திங்கள், 22 ஜூலை, 2019

என் பிள்ளைகளின் உலகம் (26)



   ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் நிகிதாவுக்கு "living  things , non  living  things  பற்றிய வீட்டுப்பாடம்.. ஒருமுறை விளக்கியவுடன், "நம்ம வீட்ல உள்ள லிவிங் தாங்ஸ் எல்லாம் காமி" எனக் கேட்க , என்னை, மாமாவை, தாத்தாவை, பாட்டியை, அண்ணனை எனக் கை காட்டியவள்  , பின் கட்டிலுக்கு அடியில் , மேஜைக்கு அடியில் , சுவற்றில் என நோட்டம் வீட்டுக்கு கொண்டிருந்தாள்..

அந்த அறையில் ஏதும் அவள் பார்வைக்கு தட்டுப்படாததால் அடுத்த அறைக்கு ஓடினாள்.. உடனே நான் " இன்செக்ட்ஸ் கிடைக்காட்டி , பரவால்ல, இங்க வா " என கூற , அங்கிருந்து சிரித்தபடி ஓடி வந்தவள் "சாமி போட்டோ" என்றாள்.. "சாமி போட்டோவா" என நான் புரிந்து சிரிக்க தொடங்கவும் "ஆமாம், சாமி, நாம கேட்டதெல்லாம் கொடுக்குதுல்ல " என கூறினாள்..

"அம்மா, சாமிதான் லிவிங் திங் , சாமி போட்டோ நான் லிவிங் திங் தான" என  ரோஹித் கேட்க , சில நொடிகள் சிந்தனைக்கு பின் "ஆமாம்" என குழப்பத்துடன் கூறி முடித்தேன்..

  நேற்று ரோஹித்தின் பாடநூலின் படி, "அம்மா, அப்பா,  சிஸ்டர், பிரதர், க்ராண்ட்ப்பா, க்ராண்ட்மா அண்ட் டீச்சர் இவங்கதான் நம்மை பாதுகாக்கும் வளையத்தில் இருக்காங்க என கேள்விக்கான பதிலை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.. உடனே நிகிதா, "நீ, ஒருத்தங்களை மறந்துட்ட" என சொல்ல , "மாமாவையா, சித்தப்பாவையா" என ரோஹித் கேட்டான்.   நானும் , அம்மாவும், " நீ சாமியதான சொல்ற " எனக் கேட்டோம்.

"அவங்க பேர் மறந்துடுச்சு" என தடுமாறியவள் ,பின் "அவங்க பெரிய கன் வச்சுருப்பாங்க" எனக் கூறினாள்..

சில தினங்களுக்கு முன்தான் பிள்ளைகளுக்கு ராணுவ வீரர்கள் பற்றி கூறியிருந்தேன்..  நேற்றைய சூழ்நிலையில் ,உடனே அது அவள் மனதுக்குள் வந்தது , ஆச்சரியத்தோடு பிரமிப்பை கொடுத்தது..

இம்முறை "ஆமாம்" என குழப்பமில்லாமல் கூறினேன்..

22 -7 -2019

திங்கள், 8 ஜூலை, 2019

நன்றி அறிவித்தல் : 1


     நன்றி என்பது நாள்தோறும் ஒருவருக்காவது மனதின் மூலமோ உதட்டின் மூலமோ சொல்வதுதான் என்றாலும் அதை , அதற்கு காரணமான மனிதர்களை அடையாளப்படுத்தி பதிவிட்டுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்த பகுதி.. வாசிப்பவர்களுக்கு இதற்கு கூடவா என்று சில சம்பவங்களை படிக்கும்போது தோன்றலாம்.. ஆனால் "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" என்ற வள்ளுவனின் வாக்கு உண்மை என்று உணர்ந்ததாலும் ,மற்றவர் செய்த சிறு உதவிக்கும் , என் கடன் என் காலம் முழுக்க நன்றி சொல்வற்கே என்ற என் எண்ணத்தின் உந்துதலின் மூலமும் இதை எழுத தொடங்குகிறேன்..


முதலில் பிரபஞ்சத்திற்கும் , எனக்கு உடல் , உயிர் தந்த என் தாய்,தந்தைக்கும் நன்றி .. 

உயிர் இருந்தால்தானே வாழ்க்கை  என்பது.. முதலில் உயிர் காப்பாற்றப்பட்ட அந்த நிமிடங்களை பகிர்கிறேன் ..

சில உதவிகளை பெறும்போது சம்பந்தப்பட்ட உதவுபவரின் முகம் கூட பலருக்கு தெரியாது இருக்கலாம் .. உதாரணம் ,ரத்த தானம், உறுப்பு தானம், நிவாரண உதவிகள், கல்வி, மருத்துவ உதவி போல...
இப்போது நான் சொல்லப்போவதும் என் உயிர் காத்த உதவிதான் .. ஆனால் அருகில் தொட்டு உணர்ந்தும் முகம் பார்க்க இயலாமல் போனதுதான் இந்த  நிகழ்வு...

வேலை முடிந்து பேருந்தில் வீட்டுக்கு பயணம் .. இப்போது போலல்லாமல் அப்போதெல்லாம் பேருந்துகளில் கூட்டம் அதிகமிருக்கும்.. கூட்டமாக இருக்கிறதே அடுத்த பேருந்தை பிடிக்கலாம் என்று காத்திருக்க எண்ணம் வராதபடி எங்கள் பகுதிக்கு பேருந்துகளும் குறைவு.. ஆதலால் கூட்டமுள்ள பேருந்துகளில் நின்று கொண்டே வீடு வந்து சேரும்போது பணியிலிருந்த அலுப்புகளை பேருந்து அலுப்பு மிஞ்சி விட்டிருக்கும்.

ஒருநாள் கூட்டமுள்ள பேருந்தில் வழக்கம் போல் பயணம்.. ஆனால் வழக்கமில்லாத விதமாக அன்று படியிலேயே சில நிறுத்தங்கள் வரை  பயணம்.. பின் எப்படியோ முன்னேறி படிகளை கடந்து பேருந்தின் விளிம்பில் நிற்கிறேன்.. ஏனெனில் படியில் நின்றால் இருபக்கமும் இருந்த ஆட்களால் பிடிப்புக்கு வேறு வழியில்லை.. மேலுள்ள கம்பியையும் பிடிக்க எட்டாது.. அதனால் என்னை காப்பற்ற முட்டி மோதி படிகளைக் கடந்து பேருந்தின் விளிம்பில் ஒரு காலை மட்டும் அழுந்த வைத்து நின்று கொண்டிருந்தேன்..

பேருந்து குறிச்சி குளம் அருகில் உள்ள கோவிலின் பக்கம் உள்ள வளைவில் வேகமாக  திரும்ப, எனக்கு பின் உள்ள கூட்டம் எல்லாம் என் மேல் சாய , மேலே கம்பியை பிடித்திருந்த என்  ஒரு கையும் தன் பிடியை விடும் நிலையில்... (அந்த ஒரு நொடியில் மரண பயம் என்னை அலுத்தியிருந்ததை இப்போதும் உணர்கிறேன் )  ஒரு கை என் கையை அழுந்த கம்பியோடு சேர்த்து பிடிக்கிறது.. அந்த பிடி ஓரிரு நொடிகள்தான்..  பின் நேர்பாதையில் பேருந்து பயணிக்கும்போது என் பாதுகாப்பை உணர்ந்துகொண்டு  தன் கையை கம்பியிலிருந்து எடுத்துக் கொள்கிறது

என்னால் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை.. கூட்டத்தில் அந்த கைக்குரிய முகத்தை தேடவும் இயலவில்லை.. மெல்ல சிரித்தபடி தேங்க்ஸ் என்று கூட்டத்தை பார்த்து மெதுவாக சொல்லிக் கொண்டேன்... அன்று , அந்த கை மட்டும் என்னை பிடிக்காதிருந்தால் , என்றோ பலர் முன்னிலையில் நான் போயிருப்பேன்..

அதற்கு பின்னான காலங்களில் எதற்கு இருக்க வேண்டும் என தோன்றும் சந்தர்ப்பங்களிலும் கூட, அன்றே பேருந்தில் இருந்து போயிருக்கலாம் என்று மட்டும் தோன்றவே தோன்றாது..  அப்படி இன்று வரை என் உயிர் மீட்ட நிகழ்வு என்றால் முதலில் இதுதான் நினைவில் வரும்.

பள்ளியில் படிக்கும்போது கூட , ஒருமுறை பின்னால் (ஹாரன் அழுத்தியும் நான் கேட்காத மனநிலையில் இருந்திருப்பேனோ என்னவோ ) மெல்ல வந்து கொண்டிருந்த பேருந்துக்கு முன்பிருந்த  என்னை பின்னாலிருந்து ஓரத்தில் இழுத்து விட்ட எங்கள் பள்ளி வத்சலா டீச்சருக்கு , அப்போது நன்றி சொல்ல தோன்றவில்லை .., மெல்ல அவரை பார்த்து சிரித்தபடி கடந்து விட்டேன்.. ஆனால் இப்போது என் நன்றி அறிவிக்கும் அட்டவணையின் போது தவறாமல் அவர் பெயரும் ( அவரின் உருவத்தை (முகம் தெளிவான நினைவிலில்லை)மனதில் வைத்து) அதில் இருக்கும்..

இந்த சம்பவத்தில்  காப்பாற்றிய ஆசிரியரின் பெயரும் உருவமும் நினைவிலிருக்கிறது .. ஆனால் முந்தைய நிகழ்வில் காப்பாற்றியவரின் ஒரு விவரமும் தெரியாது..

ஆனால் இந்த நினைவு வரும்போதெல்லாம் நன்றி பகிர அந்த கையின்  பிடிதான் ஒரு நிலைப்புள்ளி...  அந்த கையின் உறுதியான பிடியை மட்டும் இன்றும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ., இன்று மட்டுமல்ல , என்றும் உணர்ந்து கொண்டே இருப்பேன்...


- 08-07-2019