வெள்ளி, 23 அக்டோபர், 2015

முதுமையில் பாதுகாப்பு

நம் பிள்ளைகள் கடைசி வரை நம் பிள்ளைகளாகவே இருப்பர் என்று நினைக்கும், நாளைக்கு முதியவர்களாக ஆகப்போகும் இன்றைய பெற்றோர்களுக்காக இந்த பதிவு...
இப்போது பல சேமிப்புத்திட்டங்கள் உள்ளன.. செல்வ மகள் சேமிப்பு திட்டத்திலிருந்து பல திட்டங்கள், குழந்தைகளின் படிப்பு, திருமணம் உள்ளிட்ட எதிர்கால நலனுக்கான சேமிப்புத் திட்டங்களே.. இங்கு பெரும்பாலும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை கூட ஒரு சேமிப்புத் திட்டமாகவே கருதும் மனோநிலை நமக்கு உண்டு.. ஏனெனில் நமக்கு எதுவும் ஆகாது என்று எல்லா மனிதர்களின் உள்மனதில் இருக்கும் எண்ணம்தான் இந்த மனநிலைக்கு காரணம்..
இப்படி பிள்ளைகளின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பல வழிகளில் சேமிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு மட்டும் என தனியாக சேமிக்க மறந்து விடுகின்றனர்.. தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகள் பின்னாளில் தங்களை பார்த்துக் கொள்வார்கள் என்ற அதிக நம்பிக்கைதான் காரணம்.. (இப்போது நடக்கும் சில விஷயங்களை பார்த்ததும் அந்த நம்பிக்கை இப்போது பல பெற்றோர்களிடம் ஆரம்ப நிலையிலேயே தடுமாற்றம் கண்டிருப்பது வேறு விஷயம்.. ) இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் பெற்றோர்கள் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் காலத்திலேயே பிள்ளைகளுக்கு மட்டும் பங்குகளாக பிரித்து கொடுத்தும், ஓய்வூதியத்தையும் அதே போல் அவர்களுக்கு பிரித்து கொடுத்தும் விடுகின்றனர்..
அப்படி பங்கு கொடுத்த பின் ஏதேனும் ஒரு மகனிடமோ, மகளிடமோ தங்கி எஞ்சி இருந்த நாட்களை கழிக்க போகும்போது அவர்கள் மனதளவில் படும் இன்னல்கள் அதிகம்.. பிள்ளைகளுக்கு பாசம் இருந்தாலும் , இப்போது அவருக்கு பிரித்துக் கொடுத்த சொத்தில், அதாவது அவர்களின் சொத்தில் இருக்கிறீர்களென்ற எண்ணம் எழும்.. இந்த எண்ணம் அவர்களுக்குள் எழ காரணம் , சமமாக பிரித்துக் கொடுத்தார்கள், ஆனால் நாம் மட்டும்தானே பார்த்துக் கொள்கிறோம் என்ற ஒப்பீடே.... சில இடங்களில் மகன்கள் அவ்வாறு எண்ணாவிட்டாலும் மருமகள்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவின் குறைந்த அடர்த்தி அவர்களின் மூலம் உங்கள் மகன்களை பேச வைக்கும்..
பெற்றோர் ஒவ்வொரு பிள்ளகைளின் இருப்பிடத்துக்கும் பந்தாடப்படுவதற்கும் பிள்ளைகளின் "அவன் இருக்கிறான், நான் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டுமா"என்ற இந்த மன ஓட்டமே காரணமாக இருக்கும்.. எவ்வளவு கொடுமையான வாழ்க்கை நம் பெற்றோர்களுக்கு கொடுக்கிறோம் என்ற எண்ணம் அப்போது அவர்களுக்கு எழாது.. சொத்தின் பங்கீடு மட்டுமே அவர்களின் மூளையை ஆக்கிரமித்து இருக்கும்..
வசதியானவர்கள் எனில் இப்படி வைக்க முடியாத பட்சத்தில் முதியோர் இல்லங்களில் விடுகின்றனர்.. சிலரோ நிராதரவாய் பெற்றவரை/ பெற்றவளை வேறு ஊர்களில் நடுத்தெருவில் இறக்கி விட்டு விட்டு எவ்வளவு பெரிய பாவ மூட்டையை தூக்கி கொண்டு வருகிறோம் என்பதை அறியாமலேயே திரும்பி விடுகின்றனர்.. சொத்து சேர்த்து வைக்காத பெற்றோர்கள் சிலருக்கும் இக்கொடுமை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எல்லா பிள்ளைகளும் இப்படிப்பட்டவர்கள் என கூறவில்லை..ஆனால் இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறேன்..
சிறு வயதில் இருந்து பாசம், அரவணைப்பு என அனைத்தையும் ஊட்டி வளர்த்த பெற்றோரை கடைசியில் எப்படி இப்படி விட்டு விட தோனுகிறது என புரியவில்லை..
ஒரே குழந்தையை பெற்றவர்கள் பலரின் பாடும் இதுவே.. அதுவே அதுவே அது மகளாக இருப்பின் இது கொஞ்சம் குறைகிறது..
இதற்கெல்லாம் தீர்வு இதுதான்.....
பணியிலிருப்பவர்கள் தங்கள் ஓய்வூதியம் முழுவதை பற்றியும் உங்கள் வாழ்க்கைத்துணை தவிர பிள்ளைகளிடமோ/ உறவினரிடமோ பகிர்ந்து கொள்ளாதீர்கள்.. ஏனெனில் முழுத் தொகையையும் கூறினால் அது தீரும் வரை பிள்ளைகளோ/உறவுகளோ அவர்களின் அவசரத் தேவைகளுக்கெல்லாம் உங்களிடம் வந்து நிற்பார்கள்.. அந்த பணத்துக்காகவே உங்களை சுற்றி வரும் மனிதர்களையும், அதைக் கொடுக்காத போது காயப்படுத்தும் பிள்ளைகளையும் காண நேரும்.. ஒரு குறிப்பிட்ட தொகையை கூறி , அதில் கடன்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு எஞ்சிய பணத்தில் , பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் சேர்த்து பங்கு பிரித்து வைத்திருப்பாத கூறிக்கொள்ளுங்கள்.. அந்த பங்கை மட்டும் பிள்ளைகளுக்கு அப்போது கொடுங்கள்.. பின்னர் உங்கள் கையிலிருக்கும் பணத்தை உங்கள் காலத்துக்கு பின் பிள்ளைகளுக்கு செல்லுமாறு வழி வகை செய்து விடுங்கள்...
பிள்ளைகளுக்கு என்று சேமிக்கும் பழக்கம் இருப்பவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு என்றும் தனியாக சேமிக்கத் தொடங்குங்கள்... உங்கள் காலத்துக்கு பின் சொத்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு போகுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.. இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்வை தொடங்க போகும் நேரத்தில் அவர்களுக்கு பிரித்து கொடுக்கும் சொத்துக்கு/பணத்துக்கு இணையாக உங்களுக்கும் ஒரு பங்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த பணம், பின்னாளில் பிள்ளைகள் பார்க்காவிடிலும் உங்கள் உடம்பு உங்களுக்கு ஒத்துழைக்காத கடைசி காலங்களில் , உங்கள் இல்லத்திலோ / ஏதும் நல்ல முதியோர் இல்லத்திலோ எஞ்சிய நாட்களை நிம்மதியாக கழிக்க உதவும்.. ஏனெனில் பொருளாதாரம் மட்டுமே பின்னாட்களில் முதியோர் கஷ்டப்படுவதில் பெரும்பங்கு வகிக்கிறது...
எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.. ஓய்வு பெற்ற பின் தன் இரு மகள்களுக்கும் சரி விகிதத்தில் செய்தும் அவரின் பென்சன் பணத்திற்காகவும், அவர் தனக்கென வைத்திருக்கும் சிறு தொகைக்காகவும் சண்டையிட்டு இருவரும் அவரை வந்து பார்ப்பது கூட இல்லை.. பிள்ளைகளும் பெற்றோரை எந்நாளும் பணம் காய்க்கும் மரமாக எண்ணக்கூடாது..
இவற்றையெல்லாம் காணும்போது எனக்கு இக்காலத்திற்கு பொருந்தக்கூடிய இந்த வரிகள்தான் நியாபகத்திற்கு வரும்..
Your Parents are not emergency fund..
Your Children are not your retirement fund....
Build your own wealth.

பாடல்

கடந்து வந்த காலத்துக்குள்
தள்ளி
அன்றிருந்த மனநிலையில்
நனைத்து
வெளிப்படுத்த இயலா ...
ஒருவித உணர்ச்சி கலந்த
ஏக்கத்துடன் அச்சூழலை
கடக்க வைக்கிறது
தனிமையில் கேட்கும்
ஏதோ ஒரு பாடல்....!!!

வரம்

ஊடலில் கசிந்துருகும்
அக்கறையும்
அரவணைப்பில் வழிந்தோடும்
ஆளுமையுமே
இனி வரும் பிறவிகளிலும் ...
உன் கரம் பற்றும்
வரம் கேட்க
போதுமானதாக இருக்கிறது.......

வார்த்தைகள்

சில வார்த்தைகளை
மனம் அவ்வளவு எளிதில்
கடந்துவிடுவதில்லை......
எளிதில் கடந்து விடக்கூடிய ...
வார்த்தைகளோ
வார்த்தைகளாகவே
தெரிவதில்லை.....

நாளைய நிஜங்கள்

எண்ணங்களின் வீரியத்துக்கு
சாட்சிகளாக சில சம்பவங்களை ...
கண்ட பின் பல ஆசைகளை
எண்ணங்களாக மாற்றினேன்.....!!!

மாற்றிய எண்ணங்களை மூளை
என்னும் சேமிப்பு கிடங்கில்
வேறு சலன எண்ணங்கள் நெருங்காதவாறு
பாதுகாத்து வருகிறேன்.....!!!!
நிகழ்காலத்துக்கு மனம் செல்லாத
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதெல்லாம்
ஆசையாக எடுத்துப்பார்த்து வருகிறேன்
அந்த நாளைய நிஜங்களை......!!!!

நினைவலை

கடல் அலை போல்தான்
நினைவலைகளும்
ஒருநாளும்
உன்னை  தீண்டாமல்
திரும்பியதில்லை....!!!!

தீபாவளி - 2013

இந்த தீபாவளி, என் தாய் வீட்டில் கொண்டாட முடியலையே என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்து, நல்ல படியாக கடந்தது... தீபாவளிக்கு முன்னாடி நாள் (அவருக்கும் லீவ்) பலகாரம் சுட ஆரம்பிச்சன்.. அச்சு முறுக்கு சுடத்தான் ரொம்ப நேரம் (சுமார் 6 மணி நேரம்) எடுத்தது... அப்புறம் தேங்காய் பர்பி, ரவா லட்டு-ன்னு சீக்கிரம் வேலை முடிஞ்சது... அடுத்த நாள் என் கணவரின் விருப்பத்திற்காக போளி.... (பலகார லிஸ்ட் முடிஞ்சது...முதன் முதலா ...தீபாவளிக்கு என்று நான் பலகாரம் செய்தது இந்த தீபாவளிதான்..- ஆனால் காரமா எதுவும் செய்ய நேரம் இல்லாததால மிக்சர் மட்டும் கடையில் வாங்கிட்டோம்..) ரொம்ப தாமதமா (10 மணி)எழுந்த குழந்தைகளை (முந்தின நாள் பலகாரம் செய்யும்போது கூட இருந்ததால்) எண்ணெய் வைத்து குளிப்பாட்டி , புது துணி உடுத்தி நண்பர்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்கவும் அனுப்பி வைத்து..அடடா ஒரு தீபாவளி எபெக்ட் வந்துருச்சு.. (முக்கியமா அடுத்த நாள் நான் பலகாரம் கொடுத்தனுப்பிய நண்பர்கள் வீட்டிலிருந்து போன் செய்து எல்லாம் நன்றாக இருந்தது என்று சொன்னது அதிக நேரம் எடுத்து செய்த போது இருந்த களைப்பை எல்லாம் மறைக்க வைப்பதாக இருந்தது...)எங்கள் வீட்டுக்கு பலகாரம் கொடுக்க குடும்பத்துடம் வந்த நண்பர்கள் மூலம் அந்த நாள் மேலும் அழகாகியது... வீட்டில் கட்டி விடுவதற்காக அவர் வாங்கிய இரு பெரிய பலூன்களில் ஒன்று அவர் ஊத ஊத வெடித்ததில்(என்னா சத்தம் தெரியுமா) பட்டாசு வெடித்த திருப்தியும் கிடைத்தது... grin emoticon ஹஹாஹா.. மதியம் நண்பர்களுடன் இங்குள்ள சிவஸ்டார் உணவகத்தில் உணவு..... இரவு நண்பர்களுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பார்க்க (படம் கொஞ்சம் மொக்கைதான், இருந்தாலும் வெளியே சென்று பார்த்த திருப்தி ) சென்றிருந்தோம்.. ஆக இந்த தீபாவளி என் கடந்த தீபாவளிகளுக்கு சிறிதும் குறைவிலாமல் கொண்டாட்டத்துடன் இனிமையாக முடிந்தது...

அண்ணன்

இது 2014 பிப்ரவரியில்  எடுத்த புகைப்படம். என் மனதிற்கு நெருக்கமான சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று... ஒரு அண்ணாவோ, அக்காவோ நமக்கு உடன்பிறந்தவர்களாக இல்லையே என்ற ஏக்கம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு,, ஒருவேளை இல்லாததின் மேலும் கிடைக்காததின் மேலும்தான் நமக்கு ஆசை இருக்கும் என்ற உண்மையும் காரணமாக இருக்கலாம்..

சில நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும், மனக்காயம் பட்ட பொழுதுகளிலும் அண்ணன் இருந்திருந்த...ால் தட்டிக் கேட்டிருப்பானே என்ற எண்ணம் தலை தூக்கும்... அதே போல் பள்ளி நாட்களுக்கு பிறகு தூய நட்பை கொண்ட தோழிகள் கிடைக்காததாலோ என்னவோ, நம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளவும் , ஒரு தோழியாக நம்முடன் சேர்ந்து பயணிக்கவும் ஒரு சகோதரி இல்லை என்ற ஏக்கமும் இருந்ததுண்டு.... அப்படி உள்ளோரை பார்க்கும்பொழுது ஆசைப்பட்டும் இருக்கிறேன்.. நான் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரை நான் அண்ணா என்றுதான் அழைத்ததுண்டு, மனதிலும் ஒரு அண்ணன் என்ற ஸ்தானத்தில் வைத்ததுண்டு.. ஆனால் அலுவலக கேட் தாண்டிய பிறகு நாம் எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேக கண் கொண்டு பார்க்கும் சமுதாயத்தால் , அலுவலகத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காவோ, சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவோ அவர்களை அழைக்க முடியாத அளவிற்கு தடை போடப்பட்டிருந்தேன்.. இப்போது திருமணத்திற்கு பின் , நான் என் எண்ணங்களை , ஆசைகளை, வலிகளை பகிர்ந்து கொண்டு தோள் சாய ஒரு நல்ல கணவன் கிடைத்ததால், இப்போது அந்த ஏக்கத்திற்கு வழியே இல்லை.. ஆனால் திருமணத்திற்கு முந்தைய பருவத்தில்அந்த வெறுமையை உணர்ந்திருக்கிறேன் .

நான் இழந்ததை என் மகள் இந்த சிறுவயதிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறாள் அவளின் அண்ணனின் மூலமாக... சிறுசிறு சண்டைகள் போட்டாலும் தங்கையை அவன் யாருக்காகவும் , எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. எங்கேனும் செல்லும்போது அவளையும் உடன்கூட்டி வர அடம்பிடிப்பதாகட்டும், அவளை நடக்கவிடாமல் எங்களை தூக்க சொல்லும் அக்கறையிலாகட்டும், நாங்கள் அவளை கண்டிக்கும்போதோ அடிக்கும்போதோ எங்களிடம் காட்டும் கோபத்திலாகட்டும் ஒரு பாசமுள்ள அக்கறையுள்ள அண்ணன் வளர்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....