திங்கள், 28 மார்ச், 2016

10

பல நேரங்களில் ரோஹித்தின் பேச்சும் , புத்தி கூர்மையும், நியாபக சக்தியும் வியப்பில் ஆழ்த்தும்..ஒரு நாள் ஏதோ அசர அடிக்கும்படி அவன் பேசியதற்கு, "இந்த வாய் எங்க இருந்து வந்ததோ" என சொல்லி சலித்துக் கொண்டேன்.. "உன்கிட்ட இருந்துதான்" என உடனடி பதில் கிடைத்தது..
அவனின் சேட்டைகள் , பள்ளியில் அவனின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன்.. சில குறும்புத்தனமான பேச்சுகளை , குறை போல என் அம்மாவிடம் சொன்னாலும் கூட என் மனதுக்குள் ஒரு குதூகலம் இருக்கும்.. "என்கிட்டே இருந்துதான் இந்த வாய் வந்ததுன்னு சொல்றான்மா" என்றதும் , "பின்ன, நீ எப்படியெல்லாம் பேசின" என சொல்லி மடக்கினார்..
ஆனால் உண்மையில் நான் இவன் அளவுக்கு புத்தி சாதுர்யத்தோடு பேசிக்கொண்டிருந்தேனா என யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவில் வரவில்லை.. சில நேரம் வாக்குவாதம் செய்து அதில் எப்படியும் வேறு யாரும் திரும்ப ஒரு வார்த்தை வைக்காதவாறு திணறடித்து இருக்கிறேன்.. "நீ வக்கீலுக்கு படி, நல்லா வருவா" என்ற வீட்டில் யாரோ சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு , வக்கீலாக ஆவது போல கனவும் கூட கண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு தெரிந்து இது எல்லாம் 10, 11 வயதுக்கு மேல்தான்..
ஒரு நாள், உள்ளே ஸ்போக்ஸ் இல்லாத சக்கரத்தின் படத்தில் 17 எண்ணிக்கையில் ஸ்போக்ஸ் போட்டு வருமாறு அவனின் வொர்க் ஷீட்டில் இருந்தது.. உடனே "ஸ்கேல் எடுத்து வா , போடலாம்" என்றேன்.. பள்ளிக்கு ஸ்கேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் அதை டேபிள் டிராயரில் வைத்து இருந்தேன்..
அவன் அங்கு செல்லால் அவனின் பேகில் இருந்து இன்னொரு பென்சிலை எடுத்தான்.. புரியவில்லை போல என நினைத்து , "டேய், ஸ்கேல் எடு" என்றேன்.. "இரும்மா", என்றவன் நோட்டை வாங்கி பென்சிலை ஸ்கேலாக பயன்படுத்தி இன்னொரு பென்சிலின் மூலம் ஸ்போக்ஸ் போட்டான்.. இது எனக்கு தோன்றாத அளவுக்கு எவ்வளவு .......யா இருக்கேன்னு தோனுச்சு...நான் எந்த அளவுக்கு சமயோசித புத்தியில கீழ இருக்கேன்னு சொல்ல இந்த இன்சிடெண்டெ போதும்..
மட்டுமல்ல , யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் சொல்லும் குறைக்கோ , கிண்டலுக்கோ இப்படி பதில் சொல்லி இருக்கலாமோ என சிறிது நேரம் கழித்துதான் சிலருக்கு தோன்றும்.. அந்த சிலரில் நானும் ஒருத்தி.. அதனாலேயும் கூட அவனின் உடனடி பதில்களில் ஆச்சரியத்தில் மூழ்கி போகிறேன்...
அன்று ஒரு நாள், முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் இளையவள் தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தராததால் என்னிடம் "அம்மா , அண்ணாகிட்ட எனக்கு தர சொல்லுங்க " என சிணுங்கினாள்.. "நீ கேட்க கூடாது தங்கம், அண்ணா குடுத்துதான் நீ சாப்பிடணுமா , நீ எடுத்து சாப்பிடு , ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரே மாதிரிதான" என அவளிடம் கூறிவிட்டு "கவரை ரெண்டு பேருக்கும் நடுவுல வச்சு சாப்பிடு" என ரோஹித்திடம் கூறினேன்..
"நோ, அவ என்னை "மங்கி அண்ணா"-ன்னு அப்பவே கூப்பிட்டா, அதுக்கு சாரி சொன்னாதான் நான் கொடுப்பேன்" என அவன் கூறிய உடனேயே நிகிதாவும் "சாரி அண்ணா" எனக் கூறினாள்..
"சாரி, சாரி ன்னு சொல்லிட்டே எடுத்து சாப்பிடு , என் காதுல சாரி கேட்டுட்டே இருக்கணும்" என அவளிடம் கூறினான்.. நான் அவனிடம் கோபமாக, "அவதான் ஒரு டைம் சாரி கேட்டுட்டா இல்ல, அப்புறமும் ஏன் சாரி சாரி ன்னு சொல்லிட்டு இருக்கணும் , நீ சாரி சொல்லாத" , என சாரி-யை சொல்லத் தொடங்கியிருந்த நிகிதாவை நிறுத்தினேன்..
உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் , "அம்மா மட்டும் அன்னைக்கு 1,2,3 சொல்லிட்டே இரு , என் காதுல நீ சொல்றது கேட்டுட்டே இருக்கணும்னு சொன்னே இல்ல, நான் மட்டும் சொல்லக்கூடாதுன்னு சொல்ற" என சொன்னதும் ஆடிப் போய் விட்டேன்..
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் நடந்தது அது.. KG 1 வகுப்பு தொடங்கி முதல் நான்கு மாதங்கள் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமிருந்தது... அதன் பின் இங்கு வரும்போது இரண்டு மாத கோடை விடுமுறை பாதி நாட்களைத் தாண்டி இருந்தது.. இருந்த ஒரு மாதத்துக்குள் 3 மாத சிலபஸ்-ஐ அவனுக்குள் ஏற்றியாக வேண்டுமே என்ற நிலை.. அதில் ஆரம்பத்தில் அவனின் மறதியை பற்றி அப்போதைய நேர பதிவில் கூட கூறி இருப்பேன்..
எனவே அவனை ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என சொல்லி அடுக்களையில் மற்ற வேலைகளில் இருப்பேன்.. இப்போது இது யோசித்து பார்த்தால் ஒழிய நினைவுக்கு வராத நிலையில் இருக்கிறது எனக்கு.. ஆனால் அவனின் நொடி தாமதிக்காத இந்த நியாப சக்தி என்னை ஆச்சரியப்படத்தான் வைத்தது..
"அது அப்படி இல்ல தங்கம்" என என் வழக்கமான சமாளிப்பு கலந்த புரிய வைக்கும் வார்த்தைகளை அவனிடம் கொட்ட தொடங்கி இருந்தேன்....
-ஷார்ஜா
  23-3-2016

9

"எலிபெண்ட் மில்க்"
----------------------------
ரோஹித்-க்கு அவன் வயதுக்கு தகுந்த உயரம் இல்லை.. வளர வளர உயரம் வந்து விடும் என்ற என் நினைப்பு அதை கவலை படும் விஷயமாக எனக்கு சுட்டியதில்லை.. ஆனால் அவனுக்கு தன் நண்பர்கள் அளவுக்கு தான் உயரம் இல்லை என்ற எண்ணம் உண்டு.. ஆதலாம் டிவியில் உயரம் வரும் என்று எந்த ஊட்டச்சத்து பானத்தை காமித்தாலும் வாங்க சொல்லி கேட்பான்..
இங்கு ஒரு மாலுக்கு சென்ற போது சிறிய கார் ஓட்டிப் பார்க்க வேண்டும் என மிகவும் ஆசைபட்டான்..ஆனால் அது ஓட்டுவதற்கு என அவர்கள் குறிப்பிட்டிருந்த உயரத்தை விட சில இன்ச் உயரம் குறைவாக இருந்ததால் இவனை அவர்கள் ஓட்ட விடவில்லை.. அதிலிருந்து ஏதாவது நல்லதை , இதை சாப்பிட்டா வளருவே என சாப்பிடக் கொடுத்தால் , சாப்பிட்டு முடித்ததும் "இனி கார் ஓட்டற அளவுக்கு நான் வளர்ந்துட்டேனா , பாரு" என உடனே தன் உயரத்தை அளக்க சொல்வான்..
அவன் போர்ன்விடா மட்டும்தான் குடிப்பான்.. அவன் தங்கைக்கு போர்ன்விட்டா (சாக்லேட் ப்ளேவர் )கொடுத்தால் ஒரு மணி நேரம் ஆனாலும், அடித்து குடிக்க வைத்தால் ஒழிய கப்பில் உள்ள போர்ன்விடாவின் அளவு குறையவே குறையாது... இதனால் இருவருக்கும் தனித்தனியாகக் கலந்து குடிக்க வைக்க வேண்டி இருந்தது..
இன்றும் வழக்கம்போல் இருவரிடமும் யாருக்கு பீடியாசுயூர் வேண்டும் எனக் கேட்டவுடன் , எனக்கு போர்ன்விட்டாதான் வேணும் என சொல்லியவாறே சமையலறையில் என்அருகில் வந்து நின்று கொண்டான்.. "ஒன்னே சாப்டுட்டு இருக்கக்கூடாது தங்கம், பீடியாசுயூர், பால், பூஸ்ட், போர்ன்விட்டான்னு மாறி மாறி குடிக்கணும், இப்ப பீடியாசுயூர் கலக்கறேன் , குடி" என்றேன்..
உடனே "இதை குடிச்சா வளருவாங்களா" என்றான் , "ஆமா தங்கம் வளருவே" என்றேன்.. உடனே , "அம்மா , எனக்கு எலிபெண்ட் பால் வாங்கி கொடும்மா , நான் வளர்வேன்" என சொன்னான்.. வந்த சிரிப்பை அடக்கியவாறே , "அதை குடிச்சா வளருவேன்னு யார் சொன்னாங்க" என கேட்டேன்..
"ம்ம்,டிவி-ல சொன்னாங்க, உனக்கு தெரியாதா , எலிபெண்ட் எவ்வளவு பெருசா இருக்கும், சோ எலிபெண்ட் பால் குடிச்சா நானும் நல்லா வளருவேன், பெனிட்டும் (வகுப்புத் தோழன்) அதுதான் குடிப்பான் , அதான் அவன் பெருசா இருக்கான், நானும் பெனிட் மாதிரி வளரனும், எனக்கு வாங்கிக் கொடு "என்றான்..
எங்க கிடைக்கும் எனக்கேட்டதும் , "லுலு(LuLu)-ல இருக்கும் , போய் வாங்கி தா" என்றான்.. "எனக்கு இருக்குமான்னு தெரியல , அப்பாகிட்ட சொல்லு, அப்பா வாங்கித் தருவார் , கிடைக்கலேன்னா , அப்பாவ எலிபெண்ட வாங்கிட்டு வந்து வீட்ல கட்டி வைக்க சொல்லு, நாம கறந்துக்கலாம்" என சொன்னதும் "சரிம்மா, ஆனா அது ரொம்ப பெருசா இருக்குமே , வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாதே" என சொல்லியவாறே யோசனையுடன் நகர்ந்தவன், அவன் அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கிறான்..

-ஷார்ஜா 
  21-3-2016


இதுதான் அந்த "எலிபெண்ட் மில்க்"காம்"
------------------------------------------------------------------------
2 நாட்களுக்கு முன் திடீரென "அம்மா, எலிபெண்ட் மில்க் ,இங்க வா இங்க வா" என ஹாலிலிருந்து கத்தினான்.. வந்து பார்ப்பதற்குள் வேறு விளம்பரம் மாறி விட்டிருந்தது.. அப்போதுதான் எலிபெண்ட் மில்க் என அவன் சொன்னது நான் நினைத்ததல்ல எனப் புரிந்தது.. "ஏன் லேட்டா வந்த" எனக் கோபப்பட்டவனை சமாதானப்படுத்தி "அடுத்தமுறை வந்தா காமி" என்றதற்கு "சுட்டி டிவியில்தான் வரும், நீ என்கூட பார்த்துட்டே இரு" என்று சொல்லி இருந்தான்..

இன்று அந்த விளம்பரம் வந்ததும் இந்த " "ப்ளூ எலிபெண்ட் மில்க்"-தான் வேணும்" என காண்பித்து நான் அறியாத எலிபெண்ட் மில்க்கின் புதிரை விடுவித்தான் ...

-ஷார்ஜா 
26-3-2016

8

சின்ன வயசுல நீ என்னவா ஆக விரும்பறன்னு யார் கேட்டாலும் என் பதில் டீச்சர் என்பதாகத்தான் இருக்கும்.. உண்மையில் அப்போது அது மன விருப்பமாக இருந்ததில்லை. எல்லோரும் அவரவர் குறிக்கோளை சொல்லும்போது இதை என் குறிக்கோளாக வெறும் வாய் மட்டும் சொல்லும் வார்த்தையாகவே வைத்து இருந்தேன்..
ஆனால் நான் பணிபுரிந்த காலங்களிலும், இப்போது வீட்டில் இருக்கும் நேரங்களிலும் ஆசிரியர் துறையை தேர்ந்தேடுத்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றும்.. அதற்கு காரணம் விடுமுறை, குறிப்பிட்ட நேர பணி என்பதையும் தாண்டி மனதிற்கு திருப்தியளிக்கும் பணியாக இருந்திருக்குமே என்ற நிதர்சனம்தான்..
காலையில் ஆறரை மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்ற காரணத்தால் பகல் நேரங்களில் மகனை தூங்க விடுவதில்லை.. ஆதலால் இரவு 9 மணிக்கு படுத்து 6 மணிக்கு எழுந்து விடுவான்.. பள்ளியிலிருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருப்பான்.. இல்லையென்றால் டிவி பார்ப்பான்.. மாலையில் ஹோம் வொர்க் முடித்து விட்டு சாப்பிட்டு தூங்கி விடுவான்..
அன்று டிவி பழுதாகி இருந்தது.. சிறிது நேரம் பொம்மைகளை வைத்து தங்கையுடன் விளையாடி விட்டு சலித்ததும் என் போனை வாங்கி கேம் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.. நாலு சுவற்றுக்குள் பொழுதை கழித்தாக வேண்டும் என்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் டிவியும் அன்று துணைக்கு இல்லாததால் அவன் மனநிலை புரிந்து அவனை எழுப்பவில்லை..
மதியம் தூங்கியதால் இரவு 10.30 ஆகியும் தூங்க வராமல் ஸ்கெட்ச் எடுத்து கலர் பண்ணிக்கொண்டிருந்தான்.. காலைல ஸ்கூலுக்கு போகணும், இன்னும் தூங்காம இருந்தா காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியாது எனக் கூறினோம்..
"நாளைக்கு ஸ்கூல் போகல" என்றவனிடம் "இன்னும் ஒரு வாரம்தான் ஸ்கூல் , அப்புறம் 10 டேஸ் லீவ், அதுக்கு அப்புறம் kg -2 போய்டுவ, அப்போ இந்த டீச்சர் இல்லடா, வேற டீச்சர் தான் உனக்கு , சோ இப்போ லீவ் போடாம இந்த டீச்சர் நடத்தற கிளாஸ்ல நல்லா படிக்கவும் செய், என்ஜாய் பண்ணவும் செய்"என்று சொன்னதும், வந்து படுத்தவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் திரண்டு வழிய ஆரம்பித்து இருந்தது..
எந்த காரணத்துக்காக அழுகிறான் என புரியாமல் பதட்டத்துடன் , "ஏன் தங்கம் அழறே" என கேட்டதும், "எனக்கு இந்த மிஸ்தான் வேணும், வேற மிஸ் வேண்டாம் , இந்த மிஸ்கிட்டவே படிக்கறேன்மா" என அழுது கொண்டே கூறினான்..
"இந்த மிஸ் kg 1 மட்டும்தான் எடுப்பாங்க, நீ kg 2 போகறே இல்ல தங்கம்" எனக்கூறியதும் "இல்ல, நான் kg 2 போக மாட்டேன் , அப்போ வீட்லதான் இருப்பேன்" எனக் கூறிவிட்டு அழுதான்..
"இனி மேல மேல நிறைய டீச்சர்ஸ் மாறுவாங்க, அம்மாக்கும் நிறைய டீச்சர்ஸ் மாறினாங்க , இப்ப யாரும் எங்க இருக்காங்கன்னே தெரியாது.., பட் நீ இந்த ஸ்கூல் ல படிக்கற வரை kg 1 மிஸ்ஸ பார்க்கலாம், அம்மாகிட்ட அவங்க நம்பர் இருக்கு , நீ பெரியவனானதுக்கு அப்புறம் கூட நாமளோ அவங்களோ எங்க போனாலும் டச்-ல இருக்கலாம்"என சொல்லியதற்கு பதில் ஏதும் கூறாமல் அழுது கொண்டே தூங்கிப் போனான்..
சொல்லாம விட்டு இருக்கலாமோ , அவன் அந்த இயல்புக்கு தக்க மனதை மாற்றியிருக்கத்தானே போகிறான் என தோன்றியது.. இருந்தும் எங்களுக்கு அடுத்து வெளியில் ஒருவரின் பிரிவை நினைத்து (அதுவும் முதன் முதலில் ஆசிரியரை ) அவன் அழுதது அந்த ஆசிரியரின் மதிப்பை எங்களுக்குள் இன்னும் உயர்த்தியது..அப்படியே, ஆசிரியர் ஆகி இருக்கலாமோ என்ற என் எண்ணத்தையும் கூட....

-ஷார்ஜா 
 13-3-2016

7

பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டு இருந்தது. யாரிடமிருந்தும் எந்த இடையூறும் இல்லை.. இருந்தும் மகனுக்கு பெயர் தேர்ந்தெடுக்க ஆரம்பத்தில் மிக சிரமப்பட்டேன்..
பெயரை தேர்ந்தெடுப்பதற்குள் நட்சத்திரத்திற்கு பொருத்தமான எழுத்து, எண் கணிதம் என பல உள்ளே புகுந்து நாட்களை கடத்தின.. பாஸ்போர்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் என் கணவர் சொல்லிக்கொண்டே வந்த பெயர்களில் ஒன்றை, எதுவும் பார்க்காமல் 5 நிமிடத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி விட்டது.. அது "ரோஹித்"..
பெண்ணுக்கு பெயர் தேர்ந்தெடுத்ததும் ஒரு பெரிய கதை.. இப்போதைக்கு அது இந்த பதிவை ஆக்கிரமிக்காது..
இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயரை வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் எழும். மேலும் மகனின் இந்த பெயரும் தீர்க்கமாக அமையவில்லையே என்ற வருத்தமும் உண்டு..
இனி புதிதாக வேறு பெயர் வைப்பதற்கு பதில் பழகிய இந்த பெயரின் பின்னால் ஒரு தீர்க்கமான பெயர் இணைத்தால் நன்றாக இருக்கும் என்பது எனக்குள் அடிக்கடி தோன்றும் எண்ணம்..அதனால் துணை பெயர்களாக "ராய் (Roy ) , குமார், தாஸ் , பால்(paul)" எல்லாம் போட்டு பார்த்ததில் ரோஹித் பால் நன்றாக இருக்கும் என தோன்றியது..
இப்படி தோன்றியவுடனே "உனக்கு ரோஹித் பால்-னு பேர் வைக்கலாம்னு இருக்கேன் தங்கம்" என கூறினேன்.. "எனக்கு ஒன்னும் வைக்க வேண்டாம், நிகிதாவுக்கு வேணும்னா நிகிதா பால்-னு வச்சுக்கோ" என கோபத்துடன் கூறினான்..
பிறகு இன்றும் அதை அவனிடம் கூறினேன்.. உடனே "எப்ப பார்த்தாலும் ரோஹித் பால் , ரோஹித் பால் தானா" எனக்கு ரோஹித் போன்விட்டா ன்னு பேர் வை" என கூறினான். அப்போதுதான் அவன் அகராதியில் பாலுக்கு ஒரு அர்த்தம்தான் உள்ளது என புரிந்தது. சிரித்து விட்டேன்..
"ஏம்மா சிரிக்கிற" என்று வெட்கத்துடன் அவன் கேட்டதற்கு "போன்விட்டான்னு வைக்க சொன்னே இல்ல, அதுக்குதான் சிரிச்சேன்" என சொன்னேன்..
"ஏன், எனக்குதான் பால் பிடிக்காதுல்ல, நிகிதாவுக்குத்தான் பால் பிடிக்கும், அதான் நிகிதா பால்-னு வைக்க சொன்னேன், எனக்கு ரோஹித் போன்விட்டா-ன்னு வைக்க சொல்றேன் " என சத்தத்துடன் கூறினான்..
இதை இனி விளக்கினாலும் புரிய வைக்க முடியாது என்று தெரிந்ததால் சிரித்து மட்டும் வைத்தேன்..

-ஷார்ஜா 
  18-2-2016

6

குழந்தைகளுக்கு ஒரு கட்டத்துல அம்மாக்கு ஒன்னுமே தெரியாதுன்ற எண்ணம் வர ஆரம்பிக்கும்.. பார்த்தீங்களா, இதுல முதல்ல பலிகடா ஆகறது பாவப்பட்ட அம்மாக்கள்தான்..சில வருடங்கள் கழித்து அப்பாக்கு ஒன்னுமே தெரியாது-ன்ற எண்ணமும் சேர்ந்துடும், சில வருடங்களுக்கு பிறகு ஆசிரியர்களும், அதன் பின்னால் எல்லோருமே அதில் சேர்ந்து,தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்ங்கிற மனோநிலை வர ஆரம்பிக்கும்..
இதெல்லாம் தெளியறதுக்கே ஒரு குறிப்பிட்ட வயசும் அனுபவமும் வர வேண்டி இருக்கும்.. நாமெல்லாம் அப்படி தெளிஞ்சு வந்தவங்கதானே..
இப்ப என் பையன் அதுல முதல் படி ஏறி இருக்கான்.. ஆனால் அவன் மனசுல என் அறிவு எவ்வளவு படி கீழ இறங்கி இருக்குன்னு பாருங்களேன்..
ஒரு வாரத்துக்கு முன்ன , ஸ்கூல் ல இருந்து பேமிலி போட்டோ கேட்டு அனுப்பி இருந்தாங்க.. அடுத்த நாள் கொடுத்து அனுப்பினேன்.. அப்புறம் அடுத்த இரண்டு நாளுக்குள்ள , ஞாயிற்றுக்கிழமை கிளாஸ்-ல க்ரூப் போட்டோ எடுக்கப் போறதாவும் , போட்டோ காப்பி தேவைனா 15 திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கிக்கலாம்னும் டைரி-ல ஒட்டி அனுப்பி இருந்தாங்க..
அன்னைக்கு வியாழக்கிழமை, அன்னைக்கே பணத்தை எடுத்து டைரி ல வச்சு, மறக்காம மேடம்கிட்ட கொடுத்துடுன்னு சொன்னேன்.. வெள்ளி , சனி விடுமுறை..
ஞாயிறு காலையில் அவன் எழுந்து வரும்போதே டைரியில் இருக்கும் பணத்தை நினைவு படுத்தினேன்.. "சரி" என்றவன் அவன் அப்பா குளிப்பாட்டி விட்டதும், நான் தோசை ஊட்டுவதற்காகக் காத்திருந்தான்..
கிச்சனில் அவனுக்கு தோசை எடுத்துக் கொண்டிருக்கும்போது , ஹாலில் இருந்து "அம்மா , இப்ப காசு கொடுத்துருக்கே இல்ல, இது இன்னைக்கு ஸ்கூல்ல எடுக்கப்போற போட்டோ வாங்கறதுக்குத்தான், அன்னைக்கு நீ கொடுத்த போட்டோ குடுப்பாங்கன்னு நினச்சுட்டு இருக்காதம்மா"ன்னு சீரியஸா சொல்றான்..
"டேய்" னு நான் பாயப்போக அவன் அப்பா சிரிச்சுகிட்டே அவனுக்கு கை கொடுக்கப் போறார்..

-ஷார்ஜா
 15-2-2016