக்குள் சுழன்று கொண்டிருக்கிறார்.. வெளியுல பிரச்சனைகளை பார்க்க பிடிக்காமல் அதில் இன்னும் ஊன்றி போகும்போது அதை மற்றவர்களுக்கும் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார்.. இது அவர் அந்த விவாதத்தின்போது பைபிளை எடுத்து அதில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டி பேசும்போதே நன்கு புரிந்தது.. பெரும்பாலும் கிருத்துவத்தில் அதிக நாட்டமிருந்து அதை தீவிரமாக பிரசங்கிப்பவர்கள் அப்போதுதான் மற்ற மதங்களிலுருந்து அதனுள் நுழைந்தவராகவே இருப்பர்... இப்படி வேறு எதிலாவது போய் ஆறுதல் தேடுமளவுக்கு அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் அவர் பந்தாடப்பட்டிருக்கிறார்..

ஆனால் வேதாகமத்தால் அவர் ஆறுதல் படுத்தப்பட்டிருக்கிறாரே ஒழிய முழுதாக இன்னும் மீண்டு வரவில்லை.. 25 வருட ஐஏஎஸ் சர்வீசில் தனக்கு ஐந்தரை வருடம் மட்டுமே தகுந்த வேலை பார்க்க விட்டிருக்கிறார்கள், மற்ற வருடங்களில் எல்லாம் நேர்மைக்காக தகுந்த பணி கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்ற அவரின் வேதனையான விரக்தியான பேச்சே இதற்கு சான்று... மேலும் தாம் தலித் என்பதால்தான் தனக்குரிய அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கப்படவில்லை என்பதும் அவருக்குள் இருக்கும் வருத்தம்.. ஜாதி குறித்து அவர் சொல்லும் இக்கருத்து எனக்கு ஏற்புடையதாகப் படவில்லை..

இவரை பற்றி அறிந்துகொள்ளும்போது எனக்கு என் தந்தைதான் நினைவுக்கு வந்தார்.. அவரும் தம் பணிக்காலத்தில் நேர்மையாக இருந்ததால் பதவிக்குரிய வேலை கொடுக்கப்படாமல் அழைக்கழிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.. அப்போது ஆறுதலுக்கு திரு.உமா சங்கர் கிருத்துவத்தை கையிலெடுத்தது போல் இவர் மதுவை கையிலெடுத்து இருந்தார்.. என் எதிர்காலம் குறித்தோ , என் தம்பிகளின் எதிர்காலம் குறித்தோ அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கவலை இல்லை.. ஏனெனில் தாம் எந்த பாவமும் செய்யவில்லை, அதனால் தம் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்ற எண்ணமே அதற்கு காரணம்.. அதைப் பல இடங்களில் தன் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆதலால் குடும்ப கஷ்டங்களால் அவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கவில்லை.. சில இடங்களுக்கு என் தந்தையுடன் செல்லும்போது அவருடன் பணிபுரிந்த சிலர் அவரின் நேர்மையை பற்றி பெருமிதமாக சொல்வர்.. அதே எண்ணிக்கைக்கு குறையால் சிலர், என்ன பதவி.. எப்படி இப்போது இருந்திருக்கலாம்.. பிழைக்கத் தெரியாத மனுஷனா இருந்துட்டார்மா என சொல்வர்... அப்போதெல்லாம் என் தந்தையின் பதில் "பாவப்பட்ட காசு என் பிள்ளைகளின் ரத்தத்தில் இல்லை" என்பதாகத்தான் இருக்கும்..... பின் தன் பதவிக்காலம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்துதான் அவர் மதுப்பழக்கத்திலிருந்து மீள முடிந்தது.. ஆனால் தனக்கு உரிய வேலை கொடுக்கப்பட்டிருந்தால் தன் அறிவுக்கு தமிழகம் முழுதும் அறியும் அளவுக்கான பெரிய பதவியில் வந்திருப்பேன் என்ற ஆதங்கம் இன்றும் அவருள் உள்ளது...

நேர்மையாக இருக்கும் ஒரு சிலர் கூட, அவர்களின் நேர்மை வேறு சில அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ பாதிக்கும் வண்ணம் இருந்தால், அவர்களால் தகுதிக்கு ஏற்ற பணி கொடுக்கப்படாமலும், தேவையற்ற இடமாற்றங்களாலும் அவதிக்குள்ளாகின்றனர்... நேர்மையின் பரிசான மன உளைச்சலை பெற்றுக்கொண்டு அதனால் ஓரிருவர் வேலையை விட்டே கூட செல்கின்றனர்.. வேலையை விடமுடியாத சூழ்நிலையில் உள்ள அவர்களில் ஒரு சிலர்,வேறு பல ஆறுதல் வழிகளைத் தேடுகின்றனர் அல்லது அதற்குள்ளேயே அடைபட்டு, இதை சகித்துக் கொண்டு நேர்மையை மட்டும் கைக்கொண்டு அந்த மன அழுத்தத்துடனேயே மனதளவில் நடை பிணமாகவே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்..

நேர்மையான திறமையான அதிகாரியாய் இருந்ததால் பல அவதிகளுக்கு உள்ளாகி இன்று இந்த நிலையில் இருக்கிறார் திரு.உமா சங்கர் ஐஏஎஸ்.. இப்போது கூட தன் தகுதி, திறமைக்கேற்ற பணி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உள்ளது.. தான் அதிக வேலை இல்லாமல் இருப்பதால்தான் பிரசங்கத்திற்கு செல்கிறேன், 14, 15 மணி நேரங்கள் உழைத்துக் கொண்டிருந்த தாம் வேலை இன்றி முடங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்..
ஆதலால் இப்போது எழும்பியிருக்கும் சர்ச்சையில் அவரை குறை கூறாமல் அதற்கு பின்னணியில் உண்டான காரணத்தை சரிசெய்ய முற்பட வேண்டும்.. ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை இந்த நாட்டில்...

ஊழலும் லஞ்சமும் இருக்கும் காலம் வரையிலும் இந்த உமா சங்கர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்..

மது என்னும் எதிரி

நான் இந்த பதிவில் சொல்லப்போகிற ஒருவனை நீங்கள் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் நெருக்கமானவருடனோ தினசரி பார்த்துக் கொண்டிருப்பவருடனோ அல்லது அறிமுகமே இல்லாத ஒருவருடனோ பார்த்திருப்பீர்கள்..... ஒருவேளை உங்களுக்கு கூட அவன் எப்போதாவது சந்தித்துத் கொள்ளும் நண்பனாகவோ அல்லது தினமும் சந்தித்துக் கொள்ளும் நெருங்கிய நண்பனாகவோ இருக்கக்கூடும்.... 

இவன் உங்களுக்கு சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திலோ அல்லது துக்கத்தில் உழன்று கொண்டிருக்கும்போதோ ஏதேனும் ஒரு நண்பரால் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பான்... அதன் பின்னான நாட்களில் உங்கள் சூழ்நிலையை பொறுத்து அவன் உங்களுக்கு நெருக்கமான நண்பனாகவோ அல்லது எப்போதாவது தேவைக்கு மட்டும் பழக்கம் கொள்ளும் நண்பனாகவோ மாறி இருப்பான்...

ஆரம்பத்தில் அவன் உங்களுடன் பழக்கமாகி இருக்கும்போது அவனுடனான நட்புறவை உங்கள் குடும்பத்தினரிடமோ, தெரிந்தவர்களிடமோ மறைத்திருப்பீர்கள் . ஆனால், அவர்களுக்கு தெரியாமல் அவனுடனான நட்பை வளர்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள்...

அவன் உங்கள் நெருங்கிய நண்பனான பிறகு உங்களின் சுய மரியாதையை பல இடங்களில் , ஏன் உங்கள் வீட்டில் கூட இழந்திருப்பீர்கள்...நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும்,, எவ்வளவு பணம் கொண்டிருந்தாலும் அவனிடம் கொண்டுள்ள நட்பால் சமுதாயத்தால் மட்டமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்......

உங்களின் இந்த நட்புறவால் உங்கள் குடும்பத்தினர் நிம்மதியிழந்து போயிருப்பர்.... அவர்கள் இந்த நட்பை விட சொல்லி எவ்வளவு வற்புறுத்தி கெஞ்சி இருந்தாலும் அதை தொடர்வதற்கு என்று ஏதேனும் காரணத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள்... உங்களின் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காத நிலை உருவாகும்... உங்கள் பிள்ளைகளின் தவறையும் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையை அந்த நண்பன் உருவாக்கி விட்டிருப்பான்..... உங்களால் உங்கள் குடும்பம் சில நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாமல் வெட்கி குனிய வேண்டி இருக்கும்...

இறுதி கட்டமாக தீராத நோயைக் கொடுப்பான்... அந்த நோயினால் நீங்கள் துன்புறும்போது உங்கள் குடும்பத்தினரிடமே ஆறுதல் வார்த்தைகளை விட வசவு வார்த்தைகளையே கேட்க வேண்டி வரும்..... ஒரு கட்டத்தில் தனி மரமாக்கப்படுவீர்கள்......

பதிவின் பாதியிலேயே அவன் யாரென ஊகித்து இருப்பீர்கள்.... ஆம், தமிழகத்தில் இளவயதினர் முதல் முதிர் வயதினர் வரை அனைவரையும் சுலபமாக தன் வலையில் வீழ்த்தி வரும் மது என்னும் அரக்கனை பற்றிதான் சொல்கிறேன்.....

உங்கள் குடும்பத்தினருக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டுமென நீங்கள் விரும்பினாலும், சமூகத்தில், குடும்பத்தில் உங்கள் மதிப்பு சரியாமல் இருக்க வேண்டுமென்றாலும், முக்கியமாக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க விரும்பினாலும் இந்த மது என்னும் புதைகுழியில் சிக்கியிள்ளோர் அதிலிருந்து மீண்டு வாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்காகவாவது அதிலிருந்து வெளிவர பாருங்கள்.

மற்றவர்களின் வற்புறுத்தலும், அறிவுரையும் இந்த பழக்கத்திலிருந்து உங்களை மீட்டெடுக்காது. உங்கள் மனமாற்றமும், மனக்கட்டுப்பாடும் மட்டுமே இதிலிருந்து மீள வழி வகுக்கும்...

உங்கள் வாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இல்லை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் உங்கள் கையில்..... யோசித்து முடிவெடுங்கள்........

வாழ்க்கை நல்லபடி வாழ்வதற்கே...

கற்பனை

சிலரின் அழகிய கற்பனைகள் 
முடங்கியே கிடக்கின்றன
அவர்களை போலவே....!!!!
       
                          ----XXXX----


சில சமயம் 
நம் கற்பனைகளை நாமே
கொன்று விடுகிறோம் 
அது வேறு ஒருவரின் 
படைப்புகளாகியிருப்பதால்....!!!


                        -----XXXX---

பரிணாம வளர்ச்சி

விளை நிலங்கள்
பரிணாம வளர்ச்சியில்
கட்டிடங்களாகின
நாளை உன் சந்ததிக்கு
கல்லும், மண்ணும்தான்
உணவென்று
சொல்லாமல் சொல்லி.....!!!

வாக்குவாதம்

வாக்குவாதத்தில் ஜெயித்து
வாய்மையின் உச்சியில்
நிற்பதாய் இறுமாப்படைகிறாய்
நீ உச்சத்தில் போனது 
வாய்மையினால் அல்ல
வார்த்தைகளால் ஏணியமைத்து
என்பதனை மறந்து....!!!!

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பூ

வெள்ளியன்று பர் துபாயில் உள்ள இந்து கோவிலுக்கு சென்றிருந்தோம்.. அங்கிருந்து கிளம்பும்போது அங்குள்ள ஒரு கடையில் ஒரு வாரத்துக்கு வைப்பதெற்கென மொத்தமாக மல்லிகைப்பூ வாங்கி வந்தோம்..
பூ என்றால் கொள்ளை இஷ்டம் எனக்கு.. அதிலும் மல்லிகை பூ என்றால் கேட்கவே வேண்டாம்.. நீளமான பின்னலிட்ட ஜடையில் இரண்டு மடிப்பாக பூக்களை முன்பக்கம் சிறிது விட்டு தொங்க விட்டுக்கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நெடுநாளைய கனவு.. ஆனால் துரதிருஷ்டம் பாருங்கள் முன்பக்கம் எவ்வளவு நீளத்துக்கு பூவை  தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும் என ஆசைபடுவேனோ அந்த அளவுக்கு கூட முடி வாய்க்காததுதான்..... அங்கிருந்தபோது இருந்த முடிக்கும் இங்கு வந்து முடிவு வந்தது இங்குள்ள தண்ணி வாயிலாக..ஆனால் , மிக நெருங்கிய வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் என் ஆசையை சவுரி முடி தீர்த்து வைக்கும்..
நேற்று இங்கு உள்ள ஒரு பெரிய மாலுக்கு செல்வதென முடிவெடுத்தோம்.. கிளம்பும்போதே பூ சூடிக்கொண்டு போக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.. பூவை சூடபோகும்போதுதான் , போவது பெரிய மால் ஆயிற்றே, அங்கு இந்தியர்களின் , குறிப்பாக தமிழர்களின் வருகை மிக மிக குறைவு.. ஒரு காட்சிப்பொருள் மாதிரி ஆகி விடுவோமா என்ற எண்ணம் எழுந்தது.. கணவரிடம் கேட்ட போது இதுல என்ன இருக்கு , அதெல்லாம் ஒன்னும் இல்ல , பூ வச்சுக்கோ ,என்று சொல்ல எனக்கும் வைத்து , பெண்ணுக்கும் சிறிது வைத்து விட்டேன்..
அங்கு சென்று எங்களுக்கு தேவையான பொருட்களை விசாரித்து வாங்கும் வரை மற்றவர்களின் பார்வையில் வித்தியாசம் தெரிகிறதா என கவனிக்க எண்ணம் எழவில்லை.. பின் மால்-ஐ சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு சில பெண்களின் பார்வை , குறிப்பாக நம் தமிழ் பெண்களின் பார்வை எதேச்சைக்கு பிறகு திரும்பவும் என்னை பார்க்குமாறு தெரிந்தது.. தொள தொளவென்று சுரிதார் அணிந்து, எவ்வளவு முடியோ அதை நுனி வரை பின்னலிட்டு இருந்த ஓரிரு பெண்களை பார்க்க நேர்ந்தபோது , இவர்கள் இங்கு இப்போதுதான் வந்திருக்கிறார்கள் போல என நான் எண்ணியதுண்டு.. என் எண்ணம் இப்படி இருக்க,என்னைப் பார்த்த பெண்களில் ஒருவருக்காவது அந்த எண்ணம் தோன்றுவது இயல்புதானே என்று பட்டது.. நான் என் உடல்வாகுக்கு பொருத்தமான சுரிதார்தான் அணிந்து சென்றேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
இதை என் கணவரின் காதுக்கு கொண்டு சென்றபோது நம்ம பாரம்பரியத்தை விட்டு கொடுக்க கூடாது, முக்கியமா அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நினைக்கவே கூடாது என்றவரிடம் , ரெண்டாவது பாயிண்ட் சூப்பரோ சூப்பர், அதுபடி நேரா போய் ரெண்டு ஜீன்ஸ் டாப்ஸ் எடுக்கறோம் என நான் சொல்ல, உடை சம்பந்தப்பட்ட தன் பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டார்..
ஒரு இடத்துக்கு தகுந்தபடிதானே உடையும், அலங்காரமும் இருக்க வேண்டும்.. அதிகம் வெளிநாட்டவர்கள் கூடும் இடத்துக்கு, பூ இவ்வளவு வைத்துக் கொண்டு வந்தது(என் கூந்தலுக்கு(!!!) அதிகம் என நினைக்கிறேன்) தவறோ என்ற எண்ணம் எழுந்தது.. நான் பார்த்த தமிழர்களில் என்னைத் தவிர்த்து இரண்டு பெண்கள்தான் சுரிதார் அணிந்திருந்தார்கள்.. நவீன நாகரீகம்அவர்களின் சிகையில் தெரிந்தது.. அவர்கள் என்னைப் பார்த்த பார்வையில் சொல்லத் தெரியாத ஒன்று தெரிந்தது..
பின் அங்குள்ள KFC -யில் சிக்கன் சாப்பிட்டு விட்டு வாஷ் ரூமுக்கு சென்ற போது அங்கிருந்த தன் முகத்துக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த அரபு பெண் ஒருவர் சில நொடிகளுக்கு பின் , ஆங்கிலத்தில் , இந்த பூ எங்கு வாங்கினீர்கள் எனக் கேட்க நான் இடம் சொல்ல , அவ்வளவு தூரமா என அவர் மறு பதில் கூறவே அருகாமையில் சில மால்களில் கிடைக்கும் விவரத்தைக் கூறினேன்.. நானும் சிலர் பூ வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன், விசாரிக்க வேண்டும் என்று எண்ணுவேன் என சொல்லி, நைஸ் என்று புன்னகைத்தவாறு முடித்துக் கொண்டார்.., நானும் நன்றி சொல்லி விட்டு திரும்பினேன்..
சில நிமிடங்களுக்கு முன் இருந்த எண்ண அலைகள் இப்போது அடியோடு மாறி இருந்தன..

புதன், 5 ஆகஸ்ட், 2015

விசித்திரம்

கனவின் தடம் அறியாமல்
பயணித்துக் கொண்டிருந்த
வாழ்க்கையொன்றில்  
பெரும் மன சண்டைக்கு பின்
பிரிந்து சென்ற உறவுப்பெண் ஒருத்தி
பாசத்தோடு தோள் பற்றி நடக்கிறாள்...!!!

அவளுக்கு இம்மியளவும்
பரிச்சயமில்லாத
என் நெடுநாள் தோழியை
பற்றிய பேச்சோடு
வார்த்தைக்கு வார்த்தை
புன்னகைக்கிறாள்......

அவளின்  குதூகலம்
என்னையும் தொற்றிக்கொள்ள 
அதை பிரதிபலிக்க
பேச்சின் நடுவே
அவள் முகம் காண்கிறேன்...!!!

அங்கே அவள் முகம் மாறி
என் நெருங்கிய தோழி
அவள் பாத்திரமேற்றிருக்கிறாள்...!!!!

அப்போதுதான்
சுற்றியும் கவனிக்கிறேன்
முன்பு அளவளாவிக் கொண்டிருந்த
இடமும் மாற்றம் எடுத்திருக்கிறது...!!!

ஆளும் இடமும்
மாறி மாறி குழப்பினாலும்
கண்ணாமூச்சி காட்டும்
கனவு வாழ்க்கைதான் வேண்டும்
என உள்மனம் எதிர்பார்க்க
இவையனைத்துக்கும்
நேரெதிரான வாழ்க்கை
விடியலின் கூடவே
விழித்தெழும்  உண்மையை
விழிப்புத்தான் உணர்த்துகிறது...!!!