வியாழன், 23 ஏப்ரல், 2020

வாழ்த்து அட்டைகள்

இன்றுள்ள அவசர யுகத்தில் கேட்கப்படும் நல விசாரிப்புகளோ, அனுப்பப்படும் வாழ்த்து செய்திகளோ போல அல்ல அன்று அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள்...வாழ்த்து அட்டைகளில் தேர்வுக்கான தேடல்கள் இருக்கும்..கடிதங்களிலோ நல விசாரிப்புகளுக்கு மத்தியில் பகிர, சிறிதோ பெரிதோ குடும்ப/வெளி விஷயங்கள் இருக்கும் ...
வாழ்த்து நம்மை வந்தடைய எடுக்கும் கால நேரத்தில் ஒருவித சந்தோசம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும்... கடிதமோ தபால்காரரின் குரல் வெளிப்பட்ட நிமிடத்திலிருந்து வாங்கி வாசித்து முடிக்கும் வரை ஒரு குறுகுறுப்பைக் கொடுக்கும்..
அன்று பணமதிப்பு குறைவாக இருந்தாலும் பணத்திற்கான மதிப்பு அதிகமிருந்தது... அன்றைய சில நூறு மணியார்டர் சந்தோஷங்களை இப்போதைய பல லட்சம் மின்னணு பரிவர்த்தனைகள் கூட கொடுப்பதில்லை..
ஆக காத்திருந்து பெறும் விஷயங்கள் மட்டுமல்ல , அந்த நிமிடங்களும் அற்புதமானவை., பொக்கிஷம் போன்றவை..
அப்போது சேர்த்திருந்த / சேர்க்கத்தவறிய பொருள்கள் தொலைந்து போயிருந்தாலும் , அந்த நிமிடங்கள் நெஞ்சின் ஓரத்தில் என்றுமே பசுமையாய் படிந்திருக்கும்...
அப்படி நான் சேமித்து வைத்த பல நினைவுகளோடு சில வாழ்த்து அட்டைகள் , பரிசு பொருட்கள் போன்றவையும் என் மனதை அந்த நினைவுகளில் நிறுத்து சிலிர்க்க வைக்கும்.. அப்படி நான் பார்த்துக் கொண்டிருந்த வாழ்த்து அட்டைகளும் , புகைப்படங்களும் கொடுத்த வார்த்தைகள்தான் மேலே உள்ளவை...
நல்ல நினைவுகள் எப்போதும் பொக்கிஷமே...ஆக இன்றைய ஒவ்வொரு மணித்துளியையும் நாளைய பொக்கிஷமாக நினைத்துப் பார்க்க , நிகழ்வில் (நிகழ் காலத்தில் மனதை வைத்திருந்து ) வாழ்வோம், மகிழ்ச்சியை துணைக்கு கொண்டு...
நாள் 06-04- 20.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நினைவொளி




உறக்கத்தைத் தேடி
மூடிய கண்ணிமைகளுக்குள் நுழைந்து
அடர் இருள் பாதாள குகைக்குள் 
பயணிக்கிறேன் ....

பயணம் ஆரம்பித்த சில நொடிகளில்
சில நினைவுகள் விளக்கென
மின்னத் தொடங்குகின்றன....

மின்னியதிலேயே அடர் மிகுந்த ஒளிக்குள் 
மூழ்கி அதன் மெல்லிய வெம்மையும் 
வண்ணக் கீற்றுகளுமான ஆடைக்குள்
என்னை இறக்குகிறேன்....

தரித்த ஆடையுடன் உறக்கத்திற்குள்
சீக்கிரமே நுழைவது 
சில நேரங்களில் சாத்தியமாவதுண்டு....

அல்லாத நேரங்களில் 
வெம்மையின் நிழலோ 
வண்ணக்கீற்றுகளின் ஒட்டிவிடும் சாயமோ
தன் வழி வேறு ஒரு ஒளிக்குள் கடத்தி 
பயணத்தை நீட்டித்து விடுகிறது...

நீட்டித்த பயணம் தரும் களைப்பில் 
நினைவொளியில் மூழ்காமலேயே
உறக்கத்தை போர்த்தும் நாளுக்காக
ஏங்க ஆரம்பிக்கிறது மனம்...


ஞாயிறு, 29 மார்ச், 2020

கோபம்



சிலரது வார்த்தைகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன்...

வார்த்தைகள் நழுவும்போதோ
கோபம் தன் பிடியைத்
தருகிறது..

மட்டுமன்றி முன் நிகழ்ந்த
அத்தனை கசப்பின்
சாயங்களையும்
தன் பிடியின் வழியே
என்னுள் இறக்குகிறது..

தருவிக்கப்பட்ட சாயங்களுடன்
கோரமாக காட்சியளித்து
ராட்சசி எனும் பட்டத்துக்குள்ளும்
பொருத்தப்படுகிறேன்..

வார்த்தை தந்தவர்களோ
தன் வார்த்தைகளைப் போலவே
நழுவியிருக்கின்றனர்..

கனம்



நம் நினைவுகளின்
கனம் தாங்காமல்
திணறுகிறேன்..
நானும்தான்
சுமந்து கொண்டிருக்கிறேன்
என்று மட்டும் சொல்..
கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்

கவிதைக்கீற்றுகள்



பதிவேற்றம் செய்த புகைப்படங்களை
திரும்பத்திரும்ப பார்க்கிறேன்
மற்றவர்களின் பார்வையில்...
---xxx---

அவள் சிரிப்பு பிடித்திருக்கிறது
என அவன் சொன்னதிலிருந்து
கண்ணாடியும்
அடிக்கொருமுறை
பார்த்துக் கொண்டிருக்கிறது
அவள் சிரிப்பை.. ❤️❤️❤️

---xxx---

பிறருக்கு கொடுக்கும்போது
சலிப்பதில்லை..
நமக்காக
உபயோகிக்க
முற்படும்போதுதான்
திணறுகிறது...

---xxx---

உன் நினைவில்
தேய்கிறேன்
நான்...
என்னுள்
வளர்கிறாய்
நீ...

---xxx---

கண்ணுறங்கும் நேரத்தில்
தாயைத் தேடி ஓடும்
கன்றைப் போல
உன் நினைவைத் தேடி
ஓடுகிறது மனம்...

---xxx---

உன் மீதான என் ஈர்ப்பு
தீர்ந்து போவதற்காவது
உன் அருகாமை
வேண்டும் எனக்கு....

---xxx---

கத்தியை விட கூரானது
ஒரு கடுஞ்சொல்
சுலபமாக நெஞ்சில் இறங்கி
உடல் முழுவதும் பரவி
காயத்தின் அடையாளத்திற்கு
குருதியாக கண்ணீர்....

---xxx---


நான் உன்னால்
காதலிக்கப்படுகிறேன்
என நண்பன் சொன்னபோது
நம்பவில்லை

நான் உன்னை
காதலிக்கவில்லை
என நீ சொன்னபோதும்
நம்பவில்லை

நான் இப்போது
இடம் மாறி இருக்கிறேன்
என காதல் சொன்னதை
மட்டும் நம்பிக்கொண்டேன்...

---xxx---

நினைவுத் தூண்டிலில்
 எவை சிக்கினாலும்
இரை ஆவதென்னவோ
நேரம் மட்டுமே....


நினைவுப்புத்தகம்



இருவருக்கும்
பொதுவான நினைவுகளை
அடிக்கடி புரட்டிப் பார்க்கிறேன்...

நெகிழ்ச்சி
கண்ணீர்
இளநகை
பிரமிப்பு
மாறி மாறி
அணிவகுக்கின்றன‌‌...

புரட்ட புரட்ட
நினைவுகளோ
பொலிவையே
பெறுகின்றன...

ஒரே ஒரு வருத்தம்...

அதில்
உன் விரல் தடத்தை
கண்டறியும் வழி
மட்டும் தெரியவில்லை..

நினைவுகளில் வாழ்கிறாய் நீ



உன் நினைவில் நனைகையில்

என்னை மறக்கிறேன்

உடலில் உற்சாகம் வழிகிறது

நேரம் மறக்கிறேன்

நேரமோ காலத்தை

இழுத்து செல்கிறது

சூழல் மறக்கிறேன்

நடக்கும் நிகழ்வோ

பின்னாளில் அசை போட

நினைவாகாமல் கரைகிறது...

ஊண் மறக்கிறேன்

உன் நினைவுகளே

பசியாற்றும் உணவாகிறது..

உன் புராணம் பாடுகிறேன்

அகப்படுபவர்களை உன் நினைவு

ஒரு முறை தட்டி செல்கிறது..

இப்படி உன் நினைவில்

நான் வாழ வாழ

என்னுள் வளர்கிறாய் நீ………….

புறக்கணிப்புகள்


புறக்கணிப்புகள்
மிகுவலி தருபவை..

புறக்கணிப்புகள்
நம் நிலையை
தாழ்த்தி எண்ண வைப்பவை...

ஒரு சுடுசொல்லை
வாங்கும் கணத்தை விட
ஒரு புறக்கணிப்பை
எதிர்கொள்ளும் கணத்தின்
கனம் அதிகம்...

புறக்கணிப்புகளுக்கு
ஆதியிலிருந்தே
அவளை பிடிக்கும்...
அவளால்தான் தான் ஏனோ
அதனுடன் இன்னும்
பழக்கப்பட இயலவில்லை..

புறக்கணிப்பு நிகழ்த்தும்
மனிதர்களை
அவள்  அன்றாடங்களிலிருந்து
நீக்க முயல்கிறாள்...

முயற்சியில் வெற்றி கண்டாலும்
புறக்கணிப்புகள்
அவளையே  தொடர்கின்றன

வெவ்வேறு ரூபங்களில்..