திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியை பற்றி நினைவு அடுக்குகளில் தேடி சிறப்பான தகவல்கள் எடுக்க என்  டீன் ஏஜ் பருவத்தில் அவர் கனவுக்கன்னியாக இருக்கவில்லை.. ஏனெனில் டீன் ஏஜிலும் அதன் பின்னான சில வருடங்களும் ரசிக்கும் சிலரின் நினைவுகளே பொக்கிஷங்களாக நம்முள் புதைந்திருக்கும் என்பது என் எண்ணம்.. அவர்களே நம் கனவு நாயக நாயகிகளாக இருந்திருப்பர்..  80 -களில் பிறந்த எனக்கு சிம்ரனும், ரம்பாவுமே கனவுக்கன்னிகளாக வாய்த்திருந்தனர்..

ஆனால் நினைவு தெரிந்து பார்த்த மூன்றாம் பிறை படத்தில் அவரின் நடிப்பு என்னுள் ஆச்சரியப்படுத்தியது.. ஆனால் முடிவு சோகமாக முடிந்திருக்கும் படங்களை பார்ப்பது எனக்கு ஆகாதென்பதால் அப்படத்தை திரும்ப முழுதாக பார்த்ததில்லை.. அப்போது அவரின் அழகு எனக்கு பெரிதாக தெரிந்ததில்லை.. பின் அழகை ரசிக்கும் வயது வந்தபிறகு மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் , ஜானி, சிகப்பு ரோஜாக்கள் ,வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை (பாடல்களில் மூலம் ) மற்றும் இன்னும் சில படங்களில் அவரின் அழகை  நடிப்போடு சேர்த்து கண்டு வியந்திருக்கிறேன்..

இப்போது நான் யோசித்து பார்க்கையில் , நான் பார்த்து ரசித்த/ரசிக்கிற  பெண்கள் எல்லோருக்குமே ஸ்ரீதேவியின் சாயல் இருக்கிறது.. ஸ்ரீதேவியின் சாயல் இருப்பதால்தான் அவர்களை ரசித்தேனா என எண்ணிப்பார்த்தால் அதில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை.. ஏனெனில் அப்படிப்பட்ட லக்ஷணங்கள் உடையவர்களே என் கண்களுக்கு அழகாக தெரிகின்றனர்.. நான் விரும்பி ரசிக்கிற அவரின் அழகு அவரது மூக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னதான  சினிமாக்களில் கண்டவைகளைத்தான்.. பின்னும் அவரின் அழகு போய் விடவில்லை என்றாலும் முன்பிருந்த அழகு (சுருள் கேசம் உட்பட ) இல்லை...

அவரின் அழகை  ரசிக்கிறேன்,  திறமையை மதிக்கிறேன் என்பதற்காக மட்டும் இல்லை இந்த பதிவு.

யூ டியூபில் ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பார்த்திருந்தேன்.. அவரும் அவரின் மூத்த பெண்ணும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.. அதில் அவரின் பெண் அணிந்திருந்த ஆடை பலரது கவனம் ஈர்க்கும் வண்ணம் கொஞ்சம் ஆபாசமாக இருந்தது.. அப்பெண்ணை மேய்ந்த சிலரின்  பார்வையை அவர்களின்  கண்களின் மூலம் கண்டு பரிதவித்த ஸ்ரீதேவியின் முகத்தை பார்த்தேன்.. பொது இடம் என்பதாலும் சுற்றிலும் மீடியாக்கள் உள்ளனர் என்பதாலும் உணர்ச்சியை மறைக்க அவர் முகத்தில் சிரிப்பை பூசினாலும் , அதையும் மீறி அந்த பரிதவிப்பை அவர் முகம் வெளிக்காட்டியது..

இருவரும் சேர்ந்து புகைப்படத்துக்கு  போஸ் தருகின்றனர்.. பின்  அவர் தனியாக புகைப்படத்துக்கு நின்றுவிட்டு போன பிறகு அவரின் மகள் தனியாக நின்று படம் எடுத்துக்கொள்ள மீடியாக்காரர்கள் முன் வர தயாராகும்போது, பின்னால் திரும்பி நின்றவாறு இருந்த ஸ்ரீதேவியின் கண்டிப்பு அவரை நிறுத்துகிறது..பின் அப்பெண்ணும் அவளின் தாய் கூடவே செல்கிறாள்.. ஆனால் அந்த கண்டிப்பை மீடியாக்கள் அறியாதவாறு இருக்க வேண்டுமென , அடுத்த நொடியில் மீடியாக்கள் முன்பு சிரித்த முகத்தை காண்பிக்கிறார்.. ஆனால் கேமரா அவரின் உணர்ச்சிகளை படம் எடுக்க தவறவில்லை..

அப்போதிருந்த ஸ்ரீதேவியின் பரிதவிப்பை மகள்களை பெற்ற அம்மாக்களால் மட்டுமே உணர முடியும்..

ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது முக்கியம்...  இரண்டும்கெட்டான் வயதில் கண்டிப்போடான  சிறந்த பாதுகாப்பை ஒரு தாயை தவிர வேறு யாராலும் ஒரு பெண்ணுக்கு  தர முடியாது.. அதை கேட்க மறுத்தவர்கள் கூட தாயின் மறைவின் பின் அதை உணர்ந்து வருந்துவர்..

பல வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதை படித்தேன்.. எழுதியவரின் பெயரை இப்போது கவனிப்பது போல அப்போது கவனித்ததில்லை.. அதில் தாயின் சொல்படி உடை உடுப்பது ,தலை வாருவது , பொட்டு வைப்பது என அந்த பெண் கதாபாத்திரம் செய்வது போல் வரும்.. பின் பணிக்கு கிளம்பும்போது மறைந்த தாயின் புகைப்படத்துக்கு முன் நின்று அவள் கும்பிடும்போது , அந்த தாய் உயிரோடு இருந்தபோது சொன்னவைகளை அப்போது செய்ததில்லை, இப்போது அவர் கூறிய சொற்களின் படி செயல் படுகிறாள் என்பதாக முடியும்.. இன்னும் என்னால் மறக்க  முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்திய கதை அது..

இப்போதுதான் ஸ்ரீதேவியின் பெண் நடிக்கத் தொடங்கி இருக்கிறாள்.. புதிதான சூழ்நிலை, புதுவிதமான மனிதர்கள் என சந்திக்க வேண்டி வரும்போது , அத்துறையில் ஏற்கனவே இருந்த அவளின் தாய் உடன் இருந்திருந்தால் தக்க  அறிவுரைகளையும், பாதுகாப்பையும் அவள் பெற்றிருக்க முடியும்.. ஆனால் இப்போது  அவரில்லை என்பதால் அப்பெண்களுக்கான மிகப் பெரிய பேரிழப்பு இது.. தாயின் அரவணைப்பு தேவைப்படுகிற வயதில் இருக்கும்போது தாயை இழப்பது பெரும் கொடுமை..

நமக்கென்ன ,  இன்னும் சில  நாட்களுக்கு அவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்படும்போதெல்லாம்  நாம் எல்லோரும்  ஒரு வித  வருத்தத்துடன் முன்பை விட அவரை  உற்று நோக்குவோம்.. பின் மறந்து போவோம்..ஆனால் அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான் இது  உண்மையான இழப்பு.. அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு  இறைவன் ஆறுதலை தரட்டும்..

இந்தியாவின்  மிகச்சிறந்த நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவிக்கு  மனப்பூர்வமான அஞ்சலி.. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்...

- 26.2.2018

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

21

நான் சிறுமியாக இருந்தபோது சின்ன கைக்குழந்தைகளை தூக்கி வைத்து விளையாடவும், அவர்களை குளிக்க வைத்து , அலங்காரம் பண்ணி விடவும் மிகவும் ஆசை இருக்கும்.. பக்கத்தில் சிறு குழந்தைகள் உள்ள வீடென்றால் நாளின் முழு நாளும் அவர்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆசை கூட இருக்கும். அப்படியே அப்போது சிறு பிள்ளைகள் இருந்த வீடுகளில் நாகாரீகம் கருதி முழு நாளும் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது அவர்களின் வீடு சென்று குழந்தையை பார்த்துக் கொள்வதோ அல்லது என் வீட்டுக்கு கொண்டு வந்து திரும்ப அவர்கள் கேட்கும் நேரம் கொடுத்து அனுப்புவதோ வழக்கம்.. அவர்களுக்கு ஏதாவது வேலை இருந்தால் கூட குழந்தையை என் பொறுப்பில் விட்டு விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் வந்து வாங்கி செல்வர்..
இந்த ஆசை எதுவரை சென்றதென்றால் என் டீன்-ஏஜில் கூட அம்மாவிடம், "அம்மா ஏதாவது ஆதரவற்ற இல்லத்தில் ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாமா" என கேட்கும் அளவிற்கு இருந்தது..
என் இரு குழந்தைகளுக்கும் அதே போல சிறு குழந்தைகள் மீது ஆசை. மகனை விட மகளுக்கு சிறு குழந்தைகளை பார்த்தால் கொள்ளை பிரியம்.. மகனுக்கு ஆண் குழந்தைகள் பிடிக்கும் என்றால் பெண்ணுக்கு பெண் பிள்ளைகளை பிடிக்கும்.. குழந்தை பிறந்திருக்கும் வீடுகளுக்கு பிள்ளையை காண செல்வதென்றால் கூட பாய் பேபி என்றால்தான் வருவேன் என மகனும் கேர்ள் பேபி-ஐ பார்க்க மட்டும்தான் வருவேன் என மகளும் கூறுவர்...
இரவு படுக்கும்போது பிள்ளைகளுக்கு கதை சொல்லியோ, அவர்களுக்கு பிடித்த பாடல்கள் பாடியோ அல்லது அவர்கள் தங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டோ தூங்குவது வழக்கம் .. இரு நாட்களுக்கு முன்னர் அப்படி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மகள் இதற்கு முன் கேட்டது போலவே அப்போதும் "அம்மா, எனக்கு தங்கச்சி பாப்பா வேணும், சாமிகிட்ட கேளுங்க , அப்போ சாமி கொடுக்கும் இல்லையா"என்க "நோ,எனக்கு தம்பி பாப்பாதான் வேணும்" என மகன் கேட்க ஆரம்பித்தான்.. இந்த கேள்வி சிறு குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் எதிரொலிக்கும் கேள்விதான்..
உடனே நான் , "தங்கங்களா, சாமி எனக்கு ஒரு பையனும் , ஒரு பொண்ணும் போதும்-னு டாக்டர்கிட்ட சொல்லி, ஒரு ஆபரேஷன் பண்ண சொல்லிட்டாங்க.. சோ இனிமே தங்கச்சி, தம்பி பாப்பா எல்லாம் வர மாட்டாங்க" என்றேன்.. உடனே பெண் "அண்ணா -க்கு அப்புறம் சின்ன பாப்பாவா என்னை கொடுத்தாங்க , அப்போ எனக்கு அப்புறம் நான் விளையாட ஒரு சின்ன பாப்பா சாமி கொடுக்கணும் இல்லையா "என ஆவேசமாகக் கேட்டாள்...
உடனே வந்த சிரிப்புடன் "என்ன சொன்ன, திரும்ப சொல்லு" எனக் கேட்க, வெட்கப்பட்டவாறே இடைவெளி விட்டு விட்டு மெல்லமாக முன்னர் கூறியதை திரும்ப கூறினாள்.. "சரி, சரி சாமி தருவாங்க, உனக்கு தங்கச்சி பாப்பா கிடைச்சா என்ன செய்வ" எனக்கேட்க "சோறு ஊட்டுவேன், தோசை ஊட்டுவேன், பால் குடிக்க வைப்பேன், டிரஸ் போட்டு விடுவேன் " என பெண் குழந்தைகளுக்கே உரிய ஆசைகளை பட்டியலிட்டாள் .. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஒளியை வார்த்தைகளில் அளவிட முடியாது..
உடனே ரோஹித், "எனக்கு ஒன்னு இல்ல, 5 தம்பி பாப்பா வேணும், அவங்க கூட நான் WWF -ல வர்றது போல சண்டை போடணும்" என கை காலை தூக்கி சண்டை போடுவதை போல ஆக்சனிலேயே காண்பித்தான்... அடிக்கொரு முறை தங்கையை சீண்டுவது, அவளை அடித்து விட்டு ஓடுவது , வீட்டில் சில வேண்டாத வேலைகள் செய்து வைத்து நமக்கு கூடுதல் வேலைகள் கொடுப்பது, .. இப்படி நீளும் பட்டியலின் படி ஒரு ஆண் குழந்தைக்குரிய அத்தனை சேட்டைகளும் நிறைந்திருக்கும் இவன் ஒருவனையே சமாளிக்க முடியவில்லையே, இதில் 5 ஆண் குழந்தைகள் எனக்கு கிடைத்திருந்தால் ,நான் எப்படி இருந்திருப்பேன் என்று எண்ணியவுடனே பயத்தில் தலையை சிலுப்பிக் கொண்டேன்..
அது எப்படியோ, சிறு குழந்தை பருவத்திலேயே யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே பெண் குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது , அதற்கு சோறூட்டுவது, பாத்திரங்களை வைத்து சமைத்து விளையாடுவது என இருக்க, ஆண் பிள்ளைகளோ வாகன பொம்மைகளை வைத்து ஓட்டுவது, சாகச கதாபாத்திரங்களின் பொம்மைகளை வைத்து சண்டை போடுவது போல விளையாடுவது என தங்கள் பாலினத்திற்குரிய விளையாட்டுகளையே விளையாடுகின்றனர்.. இதில் மாறி விளையாடும் குழந்தைகள் தங்கள் குணத்தில் கொஞ்சம் எதிர் பாலினத்தவரின் இயல்பை கொண்டிருக்கின்றனர்..
பின் ஏதேதோ பேசியதில், ஆரம்பத்தில் பேசியதை மறந்தபடி உறங்கி விட்டனர்.. மறுநாள் காலையில் சாப்பிடும் வேளையில் மகள் தன் மடியில் இருந்த பொம்மையிடம் பேசியவாறே ஒவ்வொரு வாய் தோசை துண்டுகளையும் பொம்மையின் வாய்க்கு அருகில் கொண்டு சென்று பின் தன் வாய்க்குள் இட்டுக் கொண்டிருந்தாள் ..

-19-2-2018

2

என் பதின்பருவத்தில் என நினைக்கிறேன்... ஒரு முறை நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம்.... கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு உட்கார இடம் கிடைத்திருந்ததால் பெரிய அவஸ்தையில்லை. அதன் பின்னான நிறுத்தத்தில் என நினைக்கிறேன் , ஒரு கணவன், மனைவி மூன்று குழந்தைகள் (எட்டு வயதிற்குள் இருப்பர்) , கூட ஒரு திருமணமான பெண் (அந்த மனைவியின் தங்கை என சாயலே சொன்னது ) அப்பெண்ணுடைய கைக்குழந்தை என நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறினர் ...
பிள்ளை பெற்ற தன் தங்கையை குடும்பத்துடன் கணவன் வீட்டுக்கு விட்டு வர வந்திருக்கின்றனர் என்பது அவர்களின் செயலில் புரிந்தது.. அந்த 3 குழந்தைகளும் சித்தியின் மடியில் இருந்த கைக்குழந்தையிடம் விளையாட்டு காண்பித்து சிரித்தபடி இருந்தனர்.. பின் உறங்கி எழுந்ததும் அவர்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன் நெருங்கப்போகும் வேளையில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் முகம் கழுவி , பவுடர் , போட்டு , கொண்டு வந்திருந்த பூவையும் தலையில் சூடி என சிறு அலங்காரத்தை அமர்ந்திருந்தபடியே ஆர்வத்தோடு செய்து கொண்டார் . பிள்ளைக்கும் தண்ணீர் விட்ட டவல் மூலம் முகம் துடைத்து மையிட்டு பவுடர் பூசி தன் அக்கா பிள்ளைகளுடன் பேசியபடியே அலங்கரித்து விட்டார்.. அப்பெண்ணின் அக்காவும் முகம் கழுவி பொட்டு வைத்து , பூச்சரத்தை சிறு சிறு துண்டுகளாக்கி , தன் 3 பிள்ளைகளுடன் தானும் வைக்க , எல்லோரும் இறங்க தயாராயினர்..
கிளம்பும்போது இருந்த கூட்டம்,பல நிறுத்தங்களில் காணாமல் போயிருக்க அவர்களை , அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் சிரிப்பால் கவனித்து வந்து கொண்டிருந்த நான் , ஏதேச்சையாக அவர்கள் ( நாங்கள் இறங்க வேண்டியதற்கு முந்தைய நிறுத்தம் ) இறங்கப்போகும்போதும் கவனித்தேன்.
அவர்களை வரவேற்க அப்பெண்ணின் கணவரே வந்திருந்தார்.. மூன்று குழந்தைகளில் ஒன்றை கையில் தூக்கியவாறே தன் மனைவியை அவர் ஓரப்புன்னகையுடன் பார்த்த பார்வையும் அந்த பார்வைக்கு வெட்கப்பார்வை மூலம் பதிலளித்த அப்பெண்ணின் பார்வையும், பிரிந்திருந்த சிறு கால இடைவெளி மற்றும் வார்த்தைகளில் சொல்லவியலாத சில உணர்வுகளை பரிமாறிக்கொண்டதை கண்டேன் . அந்த பார்வைகள் தெளித்த காதல் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை..
இரு மாதங்களுக்கு முன் தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.. முன்புறம் இறங்கும் வரிசையில் இருந்து 3 -வது இருக்கையில் அமர்ந்திருந்தேன்.. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறே ரசிக்கும்படியான சில பாடலைகளை ரசித்துக் கொண்டும் ரசிக்க இயலாத பாடல்கள் ஒளிபரப்பாகும் ஜன்னல் வழியில் பார்வையோடு நினைவையும் விட்டுக் கொண்டிருந்தேன்.
பேருந்து சிங்காநல்லூர் நிறுத்தத்தில் நின்றபோது , நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணின் இதழ்கள் மெலிதான சிரிப்பையும் , விழிகள் ஒரு நேரான பார்வையையும் முன்புறம் பேருந்து இறங்கும் இடத்தைப் பார்த்து சிந்திக் கொண்டிருந்தன.. அவளின் பார்வை போன திசையை பார்த்தபோது அப்பேருந்தின் நடத்துனர் படியில் நின்றவாறே தன் பார்வைக்கணைகளையும் அப்பெண்ணின் மேல் விட்டுக்கொண்டிருந்தார்..
அப்பெண்ணிற்கு 18 -22 வயதிற்குள்தான் இருக்கும்.. மெலிதான தேகம்.. மாநிறம்... ஒவ்வொருவர் பார்வைக்கும் அழகு இது என வரையறுத்து சொல்லப்பட்ட லக்ஷணங்களுக்குள் இப்போதைக்கு இல்லாமல் இருந்தாலும் , வரும்காலத்தில் கொஞ்சம் உடல் பூசினாற்போலானாலும் லக்ஷணத்துடன் காட்சியளிக்கும் தோற்றத்துடன் இருந்தாள்..
பேருந்து கிளம்பும் வரை அப்பெண்ணையே அந்த இளம் வயது நடத்துனரும் பார்த்துக் கொண்டிருந்தார்.. காரணம் அதன் பின்னர்தான் புரிந்து கொள்ள முடிந்தது.. அந்த பெண் வழக்கமாக அப்பேருந்தில் பயணிக்கும் பெண் போல.. ஆதலால் அப்பெண் ஏறுவார் என நடத்துனர் அடிக்கடி அப்பெண்ணை பார்த்தவாறே காத்துக் கொண்டிருக்க , அப்பெண்ணோ ஏறாமல் நடத்துனரின் அவஸ்தையை ஒரு ஓரப்பார்வையுடனும், குறும்பு சிரிப்புடனும் ரசித்துக் கொண்டிருந்தாள்..
பேருந்து எடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக ஓட்டுநர் ஹாரன் ஒலிக்க விட்டவாறே நடத்துனருக்கு சிக்னல் கொடுக்க , நடத்துனருக்கோ அப்பெண் ஏறாமலிப்பது ஒரு ஏமாற்றத்தோடு , அவஸ்தையையும் கொடுத்துக் கொண்டிருந்தது.. பின் ஒருவழியாக அப்பெண் ஏறாமலேயே பேருந்து கிளம்பியது..
இதில் அப்பெண்ணின் குறும்பு தெறித்த பார்வையும்,சிரிப்பும் அவளை பேரழகியாகவே என் கண்ணுக்கு காட்டியதோடு மட்டுமல்லாமல் , என் மனதுக்குள்ளும் அவள் சிரிப்பும், பார்வையும் செல்ல வழி செய்திருந்தது.. (அப்பெண்ணின் வீட்டு ஆட்கள் மட்டும் அப்பெண்ணின் செய்கையை பார்த்திருந்தால் அவர்கள் ரத்தம் கொதித்திருக்கும் என்பது வேறு )..
ஒரு காதலனை/காதலியை (இதில் காதலிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு ) ஏங்க விட்டு வேடிக்கை பார்க்கும் சில ஆரம்ப காலத்து காதல் விளையாட்டு இது.. அதாவது ஒருவரின் காதலை ஏற்கவும் இல்லாமல் , அவர்களை விலகிப்போகவும் விடாமல் வைக்கும் காதல் தந்திரம் இது  ..
உண்மையில், காதல் உணர்வில் அழகானது பார்வை பரிமாற்றங்கள்தான்.. இது போன்ற பரஸ்பர காதல் பார்வையானாலும் சரி, ஒருவரின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பார்வையானாலும் சரி அல்லது ஒருவருக்கு ஏக்கத்தை உண்டு பண்ணி அதை ரசிக்கும் ஓரப்பார்வையானாலும் சரி , சம்பத்தப்பட்டவர்களுக்கு அதனதன் சம்பந்தப்பட்ட உணர்வுகளானாலும் இதை நேரில் பார்க்க நேர்பவர்களுக்கு (விதிவிலக்கு : மேற்சொன்னபடியே திருமணமாகாத ,சம்பத்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் காண்பது ..) நிச்சயம் அவை கவிதைகளே..

20

இரு வாரங்களுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்த தம்பி, மஸ்கிடோ பேட் வைத்து கொசுக்களை அடித்துக் கொண்டிருந்த போது, ரோஹித் சென்று அவனிடம் " மாமா, இந்த அம்மா எப்பவும் சொன்னதை செய்யறதே இல்லை, சொல்றது ஒன்னு , செய்யறது ஒன்னு" என குறை கூற , நானும் என்ன சொல்லப்போகிறானோ என ஆர்வமாக , என்னவென ரோஹித்திடம் கேட்டான் அவன் மாமா...
"என்னை எறும்பு கூட கொல்லக்கூடாதுன்னு சொல்ற அம்மா , மஸ்கிடோ பேட்டால கொசுவை மட்டும் அடிச்சு கொல்றாப்டி " என்றான்.. இதை ஏற்கனவே என்னிடமும் கேட்டிருக்கிறான்.. ஆனால் பதில் சொல்ல தெரியாத காரணத்தால் , (நம்மளை கடிக்கறதை மட்டும் அடிக்கலாம் என சொன்னால் , இந்த கொசு உங்களை கடிக்கும்னு எப்படி தெரியும் என்று கேட்பானே என்று பயம் வேறு - ஏனெனில் இது போன்ற அவனுடைய பல கேள்விகளில் ஏற்கனவே சிக்கி இருக்கிறேன் ) வேறு விஷயங்களை பேசியோ, வேறு காட்சிகளை காண வைத்தோ சாமர்த்தியமாக சமாளித்து விடுவேன்.. இந்த சாமர்த்தியத்தாலும் , வேறு வேறு விஷயங்களில் உடனே ஐக்கியமாகும் பிள்ளைகளின் மனதாலும் இதுநாள் வரை நான் தப்பித்து வந்தாலும் அவன் மனதிலிருந்த சந்தேகம் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது ..
வழக்கம்போலவே என்ன சொல்வது என தெரியாமல் வெளியில் வேலை இருப்பது போல் நான் நழுவுவதற்கு தயாராக , "அதாவது நம்மள எதெல்லாம் தொந்திரவு செய்யுதோ, அதையெல்லாம் அடிக்கணும், எறும்பு நாம மிதிச்சா மட்டும்தான் கடிக்கும், ஆனா கொசு நம்ம பிளட் குடிக்கறதுக்காக கடிக்கும் , அதனால நம்மள தொந்திரவு செய்றத அடிக்கறதுல தப்பே இல்ல " என என் தம்பி அவனுக்கு விளக்கம் சொல்ல எனக்குள் ஒரு சின்ன ஆசுவாசம் எழுந்தது...
ஆனால் அதை மைக்ரோ செகண்ட் கூட நீடிக்க விடாமல் "அப்போ என்னை .... (ரோஹித்தை விட ஐந்து மடங்கு வயதில் மூத்த ஒருவரை ) தொந்திரவு பண்ணிட்டே இருக்காப்டி , அப்போ அவங்களை நான் அடிக்கலாமா" என ரோஹித் யோசனையுடன் கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் சிரித்தபடியே "அப்படி இல்லை" என என் தம்பி அங்கிருந்து நழுவினான்...
எங்க போனாலும் முட்டும்-னு சொல்றது இதுதான் போல 
சில நல்ல பண்புகளை பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்கும் முன்னர் நாமும் அதை வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.. நம்மால் (தவிர்க்க முடியாமல் ) பின்பற்ற இயலா பழக்கங்களானால் , அவற்றை அவர்கள் மனம் அந்த நல்ல பழக்கங்களிலிருந்து விலகாதவாறு , சமாளிக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும். எதுவும் செய்ய இயலவில்லை என்றால் சொல்லிக் கொடுத்த நல்ல பழக்கத்திற்கு மதிப்பில்லாதது போலவே நமக்கும் மதிப்பிருக்காது...

- 7-2-2018

19

நேற்று வேலைக்காரன் திரைப்படம் காண சென்றிருந்தோம்.. படம் பார்க்க போகலாம் என முடிவெடுத்ததிலிருந்தே " அம்மா சிவகார்த்திகேயன் படம்தான் போகணும்" என ரோஹித் நியாகப்படுத்திக்கொண்டே இருந்தே இருந்தான்.. ("சிமகாகா" இப்போது அவன் வார்த்தை வளம் வளர்ந்து விட்டதால் வழுவாமல் "சிவகார்த்திகேயன்" ஆகி இருந்தார் ). ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ண தியேட்டர் பெயர்களை அலசும் போதும் தியேட்டர் பெயரை படத்தின் பெயர் என நினைத்து "இல்லை, சிவகார்த்திகேயன் படம்தான் போகணும்" என சொல்லிக் கொண்டே இருந்தான்..
ஆரம்பத்தில் கொஞ்சம் விவரம் தெரிந்து பார்த்த :மான் கராத்தே"விலிருந்து அவன் "சிமகாகா" விசிறி.. இடையில் படங்களின் தொடர் நினைவுகள் அவன் நினைவில் இல்லாததால் பெரிதாக சிவகார்த்திகேயன் பாடல்கள் வந்தாலும் பெரிய ஆர்ப்பரிப்புகள் இல்லாமலிருந்தன...
இரு மாதங்களுக்கு முன் மெர்சல் படம் பார்த்து வந்ததிலிருந்து விஜயின் விசிறியாகி , அதே போல வேட்டி சட்டை, நெற்றியில் குங்கும திருநீற்று பட்டை, ஐப்ரோ உதவியால் குறுந்தாடி மீசை என என்னை அவனுக்கு வரைய வைத்து , அதை படம் பிடிக்கவும் வைத்து அதே வேடத்தோடு அக்கம்பக்கம் வீடுகளுக்கும் சென்று காண்பித்து, எங்களை ஒரு வழியாக்கி விட்டிருந்தான்..
அந்த சமயம் "ஜோசப் விஜய்" பிரச்சனை வெளியில் பூதாகரமாக இருக்க எங்கள் வீட்டுக்குள்ளோ "ரோஹித் விஜய் " பிரச்சனை மெல்ல புகை விட ஆரம்பித்திருந்தது.. ஆம், "இனிமேல் என் பேர் ரோஹித் விஜய் .. அப்படிதான் என்னை கூப்பிடனும்" என ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தான்...
இந்த நிலையில்தான் நேற்று வேலைக்காரன் படம் பார்க்க சென்றிருந்தோம்.. படம் முழுவதும் முழு ஈடுபாட்டோடு , மறக்காமல் வாங்கி எல்லா தீனியையும் கொறித்துக் கொண்டே திருப்தியாக பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்ததும் "இனிமேல் என்னை சிவகார்த்திகேயன் இல்லேன்னா விஜய் அப்படீன்னுதான் கூப்பிடனும் , ரோஹித்னு கூப்பிட்டா நான் திரும்பி பார்க்க மாட்டேன்" என எங்களிடம் மாட்டும் அல்லாமல் கிறிஸ்துமஸ் சாப்பாடு கொடுக்க வந்திருந்த பக்கத்து வீட்டாரிடமும் கண்டிஷன் போட ஆரம்பித்து விட்டான்..
நிகிதாவுக்குள் அவரின் ரசிகை , இவரின் ரசிகை என்ற ஆர்ப்பரிப்பு இல்லை.. பொதுவாக பெண்கள் (குழந்தைகளாக இருக்கும்போதே ) அழகியலை மட்டுமே ரசிக்கிறார்கள்.. அப்படி அவளின் அழகியல் ரசனை , "அந்த பொண்ணு (பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் குழந்தை )போட்டிருந்த ஷூ, நல்லா இருந்தது, டிரஸ் நல்லா இருந்தது, அது போல எனக்கும் வாங்கிக்கொடு "என்பதோடு இப்போதைக்கு இருக்கிறது என்பதே எனக்கு கொஞ்சம் நிம்மதி...
உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை , அதேபோல் உன்னை விட தாழ்ந்தவரும் யாரும் இல்லை என நான் பிள்ளைகளுக்கு போதித்து வரும் வேளையில் வந்திருக்கிறது இந்த "ரசிக" நெருக்கடி...
எந்த கலைஞருக்கும், எந்த கலைக்கும் ரசிகராக இருப்பதில் தவறு இல்லைதான்.. ஏனெனில் எல்லோருமே ரசிப்புத் தன்மையின் நிழலில் ஒதுங்கி ஒதுங்கியே வாழ்ந்து வருகிறோம்.. ஆனால் ரசிகன் என்பதைத் தாண்டி தொண்டன் ஆகி விடும் அளவுக்கு ஒருவரின் ரசிப்புத் தன்மை எல்லை தாண்டக் கூடாது என்பதே என் எண்ணம்..
தொண்டரானால் , ரசிப்பவரையே கடவுளாக நினைக்கத் தோன்றும், நிஜ வாழ்க்கை, நிழல் வாழ்க்கை வேறுபாடு தெரியாது , அவரையே நம்மை ஆளவைக்க அதிகாரம் கொடுக்கத் தோன்றும்.. அப்பப்பா... ஆக ரசிகனாக நிறுத்திக் கொள்வது உத்தமம்...
இப்போது ரோஹித் ரசிகனாக இருக்கிறான்.. அவர்களை போலவே செய்யும் சில செயல்கள் இந்த வயது தாண்டினால் மாறி போகும் என்ற நினைப்பு இருக்கிறது..... ஆனால் மாறாமல் போனால்...நாளை சிவகார்த்திகேயனுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு ,தான் ரசிப்பவரிடம் ஒரு வார்த்தை பேச (ஏன் தொடக்கூட) அனுமதி இல்லாமல் அவதி அவதியாக திருப்பதி பெருமாளை ஒரு நொடி தரிசிக்கும் பக்தனை போல கேமரா கண்களுக்குள் புழுவை போல உள்வாங்கப்படும் ஒரு தொண்டனாகி விட்டால்... நினைத்தாலே தலையில் எரிமலை கொட்டியதாக நினைவு சூடாகிறது... ம்ஹூம்.. என் மகனை ரசிகன் என்ற எல்லையை தாண்ட விடவே மாட்டேன்..

- கோவை 
  26-12-2017

1

அப்போது எனக்கு 9 அல்லது 10 வயதிருக்கும்.. நாகர்கோவிலுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம்.. என் அம்மா பாட்டியின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு பிறந்திருந்த குழந்தையை பார்க்க என்னையும் தம்பியையும் அழைத்து சென்றார் .. அந்த குழந்தையின் தாய் அம்மாவுக்கு தூரத்து சொந்தம் என்பதோடு சிறு வயது தோழியும் ஆவார்..
நாங்கள் அவர்கள் வீட்டுக்கு பிள்ளையை பார்க்க சென்றபோது ஒரு 11 வயது சிறுவனும் 5 வயது சிறுமியும் (வயது பின்னால் நான் கணக்கு போட்டு கூறுவது ஆகும், அப்போது வயது அனுமானிக்க முடியாத இரு உருவங்கள் மட்டுமே என் நினைவில் இன்றும் உள்ளனர் ) Iஎங்கள் பின்னாலயே சுற்றி சுற்றி வந்தும், அம்மாவும் நானும் அவர்களின் சகோதரனை தூக்கும்போது சந்தோசமாக, குதூகலமாக எங்களை பார்த்தபடியும் இருந்தனர்..
எனக்கு சிறு பிள்ளைகள் என்றால் அப்போதே மிகவும் இஷ்டம்.. குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது என்றால் கொள்ளை பிரியம்.. பில்லியை தவற விட்டுவிடுவேனோ என்றே பயம் இருந்தாலும் தூக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் விடவே மாட்டேன்.. ஒருமுறை என் சித்தி பெண்ணை (அவளுக்கு மூன்றிலிருந்து 6 மாதத்திற்கும் உள்ளான வயதிருக்கும், எனக்கு 8 வயதிருக்கும்) நான் தூக்கி என் தாத்தா வீட்டில் தூக்கி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவள் எம்பியதால் தலையோடு உடம்பு கீழே தொங்குகிறது,, காலை மட்டும் நான் விடாமல் பிடித்திருந்தேன். அருகில் வேறு யாருமில்லை, எப்படி தூக்குவது என்று திணறியவாறே, ஒரு வழியாக அப்படியே மெதுவாக தரையில் அவளை மெதுவாக படுக்க வைத்து பின் தூக்கிக் கொண்டேன்.. அந்த நினைவு வேறு அப்போதிருந்த பதட்டத்தோடு இப்போது நினைவுக்கு வந்து போகிறது..
இந்த குழந்தை எனக்கு பயமில்லாமல் தூக்குவதற்கு ஏற்றவாறு மிகவும் எடை குறைந்திருந்தது.. சுலபமான தூக்கும் எடை என்பதால் குதூகலத்தோடு என் முகத்தை பார்த்தவாறு மேலே தூக்கி சிரிக்க அவனை சிரிக்க வைக்க முயன்று கொண்டிருந்தேன்.. கூட வந்த என் தம்பி என்னை கிண்டல் செய்ய வேண்டும் என்பது போலவே அந்த குழந்தை அப்போது ஒரு வேலை செய்தது.. ஜட்டியும் அணிவிக்காததால் நேராக என் நெஞ்சின் மீது ஈரமாக்கினான்.. அதற்கு பின் என் தம்பி காண்போரிடமெல்லாம் கொஞ்சம் கற்பனை சேர்த்து என் முகத்தில் எந்த குழந்தை ஈரம் பண்ணினான் என என்னை கிண்டல் செய்து வெறுப்பேற்றியதுதான் இப்போது நினைவில் இருக்கிறது...
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் அந்த குழந்தையில் தாயிடம் இந்த சம்பவத்தை கூறி , உங்களுக்கு நினைவிருக்கிறதா எனக் கேட்டேன்.. "இல்லை" என்றவர் "அப்போது அவன் உன் மீது ஈரம் பண்ணியபோது அருவருப்பாக இருந்ததா" எனக்கேட்டார்.. "இல்லை, சிறு குழந்தைதானே , இதில் அருவருப்பு உண்டாக என்ன இருக்கிறது ஆன்டி" எனக் கூறினேன்.. உடனே அவர், "அதனால்தான் உனக்கு உடனே பிள்ளை கிடைத்திருக்கிறது" எனக் கூறினார்..
பொதுவாக எந்த குழந்தையாவது நம் மடியில் ஈரம் பண்ணினால் உறவு விட்டுப் போகாது என்பர்.. எனக்கு அந்த வார்த்தையில் அதன் பின்னான சம்பவத்தின் மூலம் பெரிய நம்பிக்கையே வந்து விட்டது... எப்படி என சொல்லட்டுமா....
அந்த குழந்தையின் தாய்தான் என் மாமியார்.. அந்த குழந்தை என் கொழுந்தனார்.. கூட இருந்த சிறுவன்தான் என் கணவர்... இப்போது அந்த நினைவை இங்கு பதிவிடுவதற்கும் காரணம் உண்டு.. எங்களின் திருமணத்தை பற்றி யோசிக்கும்போதெல்லாம், அவ்வப்போது இந்த நினைவும் நெஞ்சில் வந்து விடும்...

தனிமை விரும்பும் மனம்

பக்கத்து பிளாட்டில் யாரோ அழைப்பு மணியை தட்டுகிறார்கள் ..
அழைப்பு மணியின் சத்தத்துக்கு கதவு திறக்கப்படாமல் இருக்க மறுபடியம் மறுபடியும் அழுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.. வந்திருப்பவர் அந்த பிளாட்டில் வசிப்போருக்கு நெருங்கியவர் என அடிக்கொருமுறை குறைந்த இடைவெளியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அழைப்பு மணி உணர்த்தியது...
வெளியில் சென்று விசாரித்து வருமளவுக்கு பழக்கமும் இல்லை, தைரியமும் இல்லை .. எங்கள் வீட்டிலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு தவிர்த்த அழைப்பு மணி அழைப்பின்போது கதவைத் திறக்கவே தயக்கம். டோர் லென்ஸின் வழி பார்வையை விட்டு அறியாத நபர்களாக இருந்தால் பெரும்பாலும் அமைதியாக நகர்ந்து விடுவதே வாடிக்கையாகி இருக்கிறது.. இதில் அடுத்த பிளாட் அழைப்புக்கு எப்படி கதவை திறப்பது..
தட்டப்பட்ட அழைப்பு மணி ஓசைகளுக்கு பதில் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவர் லிஃப்டினுள் நுழைவதையும் தானியங்கி அறிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..
பக்கத்து வீட்டுக்கு ஆள் இல்லாத போது வரும் தபால்காரர் , காஸ் டெலிவரி செய்பவர் , எங்களுக்கு அறிமுகம் இல்லாத அவர்களின் சொந்தங்கள் என எல்லோரையும் விசாரித்து, அவர்களுக்கு தகுந்த தகவல் கூறி அனுப்பி, குறிப்பிட்ட அண்டை வீட்டு நபர்கள் வீட்டுக்கு வந்ததும் தகவல் தெரிவித்த நாட்கள்தான் நினைவுக்கு வந்து போகின்றன..
அபார்ட்மெண்ட் வாழ்க்கையில், அதுவும் வேறு வேறு பாஷைகளாகக் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அருகருகே வசிக்கும்போது அண்டை வீட்டுக்காரருடன் சுமூக உறவுக்கு வழிவகை இல்லாமல், பார்த்தால் நலம் விசாரிக்குமளவுக்கோ அல்லது புன்னகையை பரிமாறி விட்டோ செல்லுமளவுக்குத்தான் அபார்ட்மெண்ட் அண்டை வீட்டு உறவு நிலை இருக்கிறது.. யாருமே (நான் உட்பட) அண்டை வீட்டினருடன் சுமூக உறவுடன் பழக்கம் கொள்ள இப்போதெல்லாம் விருப்புவதில்லையோ எனது தோன்றுகிறது.. பாதுகாப்பு என்ற உண்மை இல்லாத வார்த்தையையும் துணைக்கு அழைக்க முடியாது..
இதுவே அவர்கள் பழகியவர்களாக இருந்தால் அந்த வீட்டுக்குரியவர் வந்ததும் யாரோ வந்து விட்டு போனார்கள் என சொல்லலாம்.. ஆனால் அவர்களே நமக்கு யாரோவாகிப் போன இந்த காலத்தில் கண்டும் காணாமல் நகர சொல்கிறது சூழ்நிலை..
ஆம், உண்மைதான்,உலகம் முழுவதும் ஒரு நொடிக்குள் நட்பை தேடி, அவர்களை அறிந்து நட்பை பேண முடிகிறது .. ஆனால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் பெயர் , சில நேரங்களில் யார் வசிக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள விரும்புவதில்லை..
தனிமை விரும்பும் மனம், சில மனித மனங்களை பற்றிய பயம் என தோதாக கூற காரணங்கள் பல இருப்பினும் , ஏதோ ஒன்றை இழந்தது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.. ஆனாலும் ஒரு விந்தை அதை மீட்டுக் கொள்ள மனமும் விரும்புவதில்லை..

- ஷார்ஜா 
  31-5-2017

பயணத்துளி - 2

போக்குவரத்து பயணங்களில் அறிமுகமாகும் சிலர் , அந்த பயணம் முடிவடையும் நேரத்தில் நம்மை விட்டு , நம் நினைவை விட்டு மறைந்திருப்பர்.. ஒரு சிலரின் நினைவுகளோ அல்லது அரிதாக அவர்களோ நம் வாழ்க்கை பயணம் வரையும் கூடவே வர செய்யும்படி அவர்களின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடும்..
திருவனந்தபுரத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வந்த பயணம் அது ... பெண்ணுக்கும் இரண்டு வயது கடந்துவிட்டதால் விமானத்தில் தனி இருக்கை... அதனால் ஒரு பக்கம் இருந்த மூன்று இருக்கைகளில் நானும் பிள்ளைகளும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு பக்கவாட்டில் இருந்த வரிசையில் கடைசி இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார்.. பொதுவாக ஆண்களுக்கு ஒரு வித அசவுகரியங்களிலிருந்து ஒரு தப்புவிப்புத்தனம் எப்போதுமே இருக்கும்..
எப்போதுமே பெரும்பாலான கணவர்கள் ,மனைவி உடன் இருக்கும்போது , இது போலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தன்பக்கம் உட்காரவைத்துக் கொண்டு, அவர்களின் சில தொந்தரவுகளை சகித்துக் கொள்ள முடியாமல் கொஞ்சம் ஓரமாகவோ, வாய்ப்பு அமைந்தால் தனியாக ஒதுங்கி கொள்வர்.. அப்படிதான் அவரும்.. பிள்ளைகளை என் பொறுப்பில் விட்டு விட்டு தனியாக ஒரு சீட்டில் ஒதுங்கிக்கொண்ட நேரத்தில் கூட இந்த எண்ணம் எனக்குத் தோன்றவில்லை.. சில மணித்துளிகளில் இருவரும் ஜன்னலோர சீட்டுக்கு அடி போட ஆரம்பித்ததும் லேசான கடுப்புடன் இந்த எண்ணமும் தலை காட்ட ஆரம்பித்தது..
ஜன்னலோர பயணம் என்பதும் பலரை போல எனக்கும் அலாதி விருப்பமானது.. ஆனால் பிள்ளைகள் வந்த பிறகு அவர்களின் தேவைக்கு முக்கியத்துவமும், முதன்மைத்துவமும் கொடுக்க ஆரம்பிக்கும் மனம் வந்து விடுவதால் நம் பல ஆசைகளை ஒருவித விருப்ப/விருப்பமற்ற மனத்தோடு பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம்.. அதற்கேற்ற வகையில் அந்த இருக்கைகளின் கடைசி இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன்..
சிறிது நேரத்திலேயே சில சமாளிப்புகள் மூலம் பெண்ணை நடுவில் (அவளின் விட்டுக்கொடுத்து விடும் (சில சமயம் மட்டும்)குணத்தால் ) உட்காரவைத்து அவர்களின் இடப்பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டேன்.. சிறிது நேரத்திற்குப் பிறகு பின்பக்கம் பெற்றோருடன் உட்கார்ந்திருந்த 3 வயது போல இருக்கும் சிறுமி அவளின் செல்ல சேட்டைகளை சீட்டின் இடைவெளியில் கையை விட்டு தட்டி விடுவதில் இருந்து ஆரம்பித்தாள்..
அவற்றை என் பிள்ளைகளும் கொஞ்சம் வெட்கம் கலந்தவாறே பின்பக்கம் திரும்பியும் , என்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைத்து ஏற்றுக்கொண்டனர்..பின் எங்களின் இருக்கைக்கு மேல் தலை வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த துணியை இழுக்க ஆரம்பித்து என்னுடையதையும், பின் பெண்ணுடையதையும் கீழே தள்ளி விட்டு சத்தமாக சிரித்தாள்.. அவளின் இந்த சேட்டைகளை ஆரம்பத்தில் ரசித்துக் கொண்டிருந்த மகனுக்கு அவள் அவனின் தலைக்கு பின் இருந்த துணியையும் எடுக்க முற்படுகையில் ஒரு வித வெறுப்புடன் கைகளாலும் , தலையை பின் பக்கம் நன்றாக இறுக்கி சாய்ந்து கொண்டும் அவளை எடுக்க விடாமல் இருக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..ஆனால் இறுதியில் அந்த சிறு பெண்தான் ஜெயித்தாள்...
அந்த பெண்ணின் பெற்றோரும் அடிக்கடி அந்த பெண்ணை அதட்டியும் அந்த பெண் கேட்பதாக இல்லை.. பின் சிறிது நேரத்தில் அந்த குழந்தை முன்புறம் எங்கள் இருக்கைக்கு வர விரும்பி அழுதவாறே எங்கள் சீட்டுக்கு இடையில் வந்து விட்டாள். எங்களுக்கு தொந்தரவு எனக்கருதி அவளின் பெற்றோர் கூப்பிட்டு பார்த்தும் , மிரட்டி பார்த்தும் அங்கு செல்லவில்லை.. இங்கும் சிறு குழந்தைகள் இருப்பதால் அவள் இங்கிருக்க விரும்புகிறாள் என்பதை அறிந்து நானும் என் கணவரும் அவள் அப்பாவிடம்"கொஞ்ச நேரம் இங்கு இருக்கட்டும்" எனக் கூறியதும் அவர் சிரித்தவாறு ஆமோதித்து ,அவரின் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்..
அவள் எங்களுக்கு முன்புறம் வந்ததும் என் பிள்ளைகளும் ஒருவித வெட்கத்தோடு சந்தோசப்பட்டனர்.. அவளுக்கும் இருக்கையில் சிறு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உட்கார வைத்தேன்.. ஆனால் அவளோ என் மடியில் உட்கார விரும்பினாள்.. இதை பார்த்ததும் நிகிதாவுக்குள் கொஞ்சம் உரிமை போர் மூள ஆரம்பித்து அவள் முகம் வேறு கருக்க ஆரம்பித்தது.. "கொஞ்ச நேரம் இவங்க என் மடில இருக்கட்டும்" என்றதும் நிகிதா ஒருவாறு தலையை மட்டும் அசைத்தாள்.. பின்னர் அந்த பெண்ணை என் மடியில் உட்கார வைத்துக் கொண்டேன்..
அந்த குழந்தை மலையாளீ என்பதால் மலையாளத்தில் பேசி சிரித்தவாறே பிள்ளைகளை சீண்டியும், முன்புறம் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்களின் இருக்கைகளுக்கு இடையே கையை விட்டும், அவர்களின் தலைகளை வருடியும் தன் சேட்டையைத் தொடர்ந்தாள்.. அவர்களும் சிரித்தவாறே பின்புறம் திரும்பி திரும்பி அவளிடம் விளையாட ஆரம்பித்தனர்.. என் பிள்ளைகளும் அதை சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தனர்..
அதிலும் அவளுக்கு அலுப்பு தட்டி விடவே என் பிள்ளைகளின் கையை பிடித்து இழுப்பதாக சேட்டையத் தொடர்ந்தாள்.. இடையில் என் பிள்ளைகள் என்னை அம்மாவென கூப்பிடுவதை பார்த்ததும் அவளும் என்னை அம்மாவென கூப்பிட்டு ஏதோ மலையாளத்தில் (மலையாளம் ஓரளவுக்குத்தான் எனக்குப் புரியும்) என்னிடம் இடையிடையே பேசியவாறே இருந்தாள்...
அவள் "அம்மா" என என்னைக் கூப்பிட்ட முதல் நொடியிலிருந்து "அம்மா" என அவள் கூப்பிடும்போதெல்லாம் மனதுக்குள் ஒருவித சொல்ல இயலாத நெகிழ்ச்சி.. நம் பிள்ளைகள் முதன்முதலாக அம்மா என்று செல்லும்போதுதான் அந்த நெகிழ்ச்சி கிடைக்கும்.. ஆனால் மற்றவர்களின் குழந்தைகள் நம்மை அம்மா என கூப்பிடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுவித நெகிழ்ச்சி கிடைப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.. ஆனந்தத்தில் லேசாக கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.. என் கணவரை பார்க்கவும் அவரும் என்னைப் பார்த்து சிரித்தார்.. (அந்த நேரத்தில் அந்தக்குழந்தையுடைய அம்மாவுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று இப்போது யோசித்துப்பார்க்கையில்தான் புரிந்து கொள்ள முடிகிறது..)
அந்த பெண் ,என் பிள்ளைகளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததால் , என் பிள்ளைகள் சிரித்தவாறே அதிலிருந்து தப்பிக்க இருக்கையின் மீது எழுந்து நின்றார்கள் .. அப்போது திடீரென நிகிதாவின் சட்டையில் தைக்கப்பட்டு இருந்த ரிப்பன் பூவின் மீது ஈர்க்கப்பட்டோ என்னவோ , அக்குழந்தை அதை இழுக்க, அந்த இழுப்பில் அது பிய்ந்து தொங்கவும் நிகிதா ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்..
தங்கை அழ ஆரம்பித்ததும் ரோகித்தின் அண்ணன் மனம் விழித்துக் கொண்டது.. "இது பேட் கேர்ள் , இந்த பேட் கேர்ள் -ஐ அவங்க அம்மாகிட்ட விடுங்க" என கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.. நிகிதா அழுததும் அவளின் அப்பா அவளை தன்னிடம் கூப்பிடவே அங்கு சென்று விம்மியவாறே கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்..
அந்த பெண்ணின் அப்பா திரும்ப எங்கள் சீட்டுக்கு வந்து அப்பெண்ணை இழுக்க முயற்சிக்க வரமாட்டேன் என அம்மா, அம்மா என்றவாறே அவள் என் மீது சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் ..
"ஒண்ணுமில்ல, கொஞ்ச நேரம் இருக்கட்டும்" என நானும் என் கணவரும் அவள் அப்பாவிடம் கூறியதும் அவர் திரும்ப தன் இருக்கையில் அரை மனதோடு போய் உட்கார்ந்து கொண்டார்.. இங்கு என் மகனோ "அவங்க அப்பாகிட்ட அவளை விடும்மா , இது பேட் கேர்ள்" எனக் கத்திக் கொண்டிருந்தான்..
"அப்படி சொல்லக்கூடாது தங்கம் , சின்ன பொண்ணுதானே , அதான் தெரியாம இழுத்துட்டா" என நான் அவனை சமாதானப்படுத்த முயலும்போது, "சின்ன பொண்ணா, நிகிதாவோட சட்டையை கிழிச்சு அவளை அழ வச்சுருக்கா , நிகிதாவை பாருங்க, எப்படி அழறான்னு , நீங்க இந்த கேர்ள்-ஐ வச்சுட்டு இருக்கீங்க, அங்க விடுங்க" என தன் கத்தலைத் தொடர்ந்தான்.. அந்தக் குழந்தையோ எதுவும் சொல்லாமல் என் மீது சாய்ந்து கொண்டிருந்தது.. மகனிடம் என் சமாளிப்புகள் வேலை செய்யாததை பார்த்துக் கொண்டிருந்த என் கணவர், அவனை அதட்டியதும் பேசாமல் முகத்தை தூக்கி வைக்கிக் கொண்டு அமர்ந்து விட்டான்..
அந்தக் குழந்தையோ அம்மா, அம்மா என்று கூறிக்கொண்டிருந்தவாறே என் மீது சாய்ந்து இருந்தாள்.. ஏசி-யும் போடப்பட்டிருந்ததால் அந்தக் குழந்தைக்கும் சேர்த்து சால்வை போர்த்தியவாறே சிறிது நேரம் வைத்திருந்தேன்.. அந்த குழந்தை கை, கால் , கழுத்து என எல்லாவற்றிலும் தங்கத்தை அணிந்திருந்ததால் சிறு பதட்டம் வேறு எனக்கு.. ஏதேனும் களைந்து விட்டால் நம்மை தப்பாக நினைப்பார்களென்ற பயம் மற்றும் அவர்களுக்கும் பிள்ளையை நகைகளுடன் அங்கு கொடுத்திருக்கிறோம் என்ற தவிப்பு வேறு இருக்குமோ என்ற எண்ணம் என எல்லாம் இருந்தாலும் அந்த குழந்தை என் கழுத்தை சுற்றி பிடித்திருந்த இறுக்கமான பிடிப்பு , அவளுக்கு வசதியாக அவளை சேர்த்து போர்த்தியிருக்க வேண்டும் என அதை செய்ய வைத்தது..
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து , எனக்கு சிரமம் இருக்கும் எனக்கருதியோ என்னவோ , அவளை அவள் அம்மா "இங்கு வந்துட்டு போவேன்" என எதையோ காண்பித்துக் கூப்பிட , திரும்ப இங்க விடணும் என சொல்லியவாறே சென்றவளை, பின் அவர்கள் பிடித்து வைத்ததும் அழ ஆரம்பித்து விட்டாள். அழுவதை பொறுக்க மாட்டாமல் திரும்ப கூப்பிட மனம் ஏங்கியும் அவள் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு மனதை அடக்கவே ஒருவித பதட்ட மனதோடவே அவள் அழுகை முடியும் வரை இருந்தேன்.. பின் அப்படியே தூங்கி விட்டாள் போல..
காலையில் ஷார்ஜாவில் Flight இறங்கியதும் , என் Bag-ல் வாட்டர் பாட்டில் வைக்க பின்புறம் திரும்பியபோது அச்சிறு பெண்ணின் பெற்றோர் என்னை பார்த்துக்கொண்டிருந்ததையும், அக்குழந்தை அவர்கள் அவர்கள் மடியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததையும் உணர முடிந்தது.. ஆனால் நான் நேரடியாக அவர்களை பார்க்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. ஆனால் மனது அக்குழந்தையை சுற்றியபடியே இருந்தது.. கொஞ்சம் கூட்டம் குறைந்ததும் எழுந்திருக்கலாம் எனக் கருதி உட்கார்ந்திருந்தனர்..
பின் ஏர்போர்ட்-க்குள் நுழைந்ததும் அவர்களையும், அந்த சிறு பெண்ணின் முகத்தையும் பார்த்திருக்கலாம் என மனது அடிக்கத் தொடங்கவே திரும்பி பார்த்தேன்.. உறங்கிக்கொண்டிருந்த பிள்ளையை தோளில் சாய்த்தவாறு அந்த கணவர் தன் மனைவியோடு வந்து கொண்டிருந்தார்..ஆனால் செக்கிங் எல்லாம் இருந்ததால் திரும்ப அவர்களை அந்த இடத்தில் என்னால் காண முடியவில்லை..
அக்குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒரு புன்னகையாவது சிந்தி விட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிக்கொண்டே இருந்தது, இன்னும் இருக்கிறது.. ஆனாலும் அக்குழந்தையின் முகம் இன்னும் என் மனதில் இருந்து முழுமையாக மறையவில்லை..
இப்போதும் சில நேரங்களில் மகன் "அன்னைக்கு நிகிதா டிரஸ்-ஐ கிழிச்ச கேர்ள்-ஐ மடில வச்சு இருந்தீங்க ,ஆனா அழுதுட்டு இருந்த நிகிதாவையும், என்னையும் மடில உட்கார விடல, அது பேட் கேர்ள் , ஆனா அந்த கேர்ள்-ஐ மட்டும்தான் உங்களுக்கு பிடிக்கும்" என குத்திக் காட்டுவான்..
சிரித்தவாறே சொல்வேன் "அந்த கேர்ள்-ஐயும் பிடிக்கும்" என....

-ஷார்ஜா 
  17-5-2017

18

பொய்களையும் ரசித்து சிரிக்க முடியுமென்றால் அது , விபரமறியா பிள்ளைகள் முதல் முறையாக சொல்லும் கற்பனை கலந்த பொய்களாக மட்டுமே இருக்கும்.. அதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவை பொய்களாக தெரியாமல் இவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்ற அவர்களின் அனுமானங்களாகவும் இருக்கும்..
இரு பிள்ளைகளுக்கும் அவர்கள் பிறந்தபிறகு அங்கிருந்த , நடந்த சூழ்நிலைகளை கதைகளாகக் கூறியதுண்டு.. ஆர்வமாகக் கேட்பர்.. இரு பிரசவமும் சிசேரியன் என்பதால் சில சமயங்கள் முதுகு வலியால் அவதிப்படும் போதும், "நீங்கள் பிறக்கும்போது முதுகில் போட்ட ஊசியால்தான் அம்மாவுக்கு முதுகில் வலி" என்றும் கூறி இருக்கிறேன்.. அதே போல , பெண்ணிடம் , நீ பிறந்தவுடன் சிறிது நேரம் அழவில்லை , நீ அழலையேன்னு டாக்டர்கிட்ட கேட்டேன், பின் அவர் உன் முதுகைத் தட்டியதும்தான் நீ அழுதாய் ,அப்போதுதான் உன் குரலை முதல் முறை கேட்டேன் "என்றும் கூறி இருக்கிறேன்..
என் கதை சிசேரியன் என்பதால், எல்லோருக்கும் பிள்ளைகளை ஆபரேஷன் செய்துதான் எடுப்பார்கள் என்பதுதான் இப்போது வரை அவர்களது எண்ணம்..
ஒருநாள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த மகனிடம் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை கிண்டலாகக் கூறியதும் , சிணுங்கிக்கொண்டே கோபத்தில் என் முதுகில் லேசாகத் கைகளைக் கொண்டு குத்தினான்.. உடனே, :பார்த்தியா, அம்மாவுக்கு ஏற்கனவே முதுகுல ஊசி போட்ட இடத்துல வலி இருக்குன்னு சொல்லி இருக்கேன் , திரும்ப நீ அங்கேயே அடிக்கற இல்ல" , என பொய்க்கோபத்துடன் சொல்ல , "அம்மாக்கு அங்க ஒன்னும் ஊசி போடல , நான்தான் ஊசி போடும்போது உங்க வயித்துல இருந்தேனே , எனக்குத் தெரியும் , நான் ஊசி போட்ட இடத்துல உங்களை அடிக்கலை" எனக் கூறினான்..
அதைக்கேட்டதும் ரசித்தவாறு சிரிக்கத் தொடங்கினேன் , உடனே இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் சமயலறைக்குள் வந்து " அம்மா , நான் பிறக்கும்போது உங்களுக்கு ஊசி போட்ட இடமும் எனக்குத் தெரியும்மா , அந்த ஊசி அப்படியே என் கால்ல பட்டுச்சு, ஆனா எனக்கு வலிக்கவே இல்லை, அதான் நான் பிறக்கும்போது அழவே இல்லை" என நடந்ததை ஆர்வமாக விவரிப்பவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவே மேற்கொண்டு வந்த சிரிப்பையும் சிறிது நேரம் நிறுத்த முடியவில்லை .. திரும்ப நினைத்து நினைத்துப் பார்த்து சிரித்ததோடு அல்லாமல் அம்மாவிடமும், கணவரிடமும் சொல்லி அவர்களையும் சிரிக்க வைத்தேன்..
உண்மையில் கவிதைகளில் நடமாடும் பொய்களை விட , சூது அறியா மழலைகளின் கற்பனை பொய்கள்தான் கொள்ளை அழகு..

- ஷார்ஜா 
   11-5-2017