வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஜெ.தீபா



அப்பல்லோ-வில் ஜெ.வின் உடல்நிலை நிலவரத்தை சசிகலா மறைத்தது , ஜெ. வின் மரணத்தின்போது ஜெ.வால் வெளியே விரட்டப்பட்டவர்கள் அவர் உடலை சூழ இருந்தது , அதை பார்த்துக்கொண்டு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பாமல் இருந்தது போன்றவைகளை பார்த்து கோபம் , விரக்தி , நம்பிக்கையான தலைமையின்மை என்ற பல சூழலில் சிக்கித் தவித்தார்கள் அதிமுகவின் உண்மை தொண்டர்கள்..

தலைமையை இழந்து , நம்பிக்கையான தலைமை கிடைக்குமா என தொண்டர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் , சசிகலாவை எதிர்த்துக் கொண்டிருந்த தீபாவை தன் தலைமையாகஏற்க முடிவெடுத்தார்கள்..

சசிகலாவால் ஜெ.இறுதி சடங்கின் போதும் கூட விரட்டப்பட்டதும் , ஜெ. மறைவின் போது நிருபர்கள் அரசியலுக்கு வருவீர்களா என தீபாவிடம் கேட்ட கேள்விக்கு தீபா தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக கூறியதும், ஜெ.வின் அண்ணன் மகள் என்பதும் , மக்கள் வெறுத்த சசிகலா கூட்டத்தை எதிர்த்ததும் , முக்கியமாக அடிமட்ட தொண்டர்களின் கருத்துப்படி ஜெ.வின் சாயலிலேயே இருந்ததும் என தீபாவை தொண்டர்கள் ஏற்க பல காரணங்கள் இருந்தன..

அரசியலுக்கு வருவேன், எப்படி என பின்னால் அறிவிப்பேன் எனக் கூறி வந்தவர் தன் முடிவை சொல்வதற்கு இறுதி நாளாக ஜெ.வின் பிறந்தநாளைக் கூறினார்.. இடையில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து அதே நாளில் ஓபிஎஸ்-உடன் ஜெ.நினைவிடத்துக்கு வந்து இன்றிலிருந்து தன் அரசியல் பயணம் போவதாக அறிவித்தார்..

இது எல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம்..

தீபா அரசியலுக்கு வர தகுதியானவரா? உண்மையிலேயே அவர் சொல்வது போல் ஜெ.விற்கு எதிரானவர்களை துரத்திவிட்டு நல்ல ஆட்சி கொடுக்கத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா?

ஆரம்பத்தில் ஜெ.வின் அண்ணன் மகள் என்ற காரணத்துக்காகவும் , உருவ ஒற்றுமையின் காரணத்துக்காகவும் தொண்டர்கள் அவரை தேர்ந்தெடுத்த போது பொதுமக்கள் பலருக்கு பிடிக்கவில்லை.. ஆனால் எம்ஜிஆர் ஆரம்பித்து இதுநாள் வரை ஜெ. வழி நடத்தி வந்த அதிமுக என்னும் பெரிய கட்சி சசிகலா அன்ட் கோ.வால் அழியும் என்ற நிலை வந்த போது தொண்டர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை பிடிப்பான தீபாவை பொதுமக்கள் சிலரும் ஆதரித்தார்கள்..

ஆனால் அதன் பின்னான அவரின் அரசியல் நடவடிக்கைகளில் வேகம் இல்லை.. ஜெ.வின் பிறந்தநாளுக்கு பிறகுதானே தன் கருத்தை சொல்லப் போகிறார் என்பதால் அவரின் அசாதாரண வேகக் குறைவை யாரும் பொருட்படுத்தவில்லை .. ஆனால் அவர் பெயரில் தொடங்கப்பட்ட பேரவை மூலம் தொண்டர்கள் பல கூட்டங்களை கூட்டி வந்தனர்.. ஓபிஎஸ்-உடன் இணைந்து அதிமுகவின் இரு கரங்களாக செயல் படுவோம் எனக் கூறியவரின் நடவடிக்கைகள் அதன் பின்னான நாட்களிலும் பெரிதாக இல்லை.. இந்நிலையில் புது கட்சி அறிவிப்பு..

இடையில் அவர் அரசியல் செய்வதற்கு பல பிரச்சனைகள் தமிழகத்தில் எழுந்தன.. ஆனால் அதற்காக அவர் பெரிய அளவுக்கு பரபரப்பாக அறிக்கை கூட விடவில்லை.. பொது பிரச்சனைகளை விடுங்கள்.. ஜெ.வின் மர்ம மரணம் குறித்த அப்பல்லோ முன்னாள் பெண் மருத்துவரின் சாட்சி தீபா பேரவை மூலமே வெளியே கொண்டு வரப்பட்டது..

ஜெ.வுக்கு ரத்த சம்பந்தமில்லாத பல கோடி மக்கள் அவர் மரணத்தின் மர்மம் குறித்து அறிய முனையும் போதும், வெளிவரும் தகவல்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுதல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதும், ரத்த சம்பந்தமுள்ள ஒருவர் , அதுவும் ஜெ.வின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் ஒருவர் அந்த சாட்சியை கொண்டு அரசியலுக்காகவேனும் பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்திருக்க வேண்டுமே..

ஜெ.வின் பெயர் கொண்டு அரசியலுக்கு வரும் ஒருவர் , தனக்கு ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றாலும் அக்கட்சி தொண்டர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விசாரணைகளை வேண்டி முதன் முதலாக கொடுத்திருக்க வேண்டுமே..

மட்டுமல்ல , ஜெ.வின் தோழி ஜெ, மர்ம மரணம் குறித்து கொடுத்த வழக்கையும் ,சின்ன அத்தை(சசிகலா ) மேல் கொடுத்த வழக்கை வாபஸ் பெற கூறியதாகவும் ஜெ.வின் தோழி கீதாவே கூறி இருக்கிறாரே..( இணைப்பு : முதல் கம்மெண்ட்டில் )

மேலும், அவருக்கு எதிலும் நிலையான புத்தி இல்லை என்றும் கூறி இருக்கிறார்.. அது இந்த இரண்டரை மாத காலத்தில் அவரின் பல அரசியல் நிலையில்லாபாட்டில் உறுதியாகியுள்ளது..

அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் வெளியே வந்ததும் தீபாவுக்கிருந்த பெரும் மக்கள் செல்வாக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது.. இனி தனி கட்சி தொடங்குவதாக கூறி இருப்பினும் அதிமுக அழியக்கூடாது என நினைக்கும் பல தொண்டர்களின் மத்தியில் இது வரவேற்பை பெறாது .. அவர்கள் அதிமுகவை காக்க ஓபிஎஸ் வந்ததாகவே கருதுகிறார்கள்.. அதிமுகவிலேயே தீபாவும் இணைந்திருக்க விரும்புகிறார்கள்..

அவர் அரசியலுக்கு வந்ததே ஜெ.. வழிநடத்திய அதிமுகவை வளர்ப்பேன் எனக்கூறிதான்.. அதை விடுத்து தனி கட்சி ஆரம்பிப்பதாக கூறி இருப்பது , அதிமுகவை , ஜெ.வின் தனக்கு பின்னும் நூறாண்டு அதிமுக இருக்கும் என்ற சூளுரையை புறக்கணித்து தனக்கிருந்த அரசியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. (அவருக்கு சிறுவயதிலிருந்தே அரசியல் ஆசை இருந்ததை அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார்..)

எப்படியோ அவரின் மன விருப்பப்படி ஜெ.வின் மறைவு அவரை எந்த போராட்டமுமின்றி மக்களின் மூலமாகவே அரசியலுக்கு வரவழைத்து விட்டது.. இதற்கு மேல் அவர் அரசியலில் தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் கள பிரச்சாரம் , சூடான , உண்மையான அரசியல் பேச்சுகள் , மக்களுக்கான போராட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்க வேண்டும்..

இப்போது போல நமக்குத்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே , அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என நினைத்துக் கொண்டு ஆறிப்போன நேரத்தில் பேட்டிகளை மட்டும் கொடுத்தால் , மக்கள் ஆதரவு தனக்கிருக்கிறது என நம்பி வந்து, அரசியலில் காணாமல் போன பிரபல முகங்கள் போல இவரும் காணாமல் போய் விடுவார்..

23-2-2017

சனி, 18 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பும், போராட்டத்தின் கூடிய நாடகமும்

சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருதலுக்கு முன்பே , கூவத்தூர் விஷயத்தை பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதும்,   ரகசிய  வாக்கெடுப்பை நடத்தக்கோரிய திமுகவினர் மற்றும் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை ஏற்க மறுத்தபோதே சபாநாயகர் ஒரு பக்கம் சார்ந்திருக்கிறார் என்பது  புலப்பட்டு விட்டது..
பின் சிறிது நேரத்தில் திமுகவினர் ரகளை எனும் செய்தியை அறிந்து அந்த காட்சிகளை பார்த்தபோது  அவர்களின் வழக்கமான வெளிநடப்பும் நினைவில் வந்து  எதற்கு இப்போது தேவை இல்லாமல் இந்த ரகளை என தோன்றியது..
ஆனால் உடனேயே அந்த எண்ணம் மாறாத தொடங்கியது.. ஏனெனில் கட்டுக்கோப்பாக சசி ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளே அழைத்து வரப்பட்டனர் எனும் செய்தியை ஸ்டாலின் கூறியதாகக் கேட்டதும், அவர்கள் அனைவரும் ஆதரித்துதான் வாக்களிக்கப் போகின்றனர் என உறுதியாகி விட்டது..  ரகசிய வாக்கெடுப்பும்  நிராகரிக்கப்பட்ட நிலையில் (அதே நேரம்தான் கூவத்தூர் விடுதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட செய்தியும் வெளிவந்தது)இவர்களின் ரகளை  இன்னொரு நாளுக்கு வாக்கெடுப்பை ஒத்தி வைக்குமே என்ற எண்ணம்தான் காரணம்..
இன்னொரு விஷயம் , தற்போதைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமில்லாத எதற்காகவும்  போராட மாட்டார்கள்.. வாக்கெடுப்புக்கு முந்தின நாளே எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவு இல்லை என திமுக கூறியது.. ஆனால்  முன்பு கூறியது போல ஓபிஎஸ்-க்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பதை முந்தின நாள் கூறவில்லை.. ஏனெனில் இப்படி சொன்னால் சசி ஆதரவு எம்எல்ஏக்களில் சிலர்(எல்லோரும் வர மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்ததால் )  சற்று குழம்பி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வரலாம். அப்போது இரு பக்கமும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கலைக்கப்படலாம் என்பது திமுகவின் எண்ணமாக இருந்திருக்கும்.. எல்லா அரசியவாதிகளும் எந்தவொரு விஷயத்திலும் அரசியல் பண்ணத்தான் பார்க்கிறார்கள் என்பதால் திமுகவின் இந்த  எண்ணத்தில் பெரிதாக தவறு இருப்பதாய் தெரியவில்லை..
ஓபிஎஸ்-ஐ கட்சி சாராத மக்கள் கூட  திடீரென ஆதரித்ததன் பின்னணி இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சி அதிமுக-தான் ஆள வேண்டும் எனும் பட்சத்தில் சசி க்ரூப்-க்கு ஓபிஎஸ் எவ்வளவோ பரவாயில்லை, அடுத்த தேர்தல் வந்தால் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதால்தான்.. ஆனால் ஓபிஎஸ்-ன் கடந்த அரசுமுறை செயல்பாடுகள், சசி எதிர்ப்பு (தாமதமானாலும் கூட), ஜெ மரணம் குறித்த விசாரணை பலருக்கு பொதுமக்கள் பலருக்கு அவர் மீதுள்ள மதிப்பை இப்போது உயர்த்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
 ரகசிய வாக்கெடுப்பும், வாக்கெடுப்பு ஒத்திவைப்பும் மறுக்கப்பட்டதால் , எப்படியேனும் ஆட்சி கலைக்கப்பட்டு வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.. மக்களின் எண்ணமும் அதே எனும் பட்சத்தில் , மக்களில் பலரிடம்  அவரின் செயல் வரவேற்பைத்தான் பெற்றுத்தந்தது..
ஆனால் திமுகவின் இவ்வளவு ரகளைகளின் போதும் அதிமுகவினர் பொம்மை போல உட்கார வைக்கப்பட்டதில்தான் அவர்களின் அரசியல் சாணக்கியம் வெளிப்பட்டது.. அரசியல் மதிநுட்பம் அறிந்த யாரோ ஒருவரால் நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டு அழைத்து  வரப்பட்டிருக்கின்றனர்.. மேலும் சபாநாயகரும் ஒருதலைபட்சமாக இருந்ததால்  திமுகவின் எண்ணம்  பலிக்கவில்லை..
அதன்பின் இருமுறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு , வலுக்கட்டாயமாக திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.. கடைசியாக ஸ்டாலின் வெளிவரும்போது , அவரின்  சட்டை கசங்கி,  சட்டையின் மேல் பட்டன்கள் அவிழ்க்கப்பட்டு எல்லோரும் அவரின் கோலத்தை உற்றுநோக்கும்படி காட்சி அளித்தார்.. பொதுமக்கள் பலரின் மத்தியில் அவரின் மதிப்பு சடாரென உயர்ந்தது.. சட்டசபைக்குள்ளும் ஓபிஎஸ்-க்காக ஸ்டாலின் போராடினாரே என விவரம் புரிந்து கொள்ளாதவர்களின் ஆதரவும் பெருகி இருந்தது..
அதன்பின் ஆளுநர் மாளிகை செல்லப் போகிறேன் எனக்கூறிவிட்டு கிளம்பினார்.. பின் ஆளுநர் மாளிகை அருகே எல்லா பட்டன்களும்  அவிழ்க்கப்பட்டு  வண்டியிலிருந்து அவர் இறங்கிய கோலத்தைப் பார்த்ததும் , முன்பு அவர் கோலத்தை பார்த்திருந்த பலரும் ஏமாற்றத்தை உணர்ந்தனர்.. சட்டை பாக்கெட்டின் ரகசியமும் ஊடகங்களின்  வாயிலாக வெளிப்பட்டதும் அவரின் மதிப்பு சடாரென இறங்கிப்போனது..
பின் மெரினாவில் தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் உட்கார்ந்தார்.. உடனே நிறைய தொண்டர்களும் கூடி விட்டனர்.. சான் டிவி-யில் வேறு ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர் எனும் செய்தியை போட்டனர்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல பொதுமக்கள் கூடினால் இது கட்சி சார்ந்த கூட்டமாகத்தானே எடுத்துக் கொள்ளப்படும் என்ற கவலை வேறு எழுந்தது. அந்த எண்ணத்தை பிரதிபலிப்பது போல் சற்று நேரத்திலேயே சன் டிவியில் ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான திமுகவினர் கூடி இருக்கிறார்கள் என்ற செய்தியும் வாசிக்கப்பட்டது.. சிறிது நேரத்திலே கைது நடவடிக்கைகளால் அனைத்தும் மறைந்து போனது..
 2009 -ல் திமுக மீது எழுந்த ஒட்டுமொத்த வெறுப்பை சமீப காலங்களாக ஸ்டாலின் தன்  நடவடிக்கைகளால் மறக்க வைத்து நல்லபடி வளர்ந்து வந்தார்.. நேற்றும் சட்டசபை வளாகத்திற்குள் திமுகவினரின் வாகனங்கள் அனுமதிக்கப்படாதது , சட்டசம்பையில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் என தன் மதிப்பை கூட்டி இருந்தார்..
ஆனால் ஊடகக் கண்கள் நிறைந்த இவ்வுலகில் எதை செய்தாலும் மறைவாக,சரியாக செய்ய வேண்டுமென தளபதிக்கு புரியவில்லை.. தன்னை உற்று நோக்கும் கண்களை பற்றிய சமயோசித புத்தி இல்லாத காரணத்தால் உண்மைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய மக்களின் மனதில் தன்னை பற்றிய எண்ணத்தில் கொஞ்சம் அதிகமாகவே சறுக்கியிருக்கிறார் தளபதி...

-19-2-2017

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

சசிகலாவின் 33 வருட அரசியல் அனுபவம் (???)

இன்று வெளிவந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெ.வும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் அவர் இப்போது  உயிரோடு இல்லையென்பதால் , சசிகலா அன்ட் கோ.,-விடம் இருந்து தப்பித்தோம் என்ற நினைப்பிலும் தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் இருந்தாலும் ஒரு சுனாமி-யில் இருந்து தப்பித்த ஆசுவாசம் இருக்கிறது..

உண்மையில் மக்களுக்கு அவர் மீதுள்ள கோபம் எல்லாம் 91 -96  ஆண்டு கால அராஜகம் பற்றியல்ல.. ஜெ-வின் மரணம் குறித்த மர்மத்துக்கும் , அதன் பின்னான அவரின் செய்கைகளை பற்றியும்தான்.. 91 -96  ஆண்டு கால அராஜகம் குறித்து மக்களுக்கு நினைவும் இல்லை. புதிய புதிய நடப்புகளுக்கு  அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்வார்கள்..

இதோ இப்போது கூட சசிகலாவை  எதிர்த்து யார் ஓபிஎஸ் பக்கம் வந்தாலும் நம் மக்கள் அவர்களை நல்லவர்களாக நினைத்துக்கொள்கின்றனர்.. இப்போது அவர்கள் சொல்லிக்கொள்கிற காரணங்கள்தான் இரு மாதங்களாக நாம் சொல்லிக்கொண்டிருந்தோமே, அப்போது அமைதி காத்தார்களே என நாம் யோசித்துப்பார்க்கவில்லை.. நம் மனது அப்படி..

அது போல எப்படியெல்லாம் அரசியலில் சசிகலா காய் நகர்த்தியிருந்தால் (நீதிமன்றத்தில் வழக்கு இல்லாதிருந்தால் முதல்வராகக் கூட ஆகி இருக்கலாம் ) குறைந்தது அதிமுக தொண்டர்களின் பரிதாபமாவது  அவருக்கு  கிடைத்திருக்கும் என பார்ப்போம்..

ஜெ. மறைவுக்கு பின்பிருந்து ..(அப்போதுதானே தன்னை பிரதானப்படுத்தி வெளியே வருகிறார்)
1 . ஜெ. வுக்கு அருகில் கவலை படிந்த முகத்தோடு அப்பல்லோவில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கலாம்.. (செப்டம்பரில் ஜெ. மரணமடைந்திருக்காத பட்சத்தில்)

2 . ஜெ-வின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் போது தன் சொந்தங்கள் எவரையும்  உள்ளே விடாமல் தனியே ஆதரவில்லாதது போல் தொடர்ந்து கண்ணீர் நாடகத்தையும் நிகழ்த்தியிருந்தால் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும்..

3 .  ஜெ-வின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் போது காண வந்த ஜெ. அண்ணன் மகள் தீபாவை மக்கள் பார்க்கும்படி முதுகில் தட்டிக் கொடுத்து ஆதரவளித்து, அங்கே இருக்க விட்டிருந்தாள் , இப்போது தீபா பேரவைக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது.. அடுத்தநாள் இருந்து மறைமுகமாக முதலில் அனுமதிக்காதவாறே விலக்கி வைத்திருக்கலாம்..

4 .  ஜெ. மறைந்த ஓரிரு நாட்களிலேயே போஸ்டர்களிலும் பிளெக்ஸ்-களிலும் தன் முகத்தையும், சின்னம்மா பிரகடத்தனத்தையும் வெளிப்படுத்துவதை தாமதப்படுத்தி இருக்கலாம்..

5 . ஜெ. மறைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ,  ஜெ.வுடன் தான்  வாழ்ந்த வீட்டில் , அக்காவின் நினைவுடனேயே வாழ  மனம் விரும்பினாலும் , சட்டப்படி அதற்கு வழியில்லை என்பது போல கண்ணீர் சிந்தி பேட்டி கொடுத்து வெளியேறி இருக்கலாம்.. குறைந்த நாட்களிலேயே அம்மாவின் உண்மை தொண்டர்களே சசிகலாவை உள்ளே உட்கார வைத்திருப்பார்கள்..

6 .  ஜெ. மறைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவிக்கு அலைவதில்  முனைப்பு காட்டுவதை நிறுத்தி , தான் என்னவெல்லாம் செய்தால்  தன் மீது மக்கள் இரக்கப்படுவார்கள் என யோசிப்பதில் முனைப்பு காட்டி இருக்கலாம்..

7 . பொது செயலாளர் பதவியில் உட்கார்ந்த பிறகாவது, ஜெ.வின் வீட்டில் ஜெ.அமர்ந்த இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுக்காமலும், ஜெ.வின்  வண்டியில் ஜெ. இருக்கையில் அமராமல் பின்னால் அமர்ந்தும் ஜெ.வின் அலங்காரங்களை கைக்கொண்டிருக்காமல் இருந்திருந்தாலும் கூட கொஞ்சம் எதிர்ப்பை தனித்து இருக்கலாம்..

8 . கொஞ்ச நாட்கள் மேற்கூறியவாறே தொடர்ந்து இருந்து முதல்வர் ஓபிஎஸ்-க்கு கெட்ட பெயர்கள் பல வரவைத்து, மக்களிடம் அதிருப்தியை  சம்பாதித்துக் கொடுத்த பிறகு , தன் எடுபிடிகள் மூலம் தன்னை முதல்வராக்க விரும்புவதாக சொல்ல வைத்திருக்கலாம்..

9 . மக்கள் நிச்சயம் முதல்வராக்க ஆதரவு தந்திருப்பார்கள்..  ஜெ.விடம் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை தானே  நினைவு படுத்தி, இரு நாட்கள் மறுப்பது போல் மறுத்து வந்திருந்தால் போதும்..  இளகிய மனம் கொண்ட முட்டாள் மக்கள் மூன்றாம் நாள் வலுக்கட்டாயமாக முதலமைச்சர் இருக்கையில் உட்கார வைத்திருப்பர்..

10 . முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் , தன் சொந்தங்களுடன் இப்போது  செய்து கொண்டிருக்கும் அனைத்து அமர்க்களங்களையும் செய்து , தமிழ்நாட்டை துண்டாடி இருந்தாலும் , யார் கேள்வி கேட்க முடியும்.. கேள்வி  எழுப்பவர்கள் எப்படி நடமாட முடியும்? ஆட்சிக்கு வந்த பின் மக்களாவது , சட்டமாவது ...?

மேற்சொன்னபடி நடந்து இருந்தால் வழக்கு தடுத்திருக்காவிட்டால் முதல்வர் பதவி , வழக்கில் குற்றவாளியென்றால் அதிமுக தொண்டர்களின் பரிதாபம் என ஈட்டி இருக்கலாம்.. ஆனால் சாணக்கியத்தனம் போதவில்லையே...

33 வருடம் மறைவில் அரசியல் கற்றவர் (நடத்தியவர் ) குறைந்த பட்ச மதிப்பெண் கூட எடுத்து தேர்வாகவில்லை என்பது வருத்தமே ....... அல்ல :D

-14-2-2017