வியாழன், 13 டிசம்பர், 2018

சாட்சியாகாத நிகழ்காலம்

நினைவுகள் பின்னோக்கி
பயணிக்க பயணிக்க
சம்பவங்கள் கண்முன்
காட்சிகளாகின்றன...

அணிவகுக்கும் காட்சிகளோ
தம் திரைக்கு
பின்னால் நிகழ்காலத்தை
மறைத்து விடுகின்றன...

இந்த பொழுதையும்
இறந்த பொழுதுகளின்
நினைவுகளால்
நிரப்பிக்கொள்ளும் வேளையில்
நிகழ்காலத்திற்கு  சாட்சியாகாமலேயே 
கரைந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
ஒரே நாளில் பிரபலமான
ஒரு முகத்தை முன்பே
சந்தித்தாக ஞாபகம்...
காணொளிகளில் சிரிப்பை
ஏந்தியிருக்கும் அம்முகம்
என் நினைவிலோ
கடமையை கடுப்போடு
கொண்டிருக்கிறது..
எங்கே எப்போதென
நினைவடுக்கில் தேடினாலும்
கிட்டுவதென்னவோ
அம்முகம் மட்டுமே...
தேடுதல் முடிவதற்குள்ளாகவே
வலைதளங்களில் காணும்
இம்முகமே நிலையாகி
நினைவை அழித்து
விடுமோ என்னவோ..

உறக்கம்.

எண்ணங்களின் போட்டிக்கு
இரையாகிக் கொண்டிருக்கிறது
உறக்கம்...

----------------xxxxxxxxxxxx------------------

நினைவுகள் 
மின்மினிகளாய் மிளிர
அதன் வெளிச்சத்தில் 
உறங்க மறுக்கிறது 

மனம் 

----------------xxxxxxxxxxxxxxx-------------




பிரதிபலிப்பு

உன்னிடம் சொல்லத்துடித்த
பூரிக்கும் சில நிகழ்வுகளை
சொல்லிவிட்டேன்.....
உன்னிடம் காட்டத்துடித்த 
என் தற்போதைய நிலையிருப்பை
காட்டிவிட்டேன்....
சொல்லியதை உன் செவிகளும்
காட்டியதை உன் கண்களும்
பெற்றுக்கொண்டதையும்
ஊர்ஜிதமாக உணர்ந்து விட்டேன்..
சொல்லப்பட்டவைகளுக்கும்
காட்டப்பட்டவைகளுக்கும்
உன் பிரதிபலிப்பு மட்டும்
வார்த்தைகளாக கிடைத்துவிட்டால்
கேட்க வேண்டிய கேள்விகளையும்
கேட்டு விடுவேன்......


வெயிலில் நர்த்தனமாடும் கால்கள்
நிழலில் ஓய்வெடுக்கிறது
இட மறந்த செருப்பு...

செவ்வாய், 16 அக்டோபர், 2018

1

பேருந்துக்கு காத்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் குரலின் சத்தம் என்னை திரும்பி பார்க்க வைத்தது.. என் அருகில்தான் நின்று கொண்டிருந்தார்கள்..அம்மாவும் பெண்ணும் போல..

"அங்க போய் வாங்கிட்டு வரணும், பஸ் போயிடும், வேணும்னா சொல்லு, தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றேன், பஸ் போனாலும் போய்டும் .. போகணுமா , இல்லேன்னா பேசாம இருங்க" எனும் அர்த்தத்தில் அப்பெண் உடனிருந்த அம்மாவிடம் காட்டமாக கூறிக்கொண்டு போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்..

தண்ணீருக்கான  தவிப்பு  அந்த அம்மாவின்  முகத்தில் தெரிந்தது..  நானாக இருந்தால் ஓடி சென்று வாங்கி வந்திருப்பேனே என ஒரு எண்ணம் தோன்றினாலும் ,எனக்கு வீட்டில் பெரிதாக எந்த வேலையும் இருக்காது, ஆனால் அவர்களுக்கு  அப்படி அல்லவே என தோன்ற, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்..

என் தண்ணி பாட்டிலில் பாதியளவு தண்ணீர் இருந்தது.. எடுத்துக் கொடுக்கலாம் என  நினைத்தாலும் , ஏதாவது நினைப்பார்களோ என்று , நான் குடிப்பதற்கு எடுப்பது  போல் எடுக்கலாம்   , அவர்கள் கேட்டால் கொடுக்கலாம் என பாட்டிலை வெளியே எடுத்து நான் ஒரு மிடறு குடித்துக் கொண்டே அந்த அம்மாவை பார்த்தேன்.. அவரோ பேருந்து வருகிறதா என அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.. பின் தவிப்புடன் உள்ளே வைத்தேன்..

மனமோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. தாகத்தின் தவிப்பை உணர்ந்திருக்கிறேன்..  என் தயக்கம் நீண்டு, அவருக்கு பேருந்து வந்து சென்று விட்டாரானால் என மனசாட்சி கொடுத்திருக்கலாமே என பின் இந்த நினைவு எட்டும்போதெல்லாம் என்னை வதைக்கும்.. ஆகவே  , பின் நானே பாட்டிலை வெளியே எடுத்து , "தண்ணி வேணும்களா. பேசிட்டு இருந்ததை கேட்டேன் " என கூறியதும் அவரின் முகத்தில் பிரகாசம், உடனே சிரித்துக்கொண்டே அந்தப்புறம் திரும்பி போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம்,  "பாரு", எனக் கூறிக்கொண்டே குடித்து விட்டு பாட்டிலை தந்தார்..

"ரோடு கிராஸ் பண்ணிட்டு போய் தண்ணி வாங்கறதுக்குள்ள பஸ் போயிடும்,அதான் "என கூறினார்.. நானும் "எனக்கு புரியுதுங்க" எனக் கூறினேன்..

எங்கள் நிறுத்தத்தில் ரொம்ப நேரம் ஒருவர் காத்திருந்தால்  அது எங்கள் பகுதி வழியாக செல்லும் பேரூந்துக்காகத்தான்  இருக்கும் என யூகிக்கலாம் .. இங்குதான் பேருந்தில் பயணிக்கும் நேரத்தை விட காத்திருக்கும் நேரம் அதிகம்.. என் வாழ்வின் பல நேரங்களை பேருந்து நிறுத்தங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.. ஆதலால் ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்த பேருந்து வரும்வரை காத்திருப்பதும் கடினம்தான்..
இதனால் முன்பே அவர்களின் நிலையை நான் யூகித்து இருந்தேன்..

அதன்பின்னும் அங்கு கால் மணிநேரம் போல் நின்று கொண்டிருந்தோம்.. ஆனால் அவரின் முகம் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தேன்.. காரணம் , நான் ஒருவருக்கு ஏதாவது வகையில் உதவியோ, ஆலேசனையோ கூறினால் அவர்கள் பின்னாட்களில் ஏதேனும் ஒரு முறையாவது மனம் வருந்தும்படி நடந்து கொள்கின்றனர்  என என் மனதில் ஆழமாக பதிந்து போன எண்ணம்தான்.. அதற்காக தண்ணீர் கொடுத்ததெல்லாம் உதவியா எனக் கேட்கலாம் , இல்லைதான், ஆனால் நாம் ஒருவருக்கு ஒரு பொருளை இங்கிருந்து அங்கு எடுத்துக் கொடுத்து உதவியிருந்தாலும் பின்னாளில் அவர் பேசாமல் தவிர்த்து விட்டு சென்றால் கூட அவருக்கு செய்தது பெரிய உதவியாக மனம் முன்னே தோன்றி சில நொடிகளாவது நம் மனதை வருத்தும் .. மற்றவர்க்கு எப்படியோ ....! என் மனம் அப்படிதான்..

இடையில் ஒரு கான்ட்ராக்டர் ரோட்டின் அந்தப்புறம்  இருந்து கிராஸ் செய்து வந்து கொண்டிருந்தார்.. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் அவரை பார்க்கிறேன்.. யாரிடமோ பேசிக்கொண்டே கிராஸ் செய்தவர் என்னை கவனிக்கவில்லை என எண்ணிக்கொண்டிருந்தேன்..  ஆனால் என்னை கடந்து செல்லும்போது திடீரென திரும்பி , "என்னம்மா , இப்ப எங்க வேலை பார்த்துட்டு இருக்கே" எனக் கேட்டார்.. அவர் என்னை கவனித்திருந்தது எனக்கே ஆச்சரியம்.. ஏனெனில் அவர் சாலையை கடந்து வரும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் என்னை அப்போது பார்க்கவே இல்லை.. ஒரு வேளை அதற்கும் முன் நான் பார்க்காதபோது பார்த்திருக்கலாம்..

உடனே எனக்கு முன்னிருந்த பெண்களை  கடந்து வந்து ,வேலையை விட்டதையும், தற்போதைய நிலையையும் கூறினேன்.. அவருக்கு நான் சொல்லியது கேட்டதோ என்னவோ, ஏனெனில் பொது வெளியில் என் சத்தம் மிகவும் குறைவுதான். "நல்லா இருக்கே இல்லையாம்மா, அது போதும் " என கூறி  சென்றார்..

நாம் பொதுவாக , நம் மேல் பொறாமைப்படுவர்கள், நம் வளர்ச்சியை பிடிக்காதர்வர்கள் , அவமானப்படுத்தியவர்கள், துரோகிகள் என  பலர் மட்டுமே  நம்மை சுற்றி இருப்பதாக எண்ணிக் கொண்டு , நம் மேல் உண்மை அக்கறையும், நம் வளர்ச்சியில் உண்மை மகிழ்ச்சியும் கொண்டிருக்கும் சிலரை  கருத்திலேயே கொள்ள மாட்டோம்.. ஆனால் அந்த சிலரின் மேல் மட்டுமே எண்ணத்தை செலுத்துவோமானால் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாகத் தெரியும்..

அந்த சிலரில் இவரும் ஒருவர்.. நான் பார்த்த ஆரம்ப நாட்களில் இருந்து இன்று  பார்த்தது வரை என் மேலுள்ள அக்கறை அவருக்கு அப்படியேதான் இருக்கிறது.. மாநகராட்சியில் 8  வருடங்கள் இருந்ததால் நிறைய மனிதர்கள்  பழக்கம்.. என் மேல் அக்கறையும் அன்பும் உள்ளவர்களும் அங்கு அதிகம்தான்..

பேருந்து வந்ததும் நான் ஏறிய பேருந்தில்தான் அந்த பெண்ணும் அம்மாவும் ஏறினர்.. அச்சோ, இதே பஸ்ஸா என அனாசயமாக இருந்தது.. அந்த அம்மா என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தார்.. அவர்களின் முகத்தை சிந்தைக்கு கொண்டு செல்லக்கூடாது என நினைக்கையில் பக்கத்திலேயே அமர்கிறார், பேசாமல் இருக்க முடியுமா என தோன்றியது..அப்பெண் பக்கத்திலும் இடம் இருந்ததால் , அப்பெண் கூப்பிட திரும்ப ஆண்டு சென்று அமர்ந்தார்..

ஆனால் அடிக்கொரு முறை என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்.. ஆனால் நான் அவரின் முகம் பார்க்கவில்லையே தவிர அவரின் செய்கைகளை கவனித்துக்   கொன்டுதான் இருந்தேன்.. வெள்ளந்தி மனுஷி .. கிராமத்து ஆட்கள் பெரும்பாலும் அப்படிதான் இருக்கின்றனர்..

அவரை மிகவும்  பிடித்து விட்டது.. நான் மட்டும் தண்ணீர் கொடுத்திருக்கவில்லையென்றால் , இப்படிப்பட்டவங்க நட்பை விரும்பி போய் ஏற்றுக்கொண்டிருப்பேன் ..

தண்ணீர் கொடுத்ததற்காக ,புன்னகை சிந்தவோ, பேச்சு கொடுக்கவோ என் முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தார்.. என்னாலும் என் மனதை அவரிடமிருந்து திருப்ப படாத பாடு படவேண்டியிருந்தது.. பேசலாம், சிரிக்கலாம் என வெளிமனம் தள்ளுகிறது..  ஆனால் தண்ணீர் கொடுத்து விட்டேன் .அதனாலேயே  நான் மேற்கூறிய காரணத்தின் படி உள்மனம் அடக்கி வைக்கிறது..

நான் இறங்கும்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.. நான் கவனிக்காதது போல் இறங்கினேன் .. என்னை பற்றிய அவரின் எண்ணம் மாறியிருக்கலாம்..

அவர் பார்த்தும் நான் கவனிக்காதது போல் இருந்தது அவரை சங்கடப் படுத்தியிருக்குமோ என்னவோ .. தெரியவில்லை  .. அதற்கும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..

 இறங்கியதும் அந்த இருவரின் முகத்தை நினைவில் நிறுத்த முயற்சிக்கிறேன்.. நல்ல வேளை, மறந்திருக்கிறது....

- 16 -10 -2018
    கோவை

திங்கள், 8 அக்டோபர், 2018

24

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு தங்கம்...
உனக்கும் தங்கச்சிக்கும் இடையில் நடந்த சின்ன அழுகை சண்டையால் அவளை ரூம்-க்குள்ள கூட்டிட்டு போய் தாழ் போட்டு இருந்தேன் .. அந்த நேரம் அவசரமா ஏதோ எழுதிட்டு இருந்த...
கொஞ்ச நேரத்துல ஜன்னல் வழி -ல சண்டை போட்ட உன் தங்கச்சி மூலமே இதை கொடுத்து , "அம்மாட்ட கொடுத்து படிக்க சொல்லு" ன்னு சொல்ற..,
அலட்சியமா படிக்கறது போல உன் முன்ன காட்டிக்கிட்டாலும் ஒரு ஆர்வத்தோடதான் தங்கம் இதை படிக்க பிரிச்சேன்.. படிக்க ஆரம்பிச்சதும் எனக்குள் எழுந்த உணர்வு கண்ணீர் படலமா என் கண்ணை மறச்சதை நீ கொஞ்சம் உத்து பார்த்திருந்தா கண்டுபிடிச்சுருப்ப... ஆனால் கொஞ்சம் முன்ன நீ உன் தங்கைகிட்ட பிடிச்ச அடமும், என் நெகிழ்ச்சியை நீ பார்க்கக் கூடாதுன்ற எண்ணமும் கலந்து , உன் தங்கச்சிகிட்ட கொடுத்து உன் காது கேட்கவே , "தாத்தாகிட்ட காமி"-ன்னு சொல்றேன்...
நீயும் அவ பின்னாடியே போறே.. உன் தாத்தா வாசிக்க ஆரம்பிச்சதும் வழக்கம்போல அவர் சில திருத்தங்களை உன்கிட்ட சொல்றார்..
"வேண்டாம் அப்பா" அவன் எப்படி எழுதினானோ அப்படியே இருக்கட்டும் , அதுலதான் உயிர் இருக்கும்" னு சொல்ல தோணுது.. ஆனால் ஏதோ தடுக்குது.. பேசாம இருக்கேன் .. நான் வாசிச்ச உன் வார்த்தைகள் எனக்குள்ள ஓடிட்டு இருக்கு...
அழறேன் தங்கம்.. உனக்கு காமிக்க கூடாதுன்னு மறைக்கவும் செய்யறேன்.. ஆனா வெளிய வந்தப்போ அம்மாம்மா என் கண்ணை உத்து பார்த்தப்பவே அவங்க அதை புரிஞ்சுட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. அவங்க ஏதுவும் சொல்லல .. ஏன்னா இது ஆறுதலுக்காக வந்த அழுகை இல்ல..
இடைல நீ சொல்ற , "அம்மா என்னை அடிச்சாலும் எனக்கு அம்ம்மாவைதான் பிடிக்கும், அது அம்மாவுக்கு தெரியறதே இல்லை"னு.. இல்லை தங்கமே, அதை நீ எனக்கு பல சந்தர்ப்பங்கள்ல உணர்த்தியிருக்க.. ஆனா அதை நான் தெரிஞ்சுக்கிட்டதா வெளிக்காட்ட முடியாம இந்த சமுதாயம் ஏற்படுத்தி/பழக்கப்படுத்திக் கொடுத்த சூழல் தடுக்குது..
நீ எனக்கு நல்ல மகனா இருக்க.. அதனாலதான் இந்த வயசுலயே உனக்கு நான் கடந்து வந்த அவமானங்கள் , சந்தோசங்களை பகிர்ந்துக்கறேன்.. அது மூலமா யாரையும் தாழ்வா நினைக்காதன்னு பாடம் எடுக்கறேன்.. நான் சொல்றது உன் மனசுக்குள்ள போய்டுச்சுன்றதை நான் புரிஞ்சுக்கறதுக்கான பதில் உன் கண்ணீர்தான்.. 
அப்பப்போ நடக்கற நிகழ்வுகளையும் உன்கிட்ட சொல்றேன்.. சிலவற்றுக்கு நீ கொடுக்கற ஆறுதல் , உன்னை சின்ன பையன்னு நான் சொல்றனேன்னு என்னையே வெட்கப்பட வைக்கும்..
நான் உங்களுக்கு நல்ல அம்மாவா இருக்கல..பிள்ளைக தேவைகள் மட்டுமே வாழ்க்கையா கொண்டு வாழற சில அம்மாக்கள் போல நான் இல்ல.. இங்க அம்மம்மா அந்த பொறுப்பை எடுத்துக்கறதால என்னவோ நான் ரொம்பவே சோம்பேறியா இருக்கேன்.. எனக்கு புரியுது.. சில சமயங்கள் நீங்க ரெண்டு பேரும் கூட சொல்வீங்க..
அதனால் நீ என்னை உயர்வா எழுதின வார்த்தைகளில் உண்மை இல்லை ..ஆனால் உன் மனசுப்படி நீ எழுதின அதே வார்த்தைகளில் பொய்யுமில்லை .... அதுதான் என்னை அழ வைக்குது..
தங்கமே , அது என்ன ஒரு வீடு வரைஞ்சு இருக்க .. புரியுது .... என் வீட்டுக்கான கனவு உனக்கு தெரியும்.. அப்போ சொல்வ, அப்பா, அம்மாக்காக வீடு கட்டி தரதுக்கு முன்னாடி , நான் கட்டி தருவேன்னு  .. குட்டி , பல கோடி போட்டு நீ வீடு கட்டிக்கொடுத்தாலும் , நீ கட்டின இந்த பென்சில் வீடு தந்த சந்தோஷத்துக்கு ஈடாகுமான்னு தெரியல .. அவ்ளோ சந்தோசமா இருக்கு குட்டி ...
நான் என் பழைய காலத்தை நினைவுபடுத்தும் பொருட்களை , நினைவுகளை சேமிக்கல.. அதனாலேயே உங்க ரெண்டு பேருக்குமான நினைவுகளை போட்டோக்கள், எழுத்துக்கள் மூலமா சேமிச்சுட்டு வர்றேன்..
2 வாரம் முன்ன கூட உங்களை பத்தி 3 வருசத்துக்கு முன்ன எழுதினத வாசிச்சு காட்டினப்போ, நீங்க அடைஞ்ச குதூகலத்தை ரொம்பவே ரசிச்சேன்.. அந்த குதூகலத்துக்கு என்னால முடிஞ்சது நிச்சயம் செய்வேன் தங்கம்...
கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை கூப்பிட்டு, "இதை எனக்கு எதுக்கு கொடுத்த "ன்னு கேட்கறேன்.. அம்மாவுக்கு என் பர்த்டே கிப்ட்"-ன்னு சொல்ற.. உடனே உன் முன்ன பேப்பர அப்படி இப்படி திருப்பி எங்க பர்த்டே-ன்ற வார்த்தையே இல்லையேன்னு சொல்றேன்.. எனக்கு பர்த்டே ஸ்பெல்லிங் மறந்துடுச்சு , அதனால் நாளைக்கு நேர்லவே சொல்றேன்னு சொல்ற  ...
போன வருஷம் நீ ,பர்த்டே கேக் பார்த்து "ஹாப்பி பர்த்டே சௌம்யா" -ன்னு சௌம்யா-ல உள்ள O-வ D-யா மாத்தி எழுதி கொடுத்த ஒரு சின்ன துண்டு சீட்டு, இதோ இந்த லெட்டர்-ஐயும் எதிர்பார்த்து, என் சேமிப்பு பெட்டகத்துல காத்திட்டு இருக்கின்றது உனக்கு தெரியுமா ...
இதெல்லாம் சாதாரண பொருட்களா/பரிசா கண்ணுக்கு தெரியலாம்.
ஆனா, இவைகள் எல்லாம் உனக்கு பின்னாளில் புரிய வைக்கும் தங்கம் , "மனம் இனித்து கொடுக்கும் சில பரிசுகள் விலையில் மதிப்பிழந்திருக்கலாம் .. ஆனால் மதிப்பில் எந்த விலைக்குமே ஈடாகாது" .. ன்னு ...
லவ் யூ தங்கம்...
- 8 -10 -2018
திங்கள்

புதன், 3 அக்டோபர், 2018

பிக் பாஸ்-2 (என்னை கவர்ந்த ரியல் வின்னர் )



சீரியல்களின் மூலம் மனதையும் , நேரத்தையும்  இழக்கக்கூடாது என முடிவெடுத்து தீவிரமாக இருந்த என் மனஓட்டத்தை, பிக் பாஸ் காண்பதில் கொஞ்சம் தளர்த்த ஆரம்பித்தேன்.. காரணம் , எண்ண ஓட்டங்கள் பற்றிய என் சுய ஆய்வுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்ற காரணம்தான்.. 

நம் எதிரில் உள்ள மனிதர்களின் எண்ண ஓட்டத்தை நம்மால் கணிக்க முடியாது.. அவர்கள் புறம் பேசுவதின் மூலம் அது வெளிப்படுவதையும் நம்மால் பார்க்க முடியாது . ஆனால் பிக் பாஸ்-ல் அதை அறிந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் மற்றவரை பற்றி மாறும் எண்ண ஓட்டம் மற்றும் வார்த்தைகள் பின் எவ்வாறு அவர்களின் சூழ்நிலைக்குள் புகுந்து பிரதிபலிக்கிறது என்பதையும் கண்கூடாக (உன்னிப்பாக கவனித்தால்) காண முடியும்..

ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் சென்றாலும் சில போட்டியாளர்களின் மனதை சில செய்கைகள் , பேச்சுகள் மூலமே அறிய முடிந்தது.. எல்லோரும் நடிக்கிறார்கள் என்ற பேச்சு அப்போதுதான் வெளியே பலமாக இருந்தது.. ஆனால் சிலர் தங்கள் உண்மை முகத்தை வெளியில் மறைக்க முயன்றாலும் சில நேரங்களில் அவர்களை அறியாமல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது..

மஹதி:  எந்த குறையும் குணத்தில் சொல்ல முடியாது .. ஆனாலும் நடிப்பு போல மற்றவர்களுக்கு தோன்றியதாலோ என்னவோ மக்களால்  முதலில் வெளியேற்றப்பட்டார் ..

அனந்த் வைத்தியநாதன் :  இசை ஆசான்  என்பதாலோ என்னவோ சிறு  ஆணவம் என்று கூற இயலாத மிடுக்கு .. சிறு சிறு பேச்சுகள் மற்றும் வயதின் (திறமைக்கும் வெற்றிக்கும்  வயது தடையல்ல, ஆனால் இள வயது பட்டாளம் முன் கொஞ்சம் அந்நியமாகத்தான் உணரப்படுவார் )மூலம் பிக் பாஸ் வெற்றியாளர்-க்கு தான் தகுதியில்லை என அவர் உணர்த்தியிருந்ததால் அவரின் வெளியேற்றம் பெரிதளவில் யாருக்கும்  பாதிப்பு ஏற்படுத்தவில்லை..

NSK ரம்யா : எல்லோருடனும் நட்பு பாராட்டும் குணம் ,  நேரிடையாக பேசும் குணம்.. ஆனால் அந்த வார வெளியேற்றத்தில் மற்றவர்கள் யாரையும் வெளியேற்ற மக்களுக்கு மனம் இல்லாமல் போக , சந்தர்ப்ப சூழ்நிலையால்  வெளியேற்றப்பட்டவர்...

நித்யா : பாலாஜியின் மனைவி என்ற அடையாளத்துடன் மக்களுக்கு அறியப்பட்டாலும் தன் நேர்மறையான குணத்தால் தனித்து காணப்பட்டார்.. ஆனால் பிக் பாஸ் வீட்டில் வெங்காய பிரச்சனை வந்தபோது தான் சொல்வதில் மட்டுமே பிடியாக இருந்தும், மற்றவர்களை பேச விடாமலும் செய்து தன் இன்னொரு பிடிவாத குணத்தை காட்டினார்.. ஆனால் அது அப்போது வெளிப்பட்ட மற்ற நல்ல சில குணங்களால் மறைந்தும் இருந்தது.. அதனால் அவரின் வெளியேற்றம் ஒட்டு போட்ட மக்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஆனால் வெளியில் சென்ற பிறகு தன் உண்மை சுயரூபத்தை பதிவின் மூலமும், திரும்ப பிக் பாஸ்-ன் வீட்டுக்குள் சென்றபோது பேசிய பேச்சுகளின் மூலமும், குறிப்பாக இறுதி நாளில் மும்தாஜ்-ன் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்லிய விதத்தினாலும் , மும்தாஜ் பற்றி பாலாஜி சொல்லிய பிறகு காட்டிய முகபாவத்திலும் காட்டி விட்டார்.. அவரின் மதிப்பு மற்ற எல்லோரையும் விட மிகவும் கீழிறங்கி விட்டது.. பாலாஜியை நினைத்து பரிதாபம் கொள்ளும் நிலையும் வந்து விட்டது..

வைஷ்ணவி :, ஆரம்பத்திலேயே புறம் பேசுவதில் தன்னை வெளிப்படுத்தியதாலோ என்னவோ  அதன் பின் மனதில் ஒட்டவில்லை..

பொன்னம்பலம் : சிலருக்கு அறிவுரைகள் கூறி நல்ல நிலையில் இருந்தாலும் ,ஓரிரு செயல்கள் எரிச்சலடைய வைத்தன.. இவ்வளவு வெளியேற்றத்தையும் தாண்டி வருகிறாரே , மக்கள் ஆதரிக்கிறார்களா என்று ஆச்சரியமும் எழுந்தது...

டேனி : ஆரம்பத்தில் பிடித்த போட்டியாளர்.. ஆனால் போக போக ஒவ்வொரு நாமினேஷனிலும் கூட்டு சாதி செய்தது, சில இடங்களில் பின்னணி வேலை செய்தது என முகம் சுளிக்க வைத்தார்.. எலிமினேட் ஆகி செல்லும்போது பேசிய பேச்சுகளும் அப்படியே..

சென்ராயன் : சில திறமைகளில் முன்னேறி ஜெயித்தார்..அவர் உண்மையிலேயே வெள்ளந்தி குணம் உள்ளவரா இல்லை அப்படி நடித்தாரா என்ற சந்தேகம் அவர்  பொய் கூறி ஸ்மோக்கிங் ரூம்-க்கு சென்றபோது தோன்றியது.. ஆனாலும் வெள்ளந்தி குணம் உள்ளவர் என்றே நம்பலாம் .. ஆனால் பிக்  பாஸ் வெற்றியாருக்கான தகுதி இல்லை என்று பிக் பாஸே வெளியில் அனுப்பி விட்டாரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர் வெளியேற்றம்..

ஷாரிக்  : ஆரம்பத்தில் வீட்டில் இருந்த இடம் தெரியாமல் இருந்தாலும் வீட்டின் தலைவரானபோது தன் நேர்மையான குணத்தால் இறுதி வரை வருவார் என கணிக்கப்பட்டார்.. ஆனால் யார் மீதோ உள்ள கோபம் அவர் வெளியேற காரணமாகி விட்டது..

மஹத் : இவர் நேர்மையானவர்.. கோபம் , மன்னிப்பு, பாராட்டு என  அனைத்தையும் மனதில் வைக்காது உடனே வெளிப்படுத்தி விடுவார் ..  தன்னை சார்ந்தவர் மீது முழு நம்பிக்கை..  அதனால்  சரி எது , தவறு எது என யோசிக்காமல் செய்த விஷயங்களே இவர் வெளியேற காரணம்.. இறுதி வரை வருவார் என இவரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தார்..

பாலாஜி : ஆரம்பத்தில் அவர் நகைச்சுவை மக்களை குஷிப்படுத்தினாலும் , புறம் கூறுதலும், கெட்ட வார்த்தைகள் பேசுவதிலும் மனதில் பின்தங்கியே இருந்தார்.. யாருக்கும் தெரியாமல் உணவு கொடுத்த சென்றாயன் பற்றியும்  , உண்மையாய் ஆறுதல் கூறிய மும்தாஜ் பற்றியும்  அவர் பேசிய பேச்சே அவர் குணத்துக்கு சாட்சி ..    ஆனாலும் தன் மனைவி மகளுடன் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்ததாலோ என்னவோ போட்டியாளர்களும் அதிகம் நாமினேட் செய்யாமல் காப்பாற்றி வந்தனர்..
பின்னாளில் கோபத்தை குறைத்தும், சில போட்டியாளர்கள் மீது அக்கறை உள்ள அன்பு காட்டினாலும் கடைசி வரை புறம் பேசும் குணத்தை விட முடியவில்லை..

யாஷிகா : நல்ல போட்டியாளர் .. தன் தோழி ஐஸ்வயாவின் நட்புக்கு மரியாதை கொடுப்பவர்.. சில இடங்களில் அவரின் நேர்மையான பேச்சும் , தெளிவான சிந்தனையும் அவரது வயதை பொறுத்து பார்க்கையில் பிரமிக்க வைத்தது..   ஆரம்பத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நபர்.. ஆனால் யாரை வெளியேற்றலாம் என்ற கூட்டு சதியில் ஈடுபட்ட மிக முக்கிய நபர், ஆரம்பத்தில் நட்பு பட்டாளம் இணைந்து செய்த சில செயல்கள்  என சில  என் மனதில் ஓட்டவில்லையே தவிர , அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் வெற்றியாளருக்கான அனைத்து தகுதிகளும் இருந்தது..

ஜனனி : இலகுவான மனம் .. , எல்லோருடனும் நட்பை எளிதாக கவரும் குணம் ..ஆரம்பத்தில் சில சின்ன விஷயங்களில் அங்கும் இங்கும் சொல்லியதே குற்றமாக  தெரிகிறதே தவிர, சில போட்டியாளர்களை விட்டு விட்டு இவரை மட்டும் குறை கூறும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானவர் அல்ல ..
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒருவருக்கு வைக்கும் பட்டப்பெயர் ஒருவர் வாழ்வில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இங்கு அறியலாம் . டேனி இவருக்கு வைத்த பட்டப்பெயர் இவரை இறுதி பரிசளிப்பு நாளில் நகைச்சுவை என்ற பெயரில் பரிகாசம் பண்ணியதை பார்த்த யாரும் மறக்க மாட்டார்கள் .. ஜனனியும் மறக்க மாட்டார்..


விஜயலக்ஷ்மி : 60  நாட்களாக உள்ளே நடப்பதை பார்த்துவிட்டு உள்ளே வந்தவர்.. வந்தஆரம்ப நாட்களில் அமைதியாத்தான் இருந்தார்.. எப்போது அவரின் கணவர் வந்து ," நீ இன்னும் அதிகம் செயல்பட வேண்டும்" என சொன்னாரோ அதிலிருந்து அவரின் வேகம் தெறித்தது.. ஆனால் அவரின் ஒரு குறி ஏன் மும்தாஜ் என தெரியவில்லை.. இறுதி நாளில் கூட நித்யா மும்தாஜ் பற்றி  சொல்லிக்கொண்டிருக்கும் தானும் சொல்ல கை உயர்த்தினார் .. ஆனால் இறுதிப்போட்டியாளர்களில் தானும் ஒருவராக இருப்பதால் , தான் சொல்வது தன் வெற்றியை பாதிக்கும் என நினைத்தாரோ என்னவோ , உயர்த்திய கையை அப்பட்டியே இறக்கிக் கொண்டார் :) .. டாஸ்க்-களில்  முழு வேகத்துடன் இருந்தார்..  மக்கள் மனதை வெல்ல டாஸ்க் மட்டும் போதாதே..நேர்மையானவர் என பெயரெடுக்க சில செய்கைகளால் அவரால் முடியவில்லை..

ஐஸ்வர்யா : ஆரம்பத்தில் அழகாலும் பேச்சாலும் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் .. பின் கூட்டு சதியில் ஒரு ஆள் , மற்றவர் சொல்வதை புரிந்து கொள்ளும் முன் எதிர் வினையாற்றல் , கோபம் என பலரின் எதிர்ப்பை பெற்றவர்.. நட்புக்காக எதுவும் செய்யவில்லை என தோன்றினாலும், இறுதி வரை தன் பேச்சில் தன் நட்பை காப்பாற்றியவர்..  கடைசி இரு வெளியேற்றத்தை எப்படி தாண்டினார் என்பது பிக் பாஸ்-க்கே வெளிச்சம்.. அவரின் கனவுப்படி இறுதிப்போட்டி மேடை வரை வந்து விட்டார்..


ரித்விகா :  ஆரம்பத்தில் தன் இருப்பை காண்பிக்காமல் இருந்தவர்.. அதன் பின் மற்றவர்களுடன் நட்பை ஏற்படுத்தினாலும் பிரச்சனைகளின்போது ஒதுங்கி இருந்தவர் .. அதாவது ஒரு பாதுகாப்புக்குள் தன்னை வைத்திருந்தவர்..யாரை பற்றியும் குறை கூறாமல் , புறம் பேசாமல் பெரும்பாலும் இருந்தார்..மஹத் பற்றிய அவரின் கணிப்பும், மகத்துக்கு  அவர் வழங்கிய அறிவுரையும் அவரின் கணிக்கும் திறனுக்கு சரியான எடுத்துக்காட்டு. .. டாஸ்க்-களின் போதும் நன்றாக என்றில்லாமல் இருந்தாலும் நிறைவாகவே செய்தார் ..

மும்தாஜ் கலர்  டை அடிக்க மறுத்த  மறுதினம் ,ஐஸ்வர்யாவும், மும்தாஜும் ஆங்கிலத்தில் பேசியதற்காக நீச்சல் குளத்தில் குதிக்க அலாரம் அடித்தது.. உடனே ஐஸ்வர்யா , வெளியில் வந்து சைகை மூலம்  ரித்விகாவை கூப்பிட, ரித்விகாவும் சைகை மூலம் வர முடியாது என மறுத்திருந்தார் .. மும்தாஜ் , ரித்விகாவுக்காக டாஸ்க் செய்யவில்லை என்பதால் அவர் வர மறுக்கிறார் என ஐஸ்வர்யா சரியாக புரிந்து அதை அங்கு வெளிப்படுத்தியும் இருப்பார்..

இதை உணர்ந்த ரித்விகா, "ஐஸ்வர்யா கூப்பிட்டாங்க, ஆனா எதுக்குன்னு எனக்கு எப்படி தெரியும்" என்றிருப்பார்.. அலாரம் அடித்தால் எதற்கு என பார்க்கும் நமக்கே தெரியும்போது அங்கு இருந்த ரித்விகாவுக்கு தெரியாதா ? "ஐஸ்வர்யா . வார்த்தை மூலம் ரிக்வஸ்ட் பண்ணி கூப்பிடல, அதனால் வரல" என சொல்லி இருந்தால் கூட முழுதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாரோ என்னவோ ? ஆனால் தான் நாமினேஷன் ஆக காரணமாக இருந்த மும்தாஜ்-காக ஏன் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என ஆரம்பத்தில் எழுந்த அவரின் சிறு ஆத்திரம்   அப்படி செய்ய விடாமல் செய்துவிட்டது..

பல நிறைகள் இருந்தாலும் ஒரு குறைதானே (அதுவும்  குணத்தில் ) பெரிதாக தெரியும் .. இங்கும் அப்படிதான்..

மும்தாஜ் : ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமானவராக தெரிந்தார்.. வெளியிலும் அப்படியே பேச்சு இருந்தது.. ஆனால் அவரின் குணம் அறிய அறிய பிடித்து போய் விட்டது .. அதன் பின் அவருக்கு வீட்டில் சில டாஸ்க்-களின் மூலம் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் , வேறு சில விஷயங்களும் பெரும்பாலான மக்களால் கமல்ஹாசனால் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு கேட்கப்படாமலே போனது,, அப்போதும் அவர் பொறுமையாகவே இருந்தார்..

அவரின் அன்பு ஆரம்பத்தில் எனக்கும் நடிப்போ என தோன்றியது.. ஆனால் அதற்கு முன் அவர் பேட்டியளித்த, கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை பார்த்த பின் அவரின் குணாதிசயம் அதுதான் என புரிந்தது..

பலர் அவரை பற்றி சொல்லும் ஒரு குற்றச்சாட்டு  , அவர் டாஸ்க் செய்ய மாட்டார் என்பது .. என்னை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவாக  செய்திருக்கிறார்.. மறுத்த சில டாஸ்க்-கள் , மற்றவர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு மட்டும் கடினமாக  கொடுக்கப்பட்டது.. (இஞ்சி, எலக்ட்ரிக் ஹேர் டை ).. சில டாஸ்க்க்ளின் தண்டனைகள் மறுத்தது , தண்டனை கொடுத்தவர்களின் பாரபட்ச நடவடிக்கையால்(கொடுத்தவர்கள் அறிந்தும், அறியாமலும்)..

டாஸ்க்  செய்வதும் , செய்யாததும் தன் நிலை பொறுத்தது.. தனக்கு மட்டும் பாதிப்பு எனும் போதுதான் அதை(பாரபட்சமான டாஸ்க்-ஐ ) அவர்  நிராகரித்திருப்பாரே  (கலர் ஹேர் டை டாஸ்க் தவிர , அதில் ரித்விகா நாமினேட் செய்யப்பட்டதும்,  தன்னால்தான் அவர் நாமினேட் செய்யப்பட்டார், அதனால் தானும் நாமினேட் ஆக தயார் என கூறி முதலில் பெயர் கொடுத்தவர் ) ஒழிய, தன் அணி பாதிக்கப்படும் என்றால் டாஸ்க்கை (எதிரணி சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டபோதும்) நிறுத்தாமல்தான் முடித்திருக்கிறார்..

உடல் நலமில்லாமல் வந்தார் என சொல்லப்படுவதற்கு, அது தெரிந்துதான் பிக் பாஸ்- நிகழ்ச்சியிலிருந்தே அழைத்து அனைத்து மருத்துவ வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள்..

பாலாஜியின் மேல் குப்பை காட்டியபோது ஏன், தாமதமாக வந்து அழுது நடிக்க வேண்டும் என உள்ளிருப்பவர்களே பின்னாளில் கிண்டல் செய்து நடித்து  காட்டினார்கள்..  இப்படி நடித்தவர்கள் அப்போது, உடனே போய் தட்டி விட்டார்கள் போல .. " பிக் பாஸ் சொல்லி இருக்கார் . அதான் அப்படி செய்றாங்க "என மஹத் தடுத்ததாகவும், (அது திரையில் எடிட் செய்யப்பட்டது எனவும் )அதுவும் நிஜமாகவே அவர் கொட்ட மாட்டார் , கொட்டுவது போல் கொண்டு மட்டுமே செல்வார் என நினைத்ததாகவும் இப்போது அதற்கான விளக்கத்தையும் மும்தாஜ் கொடுத்திருக்கிறார்..

அங்கு ஒவ்வொருவர் மனவேதனையில் இருக்கும்போதும் மும்தாஜ் ஆறுதல் கொடுப்பவராக இருந்தார்.. ஆனால் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல , வெளியில் வந்த பிறகும் அவர் அன்பு காட்டியவர்கள் அவருக்கு உண்மையாக இல்லை.. மக்களில் கூட பல எதிரானவர்கள் எப்படி என ஆச்சரியம் இருக்கிறது..

BB2 இறுதி நாளில் கூட நித்யாவின் கேள்விக்கு நியாயமாக பதில் கூறியதையும் இங்கு குறை கூறி பதிவுகளை பார்த்தேன்.. 

அவரின் நேர்மையான பேச்சும், மனம் ஒத்துழைக்கவில்லை என்றால் முடியாது  என நேரே கூறி ஒதுங்கும்  குணமும் கூட பிடித்திருக்கிறது..

இவருடைய வெளியேற்றமும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாகவே இருந்தது ..

பிபி 1  -ல் ஓவியா போல பிபி -2  வில் மும்தாஜ் தான் என் மனம் கவர்ந்தவர் .. ஓவியா அளவுக்கு இவருக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் ஆதரிக்கும் மக்களுக்கு  புரியும் ஏன் ஆதரிக்கிறோம் என்று.... 

- 3-10-2018

திங்கள், 10 செப்டம்பர், 2018

எண்ணக்கீற்றுகள் (14)


  1. ' இப்படி செய்திருக்கலாம்'' என்ற அனுதாபத்தை விட '' இப்படி செய்யலாம்'' என்ற கருத்தே வரவேற்கப்படுகிறது...
  2. வைராக்கியம் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே சாதனைகள் பிறக்கும்.....
  3. ஒரு பிரச்சனை உங்களிடம் கொண்டு வரப்படும் "தீர்வு என்னிடமே உள்ளது" என குதிக்காதீர்கள்.. பெரும்பாலான பிரச்சனைகள் தீர்வை தேடி அல்ல, ஆறுத்தைத் தேடியே பகிரப்படுகின்றன..   
  4. ஒருவர்   அடையும்  தோல்வி மட்டுமல்ல , வெற்றி   கூட பல முகங்களை வெளிச்சம் காட்டும் ஒளிக்கருவிதான்...

கண்ணாடி


வெந்நீர் குளியல் முடித்ததும்
நீராவியால் சூழ்ந்திருக்கும்
கண்ணாடியை
சில வார்த்தைகளை நிரப்பி
மீட்டெடுப்பது அவள் வழக்கம் .....

சில நாட்கள்
அவள் விரல்களுக்கு
பழகிப்போன
அகன்ற கண்கள் கொண்ட
பெண் முகம்
ஓவியமாய் மிளிரும்...

சில நாட்கள்
கடவுளின் பெயரால்
கண்ணாடி தன்னிலை
படுத்தப்பட்டிருக்கும் .....

சில நாட்கள்
எங்களிருவரின் பெயர்களுக்கு
நடுவில் இதயக்குறி
கண் சிமிட்டும்.....

சில நாட்களோ
எங்கள் குடும்பத்தின்
அத்தனை பெயர்களும்
இணைந்து நீராவியை
விலக்கி விட்டிருக்கும் ....

ஏதேதோ சிந்தனைகளும்
அவசரமும்
அவள் விரல்களை
கட்டிப் போட்டிருப்பதை
ஏதும் எழுதப்படாத
வெற்று கண்ணாடி
நாட்கள் உணர்த்தும்......
இத்தனை இருந்தும்
உணர்ச்சிகளை குளியல்
மனதிலிருந்தும்
கழுவி விடுவதாலோ என்னவோ
குளியலுக்கு முந்தைய
உணர்வுப் பிழம்பான
வார்த்தைகளை மட்டும்
ஒருநாளும் தன்மேல்
வாங்கியதில்லை கண்ணாடி...

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

காதல்


காதல் துளிர்ப்பதற்க்கும்
துளிர்த்தது வளர்வதற்க்கும்
நிறைய மெனக்கெடல்கள்
தேவையில்லை....

நீ எனக்கு பிரதானம்
என உணர்த்தும்
சிறு சிறு செய்கைகள்
போதும்.....

அந்த சிறு சிறு
அன்பு பாராட்டலால்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல்....







வியாழன், 2 ஆகஸ்ட், 2018

23



பிள்ளைகளுக்கு பள்ளிக்கு மட்டம் போடுவதற்கு  பல காரணங்கள் கிடைத்து விடும்.. அவை நம்ப முடியாதவையோ, உண்மையானவையோ, நகைப்பு/எரிச்சலை தருபவையோ, எவையாக இருப்பினும் அவற்றை பிடிவாதத்துடன் வெளிப்படுத்தி விடுப்பு எடுத்துக் கொள்ளும் திறமை சில பிள்ளைகளுக்கு உண்டு..  அது இப்போது என் மகனுக்கு வசப்பட்டிருக்கிறது..

நானும் அப்படி மட்டம் போட்டிருப்பேனோ என யோசித்து பார்க்கையில் அப்படிப்பட்ட நினைவுகள் ஏதும் சிக்கவில்லை.. ஆரம்பத்தில் அவன் "இங்க உள்ள பள்ளி நன்றாக இல்லை என்பதிலிருந்து , இங்கு  தப்பே இல்லாத சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அடிக்கறாங்க" அதனால ஸ்கூல்-க்கு போக மாட்டேன் எனக் கூறி அழுது அடம் பிடித்து ஒரிரு நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறான்.. "அடிக்காமல்  சொன்னாலே நாங்க புரிஞ்சுகிட்டு நல்லா நடந்துப்போம், அப்படிதான துபாய் ஸ்கூல் -ல  மிஸ் பண்ணினாங்க .. இவங்க எல்லாத்துக்கும் அடிக்கிறாங்க " என கூறும் காரணம் ஒத்து போனதால் ஏதும் செய்ய இயலா நிலையில் கண்டித்து அனுப்பும் நிலையும் இல்லாமல் போயிருக்கிறது..

இப்போதெல்லாம் அந்த காரணங்கள் முன்னேற்றமடைந்து "தலை வலி, வயிறு வலி " என்று வளர்ந்திருக்கின்றன.. பொய் என தெரிந்தாலும் செய்யும் அடத்தால் வீட்டில் இருந்து விடுவான்.. நேற்றும் அதுபோலவே தலை வலி எனகூறி , எல்லோரும் அறிவுறுத்தியும்  கேட்காமல் வீட்டில் இருந்து விட்டான்.. வழக்கம் போலவெ பள்ளி வேன் சென்றதும் அவன் தலை வலியும் காணாமல் போய்விட்டது..

பையன் அப்படி என்றால் பெண் அதற்கு எதிர்மாறானவள்.. ஒரு நாளும் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மனம் வராது.. எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் நிறைய உண்டு..

அப்படிபட்டவளே இன்று "நேற்று அண்ணன் போகாததால் நானும் போக மாட்டேன்" என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.. இன்று வீட்டில் பெரியவர்கள் வெளியூர் சென்றதால் நானே எல்லாமும் சமாளிக்க வேண்டியும்  இருந்ததால் எனக்கும் டென்சன் எகிறியது .. வீட்டில் இருக்க வைக்கலாமே என தோன்றினாலும் , இன்று உள்ள நடன வகுப்பும் , அடுத்த வாரம் தொடர்ந்து இரு வாரங்கள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழலும் உள்ளதால் காதில் வாங்காமல் அடுத்ததுத்து உள்ள வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.. இவள் அவனை போல பிடிவாதம் பிடிக்க மாட்டாள் என்பதும் முக்கிய காரணம்.

உடை எல்லாம் மாற்றி, வேன் வந்த பிறகு திரும்பவும் அழுகையோடே அடம் பிடித்து நின்றாள்.  வேன் நிற்கிறதே என்ற பதட்டம் என்னை தொற்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். அழுதுகொண்டே வந்தவள் , உடனே "எனக்கு கலர் பென்சில் வேணும்" என கேட்டாள்.  "அதுக்கா போக மாட்டேன்னு சொன்னே" எனக் கேட்டதும் "ஆமாம்" என தலையசைத்தாள்.

அவளிடம் ஏற்கனவே க்ரேயான்ஸ் இருந்தாலும் " கடந்த மாதம் அவள் அப்பா நண்பர் மூலம் கொடுத்தனுப்பிய க்ரேயான்ஸ்-ல் அவள் கண் இருந்தது.. அதை மேலும் தூண்டியது அதற்கு முந்தைய தினம் அவள் அண்ணன் அவன் அப்பா கொடுத்தனுப்பிய கலர் பென்சிலை என்னிடம் அடம் பிடித்து வாங்கியதுதான்..  அவனின் பிடிவாதத்தில் அவனிடம் கொடுத்து விட்டென்.. "உன்னிடம் உள்ள க்ரேயான்ஸ் தீரட்டும் " என இவளை சமாளித்து வைத்திருந்தேன்..

இப்போதும் அவளுக்கு உடனடி தேவை  க்ரேயான் இல்லை.. அவளிடம் ஒரு பழக்கம் உண்டு.. எதற்கேனும் அடம் பிடிப்பாள்.. நான், தரவே மாட்டேன் என நிற்கும்போதோ, அடிக்க செல்லும்போதோ , "ஓகே, அப்போ , நாளைக்கு எனக்கு இது வாங்கி தரணும் என்றோ அல்லது எங்காவது கூட்டி செல்ல வேண்டுமென்றோ கூறுவாள். நான் "சரி" என்றதும் . பழைய காரணத்துக்கான பிடிவாதத்தையும் விட்டு விடுவாள்.. இப்போதும் அதெ டெக்னிக்-தான்..

உடனே அவளை எதிர் வீட்டுக்காரரிடம் விட்டு விட்டு வீட்டினுள் சென்று க்ரேயான்ஸ் எடுத்து வந்து  கொடுத்தென்.. சிரித்துக் கொண்டெ அவள் அதை வாங்கும்போது, காத்திருந்த வேனை பார்த்ததும் எனக்கு  கொஞ்சம் கோபமும் வர "பிடிவாதம் பாரு " என கையில் மெல்ல கிள்ளினேன்.. உடனே அவள் முகம் சுருங்கி போயிற்று.. எனக்கும் என்னவோ போலானது.. வேனில் ஏறி அமர்ந்தும் திரும்பி பார்க்காமல் சென்றாள்.

அவள் பொதுவாகவே ரொம்பவும் சென்சிடிவ் டைப்.. திட்டினாலே அழும் குணமுடையவள்..  பொதுவாக மற்றவர் முன் குழந்தைகளை திட்டுவதும், அடிப்பதும் கூடாது என்ற எண்ணமுடைய நானே , கோபம் தூண்டி விட, அவள் வேனில் இருக்கும் அனைவரும் பார்க்க இப்படி நடந்து கொண்டேனே என வேதனையாக உள்ளது ..

இதை நினைத்தே இதுவரை எந்த வேலையும் ஓடவில்லை.. ஒரு தாயின் மனம் எப்படிப்பட்டது என்பதை வலியோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன்... இனி மாலை நடன வகுப்பு முடிந்து  அவளை பார்க்கும் வரை  மட்டுமல்லாமல் , வரும் வழியில் அவளுக்கு பிடித்த ஐஸ் க்ரீம் வாங்கி கொடுக்கும் வரை என் மனம் சமாதனமடையப் போவதில்லை என்பது மட்டும் உறுதி...


- 2-8-2018

வெள்ளி, 18 மே, 2018

நடிகையர் திலகம்


சாவித்ரியின் வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆவல் , சாவித்ரியாக வாழ்ந்திருக்கிறார் என்று பேசப்பட்ட கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்க்கும் ஆவல் மற்றும் கீர்த்தியின் நடிப்போடு, படத்தின் தரமும் நன்றாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும் என்று எழுந்த உந்துதல் ஆகியவையே இப்படத்தை பார்க்கப் போனதற்கு காரணங்கள்..
ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என சிலவற்றை வாசித்திருந்த காரணத்தால் இப்படம் பார்க்கும்போது , வாசித்ததும் நினைவில் தோன்றி , படத்தோடு ஒன்றி போக செய்யுமா என்ற சந்தேகம் செல்வதற்கு முன் இருந்தது..
வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது எனக்கு முன்பிருந்த பெரியவர் , "சாவித்ரி-யோட வாழ்க்கை வரலாறை பார்க்க வந்துருக்கோம் " என போனில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததே சாவித்ரி என்ற நடிகைக்குள்ள ஈர்ப்பு சக்தியை கூறியது..
ஆரம்ப காட்சியில் எழுந்த சோகம் , அதற்கடுத்த காட்சிகளில் இருந்து ஆர்வம், சிரிப்பு, ரசனை, பிரமிப்பு, கண்ணீர் என பல உணர்ச்சிகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் இப்படம் தந்து கொண்டிருந்தது..
கீர்த்தி சுரேஷ்.. படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவு விமர்சனங்கள்.. வந்த பின் எவ்வளவு பாராட்டுகள்.. ஆரம்ப காட்சிகளில் அவரின் நடிப்பை சாவித்ரியோடு ஒப்பிட்டு பார்க்க இயலவில்லை(அதாவது உருவ வேற்றுமை) ஆனால் பிற்பாதியில் சாவித்ரியின் பிம்பமே தெரிகிறது.. ஒரு இடத்தில் கூட குறை கூற முடியாதபடி நடிப்பு அவ்வளவு அற்புதம்..
அதிலும் மாயாபஜார் சினிமா காட்சி மிக ,மிக ரசிக்க வைக்கிறது.. ஆனால் இந்த காட்சி உட்பட பல பழைய சினிமா காட்சிகள் (மலர்ந்தும் மலராத, மிஸ்ஸியம்மா பாடல் தவிர ) தமிழில் இருந்திருந்தால் தமிழ் ரசிகர்களை இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்..
ஆரம்ப காட்சிகளில் தெலுங்கில் பேசுவது இயல்பை உணர்த்துவதால் அது குறையாகவே தெரியவில்லை.. ஆனால் பழைய சினிமா காட்சிகளில் எல்லாம் இதை தவிர்த்திருக்கலாம் .. ஏனெனில் தமிழில் அவர் நடிப்பை சொல்ல பல படங்கள் இருக்கின்றன.. அங்கு போலவே இங்கும் நடிகையர்களில் நடிப்புக்கு இலக்கணம் இவர் ஒருவரே...
எனவே தெலுங்கில் இந்த படத்தை எடுத்திருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமாவது அந்த காட்சிகளை தமிழில் எடுத்து இணைத்திருக்கலாம்.. ஏனெனில் மற்ற தெலுங்கு பட காட்சிகள் அர்த்தம் புரியாததால் கீர்த்தியின் நடிப்பை புரியாமல் ரசிக்கும் நிலைதான் இருக்கிறது.. அதுவே மலர்ந்து மலராத பாடல் காட்சி (அதிலும் இரு வரிகள்தான் ) ஒளிபரப்பாகும் கைத்தட்டல்கள் அரங்கை நிரப்பின..
துல்கர் சல்மான் நடிப்பும் அற்புதம்.. " நான் ஜெமினி போல இல்லை என்பதால் அவரை உள்வாங்கி நடிக்கவில்லை, அப்போதைய காலகட்டத்தில் தான் ஒரு நடிகராக அது போல இருந்தால் எப்படி இருப்பேனோ அப்படி நடித்திருக்கிறேன் " என ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார்.. சொல்லி இருந்தது போலவே, "காதல் , இயலாமை வெளிப்படுத்தும் பொறாமை, பொறாமை வெளிப்படுத்தும் கோபம்" என எல்லா காட்சிகளிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்..
சமந்தா முதற்கொண்டு குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவருமே நடிப்பு என காட்டாமல் நடித்திருக்கின்றனர்.. காட்சி அமைப்பு, அலங்காரம் , இடங்கள் என எல்லாமே 50 , 80 காலகட்டத்துக்கு கொண்டு செல்கின்றன..
படம் என்பதை தவிர்த்து, சாவித்ரியின் வாழ்க்கை எனப்பார்த்தால் திறமை, காதல் , பணம் , புகழ், ஏமாற்றம், தோல்வி, போதை பழக்கம், தான தர்மம், நம்பிக்கை துரோகம் , இழப்பு, நோய் என அனைத்தும் சூழ்ந்திருந்த ஒரு வாழ்க்கை.. இதில் முக்கிய சில சம்பவங்கள் விடப்பட்டிருக்குமோ , என்னவோ, ஆனால் இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் , இது அவரின் வாழ்க்கை கதை என பகிரப்பட்டிருப்பதால் உண்மையாகதான் இருக்கும்..
ஜெமினி கணேசனின் "மனைவியின் திறமையை ஊக்குவிக்கும் பாங்கு" முதற்கொண்டு சிலது பிளஸ் பாயிண்ட்களாகக் காட்டப்பட்டாலும் , ஒரே ஒரு பலவீனம் ஒரு பெண்ணின் வாழ்க்கையையே சுழற்றி அடித்ததை உணர முடிகிறது..
தெலுங்கு திரைக்கதை ஆசிரியர் ஒருவர் " நாம் சாவித்ரியை இங்கு கொண்டாடுவதை போலத்தான் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர்களே அவரை இழிவாகவும் பேசுகிறார்கள்.. ஆனால் ஜெமினி கணேசனை பற்றி மட்டும் அங்கு யாரும் குறை கூறுவது இல்லை , ஏனெனில் அவர் காதல் மன்னன் " என இப்படி குறிப்பிட்டு இருந்தார் .. அதனால்தானோ என்னவோ தமிழ் திரை வரலாற்றில் நடிகையரில் திலகமாக ஜொலித்தவரை பற்றி , ஒரு தமிழ் இயக்குனர் கூட படம் எடுக்க முன் வரவில்லை போல.. எது எப்படியோ, இங்கிருந்து புறப்படாத ஒரு வாழ்க்கை வரலாற்று பதிவு ஆந்திராவிலிருந்து இங்குள்ளவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது..
படம் தொடங்கி மூன்று மணி நேரம் இலகுவாக கடந்திருந்தது .. முழு நாள் இப்படத்தை நகர்த்தியிருந்தாலும், இடத்தை விட்டு நகராமல் பார்க்கும் அளவுக்கு படத்தினுள் சுவாரசியம் இருந்தது.. இன்னும் சாவித்ரியின் வாழ்க்கையை , கீர்த்தி சுரேஷின் நடிப்பின் மூலம் நீட்டியிருக்கலாமோ என தோன்றியது..அந்த அளவுக்கு கீர்த்தியின் நடிப்பும் , சாவித்ரி என்ற ஆளுமையை போலவே ஈர்த்திருந்தது.. அப்படத்தின் தாக்கம் வீடு வந்து சேந்த பின்னும் தொடர்கிறது..
ஆக மொத்தம் , சாவித்திரியின் நடிப்பு நடிக்க வருபவர்கள் பலருக்கு நடிப்பை சொல்லி தருவது போல , அவரின் வாழ்க்கை பலரின் வாழ்க்கைக்கு படிப்பினையாக இருக்கும்...

- 14.5.2018

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

புளியமரம்


விடுமுறையில் உறவுகள்
கூடும் நாட்களில்
எங்களின் பாதி பொழுதுகளை
குத்தகைக்கு எடுத்துக்கொள்வது
அப்புளியமரம்தான்....

கண்ணாமூச்சி ஊஞ்சல்
பல்லாங்குழி என அனைத்தையும்
களைப்பின்றி விளையாட
நிழல் பரப்பி காவல் இருக்கும்....

எங்களின் சிறுவயது
சமையல் ஆசையை
இலை காய் கொட்டை சுள்ளி 
தந்து பூர்த்தி செய்ததும்
அம்மரம்தான்....

அந்த விளையாட்டுக்களை
தவறவிட வேண்டிய
வயது வந்த பின்
அங்கு செல்லும் நாளெல்லாம்
அதன் குதூகலத்தைத் தேடி
தோற்றுப் போவேன்....

இப்போதுள்ள பிள்ளைகளின்
வாசத்தைக் கூட அம்மரம்
நுகராததை அதன்  கீழ்
குவிந்திருக்கும் சருகுகளே 
நிரூபணமாக்கின....

எதுவும் மாற்றம் செய்ய இயலா
சூழல் உணர்ந்து
நினைவுகளாகி விட்ட
பழைய நிகழ்வுகளை
அசைபோட்டபடி
நின்றிருக்கும் அம்மரத்திடம்
 நானும் சிறிது கேட்டு வாங்கி
இளைப்பாறி விட்டு
திரும்புவேன் ஏக்கத்துடன்....

வியாழன், 26 ஏப்ரல், 2018

நேசம்



நேசத்தை சுமந்தபடி
கூவிக்கூவி 
விற்றுக்கொண்டிருந்தேன்...

பதிலுக்கு எதிர்பார்த்தது 
நேசம்தான் எனினும் 
கிடைத்ததென்னவோ 
துரோகங்களும் ஏமாற்றங்களும்... 

இருப்பினும் வாங்கிய பலர் 
கொடுத்த வலியை விட 
வலி தருவது 
வாங்கவே யோசிக்கும் 
சிலரின் வெளித்தெரியா 
எண்ணப் பார்வைகள்தாம்... 

என்னைக் குறித்த 
அவர்களின் கணிப்பில் 
அளவுகோல் இருக்கலாம் 

ஆனால் படரத்துடிக்கும் 
நேசத்துக்கேது அளவுகோல்.. 

இதோ இப்போதும் 
அளவில்லா நேசத்தை 
சுமந்தபடி 
கூவிக்கொண்டே இருக்கிறேன்...

மன்னிப்பு




நினைவுகளும் செயல்களும்
நெருக்கமான சமயத்தில்
கடக்கும் உன் நினைவு 
ஒரு தும்பியின் வேகம் போல்
மிக துரிதமாக கடந்து விடுகிறது..

நினைவுகள் மட்டும் அணிவகுக்கும் 

நித்திரைக்கு முன்னான நேரங்களில்
மிளிரும் உன் நினைவோ
இறக்கி வைக்காத பாரத்தை
நினைவூட்டி வதைக்கிறது...

பாரத்தை இறக்க அந்த வார்த்தையை
எடுத்து கனவினுள் வருவாயா என 

அக்கணங்களில் வேண்டுதலோடு 
உறக்கத்தினுள் நுழைகிறேன்...

என் உயிர் நிரப்பும்
ஒரு ஒற்றை சொல்லுக்காக
நீ நினைவை நிரப்பும்
நாளெல்லாம் யாசிக்கிறேன்..

அப்போது கேட்க தவறியதை
இப்போது கேட்க
காலமும் இடம் தரவில்லை
காலனும் இடம் தரவில்லை...

காலத்தில் கேட்கா மன்னிப்பு
காலம் முழுவதும் அழ வைக்கும்
என்று காலம் கடந்துணர்ந்து
என்ன பயன்..
புரிகிறது...

இருந்தும் நீ நினைவில் வந்தால்
சூழ்நிலை இழுப்பது
கனவில் வந்தால்
நீயாய் வருவது
என்ற என் எண்ணம்
பொய்த்து போகா வண்ணம்
கனவில் வந்து தந்து விட்டு போ
என் உயிர் தேடும் அந்த வார்த்தையை....

நிற மாற்றம்

காலை நேர பரபரப்பை
சுமந்து பேருந்துக்குள்
ஏறிக்கொண்டிருந்த பெண்களில்
ஒருத்தியை பார்த்ததும்
மனதில் மகிழ்ச்சி
சம்மணமிட்டுக்கொண்டது....

பள்ளியில் உடன் படித்தவள்
ஆறேழு வருட இடைவெளியில்
தோற்றம் உடை எல்லாவற்றிலும்
நவநாகரிகத்திற்கு மாறியிருந்தாள்....

நெரிசலுக்குள்ளே பார்வையை விட்டு
பின்பக்கம் நின்றிருந்த
அவள் பார்வையின்
ஆனந்த அதிர்ச்சியை உள்வாங்க
அவளை அடிக்கொருமுறை
திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்....

கம்பியை பிடிக்கவே
சிரமப்படுத்திய கூட்டம்
அவளை பார்க்க விடாமலும்
சிரமப்படுத்தியது....

ஐந்தாறு நிறுத்தங்களுக்குப் பின்
குறைந்த கூட்ட இடைவெளியில்
சில நொடிகள் அவள் என்னை
உற்றுப்பார்த்தது அவள் நினைவு
என்னை அடையாளம்
கண்டதை உணர்த்தியது....

என்னிடமிருந்து கிளம்பிய
புன்னகை அவள் பார்க்காதது
போல் ஜன்னல் வழி
பார்வையை திருப்பியதும்
தன்னையும் திருப்பிக் கொண்டது....

அடுத்து வந்த நிறுத்தத்தில்
இறங்கிய அவள்
மாற்று எண்ணங்கள்
சுமத்தப்பட்டு வேறோருவளாக
சென்று கொண்டிருந்தாள்....

பால்ய கால தெருக்கள்


பால்ய காலத்தில்
புழங்கிய தெருக்கள்
பால்யத்தை போலவே 
தொலைவில் இருக்கின்றன
நடக்க நடக்க
நீண்டிருந்த தெருக்கள்
இப்போது 20 எட்டில்
முடிந்து விடுகின்றன
கால மாற்றம் தந்த
பொருளாதார ஏற்றம்
சிறு வீடுகளையும்
மாளிகைகளாக்கி விட்டிருக்கிறது
அங்கு குடியிருக்கும்
நம்மை அறிந்த
மிஞ்சியோரின் கண்களில்
நம் உடல் வளர்ச்சி
ஆச்சரியத்தை தெளிக்கிறது
நம் தற்போதைய உருவத்திற்கு
அவர்களின் வார்த்தைகள்
நம் தாய் அல்லது தந்தையை
பொறுப்பாக்குகின்றன
சிறுவயதில் நம்மை
தூக்கி விளையாடிய
அப்போதைய சிறுமியரெல்லாம்
தத்தம் பிள்ளைகளை
இடுப்பில் வைத்து
நலம் விசாரிக்கின்றனர்
நம் அம்மாக்களுடன்
பேசித்திரிந்த
அம்மாவின் சிநேகிதிகளோ
நம் சிறுவயது
சேட்டைகளின் பட்டியல்
கூறி வெட்கப்படுத்துகின்றனர்
அம்மாவிடமும் பதில் இல்லாத
நினைவில் நிழலாக நிற்கும்
பவுடர் பூசி பொட்டு வைத்து
தந்த உருவத்தையும்
கடைக்கு கூட்டி சென்று
தேன்மிட்டாயோடு அன்பையும்
ஊட்டிய உருவத்தையும்
வெளிச்சத்திற்கு காட்டும்
கேள்வியை மட்டும்
யாரிடம் கேட்பதென
தெரியவில்லை
ஒவ்வொரு முறை அங்கு
சென்று திரும்பும்போதும்
இக்கேள்விகளுக்கான
பதில்களும் அங்கேயே
தங்கி விடுகின்றன...

மௌனப் பார்வை.

விலக்கவேண்டும் என்ற
உன் எண்ணத்தை அறிந்து
காரணம் கேட்டபோது
ஆமோதிப்பும் மறுப்பும்
இல்லாமல் மெளனமாக 
உண்மை என உணர்த்தினாய்....
இருள் தன் பணியை
தொடங்கிய நேரத்தில்
உன் மனம் எண்ணியவாறே
எவ்வித வார்த்தை தாக்குதலும்
இல்லாமல் முடிந்து போனது
எனக்கு மனநிறைவை மட்டுமே
தந்திருந்த நம் நட்புறவு...
அதன் பின்னும் கிளர்ந்தெழுந்த
ஆர்ப்பரிக்கும் ஆசையால்
எதிர்பார்த்திருந்த உன் தொலைபேசி
அழைப்பு என் அலைபேசியில்
மின்னவேயில்லை...
என் செய்கையில் தவறில்லாத
காரணங்களை அறிந்து கொள்ள
தொடங்கிய கணம் முதல்
கவலை இலட்சியங்களாக
பரிணமிக்க ஆரம்பித்திருந்தன....
மதிக்காத அன்பு
தேவையில்லையென என்னாலும்
துண்டித்து விட்ட உறவு துண்டித்தே
இருக்கட்டும் என உன்னாலும்
இருவரின் தொலைபேசி
எண்களும் மாற்றப்பட்டன ....
விரும்பி நேசித்த இதயம்
வெறுக்கவிடாது
உணர்ந்து உன் தொடர்பை
தேடியபோது
சிரமம் இல்லாமல்
கிடைத்தும் போனது...
பழையதை மறந்து பேச
மனம் முட்டும் நேரங்களில்
செல்லும் வார்த்தைகள்
காயப்படுமோ என்ற அச்சத்திலேயே
அதை தட்டிக்கொடுத்து
முடக்கி வைக்கிறேன்....
பேசும் வாத்தைகளால்
நட்பு உயிர் பெறலாம்
மறுபிறப்பு எடுக்கும் நட்போ
பழைய காயங்கள்
தந்து விட்டு சென்ற
லட்சியங்களைக் காற்றோடு
கரைத்து விடுமே....
லட்சியங்கள் வெற்றிகளாகும்
நாள் வரை
குறிக்கோளை மழுங்கவிடாமல்
இப்படியே தொடரும்
என் மௌனப் பார்வை....

காதலின் வார்த்தை

நான் உன்னால்
காதலிக்கப்படுகிறேன்
என நண்பன் சொன்னபோது
நம்பவில்லை
நான் உன்னை
காதலிக்கவில்லை
என நீ சொன்னபோதும்
நம்பவில்லை
நான் இப்போது
இடம் மாறி இருக்கிறேன்
என காதல் சொன்னதை
மட்டும் நம்பிக்கொண்டேன்...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

விபத்து

விபத்து என்பது எதிர்பாரா நேரத்தில் கண்ணிமைக்கும் நொடிக்குள் கோபத்தினாலோ, ஆத்திர அவசரத்தினாலோ, கவனமின்மையாலோ நடந்து வழக்கமான சூழ்நிலையை கொஞ்சம் மாற்றிப்போடும் .. கொஞ்சம் மாற்றிப்போடுமா அல்லது முழு மாற்றம் கொடுக்குமா என்பது அந்த விபத்தின் வீரியத்தை பொறுத்தது...
கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்பது நடந்தபின் யோசித்து ஒரு பலனும் இல்லை.. வாழ்க்கை முழுவதுமே கோபத்தை (முக்கியமாக கோபம்: ஏனெனில் இந்த கண நேர கோபம் பலரை கொலையாளியாக்கி பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது..) கட்டுக்குள் வைத்திருந்தும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் கவனமாக மற்றும் பொறுமையாக இருப்பதுமே இவற்றை தவிர்க்க வழி..
இப்போது நான் சொல்லப்போகும் சிறு விபத்து என்பது "எதிர்பாராத" என்ற வகையில் சேரும்..
பெண்ணுக்கு கொஞ்சம் போரடித்தால் "அம்மா நான் யோகா செய்றேன் பாருங்க " என, நான் சொல்லிக் கொடுத்திருக்கும் யோகா-க்களையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து காட்டுவாள்.. அவள் செய்யட்டும் என்று நாம் அங்கு இங்கு திரும்ப முடியாது.. ஒவ்வொன்றையும் நான் பார்த்து ,குட் என சொல்ல வேண்டும்.. அப்போதுதான் அவளுக்கு திருப்தி..
நேற்று மாலையும் வழக்கம் போல் அவளுக்கு போரடிக்கவே யோகாவை கையிலெடுத்தாள்.. அதே வழக்கம் போலவே டிவி பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க விடாமல் அவளை பார்க்க வேண்டும் என சிணுங்கி வற்புறுத்தவே வேறு வழியின்றி பார்த்தேன்.. ஒவ்வொன்றை முடித்த பிறகும் "இனி என்ன செய்யறது " என கேட்பாள்.. அதற்குள் அவளுக்கு நியாபகம் வந்தால் அதை செய்து விட்டு அடுத்து செய்வதற்கான யோகா பொசிஷனை கேட்டாள்..
உடனே நான் பண்ணிப்பார்த்தும் என் உடல் எடை ஒத்துழைக்காத "அதோ முக சுவானாசனா மற்றும் சிரசாசனா கலந்த ஒரு யோகாசனத்தை செய்ய சொல்லவே அவளின் சிறு உடல் ஒத்துழைப்பு தர சிரமமே இல்லாமல் இலகுவாக செய்தாள்.. உடனே "அம்மாவுக்கு இதை செய்யவே முடியலே, அம்மா கொஞ்சம் வெயிட் இல்லையா ,சோ தலை கீழ வைக்க முடியல, பட் நீ செஞ்சுட்ட , குட் " என்றேன்..சொன்னதோடு இல்லாமால் (விதி யாரை விட்டது ) அவள் செய்த அழகை பார்த்து "பாரேன் நான் செய்றேன்" என கீழே விரித்திருந்த துணியின் மேல் செய்ய ஆரம்பித்தேன்.. செய்ததும் உடனே நன்றாக அந்த ஆசனம் வந்ததும் , என் மகள் "அம்மா , அப்படிதான் , குட் , குட் "என உற்சாகத்துடன் கூறவே, நம்ம உடல் எடைக்கு திடீர்னு இதை இவ்வளவு நேரம் செய்தால் ஒத்து வருமா என யோசிக்கவே தோன்றாமல் இன்னும் 10 நொடி இருக்கலாம் என எண்ணி அதே பொசிடிஷனில் நான் இருக்க , கீழே விரித்திருந்த துணியோ மார்பில்ஸ்-க்கு நன்றாக வழுக்கவும் உடனே சமாளிக்க என் உடல் எடையை கைக்கு கொடுக்கவும் ...... திடீர் என வலி , "அம்மா, அம்மா என நான் அவர்களை அழைக்க அடுத்த அறையில் இருந்த அம்மாவும் அப்பாவும் பதறிக் கொண்டு வர , மகளோ பயந்த முகத்துடன் அழுகையை துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள்..
எனக்கு உடனே இடது கை இறங்கி விட்டதென புரிந்து போனது.. ஏறக்குறைய 18 வருடங்களுக்கு முன் ஒரு சகோதர சண்டையில் என் தம்பி இதே கையை இறக்கி விட்டிருந்தான்.. பதறிக் கொண்டு வந்த அம்மாவிடம் "அம்மா, அன்னைக்கு போல ஷோல்டர் -ல இருந்து கை இறங்கிடுச்சு , உடனே ஆட்டோ கூப்பிடுங்க" என வலியினூடே சொன்னேன்.. அப்பாதான் மிகவும் பயந்து போயிருந்தார்..
முன்பொருமுறை இப்படி நடந்தபோதும் ஆட்டோவில் பயணித்தபோது ஆட்டோவின் குலுக்களில் வலி உயிரை தின்றது வேறு நியாபகத்தில் வந்து இம்சை படுத்தியது.. டாக்ஸி சொல்ல சொல்லலாமென்றாலும் அவ்வளவு நேரம் வலி பொறுக்க மனதிலும் உடலிலும் தெம்பில்லை.. அதனால் அடுத்த தெருவில் இருந்த ஆட்டோவை வரவழைக்க அம்மா போன் செய்யும்போதே , எந்த ,மருத்துவமனைக்கு செல்லலாம் என அம்மாவும் அப்பாவும் டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர்..
அல்லோபதி மருத்துவமனை என்றால் ஸ்கேன் எடுத்து அதன்பின்தான் சிகிச்சை , மற்றும் மருத்துவர்கள் இருப்பார்களோ (அப்போதே நேரம் 7.30 -ஐ தாண்டி இருந்தது ) என்ற சந்தேகம் என அனைத்தும் நினைக்கும்போதே , அவ்வளவு நேரம் வலி பொறுக்க முடியாது என தோன்ற " வைத்தியசாலைக்கு செல்லலாம் "எனக் கூறினேன்.. சரி, ஆட்டோ ட்ரைவரிடமே கேட்கலாம் என முடிவெடுத்து அம்மா ஆட்டோவுக்கு காத்திருந்தார்கள்..
என் நிலையோ ஆரம்பத்தில் பயத்துடன் பதட்டமும் சேர மூச்சுக்கே திணறினேன்.. உடல் வேறு வேர்த்துக் கொட்டியது ..அம்மா தண்ணீர் கொண்டு வர ,ஆசுவாசப்படுத்திக் கொண்டு , பயந்து அழுது கொண்டிருந்த பிள்ளைகளை நினைத்தவாறே, முதலில் மனதுக்கு தைரியத்தைக் கொடுத்தேன்.. உடனே படபடப்பு போய் சீரான சுவாசம் வந்தது.. ஆனால் தோள்பட்டைக்கு கொஞ்சம் அசைவு கொடுத்தாலும் உயிர் போகும் வலி என்பார்களே, அப்படி வலி.. எழுந்திருக்க முடியாவிட்டாலும் எப்படியோ எழுந்து ஆட்டோவில் போய் உட்கார்ந்ததற்கு காரணம் மன தைரியம் என்பதில் சந்தேகம் இல்லை..
ஆட்டோ குலுக்கலில், கத்திக் கொண்டே ஒரு வழியாக வைத்திய சாலைக்கு வர , அங்கிருந்தவர் கை இறங்கித்தான் இருக்கிறது என உறுதி செய்து கொண்ட பின் சுவரோரமாக சாய்ந்து உட்கார சொல்லவே , அப்படியே உட்கார்ந்தேன்..அந்த கையை அப்படியே மேலே தூக்க, வலி saththamaana காத்தலை கொடுத்தது... இரு நொடிகள் கூட ஆகவில்லை," "இப்ப சரி ஆகிடுச்சு , இனி வலி இருக்காது "எனக்கூறி எண்ணெய் விட்டு கட்டும் கட்டி விட்டார்..
"ஒரு வாரத்துக்கு பின் வாங்க, 3 வாரம் கட்டு போட்டா சரி ஆகிடும்" எனக்கூறவே , இரு நாட்களில் நாகர்கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்திருந்ததை கூறினேன்.. சனிக்கிழமை பார்ப்போம் .. சரி ஆச்சுன்னா போங்க" என வைத்தியர் கூறினார்..
வீட்டுக்கு வரும்போதோ , மகன் அழுது கொண்டே இருந்ததையும் , பெண் கல் போல இருந்த இடத்தை விட்டு நகராததையும் அப்பா சொல்ல, இருவரையும் சமாதனப் படுத்தினேன்.. என்னவருக்கு சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம்.. பிசினஸ் விசிட்டில் இந்தியா வந்திருக்கும் அவர் அன்று காலைதான் கோவையிலிருந்து திருச்சி கிளம்பினார்.. இனி இந்த 20 நாட்களும் பெங்களூர் , நார்த் இந்தியாவில் சில ஊர்கள் என சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. அதனால் அவர் பேசும்போது சொல்லலாம் என விட்டு விட்டேன்..
ஆனால் அவர் ரியாக்சன் எப்படி இருக்கும் எனும் காணும் ஆவல் தலை தூக்க, (இப்ப யோகா தேவையா என திட்டினாலும், கூடவே பழியில் சேர்த்துக் கொள்ள மகளும் இருக்கிறாளே , எந்த தகப்பனும், அதுவும் இந்த தகப்பன் மகளை விட்டே கொடுக்க மாட்டார் , அவளும் அப்பனை விட்டே கொடுக்க மாட்டாள் ... இப்படி நிலைமை இருக்கையில் சமாளித்துக் கொள்ளலாம் என கட்டு போட்ட கையை பாதி முகம் தெரியுமாறு போட்டோ எடுத்து அனுப்பினேன்..
அவரின் ரிப்ளைக்காக அரை மணி நேரம் காத்திருந்தேன்.. அவரின் வேலை அலைச்சல் தெரியுமாதலால் பார்க்கும்போது பார்க்கட்டும் என நினைத்து அப்படியே தூங்கி விட்டேன்.. இன்று காலை மொபைலை எடுத்துக் பார்த்தபோது, பதிலுக்கு "தம்ஸ் அப்" கொடுத்திருந்தார்.. கோபத்தோடு அழுகையும் சேர்ந்து வர ஆரம்பித்த உடனேயே , இல்லையில்லை சரியாக கவனித்திருக்க மாட்டார் என சமாதானப் படுத்திக்கொண்டேன்..
சிறிது நேரம் கழித்து "இது மகள்கள் வாரம்" என்ற பார்வேர்ட் மெசஜை அனுப்பி இருந்தார் .. அதில் மகள் அமைதியாக இருந்தால் உறவுகள் ஒவ்வொருவரும் எப்படி அவளை கேட்பர் என்பது போல் இருந்தது.. நல்ல சான்ஸ் கிடைத்திருக்கிறது , விடக்கூடாது, இப்போதாவது என் உடல்நிலையை அவருக்கு மறைமுகமாக தெரிவித்து விட வேண்டும் என் எண்ணி .பதிலுக்கு "உங்கள் பெண் அமைதியாகத்தான் இருக்கிறாள், குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் , அவளை பார்க்க பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கிறது" என அனுப்பி வைத்தேன்.. அதையும் எப்படி பார்த்தார் என தெரியவில்லை , பதில் "ஓ" என வந்தது..
சலித்து, உடைந்து போனேன்.. அந்த உணர்ச்சியில் "அக்கறையான ஒரு பார்வை , நம்பிக்கை ஏற்றும் ஒரு வார்த்தை, சிகையை கோதும் ஒரு வருடல் , நெற்றியை சூடாக்கும் ஒரு முத்தம் "என நான் அவரிடம் எதிர்பார்ப்பது கவிதை (????) போல வர ,உடனே, இதை பேஸ்புக்கிலும் போடலாமா, இல்லை அவருக்கு மட்டும் அனுப்பினால் போதுமா என்ற பட்டிமன்றம் வேறு மனதினுள் நடந்து கொண்டிருந்தது.. எப்படியோ ஆறுதலுக்கு ஒரு கவிதையாவது (திரும்பவும் ????)என் சிந்தையில் இருந்து வருகிறதே என சாந்தப்பட்டுக் கொண்டேன்...
அவர் அனுப்பிய மெசேஜ்களை பையனிடம் வாசித்துக் காட்டினேன்.. உன் அப்பாவுக்கு என் மேல இவ்வளவுதான் அக்கறை பார்த்தியா " என ....
அதே நேரம் அவரின் கால் அழைப்பு வரவே மகன் எடுத்து , "அம்மாவுக்கு புண் இருக்குன்னு காட்டினா ,அப்பா தம்ஸ் அப் போட்டுருக்கீங்க" என கூற , அவரோ அம்மாட்ட போனை கொடு எனக்கூறி, "அவன் என்ன சொல்றான்" எனக் கேட்க " நான் அனுப்பின போட்டோ-வை பார்த்தா தெரிஞ்சு இருக்குமே , எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்க போன ஜென்மத்துல ரொம்ப புண்ணியம் செஞ்சுருக்கணும் "என கிண்டலுடன் கூறவே , சரி நான் பார்க்கறேன் , நீ பாலிமர் நியூஸ்-ல சவூதி பத்தி ஏதோ சொன்னார்களாம், கேட்டு டீடெயில்ஸ் அனுப்பு, நான் ட்ராவெலிங்-ல இருக்கேன் " என போன் வைத்தார்..
இன்னுமா பார்த்திருக்க மாட்டார் ,அரை மணி நேரமாகியும் கால் வரவில்லை என்ற ஏக்கம் என்னை படுத்த, திரும்பவும் நானே அந்த நியூஸ் விவரத்தை அவருக்கு தெரிவிக்க போன் செய்த போது ," உன் விரல்ல ஏதோ அடி பட்டிருக்குன்னு சொன்னான், அதுல பார்த்த தெரியலியே "என குழப்பத்துடன் கேட்க, தானாக அவருக்கு புரிய போவதில்லை என புரிந்து கொண்டு நானே , நேற்று நடந்த சம்பவத்தை விளக்கினேன்... "ஐயோ, கை இறங்கிடுச்சா" என பதட்டப்பட்டவரிடம் , திரும்ப சவூதி பற்றிய செய்தியை VIDEO-வாக அனுப்புகிறேன் எனக் கூறி போனை வைத்தேன்..
இருந்தாலும் , கணவராகிய அவரே பதறி ,"அச்சோ , இப்படி ஆச்சே, வலி-ல துடிச்சுருப்பியே -ன்னு வருத்தப்பட்டாதானே மனைவியான எனக்கு மனசு ஆறும் .. சோ, திரும்ப அவரின் வருத்தம் தோய்ந்த அழைப்புக்கு காத்திருந்தேன் , காத்திருந்தேன், காத்திருந்தேன்...
2 மணி நேரங்கள் கடந்துதான் மிச்சம்.. "சே, நமக்கு அப்போ தோணின கவிதைதான் மிச்சம் போல " அந்த கவிதையை மெருகேற்ற வழி பார்க்கணும்" என நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அவரின் அழைப்பு.... எடுத்ததும், " சாரிப்பா, நான் சரியா கவனிக்கல, அந்த கட்டுக்கு கீழ ஷால் போட்டு இருந்ததால ஒரு டிரஸ் போலவேதான் தோணுச்சு, அதான் நான் கவனிக்கல, சாரி, உடனே போன் பண்ணலாம்னா , கூட ஆட்கள் இருந்தாங்க, இப்பதான் ஏர்போர்ட்க்கு வந்தேன்.. கொஞ்சம் பிரீ-ஆனதும் உடனே உன்னை கூப்பிட்டேன் " என சொல்ல என் வருத்தம் எங்கோ போய் விட்டிருந்தது ...
ஆனால் கூடவே ஒரு வேறொரு வருத்தம் சேர்ந்து கொண்டது " என் கவிதை போச்சே "
- 22-4-2018