செவ்வாய், 16 அக்டோபர், 2018

1

பேருந்துக்கு காத்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் குரலின் சத்தம் என்னை திரும்பி பார்க்க வைத்தது.. என் அருகில்தான் நின்று கொண்டிருந்தார்கள்..அம்மாவும் பெண்ணும் போல..

"அங்க போய் வாங்கிட்டு வரணும், பஸ் போயிடும், வேணும்னா சொல்லு, தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றேன், பஸ் போனாலும் போய்டும் .. போகணுமா , இல்லேன்னா பேசாம இருங்க" எனும் அர்த்தத்தில் அப்பெண் உடனிருந்த அம்மாவிடம் காட்டமாக கூறிக்கொண்டு போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்..

தண்ணீருக்கான  தவிப்பு  அந்த அம்மாவின்  முகத்தில் தெரிந்தது..  நானாக இருந்தால் ஓடி சென்று வாங்கி வந்திருப்பேனே என ஒரு எண்ணம் தோன்றினாலும் ,எனக்கு வீட்டில் பெரிதாக எந்த வேலையும் இருக்காது, ஆனால் அவர்களுக்கு  அப்படி அல்லவே என தோன்ற, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்..

என் தண்ணி பாட்டிலில் பாதியளவு தண்ணீர் இருந்தது.. எடுத்துக் கொடுக்கலாம் என  நினைத்தாலும் , ஏதாவது நினைப்பார்களோ என்று , நான் குடிப்பதற்கு எடுப்பது  போல் எடுக்கலாம்   , அவர்கள் கேட்டால் கொடுக்கலாம் என பாட்டிலை வெளியே எடுத்து நான் ஒரு மிடறு குடித்துக் கொண்டே அந்த அம்மாவை பார்த்தேன்.. அவரோ பேருந்து வருகிறதா என அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.. பின் தவிப்புடன் உள்ளே வைத்தேன்..

மனமோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. தாகத்தின் தவிப்பை உணர்ந்திருக்கிறேன்..  என் தயக்கம் நீண்டு, அவருக்கு பேருந்து வந்து சென்று விட்டாரானால் என மனசாட்சி கொடுத்திருக்கலாமே என பின் இந்த நினைவு எட்டும்போதெல்லாம் என்னை வதைக்கும்.. ஆகவே  , பின் நானே பாட்டிலை வெளியே எடுத்து , "தண்ணி வேணும்களா. பேசிட்டு இருந்ததை கேட்டேன் " என கூறியதும் அவரின் முகத்தில் பிரகாசம், உடனே சிரித்துக்கொண்டே அந்தப்புறம் திரும்பி போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம்,  "பாரு", எனக் கூறிக்கொண்டே குடித்து விட்டு பாட்டிலை தந்தார்..

"ரோடு கிராஸ் பண்ணிட்டு போய் தண்ணி வாங்கறதுக்குள்ள பஸ் போயிடும்,அதான் "என கூறினார்.. நானும் "எனக்கு புரியுதுங்க" எனக் கூறினேன்..

எங்கள் நிறுத்தத்தில் ரொம்ப நேரம் ஒருவர் காத்திருந்தால்  அது எங்கள் பகுதி வழியாக செல்லும் பேரூந்துக்காகத்தான்  இருக்கும் என யூகிக்கலாம் .. இங்குதான் பேருந்தில் பயணிக்கும் நேரத்தை விட காத்திருக்கும் நேரம் அதிகம்.. என் வாழ்வின் பல நேரங்களை பேருந்து நிறுத்தங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.. ஆதலால் ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்த பேருந்து வரும்வரை காத்திருப்பதும் கடினம்தான்..
இதனால் முன்பே அவர்களின் நிலையை நான் யூகித்து இருந்தேன்..

அதன்பின்னும் அங்கு கால் மணிநேரம் போல் நின்று கொண்டிருந்தோம்.. ஆனால் அவரின் முகம் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தேன்.. காரணம் , நான் ஒருவருக்கு ஏதாவது வகையில் உதவியோ, ஆலேசனையோ கூறினால் அவர்கள் பின்னாட்களில் ஏதேனும் ஒரு முறையாவது மனம் வருந்தும்படி நடந்து கொள்கின்றனர்  என என் மனதில் ஆழமாக பதிந்து போன எண்ணம்தான்.. அதற்காக தண்ணீர் கொடுத்ததெல்லாம் உதவியா எனக் கேட்கலாம் , இல்லைதான், ஆனால் நாம் ஒருவருக்கு ஒரு பொருளை இங்கிருந்து அங்கு எடுத்துக் கொடுத்து உதவியிருந்தாலும் பின்னாளில் அவர் பேசாமல் தவிர்த்து விட்டு சென்றால் கூட அவருக்கு செய்தது பெரிய உதவியாக மனம் முன்னே தோன்றி சில நொடிகளாவது நம் மனதை வருத்தும் .. மற்றவர்க்கு எப்படியோ ....! என் மனம் அப்படிதான்..

இடையில் ஒரு கான்ட்ராக்டர் ரோட்டின் அந்தப்புறம்  இருந்து கிராஸ் செய்து வந்து கொண்டிருந்தார்.. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் அவரை பார்க்கிறேன்.. யாரிடமோ பேசிக்கொண்டே கிராஸ் செய்தவர் என்னை கவனிக்கவில்லை என எண்ணிக்கொண்டிருந்தேன்..  ஆனால் என்னை கடந்து செல்லும்போது திடீரென திரும்பி , "என்னம்மா , இப்ப எங்க வேலை பார்த்துட்டு இருக்கே" எனக் கேட்டார்.. அவர் என்னை கவனித்திருந்தது எனக்கே ஆச்சரியம்.. ஏனெனில் அவர் சாலையை கடந்து வரும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் என்னை அப்போது பார்க்கவே இல்லை.. ஒரு வேளை அதற்கும் முன் நான் பார்க்காதபோது பார்த்திருக்கலாம்..

உடனே எனக்கு முன்னிருந்த பெண்களை  கடந்து வந்து ,வேலையை விட்டதையும், தற்போதைய நிலையையும் கூறினேன்.. அவருக்கு நான் சொல்லியது கேட்டதோ என்னவோ, ஏனெனில் பொது வெளியில் என் சத்தம் மிகவும் குறைவுதான். "நல்லா இருக்கே இல்லையாம்மா, அது போதும் " என கூறி  சென்றார்..

நாம் பொதுவாக , நம் மேல் பொறாமைப்படுவர்கள், நம் வளர்ச்சியை பிடிக்காதர்வர்கள் , அவமானப்படுத்தியவர்கள், துரோகிகள் என  பலர் மட்டுமே  நம்மை சுற்றி இருப்பதாக எண்ணிக் கொண்டு , நம் மேல் உண்மை அக்கறையும், நம் வளர்ச்சியில் உண்மை மகிழ்ச்சியும் கொண்டிருக்கும் சிலரை  கருத்திலேயே கொள்ள மாட்டோம்.. ஆனால் அந்த சிலரின் மேல் மட்டுமே எண்ணத்தை செலுத்துவோமானால் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாகத் தெரியும்..

அந்த சிலரில் இவரும் ஒருவர்.. நான் பார்த்த ஆரம்ப நாட்களில் இருந்து இன்று  பார்த்தது வரை என் மேலுள்ள அக்கறை அவருக்கு அப்படியேதான் இருக்கிறது.. மாநகராட்சியில் 8  வருடங்கள் இருந்ததால் நிறைய மனிதர்கள்  பழக்கம்.. என் மேல் அக்கறையும் அன்பும் உள்ளவர்களும் அங்கு அதிகம்தான்..

பேருந்து வந்ததும் நான் ஏறிய பேருந்தில்தான் அந்த பெண்ணும் அம்மாவும் ஏறினர்.. அச்சோ, இதே பஸ்ஸா என அனாசயமாக இருந்தது.. அந்த அம்மா என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார்.. அவர்களின் முகத்தை சிந்தைக்கு கொண்டு செல்லக்கூடாது என நினைக்கையில் பக்கத்திலேயே அமர்கிறார், பேசாமல் இருக்க முடியுமா என தோன்றியது..அப்பெண் பக்கத்திலும் இடம் இருந்ததால் , அப்பெண் கூப்பிட திரும்ப ஆண்டு சென்று அமர்ந்தார்..

ஆனால் அடிக்கொரு முறை என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.. ஆனால் நான் அவரின் முகம் பார்க்கவில்லையே தவிர அவரின் செய்கைகளை கவனித்துக்   கொன்டுதான் இருந்தேன்.. வெள்ளந்தி மனுஷி .. கிராமத்து ஆட்கள் பெரும்பாலும் அப்படிதான் இருக்கின்றனர்..

அவரை மிகவும்  பிடித்து விட்டது.. நான் மட்டும் தண்ணீர் கொடுத்திருக்கவில்லையென்றால் , இப்படிப்பட்டவங்க நட்பை விரும்பி போய் ஏற்றுக்கொண்டிருப்பேன் ..

தண்ணீர் கொடுத்ததற்காக ,புன்னகை சிந்தவோ, பேச்சு கொடுக்கவோ என் முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தார்.. என்னாலும் என் மனதை அவரிடமிருந்து திருப்ப படாத பாடு படவேண்டியிருந்தது.. பேசலாம், சிரிக்கலாம் என வெளிமனம் தள்ளுகிறது..  ஆனால் தண்ணீர் கொடுத்து விட்டேன் .அதனாலேயே  நான் மேற்கூறிய காரணத்தின் படி உள்மனம் அடக்கி வைக்கிறது..

நான் இறங்கும்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.. நான் கவனிக்காதது போல் இறங்கினேன் .. என்னை பற்றிய அவரின் எண்ணம் மாறியிருக்கலாம்..

அவர் பார்த்தும் நான் கவனிக்காதது போல் இருந்தது அவரை சங்கடப் படுத்தியிருக்குமோ என்னவோ .. தெரியவில்லை  .. அதற்கும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..

 இறங்கியதும் அந்த இருவரின் முகத்தை நினைவில் நிறுத்த முயற்சிக்கிறேன்.. நல்ல வேளை, மறந்திருக்கிறது....

- 16 -10 -2018
    கோவை

திங்கள், 8 அக்டோபர், 2018

24

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு தங்கம்...
உனக்கும் தங்கச்சிக்கும் இடையில் நடந்த சின்ன அழுகை சண்டையால் அவளை ரூம்-க்குள்ள கூட்டிட்டு போய் தாழ் போட்டு இருந்தேன் .. அந்த நேரம் அவசரமா ஏதோ எழுதிட்டு இருந்த...
கொஞ்ச நேரத்துல ஜன்னல் வழி -ல சண்டை போட்ட உன் தங்கச்சி மூலமே இதை கொடுத்து , "அம்மாட்ட கொடுத்து படிக்க சொல்லு" ன்னு சொல்ற..,
அலட்சியமா படிக்கறது போல உன் முன்ன காட்டிக்கிட்டாலும் ஒரு ஆர்வத்தோடதான் தங்கம் இதை படிக்க பிரிச்சேன்.. படிக்க ஆரம்பிச்சதும் எனக்குள் எழுந்த உணர்வு கண்ணீர் படலமா என் கண்ணை மறச்சதை நீ கொஞ்சம் உத்து பார்த்திருந்தா கண்டுபிடிச்சுருப்ப... ஆனால் கொஞ்சம் முன்ன நீ உன் தங்கைகிட்ட பிடிச்ச அடமும், என் நெகிழ்ச்சியை நீ பார்க்கக் கூடாதுன்ற எண்ணமும் கலந்து , உன் தங்கச்சிகிட்ட கொடுத்து உன் காது கேட்கவே , "தாத்தாகிட்ட காமி"-ன்னு சொல்றேன்...
நீயும் அவ பின்னாடியே போறே.. உன் தாத்தா வாசிக்க ஆரம்பிச்சதும் வழக்கம்போல அவர் சில திருத்தங்களை உன்கிட்ட சொல்றார்..
"வேண்டாம் அப்பா" அவன் எப்படி எழுதினானோ அப்படியே இருக்கட்டும் , அதுலதான் உயிர் இருக்கும்" னு சொல்ல தோணுது.. ஆனால் ஏதோ தடுக்குது.. பேசாம இருக்கேன் .. நான் வாசிச்ச உன் வார்த்தைகள் எனக்குள்ள ஓடிட்டு இருக்கு...
அழறேன் தங்கம்.. உனக்கு காமிக்க கூடாதுன்னு மறைக்கவும் செய்யறேன்.. ஆனா வெளிய வந்தப்போ அம்மாம்மா என் கண்ணை உத்து பார்த்தப்பவே அவங்க அதை புரிஞ்சுட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. அவங்க ஏதுவும் சொல்லல .. ஏன்னா இது ஆறுதலுக்காக வந்த அழுகை இல்ல..
இடைல நீ சொல்ற , "அம்மா என்னை அடிச்சாலும் எனக்கு அம்ம்மாவைதான் பிடிக்கும், அது அம்மாவுக்கு தெரியறதே இல்லை"னு.. இல்லை தங்கமே, அதை நீ எனக்கு பல சந்தர்ப்பங்கள்ல உணர்த்தியிருக்க.. ஆனா அதை நான் தெரிஞ்சுக்கிட்டதா வெளிக்காட்ட முடியாம இந்த சமுதாயம் ஏற்படுத்தி/பழக்கப்படுத்திக் கொடுத்த சூழல் தடுக்குது..
நீ எனக்கு நல்ல மகனா இருக்க.. அதனாலதான் இந்த வயசுலயே உனக்கு நான் கடந்து வந்த அவமானங்கள் , சந்தோசங்களை பகிர்ந்துக்கறேன்.. அது மூலமா யாரையும் தாழ்வா நினைக்காதன்னு பாடம் எடுக்கறேன்.. நான் சொல்றது உன் மனசுக்குள்ள போய்டுச்சுன்றதை நான் புரிஞ்சுக்கறதுக்கான பதில் உன் கண்ணீர்தான்.. 
அப்பப்போ நடக்கற நிகழ்வுகளையும் உன்கிட்ட சொல்றேன்.. சிலவற்றுக்கு நீ கொடுக்கற ஆறுதல் , உன்னை சின்ன பையன்னு நான் சொல்றனேன்னு என்னையே வெட்கப்பட வைக்கும்..
நான் உங்களுக்கு நல்ல அம்மாவா இருக்கல..பிள்ளைக தேவைகள் மட்டுமே வாழ்க்கையா கொண்டு வாழற சில அம்மாக்கள் போல நான் இல்ல.. இங்க அம்மம்மா அந்த பொறுப்பை எடுத்துக்கறதால என்னவோ நான் ரொம்பவே சோம்பேறியா இருக்கேன்.. எனக்கு புரியுது.. சில சமயங்கள் நீங்க ரெண்டு பேரும் கூட சொல்வீங்க..
அதனால் நீ என்னை உயர்வா எழுதின வார்த்தைகளில் உண்மை இல்லை ..ஆனால் உன் மனசுப்படி நீ எழுதின அதே வார்த்தைகளில் பொய்யுமில்லை .... அதுதான் என்னை அழ வைக்குது..
தங்கமே , அது என்ன ஒரு வீடு வரைஞ்சு இருக்க .. புரியுது .... என் வீட்டுக்கான கனவு உனக்கு தெரியும்.. அப்போ சொல்வ, அப்பா, அம்மாக்காக வீடு கட்டி தரதுக்கு முன்னாடி , நான் கட்டி தருவேன்னு  .. குட்டி , பல கோடி போட்டு நீ வீடு கட்டிக்கொடுத்தாலும் , நீ கட்டின இந்த பென்சில் வீடு தந்த சந்தோஷத்துக்கு ஈடாகுமான்னு தெரியல .. அவ்ளோ சந்தோசமா இருக்கு குட்டி ...
நான் என் பழைய காலத்தை நினைவுபடுத்தும் பொருட்களை , நினைவுகளை சேமிக்கல.. அதனாலேயே உங்க ரெண்டு பேருக்குமான நினைவுகளை போட்டோக்கள், எழுத்துக்கள் மூலமா சேமிச்சுட்டு வர்றேன்..
2 வாரம் முன்ன கூட உங்களை பத்தி 3 வருசத்துக்கு முன்ன எழுதினத வாசிச்சு காட்டினப்போ, நீங்க அடைஞ்ச குதூகலத்தை ரொம்பவே ரசிச்சேன்.. அந்த குதூகலத்துக்கு என்னால முடிஞ்சது நிச்சயம் செய்வேன் தங்கம்...
கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை கூப்பிட்டு, "இதை எனக்கு எதுக்கு கொடுத்த "ன்னு கேட்கறேன்.. அம்மாவுக்கு என் பர்த்டே கிப்ட்"-ன்னு சொல்ற.. உடனே உன் முன்ன பேப்பர அப்படி இப்படி திருப்பி எங்க பர்த்டே-ன்ற வார்த்தையே இல்லையேன்னு சொல்றேன்.. எனக்கு பர்த்டே ஸ்பெல்லிங் மறந்துடுச்சு , அதனால் நாளைக்கு நேர்லவே சொல்றேன்னு சொல்ற  ...
போன வருஷம் நீ ,பர்த்டே கேக் பார்த்து "ஹாப்பி பர்த்டே சௌம்யா" -ன்னு சௌம்யா-ல உள்ள O-வ D-யா மாத்தி எழுதி கொடுத்த ஒரு சின்ன துண்டு சீட்டு, இதோ இந்த லெட்டர்-ஐயும் எதிர்பார்த்து, என் சேமிப்பு பெட்டகத்துல காத்திட்டு இருக்கின்றது உனக்கு தெரியுமா ...
இதெல்லாம் சாதாரண பொருட்களா/பரிசா கண்ணுக்கு தெரியலாம்.
ஆனா, இவைகள் எல்லாம் உனக்கு பின்னாளில் புரிய வைக்கும் தங்கம் , "மனம் இனித்து கொடுக்கும் சில பரிசுகள் விலையில் மதிப்பிழந்திருக்கலாம் .. ஆனால் மதிப்பில் எந்த விலைக்குமே ஈடாகாது" .. ன்னு ...
லவ் யூ தங்கம்...
- 8 -10 -2018
திங்கள்

புதன், 3 அக்டோபர், 2018

பிக் பாஸ்-2 (என்னை கவர்ந்த ரியல் வின்னர் )



சீரியல்களின் மூலம் மனதையும் , நேரத்தையும்  இழக்கக்கூடாது என முடிவெடுத்து தீவிரமாக இருந்த என் மனஓட்டத்தை, பிக் பாஸ் காண்பதில் கொஞ்சம் தளர்த்த ஆரம்பித்தேன்.. காரணம் , எண்ண ஓட்டங்கள் பற்றிய என் சுய ஆய்வுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்ற காரணம்தான்.. 

நம் எதிரில் உள்ள மனிதர்களின் எண்ண ஓட்டத்தை நம்மால் கணிக்க முடியாது.. அவர்கள் புறம் பேசுவதின் மூலம் அது வெளிப்படுவதையும் நம்மால் பார்க்க முடியாது . ஆனால் பிக் பாஸ்-ல் அதை அறிந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் மற்றவரை பற்றி மாறும் எண்ண ஓட்டம் மற்றும் வார்த்தைகள் பின் எவ்வாறு அவர்களின் சூழ்நிலைக்குள் புகுந்து பிரதிபலிக்கிறது என்பதையும் கண்கூடாக (உன்னிப்பாக கவனித்தால்) காண முடியும்..

ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் சென்றாலும் சில போட்டியாளர்களின் மனதை சில செய்கைகள் , பேச்சுகள் மூலமே அறிய முடிந்தது.. எல்லோரும் நடிக்கிறார்கள் என்ற பேச்சு அப்போதுதான் வெளியே பலமாக இருந்தது.. ஆனால் சிலர் தங்கள் உண்மை முகத்தை வெளியில் மறைக்க முயன்றாலும் சில நேரங்களில் அவர்களை அறியாமல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது..

மஹதி:  எந்த குறையும் குணத்தில் சொல்ல முடியாது .. ஆனாலும் நடிப்பு போல மற்றவர்களுக்கு தோன்றியதாலோ என்னவோ மக்களால்  முதலில் வெளியேற்றப்பட்டார் ..

அனந்த் வைத்தியநாதன் :  இசை ஆசான்  என்பதாலோ என்னவோ சிறு  ஆணவம் என்று கூற இயலாத மிடுக்கு .. சிறு சிறு பேச்சுகள் மற்றும் வயதின் (திறமைக்கும் வெற்றிக்கும்  வயது தடையல்ல, ஆனால் இள வயது பட்டாளம் முன் கொஞ்சம் அந்நியமாகத்தான் உணரப்படுவார் )மூலம் பிக் பாஸ் வெற்றியாளர்-க்கு தான் தகுதியில்லை என அவர் உணர்த்தியிருந்ததால் அவரின் வெளியேற்றம் பெரிதளவில் யாருக்கும்  பாதிப்பு ஏற்படுத்தவில்லை..

NSK ரம்யா : எல்லோருடனும் நட்பு பாராட்டும் குணம் ,  நேரிடையாக பேசும் குணம்.. ஆனால் அந்த வார வெளியேற்றத்தில் மற்றவர்கள் யாரையும் வெளியேற்ற மக்களுக்கு மனம் இல்லாமல் போக , சந்தர்ப்ப சூழ்நிலையால்  வெளியேற்றப்பட்டவர்...

நித்யா : பாலாஜியின் மனைவி என்ற அடையாளத்துடன் மக்களுக்கு அறியப்பட்டாலும் தன் நேர்மறையான குணத்தால் தனித்து காணப்பட்டார்.. ஆனால் பிக் பாஸ் வீட்டில் வெங்காய பிரச்சனை வந்தபோது தான் சொல்வதில் மட்டுமே பிடியாக இருந்தும், மற்றவர்களை பேச விடாமலும் செய்து தன் இன்னொரு பிடிவாத குணத்தை காட்டினார்.. ஆனால் அது அப்போது வெளிப்பட்ட மற்ற நல்ல சில குணங்களால் மறைந்தும் இருந்தது.. அதனால் அவரின் வெளியேற்றம் ஒட்டு போட்ட மக்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஆனால் வெளியில் சென்ற பிறகு தன் உண்மை சுயரூபத்தை பதிவின் மூலமும், திரும்ப பிக் பாஸ்-ன் வீட்டுக்குள் சென்றபோது பேசிய பேச்சுகளின் மூலமும், குறிப்பாக இறுதி நாளில் மும்தாஜ்-ன் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்லிய விதத்தினாலும் , மும்தாஜ் பற்றி பாலாஜி சொல்லிய பிறகு காட்டிய முகபாவத்திலும் காட்டி விட்டார்.. அவரின் மதிப்பு மற்ற எல்லோரையும் விட மிகவும் கீழிறங்கி விட்டது.. பாலாஜியை நினைத்து பரிதாபம் கொள்ளும் நிலையும் வந்து விட்டது..

வைஷ்ணவி :, ஆரம்பத்திலேயே புறம் பேசுவதில் தன்னை வெளிப்படுத்தியதாலோ என்னவோ  அதன் பின் மனதில் ஒட்டவில்லை..

பொன்னம்பலம் : சிலருக்கு அறிவுரைகள் கூறி நல்ல நிலையில் இருந்தாலும் ,ஓரிரு செயல்கள் எரிச்சலடைய வைத்தன.. இவ்வளவு வெளியேற்றத்தையும் தாண்டி வருகிறாரே , மக்கள் ஆதரிக்கிறார்களா என்று ஆச்சரியமும் எழுந்தது...

டேனி : ஆரம்பத்தில் பிடித்த போட்டியாளர்.. ஆனால் போக போக ஒவ்வொரு நாமினேஷனிலும் கூட்டு சாதி செய்தது, சில இடங்களில் பின்னணி வேலை செய்தது என முகம் சுளிக்க வைத்தார்.. எலிமினேட் ஆகி செல்லும்போது பேசிய பேச்சுகளும் அப்படியே..

சென்ராயன் : சில திறமைகளில் முன்னேறி ஜெயித்தார்..அவர் உண்மையிலேயே வெள்ளந்தி குணம் உள்ளவரா இல்லை அப்படி நடித்தாரா என்ற சந்தேகம் அவர்  பொய் கூறி ஸ்மோக்கிங் ரூம்-க்கு சென்றபோது தோன்றியது.. ஆனாலும் வெள்ளந்தி குணம் உள்ளவர் என்றே நம்பலாம் .. ஆனால் பிக்  பாஸ் வெற்றியாருக்கான தகுதி இல்லை என்று பிக் பாஸே வெளியில் அனுப்பி விட்டாரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர் வெளியேற்றம்..

ஷாரிக்  : ஆரம்பத்தில் வீட்டில் இருந்த இடம் தெரியாமல் இருந்தாலும் வீட்டின் தலைவரானபோது தன் நேர்மையான குணத்தால் இறுதி வரை வருவார் என கணிக்கப்பட்டார்.. ஆனால் யார் மீதோ உள்ள கோபம் அவர் வெளியேற காரணமாகி விட்டது..

மஹத் : இவர் நேர்மையானவர்.. கோபம் , மன்னிப்பு, பாராட்டு என  அனைத்தையும் மனதில் வைக்காது உடனே வெளிப்படுத்தி விடுவார் ..  தன்னை சார்ந்தவர் மீது முழு நம்பிக்கை..  அதனால்  சரி எது , தவறு எது என யோசிக்காமல் செய்த விஷயங்களே இவர் வெளியேற காரணம்.. இறுதி வரை வருவார் என இவரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தார்..

பாலாஜி : ஆரம்பத்தில் அவர் நகைச்சுவை மக்களை குஷிப்படுத்தினாலும் , புறம் கூறுதலும், கெட்ட வார்த்தைகள் பேசுவதிலும் மனதில் பின்தங்கியே இருந்தார்.. யாருக்கும் தெரியாமல் உணவு கொடுத்த சென்றாயன் பற்றியும்  , உண்மையாய் ஆறுதல் கூறிய மும்தாஜ் பற்றியும்  அவர் பேசிய பேச்சே அவர் குணத்துக்கு சாட்சி ..    ஆனாலும் தன் மனைவி மகளுடன் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்ததாலோ என்னவோ போட்டியாளர்களும் அதிகம் நாமினேட் செய்யாமல் காப்பாற்றி வந்தனர்..
பின்னாளில் கோபத்தை குறைத்தும், சில போட்டியாளர்கள் மீது அக்கறை உள்ள அன்பு காட்டினாலும் கடைசி வரை புறம் பேசும் குணத்தை விட முடியவில்லை..

யாஷிகா : நல்ல போட்டியாளர் .. தன் தோழி ஐஸ்வயாவின் நட்புக்கு மரியாதை கொடுப்பவர்.. சில இடங்களில் அவரின் நேர்மையான பேச்சும் , தெளிவான சிந்தனையும் அவரது வயதை பொறுத்து பார்க்கையில் பிரமிக்க வைத்தது..   ஆரம்பத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நபர்.. ஆனால் யாரை வெளியேற்றலாம் என்ற கூட்டு சதியில் ஈடுபட்ட மிக முக்கிய நபர், ஆரம்பத்தில் நட்பு பட்டாளம் இணைந்து செய்த சில செயல்கள்  என சில  என் மனதில் ஓட்டவில்லையே தவிர , அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் வெற்றியாளருக்கான அனைத்து தகுதிகளும் இருந்தது..

ஜனனி : இலகுவான மனம் .. , எல்லோருடனும் நட்பை எளிதாக கவரும் குணம் ..ஆரம்பத்தில் சில சின்ன விஷயங்களில் அங்கும் இங்கும் சொல்லியதே குற்றமாக  தெரிகிறதே தவிர, சில போட்டியாளர்களை விட்டு விட்டு இவரை மட்டும் குறை கூறும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானவர் அல்ல ..
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒருவருக்கு வைக்கும் பட்டப்பெயர் ஒருவர் வாழ்வில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இங்கு அறியலாம் . டேனி இவருக்கு வைத்த பட்டப்பெயர் இவரை இறுதி பரிசளிப்பு நாளில் நகைச்சுவை என்ற பெயரில் பரிகாசம் பண்ணியதை பார்த்த யாரும் மறக்க மாட்டார்கள் .. ஜனனியும் மறக்க மாட்டார்..


விஜயலக்ஷ்மி : 60  நாட்களாக உள்ளே நடப்பதை பார்த்துவிட்டு உள்ளே வந்தவர்.. வந்தஆரம்ப நாட்களில் அமைதியாத்தான் இருந்தார்.. எப்போது அவரின் கணவர் வந்து ," நீ இன்னும் அதிகம் செயல்பட வேண்டும்" என சொன்னாரோ அதிலிருந்து அவரின் வேகம் தெறித்தது.. ஆனால் அவரின் ஒரு குறி ஏன் மும்தாஜ் என தெரியவில்லை.. இறுதி நாளில் கூட நித்யா மும்தாஜ் பற்றி  சொல்லிக்கொண்டிருக்கும் தானும் சொல்ல கை உயர்த்தினார் .. ஆனால் இறுதிப்போட்டியாளர்களில் தானும் ஒருவராக இருப்பதால் , தான் சொல்வது தன் வெற்றியை பாதிக்கும் என நினைத்தாரோ என்னவோ , உயர்த்திய கையை அப்பட்டியே இறக்கிக் கொண்டார் :) .. டாஸ்க்-களில்  முழு வேகத்துடன் இருந்தார்..  மக்கள் மனதை வெல்ல டாஸ்க் மட்டும் போதாதே..நேர்மையானவர் என பெயரெடுக்க சில செய்கைகளால் அவரால் முடியவில்லை..

ஐஸ்வர்யா : ஆரம்பத்தில் அழகாலும் பேச்சாலும் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் .. பின் கூட்டு சதியில் ஒரு ஆள் , மற்றவர் சொல்வதை புரிந்து கொள்ளும் முன் எதிர் வினையாற்றல் , கோபம் என பலரின் எதிர்ப்பை பெற்றவர்.. நட்புக்காக எதுவும் செய்யவில்லை என தோன்றினாலும், இறுதி வரை தன் பேச்சில் தன் நட்பை காப்பாற்றியவர்..  கடைசி இரு வெளியேற்றத்தை எப்படி தாண்டினார் என்பது பிக் பாஸ்-க்கே வெளிச்சம்.. அவரின் கனவுப்படி இறுதிப்போட்டி மேடை வரை வந்து விட்டார்..


ரித்விகா :  ஆரம்பத்தில் தன் இருப்பை காண்பிக்காமல் இருந்தவர்.. அதன் பின் மற்றவர்களுடன் நட்பை ஏற்படுத்தினாலும் பிரச்சனைகளின்போது ஒதுங்கி இருந்தவர் .. அதாவது ஒரு பாதுகாப்புக்குள் தன்னை வைத்திருந்தவர்..யாரை பற்றியும் குறை கூறாமல் , புறம் பேசாமல் பெரும்பாலும் இருந்தார்..மஹத் பற்றிய அவரின் கணிப்பும், மகத்துக்கு  அவர் வழங்கிய அறிவுரையும் அவரின் கணிக்கும் திறனுக்கு சரியான எடுத்துக்காட்டு. .. டாஸ்க்-களின் போதும் நன்றாக என்றில்லாமல் இருந்தாலும் நிறைவாகவே செய்தார் ..

மும்தாஜ் கலர்  டை அடிக்க மறுத்த  மறுதினம் ,ஐஸ்வர்யாவும், மும்தாஜும் ஆங்கிலத்தில் பேசியதற்காக நீச்சல் குளத்தில் குதிக்க அலாரம் அடித்தது.. உடனே ஐஸ்வர்யா , வெளியில் வந்து சைகை மூலம்  ரித்விகாவை கூப்பிட, ரித்விகாவும் சைகை மூலம் வர முடியாது என மறுத்திருந்தார் .. மும்தாஜ் , ரித்விகாவுக்காக டாஸ்க் செய்யவில்லை என்பதால் அவர் வர மறுக்கிறார் என ஐஸ்வர்யா சரியாக புரிந்து அதை அங்கு வெளிப்படுத்தியும் இருப்பார்..

இதை உணர்ந்த ரித்விகா, "ஐஸ்வர்யா கூப்பிட்டாங்க, ஆனா எதுக்குன்னு எனக்கு எப்படி தெரியும்" என்றிருப்பார்.. அலாரம் அடித்தால் எதற்கு என பார்க்கும் நமக்கே தெரியும்போது அங்கு இருந்த ரித்விகாவுக்கு தெரியாதா ? "ஐஸ்வர்யா . வார்த்தை மூலம் ரிக்வஸ்ட் பண்ணி கூப்பிடல, அதனால் வரல" என சொல்லி இருந்தால் கூட முழுதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாரோ என்னவோ ? ஆனால் தான் நாமினேஷன் ஆக காரணமாக இருந்த மும்தாஜ்-காக ஏன் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என ஆரம்பத்தில் எழுந்த அவரின் சிறு ஆத்திரம்   அப்படி செய்ய விடாமல் செய்துவிட்டது..

பல நிறைகள் இருந்தாலும் ஒரு குறைதானே (அதுவும்  குணத்தில் ) பெரிதாக தெரியும் .. இங்கும் அப்படிதான்..

மும்தாஜ் : ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமானவராக தெரிந்தார்.. வெளியிலும் அப்படியே பேச்சு இருந்தது.. ஆனால் அவரின் குணம் அறிய அறிய பிடித்து போய் விட்டது .. அதன் பின் அவருக்கு வீட்டில் சில டாஸ்க்-களின் மூலம் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் , வேறு சில விஷயங்களும் பெரும்பாலான மக்களால் கமல்ஹாசனால் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு கேட்கப்படாமலே போனது,, அப்போதும் அவர் பொறுமையாகவே இருந்தார்..

அவரின் அன்பு ஆரம்பத்தில் எனக்கும் நடிப்போ என தோன்றியது.. ஆனால் அதற்கு முன் அவர் பேட்டியளித்த, கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை பார்த்த பின் அவரின் குணாதிசயம் அதுதான் என புரிந்தது..

பலர் அவரை பற்றி சொல்லும் ஒரு குற்றச்சாட்டு  , அவர் டாஸ்க் செய்ய மாட்டார் என்பது .. என்னை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவாக  செய்திருக்கிறார்.. மறுத்த சில டாஸ்க்-கள் , மற்றவர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு மட்டும் கடினமாக  கொடுக்கப்பட்டது.. (இஞ்சி, எலக்ட்ரிக் ஹேர் டை ).. சில டாஸ்க்க்ளின் தண்டனைகள் மறுத்தது , தண்டனை கொடுத்தவர்களின் பாரபட்ச நடவடிக்கையால்(கொடுத்தவர்கள் அறிந்தும், அறியாமலும்)..

டாஸ்க்  செய்வதும் , செய்யாததும் தன் நிலை பொறுத்தது.. தனக்கு மட்டும் பாதிப்பு எனும் போதுதான் அதை(பாரபட்சமான டாஸ்க்-ஐ ) அவர்  நிராகரித்திருப்பாரே  (கலர் ஹேர் டை டாஸ்க் தவிர , அதில் ரித்விகா நாமினேட் செய்யப்பட்டதும்,  தன்னால்தான் அவர் நாமினேட் செய்யப்பட்டார், அதனால் தானும் நாமினேட் ஆக தயார் என கூறி முதலில் பெயர் கொடுத்தவர் ) ஒழிய, தன் அணி பாதிக்கப்படும் என்றால் டாஸ்க்கை (எதிரணி சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டபோதும்) நிறுத்தாமல்தான் முடித்திருக்கிறார்..

உடல் நலமில்லாமல் வந்தார் என சொல்லப்படுவதற்கு, அது தெரிந்துதான் பிக் பாஸ்- நிகழ்ச்சியிலிருந்தே அழைத்து அனைத்து மருத்துவ வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள்..

பாலாஜியின் மேல் குப்பை காட்டியபோது ஏன், தாமதமாக வந்து அழுது நடிக்க வேண்டும் என உள்ளிருப்பவர்களே பின்னாளில் கிண்டல் செய்து நடித்து  காட்டினார்கள்..  இப்படி நடித்தவர்கள் அப்போது, உடனே போய் தட்டி விட்டார்கள் போல .. " பிக் பாஸ் சொல்லி இருக்கார் . அதான் அப்படி செய்றாங்க "என மஹத் தடுத்ததாகவும், (அது திரையில் எடிட் செய்யப்பட்டது எனவும் )அதுவும் நிஜமாகவே அவர் கொட்ட மாட்டார் , கொட்டுவது போல் கொண்டு மட்டுமே செல்வார் என நினைத்ததாகவும் இப்போது அதற்கான விளக்கத்தையும் மும்தாஜ் கொடுத்திருக்கிறார்..

அங்கு ஒவ்வொருவர் மனவேதனையில் இருக்கும்போதும் மும்தாஜ் ஆறுதல் கொடுப்பவராக இருந்தார்.. ஆனால் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல , வெளியில் வந்த பிறகும் அவர் அன்பு காட்டியவர்கள் அவருக்கு உண்மையாக இல்லை.. மக்களில் கூட பல எதிரானவர்கள் எப்படி என ஆச்சரியம் இருக்கிறது..

BB2 இறுதி நாளில் கூட நித்யாவின் கேள்விக்கு நியாயமாக பதில் கூறியதையும் இங்கு குறை கூறி பதிவுகளை பார்த்தேன்.. 

அவரின் நேர்மையான பேச்சும், மனம் ஒத்துழைக்கவில்லை என்றால் முடியாது  என நேரே கூறி ஒதுங்கும்  குணமும் கூட பிடித்திருக்கிறது..

இவருடைய வெளியேற்றமும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாகவே இருந்தது ..

பிபி 1  -ல் ஓவியா போல பிபி -2  வில் மும்தாஜ் தான் என் மனம் கவர்ந்தவர் .. ஓவியா அளவுக்கு இவருக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் ஆதரிக்கும் மக்களுக்கு  புரியும் ஏன் ஆதரிக்கிறோம் என்று.... 

- 3-10-2018