திங்கள், 22 ஜூலை, 2019

என் பிள்ளைகளின் உலகம் (26)



   ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் நிகிதாவுக்கு "living  things , non  living  things  பற்றிய வீட்டுப்பாடம்.. ஒருமுறை விளக்கியவுடன், "நம்ம வீட்ல உள்ள லிவிங் தாங்ஸ் எல்லாம் காமி" எனக் கேட்க , என்னை, மாமாவை, தாத்தாவை, பாட்டியை, அண்ணனை எனக் கை காட்டியவள்  , பின் கட்டிலுக்கு அடியில் , மேஜைக்கு அடியில் , சுவற்றில் என நோட்டம் வீட்டுக்கு கொண்டிருந்தாள்..

அந்த அறையில் ஏதும் அவள் பார்வைக்கு தட்டுப்படாததால் அடுத்த அறைக்கு ஓடினாள்.. உடனே நான் " இன்செக்ட்ஸ் கிடைக்காட்டி , பரவால்ல, இங்க வா " என கூற , அங்கிருந்து சிரித்தபடி ஓடி வந்தவள் "சாமி போட்டோ" என்றாள்.. "சாமி போட்டோவா" என நான் புரிந்து சிரிக்க தொடங்கவும் "ஆமாம், சாமி, நாம கேட்டதெல்லாம் கொடுக்குதுல்ல " என கூறினாள்..

"அம்மா, சாமிதான் லிவிங் திங் , சாமி போட்டோ நான் லிவிங் திங் தான" என  ரோஹித் கேட்க , சில நொடிகள் சிந்தனைக்கு பின் "ஆமாம்" என குழப்பத்துடன் கூறி முடித்தேன்..

  நேற்று ரோஹித்தின் பாடநூலின் படி, "அம்மா, அப்பா,  சிஸ்டர், பிரதர், க்ராண்ட்ப்பா, க்ராண்ட்மா அண்ட் டீச்சர் இவங்கதான் நம்மை பாதுகாக்கும் வளையத்தில் இருக்காங்க என கேள்விக்கான பதிலை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.. உடனே நிகிதா, "நீ, ஒருத்தங்களை மறந்துட்ட" என சொல்ல , "மாமாவையா, சித்தப்பாவையா" என ரோஹித் கேட்டான்.   நானும் , அம்மாவும், " நீ சாமியதான சொல்ற " எனக் கேட்டோம்.

"அவங்க பேர் மறந்துடுச்சு" என தடுமாறியவள் ,பின் "அவங்க பெரிய கன் வச்சுருப்பாங்க" எனக் கூறினாள்..

சில தினங்களுக்கு முன்தான் பிள்ளைகளுக்கு ராணுவ வீரர்கள் பற்றி கூறியிருந்தேன்..  நேற்றைய சூழ்நிலையில் ,உடனே அது அவள் மனதுக்குள் வந்தது , ஆச்சரியத்தோடு பிரமிப்பை கொடுத்தது..

இம்முறை "ஆமாம்" என குழப்பமில்லாமல் கூறினேன்..

22 -7 -2019

திங்கள், 8 ஜூலை, 2019

நன்றி அறிவித்தல் : 1


     நன்றி என்பது நாள்தோறும் ஒருவருக்காவது மனதின் மூலமோ உதட்டின் மூலமோ சொல்வதுதான் என்றாலும் அதை , அதற்கு காரணமான மனிதர்களை அடையாளப்படுத்தி பதிவிட்டுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்த பகுதி.. வாசிப்பவர்களுக்கு இதற்கு கூடவா என்று சில சம்பவங்களை படிக்கும்போது தோன்றலாம்.. ஆனால் "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" என்ற வள்ளுவனின் வாக்கு உண்மை என்று உணர்ந்ததாலும் ,மற்றவர் செய்த சிறு உதவிக்கும் , என் கடன் என் காலம் முழுக்க நன்றி சொல்வற்கே என்ற என் எண்ணத்தின் உந்துதலின் மூலமும் இதை எழுத தொடங்குகிறேன்..


முதலில் பிரபஞ்சத்திற்கும் , எனக்கு உடல் , உயிர் தந்த என் தாய்,தந்தைக்கும் நன்றி .. 

உயிர் இருந்தால்தானே வாழ்க்கை  என்பது.. முதலில் உயிர் காப்பாற்றப்பட்ட அந்த நிமிடங்களை பகிர்கிறேன் ..

சில உதவிகளை பெறும்போது சம்பந்தப்பட்ட உதவுபவரின் முகம் கூட பலருக்கு தெரியாது இருக்கலாம் .. உதாரணம் ,ரத்த தானம், உறுப்பு தானம், நிவாரண உதவிகள், கல்வி, மருத்துவ உதவி போல...
இப்போது நான் சொல்லப்போவதும் என் உயிர் காத்த உதவிதான் .. ஆனால் அருகில் தொட்டு உணர்ந்தும் முகம் பார்க்க இயலாமல் போனதுதான் இந்த  நிகழ்வு...

வேலை முடிந்து பேருந்தில் வீட்டுக்கு பயணம் .. இப்போது போலல்லாமல் அப்போதெல்லாம் பேருந்துகளில் கூட்டம் அதிகமிருக்கும்.. கூட்டமாக இருக்கிறதே அடுத்த பேருந்தை பிடிக்கலாம் என்று காத்திருக்க எண்ணம் வராதபடி எங்கள் பகுதிக்கு பேருந்துகளும் குறைவு.. ஆதலால் கூட்டமுள்ள பேருந்துகளில் நின்று கொண்டே வீடு வந்து சேரும்போது பணியிலிருந்த அலுப்புகளை பேருந்து அலுப்பு மிஞ்சி விட்டிருக்கும்.

ஒருநாள் கூட்டமுள்ள பேருந்தில் வழக்கம் போல் பயணம்.. ஆனால் வழக்கமில்லாத விதமாக அன்று படியிலேயே சில நிறுத்தங்கள் வரை  பயணம்.. பின் எப்படியோ முன்னேறி படிகளை கடந்து பேருந்தின் விளிம்பில் நிற்கிறேன்.. ஏனெனில் படியில் நின்றால் இருபக்கமும் இருந்த ஆட்களால் பிடிப்புக்கு வேறு வழியில்லை.. மேலுள்ள கம்பியையும் பிடிக்க எட்டாது.. அதனால் என்னை காப்பற்ற முட்டி மோதி படிகளைக் கடந்து பேருந்தின் விளிம்பில் ஒரு காலை மட்டும் அழுந்த வைத்து நின்று கொண்டிருந்தேன்..

பேருந்து குறிச்சி குளம் அருகில் உள்ள கோவிலின் பக்கம் உள்ள வளைவில் வேகமாக  திரும்ப, எனக்கு பின் உள்ள கூட்டம் எல்லாம் என் மேல் சாய , மேலே கம்பியை பிடித்திருந்த என்  ஒரு கையும் தன் பிடியை விடும் நிலையில்... (அந்த ஒரு நொடியில் மரண பயம் என்னை அலுத்தியிருந்ததை இப்போதும் உணர்கிறேன் )  ஒரு கை என் கையை அழுந்த கம்பியோடு சேர்த்து பிடிக்கிறது.. அந்த பிடி ஓரிரு நொடிகள்தான்..  பின் நேர்பாதையில் பேருந்து பயணிக்கும்போது என் பாதுகாப்பை உணர்ந்துகொண்டு  தன் கையை கம்பியிலிருந்து எடுத்துக் கொள்கிறது

என்னால் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை.. கூட்டத்தில் அந்த கைக்குரிய முகத்தை தேடவும் இயலவில்லை.. மெல்ல சிரித்தபடி தேங்க்ஸ் என்று கூட்டத்தை பார்த்து மெதுவாக சொல்லிக் கொண்டேன்... அன்று , அந்த கை மட்டும் என்னை பிடிக்காதிருந்தால் , என்றோ பலர் முன்னிலையில் நான் போயிருப்பேன்..

அதற்கு பின்னான காலங்களில் எதற்கு இருக்க வேண்டும் என தோன்றும் சந்தர்ப்பங்களிலும் கூட, அன்றே பேருந்தில் இருந்து போயிருக்கலாம் என்று மட்டும் தோன்றவே தோன்றாது..  அப்படி இன்று வரை என் உயிர் மீட்ட நிகழ்வு என்றால் முதலில் இதுதான் நினைவில் வரும்.

பள்ளியில் படிக்கும்போது கூட , ஒருமுறை பின்னால் (ஹாரன் அழுத்தியும் நான் கேட்காத மனநிலையில் இருந்திருப்பேனோ என்னவோ ) மெல்ல வந்து கொண்டிருந்த பேருந்துக்கு முன்பிருந்த  என்னை பின்னாலிருந்து ஓரத்தில் இழுத்து விட்ட எங்கள் பள்ளி வத்சலா டீச்சருக்கு , அப்போது நன்றி சொல்ல தோன்றவில்லை .., மெல்ல அவரை பார்த்து சிரித்தபடி கடந்து விட்டேன்.. ஆனால் இப்போது என் நன்றி அறிவிக்கும் அட்டவணையின் போது தவறாமல் அவர் பெயரும் ( அவரின் உருவத்தை (முகம் தெளிவான நினைவிலில்லை)மனதில் வைத்து) அதில் இருக்கும்..

இந்த சம்பவத்தில்  காப்பாற்றிய ஆசிரியரின் பெயரும் உருவமும் நினைவிலிருக்கிறது .. ஆனால் முந்தைய நிகழ்வில் காப்பாற்றியவரின் ஒரு விவரமும் தெரியாது..

ஆனால் இந்த நினைவு வரும்போதெல்லாம் நன்றி பகிர அந்த கையின்  பிடிதான் ஒரு நிலைப்புள்ளி...  அந்த கையின் உறுதியான பிடியை மட்டும் இன்றும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ., இன்று மட்டுமல்ல , என்றும் உணர்ந்து கொண்டே இருப்பேன்...


- 08-07-2019

ஞாயிறு, 3 மார்ச், 2019

எதிர்மறை தாக்கம்



கனிதலுக்கு
முன்பருவத்திலுள்ள காய்
அவரால் பறிக்கப்பட்டது
என்கிறேன்
இல்லை, தானாக விழுந்தது
என்கிறீர்கள்
காயின் பருவம் தெரிந்தும்
இப்படி இருக்கிறீர்களே
என சலிக்கிறேன்...
ஏனோ பார்த்த எதிர்மறை காட்சிகள்
எனக்குள்
நேர்மறை எண்ணத்தை
தடை செய்கின்றன..
உங்கள் நேர்மறை எண்ணம்
நேர்மறையையே உங்களுக்கு
கொண்டு வருமென்தால்
விட்டு விடுகிறேன்...
ஆனால் அதையே வலுவாக
என் மீது திணிக்காதீர்கள்
நம்பினாலும்
நம்பி விடுவேன்...
நம்புவது உள்ளத்திற்கு
நல்லதென்றாலும்
மனிதர்களின் சூதை சிறிதேனும் 
கற்றுக்கொள்கிறேனே..
காட்டுவதற்காக அல்ல
விடுபடுவதற்காக...

நினைவுகளின் சுமை

நம் நினைவுகளின்
கனம் தாங்காமல்
திணறுகிறேன்..

நானும்தான்
சுமந்து கொண்டிருக்கிறேன்
என்று மட்டும் சொல்..

கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்...

25

"ஒரு ஊர்ல ஒரு சோம்பலான மனுஷன் இருந்தானாம் .. அவனுக்கு ரொம்ப பணக்கஷ்டமாம் .. சாப்பிட சாப்பாடு இல்ல, போட்டுக்க துணியில்ல ,அந்த அளவுக்கு ரொம்ப வறுமைல இருந்தானாம்"...
"ஏன் சாப்பாடு இல்ல, டிரஸ் இல்ல" வறுமைனா என்ன"- ரோஹித்
"வேலைக்கு போனாதான காசு கிடைக்கும்.. அந்த காசுலதான சாமான்லாம் வாங்கி சமைக்க முடியும். துணி வாங்க முடியும்.. அந்தமாதிரி வாங்க முடியதவங்கள வறுமைல இருக்கறதா சொல்வாங்க. அந்த ஆள் வேலைக்கு போகாம சோம்பேறியா உட்கார்ந்துட்டு இருந்தா யார் பணம் கொடுப்பாங்க.. அப்பா வேலைக்கு போறதாலதான சம்பளம் கொடுக்கறாங்க.. நாம எல்லாம் வாங்கிக்கறோம்"
ம்ம்.. அப்பா வேலைக்கு போறதால காசு கொடுக்கறாங்க.. நான் ஸ்கூலுக்கு போறேன் , ஆனா எனக்கு யாருமே(வார்த்தையில் அழுத்தம் கொடுத்து )காசு தர மாட்டேங்கிறாங்க"
வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு "நீ பெருசாகி வேலைக்கு போகும்போது உனக்கும் சம்பளம் தருவாங்க.. அப்புறம் அந்த ஆள் ஒரு சாமியாரை பார்க்க போய் , எனக்கு நிறைய பணம் வேணும், என் கஷ்டமெல்லாம் தீரணும்,அதுக்கு வழி சொல்லுங்கன்னு கேட்டாராம்".. சாமியாருக்கு அவன் வேலைக்கு போகாத சோம்பேறின்னு தெரிஞ்சுடுச்சு.. அதனால அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நினச்சுட்டு ஒரு கதை சொல்றேன்னு சொன்னாராம்..
"சாமி பேசுமா, நான் கும்பிடும்போது பேசமட்டேங்குது"
சாமி பேசாது , சாமியார் பேசுவார், முன்னாடி எல்லாம் பெரிய தாடி வச்சுட்டு சாமியாரெல்லாம் இருப்பாங்க.. இப்ப உள்ள சாமியார்க எல்லாம்..(மேல என்ன சொல்றதுன்னு தெரியாததால அதோட விட்டுட்டேன்) அவங்ககிட்ட போய் கஷ்டம்னு சொன்னா, அது தீர நமக்கு ஏதாவது வழி சொல்லுவாங்க.. சரி , இப்ப அந்த சாமியார் அந்த ஆளுக்கு ஒரு கதை சொல்றாராம்"..
ஒரு மரங்கொத்தி ஒரு மரத்தை போட்டு டொக்கு டொக்குன்னு தன் அலகாலா, அலகுன்னா அதோட வாய்.., அதால கொட்டிட்டே இருந்ததாம்.. அப்போ அந்த வழியா வந்த ஒரு ஆள் , சும்மா , டொக்கு டொக்குன்னு கொட்டிட்டே இருக்கியே , இது வீண் வேலைதானேன்னு கேட்டாராம்.."
"அதுக்கு அந்த மரங்கொத்தி சொல்லுச்சாம், மனுஷனே , நான் எனக்கு சாப்பாடு தேடறேன்.. தேடினாத்தான கிடைக்கும்னு சொல்லுச்சாம்".. அப்புறம் அந்த ஆள் பார்த்துட்டு இருக்கும்போதே மரத்தை கொத்தி ஓட்டை போட்டு அதுக்குள்ள பதுங்கி இருந்த புழுக்களையெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சுதாம்..
"ஐயே, நானெல்லாம் சோறுதான் சாப்பிடுவேன், அது சோறு சாப்பிடாதா?"
அது எப்படி அரிசி வாங்கி சமைச்சு சாப்பிடும். நான் நேத்து சிங்கக் கதை சொல்லும்போது சிங்கமெல்லாம் ஆடு, மாடு , மான் எல்லாத்தையும் கொன்னு சாப்பிடும்னு சொன்னேன்ல, அது போல Birds எல்லாம் புழு, பூச்சி , வெளிய சிந்தி இருக்க Grains எல்லாம்தான் சாப்பிடும்..
"அதோட வயிறு நிறையற வரை சாப்பிட்ட மரங்கொத்தி அந்த மனுஷன்கிட்ட சொல்லுச்சாம், மனுஷனே நீயும் போய் உனக்கு தேவையானதா எல்லா பக்கமும் தேடு.. தேடினாத்தான் கிடைக்கும்னு சொல்லுச்சாம்.. அப்புறம் அந்த சாமியார், அந்த சோம்பேறி மனுஷன்கிட்ட சொன்னாராம், நீயும் போய் வேலை தேடு, தேடினாத்தான் உன் வறுமை போகும்னு சொன்னாராம்.. அதை கேட்டுட்டு அந்த மனுஷனும் சரி ன்னு சொல்லி போயிட்டானாம்.."
"இந்த கதை என்ன சொல்லுதுன்னா , தேடுனாதான் எல்லாமே கிடைக்கும்.. சோம்பேறியா இருந்தா எதுவும் கிடைக்காது.. நீயும் நல்லா தேடி தேடி படிக்கணும்.. அப்புறம் படிச்சு முடிச்சு வேலைக்கு போனாதான் நல்லா இருக்க முடியும்.. ஒகே வா?"
"ஒகே ம்மா.. இப்ப KG 1 படிச்சு முடுச்சுருவேன்ல.. அப்புறம் வேலைக்கு போய் நிறைய காசு வாங்கி எல்லாம் வாங்குவேன்..அப்பாக்கு நான் நிறைய காசு கொடுப்பேன்.. "
" இல்லடா, -----"
"-------"
"--------"
"-------"
----XXXXX----
ம்ம்.. குழந்தைககிட்ட ஒரு சின்ன கதைய சொல்லப்போனா எவ்வளவு நேரம் எடுத்துக்குது பார்த்தீங்களா...