வெள்ளி, 27 ஏப்ரல், 2018

புளியமரம்


விடுமுறையில் உறவுகள்
கூடும் நாட்களில்
எங்களின் பாதி பொழுதுகளை
குத்தகைக்கு எடுத்துக்கொள்வது
அப்புளியமரம்தான்....

கண்ணாமூச்சி ஊஞ்சல்
பல்லாங்குழி என அனைத்தையும்
களைப்பின்றி விளையாட
நிழல் பரப்பி காவல் இருக்கும்....

எங்களின் சிறுவயது
சமையல் ஆசையை
இலை காய் கொட்டை சுள்ளி 
தந்து பூர்த்தி செய்ததும்
அம்மரம்தான்....

அந்த விளையாட்டுக்களை
தவறவிட வேண்டிய
வயது வந்த பின்
அங்கு செல்லும் நாளெல்லாம்
அதன் குதூகலத்தைத் தேடி
தோற்றுப் போவேன்....

இப்போதுள்ள பிள்ளைகளின்
வாசத்தைக் கூட அம்மரம்
நுகராததை அதன்  கீழ்
குவிந்திருக்கும் சருகுகளே 
நிரூபணமாக்கின....

எதுவும் மாற்றம் செய்ய இயலா
சூழல் உணர்ந்து
நினைவுகளாகி விட்ட
பழைய நிகழ்வுகளை
அசைபோட்டபடி
நின்றிருக்கும் அம்மரத்திடம்
 நானும் சிறிது கேட்டு வாங்கி
இளைப்பாறி விட்டு
திரும்புவேன் ஏக்கத்துடன்....

வியாழன், 26 ஏப்ரல், 2018

நேசம்



நேசத்தை சுமந்தபடி
கூவிக்கூவி 
விற்றுக்கொண்டிருந்தேன்...

பதிலுக்கு எதிர்பார்த்தது 
நேசம்தான் எனினும் 
கிடைத்ததென்னவோ 
துரோகங்களும் ஏமாற்றங்களும்... 

இருப்பினும் வாங்கிய பலர் 
கொடுத்த வலியை விட 
வலி தருவது 
வாங்கவே யோசிக்கும் 
சிலரின் வெளித்தெரியா 
எண்ணப் பார்வைகள்தாம்... 

என்னைக் குறித்த 
அவர்களின் கணிப்பில் 
அளவுகோல் இருக்கலாம் 

ஆனால் படரத்துடிக்கும் 
நேசத்துக்கேது அளவுகோல்.. 

இதோ இப்போதும் 
அளவில்லா நேசத்தை 
சுமந்தபடி 
கூவிக்கொண்டே இருக்கிறேன்...

மன்னிப்பு




நினைவுகளும் செயல்களும்
நெருக்கமான சமயத்தில்
கடக்கும் உன் நினைவு 
ஒரு தும்பியின் வேகம் போல்
மிக துரிதமாக கடந்து விடுகிறது..

நினைவுகள் மட்டும் அணிவகுக்கும் 

நித்திரைக்கு முன்னான நேரங்களில்
மிளிரும் உன் நினைவோ
இறக்கி வைக்காத பாரத்தை
நினைவூட்டி வதைக்கிறது...

பாரத்தை இறக்க அந்த வார்த்தையை
எடுத்து கனவினுள் வருவாயா என 

அக்கணங்களில் வேண்டுதலோடு 
உறக்கத்தினுள் நுழைகிறேன்...

என் உயிர் நிரப்பும்
ஒரு ஒற்றை சொல்லுக்காக
நீ நினைவை நிரப்பும்
நாளெல்லாம் யாசிக்கிறேன்..

அப்போது கேட்க தவறியதை
இப்போது கேட்க
காலமும் இடம் தரவில்லை
காலனும் இடம் தரவில்லை...

காலத்தில் கேட்கா மன்னிப்பு
காலம் முழுவதும் அழ வைக்கும்
என்று காலம் கடந்துணர்ந்து
என்ன பயன்..
புரிகிறது...

இருந்தும் நீ நினைவில் வந்தால்
சூழ்நிலை இழுப்பது
கனவில் வந்தால்
நீயாய் வருவது
என்ற என் எண்ணம்
பொய்த்து போகா வண்ணம்
கனவில் வந்து தந்து விட்டு போ
என் உயிர் தேடும் அந்த வார்த்தையை....

நிற மாற்றம்

காலை நேர பரபரப்பை
சுமந்து பேருந்துக்குள்
ஏறிக்கொண்டிருந்த பெண்களில்
ஒருத்தியை பார்த்ததும்
மனதில் மகிழ்ச்சி
சம்மணமிட்டுக்கொண்டது....

பள்ளியில் உடன் படித்தவள்
ஆறேழு வருட இடைவெளியில்
தோற்றம் உடை எல்லாவற்றிலும்
நவநாகரிகத்திற்கு மாறியிருந்தாள்....

நெரிசலுக்குள்ளே பார்வையை விட்டு
பின்பக்கம் நின்றிருந்த
அவள் பார்வையின்
ஆனந்த அதிர்ச்சியை உள்வாங்க
அவளை அடிக்கொருமுறை
திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்....

கம்பியை பிடிக்கவே
சிரமப்படுத்திய கூட்டம்
அவளை பார்க்க விடாமலும்
சிரமப்படுத்தியது....

ஐந்தாறு நிறுத்தங்களுக்குப் பின்
குறைந்த கூட்ட இடைவெளியில்
சில நொடிகள் அவள் என்னை
உற்றுப்பார்த்தது அவள் நினைவு
என்னை அடையாளம்
கண்டதை உணர்த்தியது....

என்னிடமிருந்து கிளம்பிய
புன்னகை அவள் பார்க்காதது
போல் ஜன்னல் வழி
பார்வையை திருப்பியதும்
தன்னையும் திருப்பிக் கொண்டது....

அடுத்து வந்த நிறுத்தத்தில்
இறங்கிய அவள்
மாற்று எண்ணங்கள்
சுமத்தப்பட்டு வேறோருவளாக
சென்று கொண்டிருந்தாள்....

பால்ய கால தெருக்கள்


பால்ய காலத்தில்
புழங்கிய தெருக்கள்
பால்யத்தை போலவே 
தொலைவில் இருக்கின்றன
நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது 20 எட்டில்
முடிந்து விடுகின்றன
கால மாற்றம் தந்த
பொருளாதார ஏற்றம்
சிறு வீடுகளையும்
மாளிகைகளாக்கி விட்டிருக்கிறது
அங்கு குடியிருக்கும்
நம்மை அறிந்த
மிஞ்சியோரின் கண்களில்
நம் உடல் வளர்ச்சி
ஆச்சரியத்தை தெளிக்கிறது
நம் தற்போதைய உருவத்திற்கு
அவர்களின் வார்த்தைகள்
நம் தாய் அல்லது தந்தையை
பொறுப்பாக்குகின்றன
சிறுவயதில் நம்மை
தூக்கி விளையாடிய
அப்போதைய சிறுமியரெல்லாம்
தத்தம் பிள்ளைகளை
இடுப்பில் வைத்து
நலம் விசாரிக்கின்றனர்
நம் அம்மாக்களுடன்
பேசித்திரிந்த
அம்மாவின் சிநேகிதிகளோ
நம் சிறுவயது
சேட்டைகளின் பட்டியல்
கூறி வெட்கப்படுத்துகின்றனர்
அம்மாவிடமும் பதில் இல்லாத
நினைவில் நிழலாக நிற்கும்
பவுடர் பூசி பொட்டு வைத்து
தந்த உருவத்தையும்
கடைக்கு கூட்டி சென்று
தேன்மிட்டாயோடு அன்பையும்
ஊட்டிய உருவத்தையும்
வெளிச்சத்திற்கு காட்டும்
கேள்வியை மட்டும்
யாரிடம் கேட்பதென
தெரியவில்லை
ஒவ்வொரு முறை அங்கு
சென்று திரும்பும்போதும்
இக்கேள்விகளுக்கான
பதில்களும் அங்கேயே
தங்கி விடுகின்றன...

மௌனப் பார்வை.

விலக்கவேண்டும் என்ற
உன் எண்ணத்தை அறிந்து
காரணம் கேட்டபோது
ஆமோதிப்பும் மறுப்பும்
இல்லாமல் மெளனமாக 
உண்மை என உணர்த்தினாய்....
இருள் தன் பணியை
தொடங்கிய நேரத்தில்
உன் மனம் எண்ணியவாறே
எவ்வித வார்த்தை தாக்குதலும்
இல்லாமல் முடிந்து போனது
எனக்கு மனநிறைவை மட்டுமே
தந்திருந்த நம் நட்புறவு...
அதன் பின்னும் கிளர்ந்தெழுந்த
ஆர்ப்பரிக்கும் ஆசையால்
எதிர்பார்த்திருந்த உன் தொலைபேசி
அழைப்பு என் அலைபேசியில்
மின்னவேயில்லை...
என் செய்கையில் தவறில்லாத
காரணங்களை அறிந்து கொள்ள
தொடங்கிய கணம் முதல்
கவலை இலட்சியங்களாக
பரிணமிக்க ஆரம்பித்திருந்தன....
மதிக்காத அன்பு
தேவையில்லையென என்னாலும்
துண்டித்து விட்ட உறவு துண்டித்தே
இருக்கட்டும் என உன்னாலும்
இருவரின் தொலைபேசி
எண்களும் மாற்றப்பட்டன ....
விரும்பி நேசித்த இதயம்
வெறுக்கவிடாது
உணர்ந்து உன் தொடர்பை
தேடியபோது
சிரமம் இல்லாமல்
கிடைத்தும் போனது...
பழையதை மறந்து பேச
மனம் முட்டும் நேரங்களில்
செல்லும் வார்த்தைகள்
காயப்படுமோ என்ற அச்சத்திலேயே
அதை தட்டிக்கொடுத்து
முடக்கி வைக்கிறேன்....
பேசும் வாத்தைகளால்
நட்பு உயிர் பெறலாம்
மறுபிறப்பு எடுக்கும் நட்போ
பழைய காயங்கள்
தந்து விட்டு சென்ற
லட்சியங்களைக் காற்றோடு
கரைத்து விடுமே....
லட்சியங்கள் வெற்றிகளாகும்
நாள் வரை
குறிக்கோளை மழுங்கவிடாமல்
இப்படியே தொடரும்
என் மௌனப் பார்வை....

காதலின் வார்த்தை

நான் உன்னால்
காதலிக்கப்படுகிறேன்
என நண்பன் சொன்னபோது
நம்பவில்லை
நான் உன்னை
காதலிக்கவில்லை
என நீ சொன்னபோதும்
நம்பவில்லை
நான் இப்போது
இடம் மாறி இருக்கிறேன்
என காதல் சொன்னதை
மட்டும் நம்பிக்கொண்டேன்...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

விபத்து

விபத்து என்பது எதிர்பாரா நேரத்தில் கண்ணிமைக்கும் நொடிக்குள் கோபத்தினாலோ, ஆத்திர அவசரத்தினாலோ, கவனமின்மையாலோ நடந்து வழக்கமான சூழ்நிலையை கொஞ்சம் மாற்றிப்போடும் .. கொஞ்சம் மாற்றிப்போடுமா அல்லது முழு மாற்றம் கொடுக்குமா என்பது அந்த விபத்தின் வீரியத்தை பொறுத்தது...
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்பது நடந்தபின் யோசித்து ஒரு பலனும் இல்லை.. வாழ்க்கை முழுவதுமே கோபத்தை (முக்கியமாக கோபம்: ஏனெனில் இந்த கண நேர கோபம் பலரை கொலையாளியாக்கி பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது..) கட்டுக்குள் வைத்திருந்தும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் கவனமாக மற்றும் பொறுமையாக இருப்பதுமே இவற்றை தவிர்க்க வழி..
இப்போது நான் சொல்லப்போகும் சிறு விபத்து என்பது "எதிர்பாராத" என்ற வகையில் சேரும்..
பெண்ணுக்கு கொஞ்சம் போரடித்தால் "அம்மா நான் யோகா செய்றேன் பாருங்க " என, நான் சொல்லிக் கொடுத்திருக்கும் யோகா-க்களையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து காட்டுவாள்.. அவள் செய்யட்டும் என்று நாம் அங்கு இங்கு திரும்ப முடியாது.. ஒவ்வொன்றையும் நான் பார்த்து ,குட் என சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அவளுக்கு திருப்தி..
நேற்று மாலையும் வழக்கம் போல் அவளுக்கு போரடிக்கவே யோகாவை கையிலெடுத்தாள்.. அதே வழக்கம் போலவே டிவி பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க விடாமல் அவளை பார்க்க வேண்டும் என சிணுங்கி வற்புறுத்தவே வேறு வழியின்றி பார்த்தேன்.. ஒவ்வொன்றை முடித்த பிறகும் "இனி என்ன செய்யறது " என கேட்பாள்.. அதற்குள் அவளுக்கு நியாபகம் வந்தால் அதை செய்து விட்டு அடுத்து செய்வதற்கான யோகா பொசிஷனை கேட்டாள்..
உடனே நான் பண்ணிப்பார்த்தும் என் உடல் எடை ஒத்துழைக்காத "அதோ முக சுவானாசனா மற்றும் சிரசாசனா கலந்த ஒரு யோகாசனத்தை செய்ய சொல்லவே அவளின் சிறு உடல் ஒத்துழைப்பு தர சிரமமே இல்லாமல் இலகுவாக செய்தாள்.. உடனே "அம்மாவுக்கு இதை செய்யவே முடியலே, அம்மா கொஞ்சம் வெயிட் இல்லையா ,சோ தலை கீழ வைக்க முடியல, பட் நீ செஞ்சுட்ட , குட் " என்றேன்..சொன்னதோடு இல்லாமால் (விதி யாரை விட்டது ) அவள் செய்த அழகை பார்த்து "பாரேன் நான் செய்றேன்" என கீழே விரித்திருந்த துணியின் மேல் செய்ய ஆரம்பித்தேன்.. செய்ததும் உடனே நன்றாக அந்த ஆசனம் வந்ததும் , என் மகள் "அம்மா , அப்படிதான் , குட் , குட் "என உற்சாகத்துடன் கூறவே, நம்ம உடல் எடைக்கு திடீர்னு இதை இவ்வளவு நேரம் செய்தால் ஒத்து வருமா என யோசிக்கவே தோன்றாமல் இன்னும் 10 நொடி இருக்கலாம் என எண்ணி அதே பொசிடிஷனில் நான் இருக்க , கீழே விரித்திருந்த துணியோ மார்பில்ஸ்-க்கு நன்றாக வழுக்கவும் உடனே சமாளிக்க என் உடல் எடையை கைக்கு கொடுக்கவும் ...... திடீர் என வலி , "அம்மா, அம்மா என நான் அவர்களை அழைக்க அடுத்த அறையில் இருந்த அம்மாவும் அப்பாவும் பதறிக் கொண்டு வர , மகளோ பயந்த முகத்துடன் அழுகையை துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள்..
எனக்கு உடனே இடது கை இறங்கி விட்டதென புரிந்து போனது.. ஏறக்குறைய 18 வருடங்களுக்கு முன் ஒரு சகோதர சண்டையில் என் தம்பி இதே கையை இறக்கி விட்டிருந்தான்.. பதறிக் கொண்டு வந்த அம்மாவிடம் "அம்மா, அன்னைக்கு போல ஷோல்டர் -ல இருந்து கை இறங்கிடுச்சு , உடனே ஆட்டோ கூப்பிடுங்க" என வலியினூடே சொன்னேன்.. அப்பாதான் மிகவும் பயந்து போயிருந்தார்..
முன்பொருமுறை இப்படி நடந்தபோதும் ஆட்டோவில் பயணித்தபோது ஆட்டோவின் குலுக்களில் வலி உயிரை தின்றது வேறு நியாபகத்தில் வந்து இம்சை படுத்தியது.. டாக்ஸி சொல்ல சொல்லலாமென்றாலும் அவ்வளவு நேரம் வலி பொறுக்க மனதிலும் உடலிலும் தெம்பில்லை.. அதனால் அடுத்த தெருவில் இருந்த ஆட்டோவை வரவழைக்க அம்மா போன் செய்யும்போதே , எந்த ,மருத்துவமனைக்கு செல்லலாம் என அம்மாவும் அப்பாவும் டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர்..
அல்லோபதி மருத்துவமனை என்றால் ஸ்கேன் எடுத்து அதன்பின்தான் சிகிச்சை , மற்றும் மருத்துவர்கள் இருப்பார்களோ (அப்போதே நேரம் 7.30 -ஐ தாண்டி இருந்தது ) என்ற சந்தேகம் என அனைத்தும் நினைக்கும்போதே , அவ்வளவு நேரம் வலி பொறுக்க முடியாது என தோன்ற " வைத்தியசாலைக்கு செல்லலாம் "எனக் கூறினேன்.. சரி, ஆட்டோ ட்ரைவரிடமே கேட்கலாம் என முடிவெடுத்து அம்மா ஆட்டோவுக்கு காத்திருந்தார்கள்..
என் நிலையோ ஆரம்பத்தில் பயத்துடன் பதட்டமும் சேர மூச்சுக்கே திணறினேன்.. உடல் வேறு வேர்த்துக் கொட்டியது ..அம்மா தண்ணீர் கொண்டு வர ,ஆசுவாசப்படுத்திக் கொண்டு , பயந்து அழுது கொண்டிருந்த பிள்ளைகளை நினைத்தவாறே, முதலில் மனதுக்கு தைரியத்தைக் கொடுத்தேன்.. உடனே படபடப்பு போய் சீரான சுவாசம் வந்தது.. ஆனால் தோள்பட்டைக்கு கொஞ்சம் அசைவு கொடுத்தாலும் உயிர் போகும் வலி என்பார்களே, அப்படி வலி.. எழுந்திருக்க முடியாவிட்டாலும் எப்படியோ எழுந்து ஆட்டோவில் போய் உட்கார்ந்ததற்கு காரணம் மன தைரியம் என்பதில் சந்தேகம் இல்லை..
ஆட்டோ குலுக்கலில், கத்திக் கொண்டே ஒரு வழியாக வைத்திய சாலைக்கு வர , அங்கிருந்தவர் கை இறங்கித்தான் இருக்கிறது என உறுதி செய்து கொண்ட பின் சுவரோரமாக சாய்ந்து உட்கார சொல்லவே , அப்படியே உட்கார்ந்தேன்..அந்த கையை அப்படியே மேலே தூக்க, வலி saththamaana காத்தலை கொடுத்தது... இரு நொடிகள் கூட ஆகவில்லை," "இப்ப சரி ஆகிடுச்சு , இனி வலி இருக்காது "எனக்கூறி எண்ணெய் விட்டு கட்டும் கட்டி விட்டார்..
"ஒரு வாரத்துக்கு பின் வாங்க, 3 வாரம் கட்டு போட்டா சரி ஆகிடும்" எனக்கூறவே , இரு நாட்களில் நாகர்கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்திருந்ததை கூறினேன்.. சனிக்கிழமை பார்ப்போம் .. சரி ஆச்சுன்னா போங்க" என வைத்தியர் கூறினார்..
வீட்டுக்கு வரும்போதோ , மகன் அழுது கொண்டே இருந்ததையும் , பெண் கல் போல இருந்த இடத்தை விட்டு நகராததையும் அப்பா சொல்ல, இருவரையும் சமாதனப் படுத்தினேன்.. என்னவருக்கு சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம்.. பிசினஸ் விசிட்டில் இந்தியா வந்திருக்கும் அவர் அன்று காலைதான் கோவையிலிருந்து திருச்சி கிளம்பினார்.. இனி இந்த 20 நாட்களும் பெங்களூர் , நார்த் இந்தியாவில் சில ஊர்கள் என சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. அதனால் அவர் பேசும்போது சொல்லலாம் என விட்டு விட்டேன்..
ஆனால் அவர் ரியாக்சன் எப்படி இருக்கும் எனும் காணும் ஆவல் தலை தூக்க, (இப்ப யோகா தேவையா என திட்டினாலும், கூடவே பழியில் சேர்த்துக் கொள்ள மகளும் இருக்கிறாளே , எந்த தகப்பனும், அதுவும் இந்த தகப்பன் மகளை விட்டே கொடுக்க மாட்டார் , அவளும் அப்பனை விட்டே கொடுக்க மாட்டாள் ... இப்படி நிலைமை இருக்கையில் சமாளித்துக் கொள்ளலாம் என கட்டு போட்ட கையை பாதி முகம் தெரியுமாறு போட்டோ எடுத்து அனுப்பினேன்..
அவரின் ரிப்ளைக்காக அரை மணி நேரம் காத்திருந்தேன்.. அவரின் வேலை அலைச்சல் தெரியுமாதலால் பார்க்கும்போது பார்க்கட்டும் என நினைத்து அப்படியே தூங்கி விட்டேன்.. இன்று காலை மொபைலை எடுத்துக் பார்த்தபோது, பதிலுக்கு "தம்ஸ் அப்" கொடுத்திருந்தார்.. கோபத்தோடு அழுகையும் சேர்ந்து வர ஆரம்பித்த உடனேயே , இல்லையில்லை சரியாக கவனித்திருக்க மாட்டார் என சமாதானப் படுத்திக்கொண்டேன்..
சிறிது நேரம் கழித்து "இது மகள்கள் வாரம்" என்ற பார்வேர்ட் மெசஜை அனுப்பி இருந்தார் .. அதில் மகள் அமைதியாக இருந்தால் உறவுகள் ஒவ்வொருவரும் எப்படி அவளை கேட்பர் என்பது போல் இருந்தது.. நல்ல சான்ஸ் கிடைத்திருக்கிறது , விடக்கூடாது, இப்போதாவது என் உடல்நிலையை அவருக்கு மறைமுகமாக தெரிவித்து விட வேண்டும் என் எண்ணி .பதிலுக்கு "உங்கள் பெண் அமைதியாகத்தான் இருக்கிறாள், குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் , அவளை பார்க்க பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது" என அனுப்பி வைத்தேன்.. அதையும் எப்படி பார்த்தார் என தெரியவில்லை , பதில் "ஓ" என வந்தது..
சலித்து, உடைந்து போனேன்.. அந்த உணர்ச்சியில் "அக்கறையான ஒரு பார்வை , நம்பிக்கை ஏற்றும் ஒரு வார்த்தை, சிகையை கோதும் ஒரு வருடல் , நெற்றியை சூடாக்கும் ஒரு முத்தம் "என நான் அவரிடம் எதிர்பார்ப்பது கவிதை (????) போல வர ,உடனே, இதை பேஸ்புக்கிலும் போடலாமா, இல்லை அவருக்கு மட்டும் அனுப்பினால் போதுமா என்ற பட்டிமன்றம் வேறு மனதினுள் நடந்து கொண்டிருந்தது.. எப்படியோ ஆறுதலுக்கு ஒரு கவிதையாவது (திரும்பவும் ????)என் சிந்தையில் இருந்து வருகிறதே என சாந்தப்பட்டுக் கொண்டேன்...
அவர் அனுப்பிய மெசேஜ்களை பையனிடம் வாசித்துக் காட்டினேன்.. உன் அப்பாவுக்கு என் மேல இவ்வளவுதான் அக்கறை பார்த்தியா " என ....
அதே நேரம் அவரின் கால் அழைப்பு வரவே மகன் எடுத்து , "அம்மாவுக்கு புண் இருக்குன்னு காட்டினா ,அப்பா தம்ஸ் அப் போட்டுருக்கீங்க" என கூற , அவரோ அம்மாட்ட போனை கொடு எனக்கூறி, "அவன் என்ன சொல்றான்" எனக் கேட்க " நான் அனுப்பின போட்டோ-வை பார்த்தா தெரிஞ்சு இருக்குமே , எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்க போன ஜென்மத்துல ரொம்ப புண்ணியம் செஞ்சுருக்கணும் "என கிண்டலுடன் கூறவே , சரி நான் பார்க்கறேன் , நீ பாலிமர் நியூஸ்-ல சவூதி பத்தி ஏதோ சொன்னார்களாம், கேட்டு டீடெயில்ஸ் அனுப்பு, நான் ட்ராவெலிங்-ல இருக்கேன் " என போன் வைத்தார்..
இன்னுமா பார்த்திருக்க மாட்டார் ,அரை மணி நேரமாகியும் கால் வரவில்லை என்ற ஏக்கம் என்னை படுத்த, திரும்பவும் நானே அந்த நியூஸ் விவரத்தை அவருக்கு தெரிவிக்க போன் செய்த போது ," உன் விரல்ல ஏதோ அடி பட்டிருக்குன்னு சொன்னான், அதுல பார்த்த தெரியலியே "என குழப்பத்துடன் கேட்க, தானாக அவருக்கு புரிய போவதில்லை என புரிந்து கொண்டு நானே , நேற்று நடந்த சம்பவத்தை விளக்கினேன்... "ஐயோ, கை இறங்கிடுச்சா" என பதட்டப்பட்டவரிடம் , திரும்ப சவூதி பற்றிய செய்தியை VIDEO-வாக அனுப்புகிறேன் எனக் கூறி போனை வைத்தேன்..
இருந்தாலும் , கணவராகிய அவரே பதறி ,"அச்சோ , இப்படி ஆச்சே, வலி-ல துடிச்சுருப்பியே -ன்னு வருத்தப்பட்டாதானே மனைவியான எனக்கு மனசு ஆறும் .. சோ, திரும்ப அவரின் வருத்தம் தோய்ந்த அழைப்புக்கு காத்திருந்தேன் , காத்திருந்தேன், காத்திருந்தேன்...
2 மணி நேரங்கள் கடந்துதான் மிச்சம்.. "சே, நமக்கு அப்போ தோணின கவிதைதான் மிச்சம் போல " அந்த கவிதையை மெருகேற்ற வழி பார்க்கணும்" என நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அவரின் அழைப்பு.... எடுத்ததும், " சாரிப்பா, நான் சரியா கவனிக்கல, அந்த கட்டுக்கு கீழ ஷால் போட்டு இருந்ததால ஒரு டிரஸ் போலவேதான் தோணுச்சு, அதான் நான் கவனிக்கல, சாரி, உடனே போன் பண்ணலாம்னா , கூட ஆட்கள் இருந்தாங்க, இப்பதான் ஏர்போர்ட்க்கு வந்தேன்.. கொஞ்சம் பிரீ-ஆனதும் உடனே உன்னை கூப்பிட்டேன் " என சொல்ல என் வருத்தம் எங்கோ போய் விட்டிருந்தது ...
ஆனால் கூடவே ஒரு வேறொரு வருத்தம் சேர்ந்து கொண்டது " என் கவிதை போச்சே "
- 22-4-2018

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

22



சித்திரை மாத வெப்பம் இரவிலும் தாக்க, இயற்கை காற்றாட தூங்குவதற்காக நேற்று  இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றோம்.. அங்கு சென்றவுடன் வீசிய காற்று மேனியோடு மனதையும் வருட "இன்று நல்ல தூக்கம் இருக்கப்போகிறது" என்று பேசியவாறே பாயை விரித்து படுக்க ஆரம்பித்தோம்..
இதுவரை இரவு வானம் பார்த்து தூங்கி எனக்கும் பழக்கமில்லை, பிள்ளைகளுக்கும் இல்லை.. ஆக ஒரு அனுபவத்தை பிள்ளைகள் பெறுகிறார்கள் என்பதே எனக்கு கூடுதல் உற்சாகத்தை தந்தது.. படுத்தவாறே பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்க , "இங்க பாருங்க ,வானத்துல எவ்வளவு ஸ்டார்ஸ் இருக்கு பார்த்தீங்களா, உங்களால கவுன்ட் பண்ண முடியுமா " என பிள்ளைகளிடம் கேட்டேன்..
ஓ,முடியுமே என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்க இருக்க புதிது புதிதாய் சில நட்சத்திரங்கள் மின்னி மின்னி அவர்கள் உற்சாகத்தை குறைத்துக் கொண்டே வந்தன.. இதற்கிடையில் தாங்கள் சுதந்திரமாக உலவும் இடத்தில் நான்கு மனித ஜீவன்கள் படுத்துள்ளதை தாங்காத கொசுக்களோ எங்கள் காதுகளில் ரீங்காரத்தை கொடுத்து போராட்டத்தை ஆரம்பித்து இருந்தன..
அவைகளின் ரீங்காரத்தை உதாசீனப்படுத்தியவாறே (பின்னே, கொசு இருக்கிறது என நான் சொன்னால் வீட்டுக்குள் படுத்துக்கொள்ளலாம் என என்னவர் சொன்னால் பிள்ளைகளோடு எனக்கும் சேர்ந்து கிடைக்கும் ஒரு புது அனுபவத்தை இழந்து விடுவேனே ) "பார்த்தீங்களா , இப்படித்தான் ஸ்டார்ஸ்-ஐ எல்லாம் எண்ணவே முடியாது.. இங்க உள்ளதே எண்ண முடியல , நாம எங்க எல்லாம் ட்ராவல் செஞ்சு இருக்கோம், அங்கேயும் உள்ள ஸ்டார்ஸ் எல்லாம் கவுன்ட் பண்ண முடியுமா நினச்சு பாருங்களேன் , அது போல வேறு எது எதை கவுன்ட் பண்ண முடியாதுன்னு தெரியுமா, மரங்கள், அப்புறம் நம்ம தலைல உள்ள முடி , அப்பாவோட மீசைல உள்ள முடி இதெல்லாம் கவுன்ட் பண்ணவே முடியாது.. வேணும்னா கவுன்ட் பண்ணி பாருங்க "என சொன்னேன்..
உடனே மகன் " அம்மா தலைல ஹண்ட்ரட் முடி, அப்பா மீசைல ஹண்ட்ரட் முடி " என்றான்.. நான் எழுந்த ஆத்திரத்துடன் "கவுன்ட் பண்ணி பார்த்து பண்ணமுடியுதா-ன்னு சொல்லு" என்க, அவர்களின் அப்பாவோ, "வேணும்னா நீங்களே சரியான்னு கவுன்ட் பண்ணி பார்த்துக்கோங்கன்னு சொல்லுடா " என்க , "பிள்ளைகளுக்கு இதை வேற சொல்லி தரியாப்பா"என எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டே கேட்டேன் .. மனதிற்குள் பேச தெரியாத பிள்ளைகளா இவர்கள், வகுப்பெடுத்து கொடுத்து என்னை மேலும் லந்து செய்வதற்கு " என எண்ணிக்கொண்டேன்..
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது மகளோ, "ஆனா மூனை ஈஸியா கவுன்ட் பண்ணிடலாம்" என்க 3 - ஆ என குழம்பி ஓ,"moon " -ஆ என தெளிவு பெற்று நான் சிரிப்பதற்கு முன் அவர்களின் அப்பா சிரித்துக் கொண்டிருந்தார் .. ஒரே நிலா ,இதை எண்ணிக்கையாக்கும் வகையில் சொல்கிறாளென்ற எண்ணம்தான் எங்களை சிரிப்பிற்குள் தள்ளியிருந்தது..
இன்று அம்மாவிடம் பேசும்போது, இந்நிகழ்வை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அதை தானும் சிரித்தவாறே கேட்டுக் கொண்டிருந்தவள் , என் அம்மா :உனக்கு நிலாவை கவுன்ட் பண்றது ரொம்ப ஈஸியா " என கேட்க "ஆமாம் , ஈசிதான் மூணு மூன் " என்றாள்..
தெளிவாக புரியவில்லையே என , நான் திரும்ப "மூணு மூனா " எனக் கேட்க , ஆமாம், துபாய்ல ஒன்னு, அம்மம்மா வீட்டுக்கிட்ட ஒன்னு, மரியம்மா பாட்டி வீட்டுக்கிட்ட ஒன்னு " என்று சிரிப்பை அள்ளிக் கொடுத்து விட்டு வெளியில் ஓடி விட்டாள்..
எந்த ஒரு விஷயத்தையும் அணு அணுவாக சொல்லி புரிய வைக்கும் நான் இதை அவளுக்கு புரிய வைக்க விரும்பவில்லை.. இன்னும் அவள் நினைவில் கூடுதலாகப்போகும் எல்லா நிலாக்களும், ஒரே நிலாவாக மாறும் வயது அவளுக்கு வரும் வரை காத்திருக்கப் போகிறேன்..
ஏதோ அனுபவம், அனுபவம் என மேலே சொல்லிக் கொண்டிருந்தேனே, அது எங்களுக்கு கிட்டியதா என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் என் பதில் தலையை இடமும் வலமும் ஆட்டுவதுதான்.. ஆம், கொசுக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று சிறிது நேரத்திலேயே எங்களை வீட்டுக்குள் புறமுதுகு காட்டி ஓட வைத்திருந்தன..

20-4-2018