ஒரு பெண்ணுக்கு பல அறிவுரைகளும், சில அச்சுறுத்தல்களும், சில தெம்பளிக்கும் வார்த்தைகளும் மாறி மாறி வழங்கப்படுவது அவர்கள் ஒரு (முதல்)கருவை தாங்குவதற்கும் , அதை இந்த பூமியில் இறக்கி வைப்பதற்குமான இடைப்பட்ட காலமாகவே இருக்கும்.. இது என் முதல் குழந்தையை சுமந்து கொண்டிருந்தபோது நான் சந்தித்த சில நிகழ்வுகள்....
கருவுண்டாகியிருக்கிறேன் என தெரிந்தவுடன் ஒரு புது பரவசம் என்னுள் பிரவாகிக்க ஆரம்பித்திருந்தது, கூடவே கருவுருதலின் முடிவான பிரசவ நிகழ்வை நினைத்து உதறலும் எடுக்க ஆரம்பித்திருந்தது... ஏனெனில் சினிமாவில் காட்டப்படும் பிரசவ காட்சிகளாலும், ஒரு பெண் தன் பிரசவ நேரத்தில் 57 டெல் (அளவு) வரை வலியை தாங்குகிறாள், இது ஒரு சேர 20 எலும்புகள் ஒன்று சேர உடையும்போது ஏற்படும் வலிக்கு சமம் என நான் படித்ததுமே காரணம்.... இது போக ஏற்கனவே பிள்ளைகளை பெற்றிருந்த சிலர் அவர்களது அனுபவங்களாக கூறியிருந்த வார்த்தைகள்.. இரு தொடைகளில் ஏற்படும் வலியும் , இடுப்பு வலியும் சேர்ந்து வாட்டி எடுக்கும் என ஒரு தோழி கூறிய அவளின் அனுபவம்… பிரசவ வலியை பற்றி எங்கேனும் படிக்க நேர்கிற போதும் என் உடலின் உள்ள சக்தி அனைத்தும் வடிந்து விடுவது போல் உணர்ந்திருக்கிறேன், அப்போது உடலில் ஒரு வித சொல்ல இயலாத உணர்வு (வெறுமை) ஆக்கிரமித்தது போல் இருக்கும்..... அது மட்டுமல்லாமல் எனக்கு சிறு வயதில் இருந்தே ஊசி போட்டுக் கொள்வதென்றால் ரொம்ப அலர்ஜி.. ஒரு முறை காய்ச்சலுக்காக ஒரு பெண் மருத்துவரிடம் சென்றபோது ஊசி போட்டால் உடனே குணமாகி விடும் என்று கூற அடம் பிடித்து மாத்திரையே கொடுங்கள் என கேட்டு வாங்கி வந்தேன்.. அப்போது அவர் என் தாயிடம், இந்த ஊசிக்கே இவ்வளவு பயப்படறா, இனி கல்யாணம் ஆகி பிரசவ வலியெல்லாம் வந்தா எப்படி பொறுத்துக்குவாளோ தெரியலையே என கூறியபோது எனக்குள் இருந்த பிரசவ வலியை பற்றிய பயம் அடர்த்தியாகி இருந்தது..
ஆயினும் இவை அனைத்தையும் விட ஒரு உயிர் என்னுள் வளர போகும் சந்தோசம் மேலாக இருந்ததால் அந்த எண்ணம்(பயம்) பிரசவ நாள் தென்படும் வரை அதிகமாக தென்படவில்லை.. அதுவும் அந்த உயிர் பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னை போலவே என் கணவரிடமும், அவர் குடும்பத்தாரிடமும் அதிகமிருந்தது.. ஏனெனில் அவர் அம்மா குடும்பத்திலும், அப்பா குடும்பத்திலும் யாருக்கும் பெண் குழந்தை இல்லை.. அவர்களுக்கு இருந்த பெண் குழந்தையும் (என் கணவரின் தங்கை) சிறு வயதிலேயே தவறி விட்டதால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்ற ஆசை அதிகமிருந்தது....
இந்நாட்களில் மற்றவர்களை போல வாந்தி, தலை சுற்றல் எல்லாம் வந்து என்னை வாட்டியதில்லை..
கரு வளர வளர என்னை சுற்றியிருப்பவர்களின் அறிவுரைகளின் எண்ணிக்கையும் , அனுபவங்களின் எண்ணிக்கையும் , என்ன குழந்தை என அவர்களின் யூகங்களின் எண்ணிக்கையும் சேர்ந்தே வளர ஆரம்பித்தன.. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பை போக்கும் விதமாகவே அவர்களின் யூகங்கள் இருந்தன..முகம் டல்லா இருக்கு, அதனால பையன்தான்.. வலது கை ஊன்றி எந்திரிக்கற, அதனால பையன்தான்... இடப்பக்கம் துடிப்பிருந்தால் பையன்தான்.., இப்படி இன்னும் பல....இப்படி சொல்லும்போதெல்லாம் சோர்ந்து போய் விடுவேன்.. ஆகையால் அதற்கு நேர்மாறாக எழும்போது கவனமுடன் இடது கையை ஊன்றி எழுந்திருப்பேன்..ஒரு முறை பக்கத்து வீட்டில் பேச போயிருக்கையில் உட்கார்ந்து விட்டு எழும் போது வலது கையை என்னை அறியாமலேயே ஊன்றி எழுந்திருக்கிறேன்.. உடனே அவர் , பையன்தான்னு சொல்ல தயங்கி (ஏனெனில் எனக்கு பெண் குழந்தை மீதுதான் விருப்பம் என அவர் அறிந்திருந்தார்..) சவி , உனக்கு என்ன குழந்தை பிறக்க போகுதுன்னு எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு சொன்னாங்க.. உடனே நான் கீழே உட்கார்ந்து விட்டு திரும்ப இடது கையை ஊன்றி எழுந்து , அக்கா இப்போ சொல்லுங்க பொண்ணுதானே அப்படின்னதும் சிரிச்சுட்டு அவங்க ஒன்னும் சொல்லல..அந்த அளவுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.. ஒரு முறை பிரதான அலுவலக வாயிலின் அருகில் சென்ற போது ஒருவர் எதிர்ப்பட்டு (என் அலுவலக நண்பருக்கு அவர்தான் பெண் பார்த்துக் கொடுக்க ஜாதகங்களை எடுத்துக் கொண்டு வருவார்.. அப்போது அவரை நான் பார்த்ததுண்டு..)உனக்கு பையன்தான், மேற்கொண்டு ஜோசியம் பார்க்கனுமான்னு கேட்டார்.. வேண்டாங்கன்னு சொல்லி கடந்து உள்ள போயிட்டேன்.. ஏதேனும் தவறாக சொன்னால், அதை எளிதாக கடந்து போகும் மனம் என்னிடம் இல்லை என்பதும் ஒரு காரணம்..அதே போல் என்னுடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் என்னை பார்த்ததும், அம்மா பையனை பெத்துட்டு நல்லா இரும்மா என சொல்லவும் ஏன் பாய், நான் பொண்ணு வேணும்னு ஆசை படறேன், நீங்க பையன் பிறக்கட்டும்னு சொல்றீங்களேன்னு சொன்னதும், சிரிச்சுட்டே உனக்கு பையன்தான் பிறக்கும் என கூறி விட்டு சென்றார்..
இப்படிப்பட்ட யூகங்களுக்கு மேலாக அறிவுரைகளும் வந்து கொண்டே இருந்தன.. காலை நீட்டித்தான் உட்காரணும், சூடா எதுவும் சாப்பிட கூடாது, ஒருக்களிச்சுதான் படுக்கணும், சுகப்பிரசவம் ஆக குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கணும், நடைபயிற்சி மேற்கொள்ளணும்... இப்படி பல.. இதுவரை என் வாழ்நாளில் அதிகமாக நடந்தது என் முதல் குழந்தையை சுமந்த போதுதான்..ஏனென்றால் அப்போது எனக்கு சைட் வொர்க்தான்..இரு சக்கர வாகனமும் ஓட்டி பழகாததால் பக்கம் பக்கம் உள்ள சைட்களுக்கு நடராஜா சர்வீஸ்தான்... வ ஊ சி பார்க் நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து வேலை நடக்கும் இடங்களுக்கு சென்ற பார்க்க நடந்தால் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் கடந்து பட்டேல் சாலையையும் கடந்து வட கோவை மேம்பாலம் வரை செல்ல வேண்டியிருக்கும்.. அதற்குள் அதற்கு இடைப்பட்ட தூரத்தில் கான்கிரீட் போட போகிறோம் என தகவல் வந்தால் திரும்ப கடந்து வந்த இடத்துக்கே செல்ல வேண்டியிருக்கும்.. அதே போல் ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்டில் இறங்கினால் ஒரு நாளைக்கு 3 முறையாவது ஹவுசிங் யூனிட் முழுவதும் சுற்ற வேண்டி இருக்கும்.. இடையில் மதிய உணவு முடிப்பதற்காக ராமர் கோவிலின் அருகிலுள்ள ஆரம்ப பள்ளிக்கு செல்வேன்.. ரேஸ்கோர்ஸ் என்றால் அங்கு இருக்கும் ஒரு வீட்டுக்கு செல்வேன்..இதனால் அப்பள்ளியின் வாட்ச் மேன் தாத்தா முதல் மற்ற ஊழியர்கள் , அப்பள்ளியின் ஆசிரியர்கள், சில குழந்தைகள், ரேஸ்கோர்சில் ஒரு குடும்பம் என நல்ல பரிச்சயமான பழக்கம் கிடைத்தது.. குழந்தை பிறந்த பிறகு அவர்களை சென்று ஒரு முறை பார்த்து விட்டு வர வேண்டும் என எண்ணி இருந்தேன்.. ஆனால் என்னை சுற்றி பல பணிகளும், கடமைகளும் இருந்ததால் இதுவரை நடக்கவில்லை.. ட்ராக் மாறுது இல்லையா? சரி விஷயத்துக்கு வர்றேன்..இதுவே எனக்கு மிகப்பெரிய நடை பயிற்சியாகவும் இருந்தது.. 8 மாதங்கள் வரை இது தொடரவும் செய்தது..
ஒவ்வொரு வார முடிவிலும், கருவின் வாரத்தை ஒப்பிட்டு இணையத்தில் தேடி, கரு வளர்ச்சியினை பார்த்து சந்தோஷப்படுவேன்.. பிரசவத்திற்கு அவர்கள் குறித்து கொடுத்த தேதியை கணக்கில் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பேன்..
நல்ல இசை குழந்தைக்கு நல்லது என கேள்வி பட்டதிலிருந்து பேருந்து பயணங்களின் போதும் , இரவு உறங்க ஆரம்பிக்கும் பொழுதும் MP 3 பிளேயர் என் வசமானது...அதிலும் பெரும்பாலாக கிருஷ்ண கானம் மட்டுமே அதில் இசைத்துக் கொண்டிருந்தது.. கணவரின் சொல்லுக்கிணங்க என் அறை முழுவதும் குழந்தை படங்கள் வாங்கி மாட்டிக் கொண்டேன்.. காலையில் கண் விழிக்கும்போது ஒவ்வொரு குழந்தையின் (!!!!) முகத்தில் விழித்துக் கொள்வேன்..
ஆரம்பத்தில் ரசித்த குழந்தையின் அசைவுகள் சில தினங்களில் தூங்குவதற்கு கூட சிரமம் கொடுக்க, அது ஒரு அசவுகரியம் போல் உணர ஆரம்பித்தேன்.. ஆனால் ஒரு நாள் எந்த அசைவையும் உணராததால் பயந்து போன போது, என் தந்தை இதற்காக தனியாகவும் கடவுளிடம் நேர்ந்து கொண்ட சம்பவமும் நடந்தது..
எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த கிளைமாக்ஸ் நாளும் வந்தது.. மருத்துவர் கொடுத்திருந்த தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக செக்-அப் செய்வதற்காக மருத்துவமனை சென்றோம்.. வீட்டிலிருந்து செல்ல குறைந்தது அரை மணி நேரம் ஆகும்.. டிராபிக்-காக இருந்தால் கூடுதல் நேரம் எடுக்கும்.. அதற்கு முன்பு இன்னொரு விஷயத்தை சொல்ல வேண்டி இருக்கிறது..
முதலில் நான் கருத்தரித்த போது ஒரு மருத்துவரிடம் காண்பிக்க ஆரம்பித்து இருந்தோம்.. நல்ல சிகிச்சை, தேவையான அறிவுரை அனைத்தையும் சிறப்பாக கொடுத்தார்.. ஆனால் எங்களுக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்பிருந்தும், அனாவசியமாக அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுத்ததாகவும், எல்லோருக்கும் அவ்வாறே செய்வதாகவும் கூறியதால் (இது உண்மையல்ல என்பதனை பின்புதான் தெரிந்து கொண்டோம்..) நாங்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தபோது (இன்னும் இருவரும் இதே கருத்து கூறி இருந்ததால்)பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்னொரு மருத்துவமனையை கூறி அங்கு நடந்த 5, 6 பிரசவங்களை கூறி (அதில் ஒன்று மட்டுமே அறுவை சிகிச்சை) தேவை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்வார்கள் என கூறி அங்கு போக தூண்டினார்கள்..(இந்நிலை பெரும்பாலானவர்களுக்கு நடந்திருக்கும் என நினைக்கிறேன்..நாம் ஒன்று தேர்வு செய்தால் அதில் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்க கூடாது என பாடம் கிடைத்ததும் அப்போதுதான்..)என் அலுவலகத்துக்கும் மிக அருகில் என்பதால் பரிசோதனைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் என எண்ணி நான்கு மாதங்களுக்கு பிறகு அங்கு சிகிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.... ஆனால் அங்கு செல்வது என் தந்தைக்கு பிடிக்கவில்லை.. காரணம் அவர் நண்பரின் மருமகளை அங்கு அனுமதித்திருந்த போது பிரசவ நேரத்தில் கொஞ்சம் சிக்கல் இருந்ததாகவும், கடைசி நேரத்தில் ஸ்கானிங் மிஷின் அங்கு இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னதாகவும், அங்கு போய் பரிசோதித்து பார்த்த போது குழந்தை இறந்திருந்தது தெரிந்ததாகவும் கூறினார்...(அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு வரை குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என இந்த மருத்துவமனை மருத்துவர் கூறி இருந்தாராம்..) ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க அங்கு கருவிகள் இல்லை என கூறி மறுத்தார்.. எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கே (எனக்கு கடைசியில் பிரசவம் ஆன மருத்துவமனை) செல்லலாம் என கூறினார்.. ஆனால் அதற்குள் நாங்கள் அங்கு சிகிச்சை எடுக்க ஆரம்பித்து இரு வாரங்கள் ஆகி இருந்தது.. அதற்குள் இரு மருத்துவர்களிடம் காண்பித்தாகி விட்டது.. இனி மாற்ற வேண்டாம் (ஏனெனில் ஒரு மருத்துவமனைக்கு புதிதாக செல்லும்போது ஆரம்பத்தில் இருந்து எல்லா பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும் என்ற அலுப்பும் ஒரு காரணம்..) என நினைத்து அங்கே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தோம்..
மருத்துவர் கொடுத்திருந்த தேதிக்கு(9) 3 நாட்கள் முன்னதாக பரிசோதனைக்கு சென்றிருந்தோம்.. டிராபிக்கில் மாட்டிக் கொண்டதால் அங்கு செல்லும்போது பனிரெண்டே கால் மணி ஆகி விட்டது…. 10-லிருந்து பனிரெண்டு வரைதான் வெளிப்புற நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்களாம்..பின்பு மாலை நான்கு மணிக்குதான் திரும்ப பார்வை நேரம்.. இது அந்த நாளில்தான் எங்களுக்கே தெரிந்தது..ஏனெனில் முதலில் நாங்கள் செக் அப் செல்லும்போது 10 மணிக்கு வர சொல்லி இருக்கிறார்கள்.. இது வரைதான் பார்வை நேரம் என சொல்லியது இல்லை.. அது போல் அங்கு எந்த அறிவிப்பு பலகையும் வைத்ததில்லை.. நாங்களும் 10 மணி என்ற போது பத்தரைக்குள் அதுவரை சென்றிருக்கிறோம்..ஆனால் அன்று கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறோம் என கூறி, மறுத்தவர் அங்கு இருந்தும் , டோக்கன் கொடுக்கும் பெண் எங்களை மருத்துவரை பார்க்க அனுமதிக்கவில்லை.. குறித்த நாளுக்கு மூன்று நாட்கள்தான் இருக்கின்றன, இனி எப்போது வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என கூறியும், மறுத்தவர் , அன்று மாலை நான்கு மணிக்கு திரும்ப பார்வை நேரம், அப்போது வாருங்கள் , இல்லை எனில் 8-ம் தேதி (கடந்த முறை பரிசோதனைக்கு போன போது மருத்தவர் 8-ம் தேதி அட்மிட் ஆகி விடுங்கள், அதற்கு முன் 6-ம் தேதி பரிசோதனைக்கு வந்து விடுங்கள் என கூறி இருந்தார்.. அதையும் அந்த பெண்ணிடம் கூறி இருந்தோம்..) இங்கு வந்து அட்மிட் ஆகி விடுங்கள் என கூறினார்.. ஆனால் அன்று காலையில் இருந்தே எனக்கு நடப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்ததாலும், திரும்ப வெயிலில் வீட்டுக்கு சென்று வருவது (இப்போது தூரம் எனக்கு கடினமாக தெரிந்தது)கடினம் என எடுத்துக் கூறியும் எங்களை மருத்துவரை காண அனுமதிக்கவில்லை.. இதனால் என் தந்தை மிக கடுப்பில் இருந்தார்.
என்னை வீட்டில் விட்டு விட்டு , அவர் கூறி இருந்த எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள மருத்துவ மனையில் கடைசி நேரம் ஏற்றுக்கொள்வார்களா என விசாரித்து வருவதற்கு என் பெற்றோர் சென்றனர்.. வீட்டில் இருந்த போது , நடக்க மிகவும் சிரமப்படும் நிலைக்கு வந்துவிட்டேன்.. என் உடலில் சில மாறுதல்களையும் உணர்ந்தேன்.. அந்த நேரம் என் அம்மா எனக்கு போன் செய்து 6 மணிக்கு பரிசோதனைக்கு வர சொல்லி இருக்காங்க, உனக்கு அப்போ வந்தா போதுமா, இப்ப முடியலேன்னா இப்பவே வண்டி கூட்டிட்டு வரவா என கேட்டார்கள்.. வலி எதுவும் இல்லாததால் 6 மணிக்கே போகலாம் என கூறினேன்.. என் அப்பாவுக்கு வேறு வேலை இருந்ததால் 6 மணிக்கு வண்டி கூட்டிட்டு வர்றேன் என என் அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.. அப்போதே மணி 4 ஆகி இருந்தது.. நேரம் ஆக ஆக எனக்கு உள்மனது ஏதோ சொல்ல, நேரா போய் அட்மிட் ஆகிடுவோம், இனி என்னால் அலைய முடியாது என என் அம்மாவிடம் கூறினேன்.. உடனே என் அம்மாவும் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.. வெளிநாட்டில் இருந்த என் கணவரிடமும், ஊரில் இருந்த என் மாமியாரிடமும் அட்மிட் ஆக போவதை போனில் சொல்லும்போதே ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. பயப்படாதே என என் கணவர் கூறிய வார்த்தையோடும், சுக பிரசவம் மூலம் குழந்தை பிறந்தாதான் பெண்ண்களுக்கு நல்லது, அறுவை சிகிச்சை-னா பின்னாடி கொஞ்சம் பிரச்சனைகள் தொடர்ந்துட்டே இருக்கும்.. அதனால சுக பிரசவம் ஆகணும்னு கடவுளை வேண்டிக்கோ, வலி வந்துதுன்னா மூச்சை கீழே இறக்கி விடு, அப்போதான் குழந்தை சீக்கிரம் வெளிய வரும், ஒரு நாள் வலி பொறுத்துட்டா ஆயுசு வரை நல்லா இருக்கலாம் என என் மாமியார் கூறிய வார்த்தைகளோடும் கிளம்புவதற்கு தயாரானேன்.. 6 மணி நெருங்கும் வேளையில் அடி வயிற்றில் சுருக்கி பிடித்தது போல் வலி..சில நொடிகள் மட்டுமே.. என் அம்மாவிடம் கூறியபோது உடனே சீரக தண்ணீர் தயார் செய்ய சென்றார்கள்.. அது தயாராகி கொண்டிருக்கும் போது அடுத்த வலி.. பொய் வலி என்றால் சீரக தண்ணீர் குடித்தால் நிற்கும் என கூறுவார்கள்..ஆனால் எனக்கு அதன் பின்னும் ஒரு வலி.. இந்த வேளையில் வண்டியை கூட்டி கொண்டு வருகிறேன் என சென்ற அப்பாவுக்கு . அந்த நேரம் டாக்ஸி கிடைக்காததால், செக்-அப் தானே என்று கிடைத்த ஆட்டோவுடன் வந்து நின்றார்கள்.. எனக்கு வலி என்றதும் அப்பா பயந்து விட்டார்.. அம்மாவும் பயமாக இருக்கிறதென்று பக்கத்து வீட்டிலுள்ளவரை துணைக்கு அழைத்தார்..
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்திருந்த நேரம் , அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஆட்டோவை சூழ்ந்து தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..ஆட்டோ கிளம்புவதற்கு முன் ஒரு வலி.. கண்ணீர் கோர்த்துக் கொண்டு நின்றதை பார்த்த பின் வீட்டில் உள்ள ஒரு அக்கா, பிரசவத்தை நினச்சு பயந்துட்டா போல என கூறிக் கொண்டு இருந்தார்.. அவர்களுக்கு வலி ஆரம்பித்து இருக்கிறதென தெரியாது.. ஏன், நானே அது பிரசவ வலி என அறியவில்லை.. 5 நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்று விடலாம்.. ஆட்டோவில் செல்லும்போது ஒரு முறை வலி.. வலி ஏற்படும்போது கெட்டியாக பிடித்துக் கொண்ட பக்கத்து வீட்டு அக்காவின் கைதான் மருத்துவமனை பிரசவ அறைக்குள் செல்லும் வரை வலி பொறுத்துக் கொள்ள கை கொடுத்தது..ஆட்டோ விட்டு இறங்கியதும் ஒரு முறை வலி.. வழக்கமாக அந்த தொலைவுக்கு மற்ற ஆட்டோக்காரர்கள் கேட்பது ரூபாய் 40 மட்டுமே.. ஆனால் இந்த ஆட்டோக்காரர் 85 ரூபாய் கேட்ட போது, பிரசவத்துக்க ஆட்டோ இலவசம் என்ற வரிதான் என் நினைவுக்கு வந்தது.. சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.. என் நிலை இப்படி இருந்ததால் என் தாயும் எதுவும் சொல்லாமல் கொடுத்து அனுப்பினார்..
மருத்துவமனை வராண்டாவில் உள்ள இருக்கையில் என்னை அமர்த்தி விட்டு ரிசெப்சனில் என் விவரங்களை கூறி கொண்டு இருந்தார் என் அம்மா.... டாக்டரிடம் அனுப்புகிறோம் காத்திருங்கள் என கூறினார்.. ஆனால் அப்போது என் முகத்தில் தெரிந்த வலியின் ரேகையால், என்னை கடந்து சென்ற நர்ஸ் ஒருவர் உடனே என்னை அறைக்கு அழைத்து பிரசவ அறைக்குள் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை செய்தார்.. பிரசவ அறையில் நுழைந்ததும் உடனே மருத்துவரும் வந்து விட்டார்..அப்போது வலியின் இடைவெளி மிகவும் குறுக ஆரம்பித்து இருந்தது.. குழந்தையின் நிலையை அறிய மருத்துவர் பரிசோதனை செய்யும்போது, உடனே என்னம்மா இது , முதல்லையே வந்து இருக்கணும் இல்லையா என கூறினார்.. உடனே பயந்து போன நான் என்ன டாக்டர் என கேட்கவும், என்னிடம் கூறினால் பயப்பட்டுவிடுவேன் என கருதி வெளியில் நின்ற என் தாயிடம் , இது பிரசவ வலிதான்.. ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பேதி போய் விட்டது, (Meconium Stained Baby) வலி இருப்பதால் முடிந்த அளவு நார்மல் டெலிவரி பண்ண பார்க்கிறோம்.. ஆனால் ரொம்ப நேரம் பொறுத்தால் இது சிக்கலாகும் என கூறி விட, என் தாய்க்கு ஏற்கனவே இருந்த பயமும், பதட்டமும் அதிகரித்து இருக்கிறது.. இங்கு நான் பொறுக்க முடியாத வலியில் கத்திக் கொண்டிருந்தேன்.. வலி வரும்போதெல்லாம் என் அத்தை கூறியது போல் மூச்சை கீழே விட்டுக் கொண்டிருந்தேன்.. கத்தினால் குழந்தை வெளி வருவதில் சிக்கல் இருக்கும் என டாக்டர் அடிக்கடி கூறவே கட்டுப்படுத்த பார்த்தேன்.. ஆனால் முடியவில்லை.. ஆபரேசன் செய்ய சொல்லலாமா என அக்கணம் சிந்தித்தேன்.. ஆனால் நான் ஒரு வேளை அப்படி சொல்லியது என் அத்தைக்கு தெரிந்தால் பின்னால் ஏதேனும் ஒரு அசவுகரியம் எனும் போது, அவர்கள் குறை கூற ஒரு வாய்ப்பாகி விடுமோ என அஞ்சினேன்.. (ஏனெனில் என் அம்மா எப்படியும் அதை மாமியாரிடம் கூறி விடுவார்கள், எந்த விஷயத்தை மறைப்பது என்று அவருக்கு தெரியாது frown emoticon .....) ஒரு மணி நேரம் போல ஆனதும் அம்மாவை உள்ளே அனுப்பினார்கள்.. எப்படியாவது நார்மல் டெலிவரிக்கு முயற்சி பண்ணுங்க டாக்டர் என கேட்டுக் கொண்டிருந்தார்..அம்மாவை பார்த்தது தெரியும்.. கொஞ்சம் வலி விட்ட நொடி.. அடுத்த வலிக்கு அழும்போது அம்மா அங்கு இல்லை.. என் பல்ஸ் லெவலும் சீராக இல்லை.. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பொறுத்துப்பார்த்த மருத்துவர் பல்ஸ் லெவல் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாகி விட்டது..
அறுவை சிகிச்சையின் போது குழந்தை வெளியே எடுக்கப்பட்டவுடன் அது ஆண் குழந்தை என, மருத்துவர் அதன் எடை, பிறந்த நேரம் இதை குறிக்க சொல்லும்போது தெரிந்து ரொம்ப சோர்ந்து போனேன்.. பெண் குழந்தை வேண்டுமென எதிர்பார்த்த எனக்கு இது ஒரு ஏமாற்றம்தான்.. (கடவுள் அருளால்அடுத்து பெண் குழந்தை கிடைத்தது வேறு விஷயம்..) பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் என் பெற்றோரிடம் காண்பித்து இருக்கிறார்கள்..அவன் தாடை வரை பேதி பரவி இருந்தது என என் பெற்றோர் கூறுவர்... கடைசி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு சென்றதால் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் திரும்பி வந்தோம் என இன்றளவும் என் பெற்றோர் கூறிக் கொண்டு இருப்பர்..
(வயிற்றில் இருக்கும்போது கிருஷ்ண கானத்தை அதிகமாக கேட்டுக் கொண்டிருந்ததால் என்னவோ , இவனும் அதே அஷ்டமி திதியில் பிறந்தான்.. குறும்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை..)
இந்த பிரசவத்தின் மூலம் நான் அறிந்து கொண்டது இரண்டு... ஒன்று இப்போது எந்த நிறை மாத கர்ப்பிணியை பார்த்தாலும் அவர்களின் வயிறின் அமைப்பை வைத்தே என்ன குழந்தை என துல்லியமாக கூற முடியும்..
மற்றொன்று முக்கியமானது..அதாவது பிரசவ வலி இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என சிலர் வரையறுத்து சொல்வதெல்லாம் பொய்..... ஏனெனில் பிரசவத்தின் போது நாம் அனுபவிக்கும் வலி அதன் பிறகு நினைவில் இருந்தும் மறந்து போய் விடுகிறது.. அப்போது நடந்த சம்பவங்கள் வேண்டுமானால் நம் நினைவில் இருக்கலாம், ஆனால் வலி நம் நினைவில் இருக்காது..பிரசவ வலி கஷ்டம்தான்.. ஆனால் பொறுத்துக் கொள்ள கூடியதுதான்.............................
உண்மையில் இது, பயம் கொள்ளாமல், பதட்டம் இல்லாமல் ஆரோக்கிய உணவையும், அழகிய சூழலையும் அமைத்து புது உயிரை வரவேற்க சந்தோஷமாக காத்திருக்க வேண்டிய காலகட்டம் ...
இப்படியாக என் முதல் குழந்தையை கருவறையில் சுமந்து கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வந்தது……