செவ்வாய், 3 நவம்பர், 2015

பூங்கா

வார இறுதியில் எங்காவது செல்ல வேண்டும் என்று தோன்றினாலே என் முதல் தேர்வு பூங்காவாகத்தான் இருக்கும். வேறு இடங்களுக்கு சென்று வருவதை விட அங்கிருக்கும் பசுமையான சூழ்நிலையும், குழந்தைகளும் ஆசை தீர விளையாடுவதை கண்ட காரணமும் கூட ஆசைக்கு காரணியாக இருக்கலாம்..
ஆனால் சிறிது நேரம் கூட அங்கு செலவழிக்க முடியாத அவசர மனோநிலை என்னவருக்கு.. சிறிது நேரம் பிள்ளைகளை விளையாடவிட்டு உட்கார்ந்திருந்தாலோ, சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாலோ கூட கிளம்புவோமா, கிளம்புவோமா என வார்த்தையில் அவசரத்தை சுமந்து கொண்டே இருப்பார்.. கிளம்பும்போது ஒரு முழு மனதிருப்தி இல்லாத நிலையே எஞ்சி இருக்கும்..

அவருடன் செல்லாமல் பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கிருந்த பொழுதை அழகாக , நிறைவாகக் கழிக்க வேண்டும் என்ற என் ஆசையும் , நடந்து செல்லும் தொலைவில் எந்த பூங்காவும் இல்லாததால் தள்ளிக் கொண்டே போனது.. டாக்ஸி பிடித்து போய் வரலாமென்றாலும் இரு பிள்ளைகளை சமாளிக்க முடியுமா என்ற எண்ணமே தடை போட்டுக்கொண்டிருந்தது..

ஆனால் அந்த ஆசைக்கு , தோழி ஒருவர் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு லேடீஸ் பார்க் போய் வரலாமா எனக் கேட்டு திரும்ப பிள்ளையார் சுழி போட்டார்.. உடனே ஒப்புக்கொண்டேன்.. அதன்படி வீட்டை கணவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, இல்லையில்லை வீட்டில் கணவரை இருக்க வைத்து விட்டு smile emoticon (ஏனெனில் பிள்ளைகளையும் சேர்த்து பார்த்துக்கொள்ளும் போதுதான் "ஒப்படைத்து விட்டு" என்ற வார்த்தை பொருந்தும், இங்கு நாங்கள்தானே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு செல்கிறோம்) மாலை தொடங்கும் வேளையில் கிளம்பி விட்டோம்..
உள்ளே நுழைந்ததும் கொண்டு வந்திருந்த விரிப்பை போட்டு அந்த இரு தோழிகளும் அமர்ந்து கொள்ள, பிள்ளைகள் அங்கிருந்த விளையாட்டு தளவாடங்களில் விளையாட சென்று விட்டார்கள்.. என் சின்ன பெண் விளையாடும்போது எங்கேனும் தவறி விழுந்து விடுவாளோ என்ற பயம் அவள் பின்னாலேயே என்னை அழைத்து சென்றது...

படிகளின் வழி மேலேறி, பிள்ளைகளின் வயது மற்றும் உடற்தகுதிக்கு பொருத்தமான இரண்டு மூன்று வித விதமான வழிகளில் சறுக்கி வருமாறு அமைக்கப்பட்டிருக்கும் அந்த தளவாடம்.. என்னை தவிர்த்து எந்த குழந்தையின் தாயும் அங்கு இல்லை.. இடையிடையே ஒரு வயது சமீபத்தில்தான் கடந்தது போலிருந்த ஒரு குழந்தையுடன் ஒரு தாயும், மற்றொரு தாயும் வந்து தத்தம் குழந்தைகளை விளையாட விட்டுக் கொண்டிருந்தனர்... ஒன்றரை வயதிலிருந்து ஆரம்பித்த குழந்தைகள் 20 க்கும் மேற்பட்டோர் அதில் ஏறி, சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.. சில சிறு குழந்தைகளுக்கு அரணாக அக்குழந்தைகளின் அண்ணனோ அக்காவோ அவர்களை பின்தொடர்ந்து பார்த்துக்கொண்டே , விளையாடிக்கொண்டும் இருந்தனர்.

அவ்வப்போது அங்கு போய் தோழிகளுடன் பேசுவதும், எல்லோரும் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை சாப்பிடுவதும் என நேரம் வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் நகர்த்திக்கொண்டிருந்தது.. இடையிடையே அரபு தவிர்த்து வேறு மொழி அறியாத , செண்டும் புர்காவும் விற்க வந்த பெண்களிடம் விலையை புரிய வைக்க போராடிய முயற்சியும் அரங்கேறி இருந்தது..
என் பெண்ணின் தலை விளையாடும் இடத்தில் தென்படாதபோதேல்லாம் பயந்து கொண்டே அங்கு ஓட்டம் பிடிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது.. விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு அரபு சிறுவன் மேலிருந்து கீழே விழுந்து கதறுவதை பார்த்து ஓடி போய் பார்த்தால், யாராவது தூக்கி விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், ரத்த சிராய்ப்புடன் அழுது கொண்டே சுற்றி இருந்த குழந்தைகள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் அழுகையை பக்கத்தில் இருந்த வேறு ஒரு தாய் உட்பட சுற்றி இருந்த எவருமே பொருட்படுத்தியதாக தெரியவில்லை.. நான் தூக்கி விட்டதும், அவனும் , சுற்றி நின்ற அவனை அறிந்த குழந்தைகளும் ஆச்சரியமாக என்னைப்பர்த்ததை உணர முடிந்தது..

இங்கு ஒரு விஷயத்தைக் கூற வேண்டும், இங்கு ஏதேனும் சிறு குழந்தை ஓடும்போதோ, நடக்கும்போதோ தவறி விழுந்தாலும் நம்மை போல பதறி சென்று தூக்குவதில்லை . பிள்ளைகளே எழுந்து நடக்க விட்டு விடுவர்.. இதை நிறைய முறை நேரில் கண்டிருக்கிறேன்..இது நல்ல பழக்கமென்று தெரிந்தபோதும் அந்த பழக்கமென்னவோ எனக்கு கைகூடி வருவதேயில்லை...
கிளம்பலாம் என்ற நேரத்தில் , பெண் ஊஞ்சலில் உட்கார வைக்க வேண்டும் என்று சொல்ல ஒரு ஊஞ்சலை சுற்றி அடுத்த முறைக்காக காத்திருந்த கூட்டத்துடன் கலந்து கொண்டேன்.. இந்த கூட்டத்தை பார்த்துதான் வந்ததிலிருந்து அங்கு செல்லாமலேயே இருந்தேன்.. அங்கு இருந்த மற்றொரு ஊஞ்சலோ ஒரு கை துணை கொடுக்காததால் சரிந்தவாறு நின்று கொண்டிருந்தது.. அப்படியும் ஒன்றிரண்டு வாண்டுகள் அதில் தொங்க பார்த்தும் கூட தோல்வியில் திரும்பிக் கொண்டிருந்தனர்..
எனக்கு முன்பு வந்த பிலிப்பினோ சிறுமி அடுத்து நான், பெண்ணை உட்கார வைத்து விடுவேனோ என்று ஓரக்கண்ணில் பார்த்தவாறே முன்பு ஆடிக்கொண்டிருந்த சிறுமி எப்போது இறங்குவாள் என பார்த்துக்கொண்டிருந்தாள்..

அச்சிறுமி இறங்கியதும் தன் தம்பியை உட்கார வைத்து தள்ளிக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சிறுமியை சிறிது நேரத்திலேயே அங்கு வந்த இரு பாகிஸ்தான் சிறுவர்கள் (அண்ணன் தம்பி ) இறக்கி விட சொல்லிக்கொண்டே இருந்தனர் . அதிலும் சின்னவன் அவள் தம்பியை இறக்கி விட முயற்சித்துக் கொண்டே இருந்தான்.. அவளோ அழுகைக்கு முன்பான முகத்தை வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அவள் தம்பியை தள்ளி விட்டுக்கொண்டிருந்தாள்...

இதை பார்த்துக் கொண்டிருந்த நானோ, நேரம் கடந்து கொண்டே போவதையும் கருத்தில் கொண்டு , பெண்ணிடம் போகலாமா என்றால், அவள் சினுங்கியத்தை பதிலாக தந்ததும் அங்கேயே நின்று விட்டேன்..அந்த தம்பி சிறுவனோ தன் அண்ணனின் சமாதானத்தையும் மீறி அச்சிறுவனை இறக்கி விட முயற்சித்துக் கொண்டிருந்ததை பொறுக்க முடியாமல், சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அவள் சகோதரியிடம் ஊஞ்சல் தள்ளி விடும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் தாயை அவள் துணைக்கு அழைத்து வந்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்...

தங்கள் தாயின் பாதுகாப்புடன் அந்த 3 குழந்தைகளும் ஊஞ்சல் ஆடி இறங்கியவுடன் பெண்ணை உட்கார வைத்து தள்ளுவதை இரண்டு நிமிடத்திற்கு உள்ளதாக முடித்து விட்டு திரும்பினேன்..
இதற்கிடையே விளையாண்டு அலுத்த என் மகன் வேறு , இங்க பிடிக்கல , வீட்டுக்கு போகலாம் என அவன் தந்தையின் பொறுப்பை ஏற்று சொல்லிக்கொண்டே இருந்தான்.. உள்ளே நுழையும்போதே அங்கிருந்த கடையை பார்த்து அவன் கேட்ட ஸ்பைடர் மேன் பொம்மை நினைவுக்கு வந்திருக்கும் போல என எண்ணிக்கொண்டேன்..

வாயிலருகே வரும்போது அங்கிருந்த கடையிலிருந்த ஸ்பைடர் மேன் பொம்மையை சுட்டிக்காட்டி கேட்கவும் , ஒரு மாதத்துக்கு முன்பாக வாங்கிக்கொடுத்த விலை உயர்ந்த துப்பாக்கி பொம்மையை இரு நாட்களிலேயே துவம்சம் செய்ததை சுட்டிக்காட்டி மறுத்தேன்...
பின் தோழி ஒரு துணி எடுக்க வேண்டும் என்று சொன்னதுக்கு இணங்க அருகில் உள்ள துணிக்கடைக்குள் நுழைந்தோம்.. உடனே , நான்தான் துணி எடுக்க கடைக்குள் நுழைந்ததாக எண்ணிய என் மகன் , எங்க வந்தாலும் துணி துணி, உன்னை இனிமே எங்கேயும் கூட்டிட்டு வர மாட்டேன் என நான் அவனிடம் கூறும் டயலாக்கை, ஏதோ அவன்தான் என்னை கை பிடித்து அழைத்து வந்தது போல் பேசி , ஸ்பைடர் மேன் பொம்மை வாங்கி தராத பழியை தீர்த்துக் கொண்டான்..
ஒன்று மட்டும் புரிந்தது, நம் சமூக அமைப்பில் ஆதி காலத்திலிருந்தே விதைக்கப்பட்டதின்படி, சொல்லிக் கொடுக்காமலேயே ஆண் குழந்தைகளுக்கு அந்த ஆளுமை வந்து விடுகிறது மட்டுமல்ல ஒரு ஆண் சிறுவயதிலிருந்தே, தான் ஒரு ஆண் என்பதை சிறுசிறு விஷயங்களிலும் கூட காட்டிக்கொள்ளவே விரும்புகிறான்..

1

திருமணத்திற்கு முன் அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ இருக்கும் சிறு குழந்தைகளை கொஞ்சுவதும், அதன் சேட்டைகளையும் , சிரிப்பையும் ரசிப்பது என்றாலும் அப்படி பிடிக்கும்.. நாள் முழுவதும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டால் அதிலேயே முழு நாளும் நிறைவாய் கழியுமே என்ற ஆசையும் இருக்கும்.. ஒவ்வொரு நிமிடமும் குழந்தைகளின் சேட்டையை ரசித்துக் கொண்டிருக்கும் தாய் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று தோன்றும்..
இதை என் அம்மாவிடம் கூறும்போது, குழந்தை பிறந்ததும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வேலையும் வீட்டு வேலைகளுடன் சேரும்போது , யாராவது குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டாங்களா என்ற எண்ணம்தான் தோன்றும், நாள் முழுவதும் குழந்தையை ரசிக்க சூழல் இடம் தராது என சொல்வார்.. என்னால் அதை அப்போது ஏற்றுக் கொள்ள முடியாது..

எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரும் அதனுடைய பூ போன்ற உடலை வருடி, நாளெல்லாம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண் குளிர கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் பிறந்ததும் அவர்களுடைய முதல் இரண்டு வருடங்களுக்குண்டான வாழ்வில், அவர்களின் அத்தனை அழகிய குறும்புகளையும் இரசித்தேனா என்றால் பாதி கிணறு கூட தாண்டவில்லை என்ற அர்த்தம்தான் சொல்ல வேண்டி இருக்கும்.. எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் நிலைதான்.. வீட்டு வேலைகள் , மற்ற வேலைகள் என சூழ்ந்து இருக்கும்போது குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது சிரமம்தான்.. அதிலும் நவீன தொலை தொடர்பு சாதனங்களுக்கு நம் நேரத்தை பங்கு கொடுக்கும் நிலைக்கு அதன் ஆளுமை வேறு இழுத்து வைத்துள்ளது.. என் அம்மாவின் வார்த்தைக்கு நானே உதாரணமாகியும் போனேன்..
இரு குழந்தைகளுக்கும் வயது இடைவெளி குறைவு என்பதால் இரண்டாவது குழந்தையின் வளர்ச்சியையும் அணு அணுவாக ரசிக்க முடியவில்லை.. அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது..
சரி இப்போதும் சிறு குழந்தைகள்தானே என்ற என் நினைப்பும் உங்கள் நினைப்பும் அவர்களின் பேச்சை கேட்டால் தன் வாயை மூடிக் கொள்ளும்..

எடுத்துக்காட்டு இதோ - கேஜி 1 படிக்கும் மகனிடம் "ஸ்கூல்-க்கு இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் வைக்கிறது" என கேட்க , அதை நான் சொல்ல மாட்டேன் , நீதான் வைக்கணும்" என கூறவே , "நான் வைக்கிறேன் , இன்னைக்கும் பாக்ஸ்-ல மீதம் வச்சுட்டு வந்தேன்னா பார்த்துக்கறேன்" என நான் கோபத்துடன் கூறினேன்.. அடுத்த நொடியே அவன் , நான் திரும்ப கொண்டு வராத மாதிரி நீ வைக்கணும்" என சொல்கிறான்.. "சரி, அப்போ என்ன வைக்க" என முதல் கேள்விக்கே திரும்ப போனால் அந்த முதல் பதிலையேதான் அவன் வாயில் வைத்திருக்கிறான்....இப்படி பேசினா, என்னதான் பண்ண முடியும்!!!!!

இளையவளோ அவனின் வாயை விட இரு மடங்கு நீளம் கூட்டி வாங்கி வந்திருக்கிறாள்.. என்ன சொன்னாலும் நாமே எதிர்பார்க்காத பதில்கள் வந்து நம்மை வந்து தாக்கும்... அவளுக்கு அப்பா என்றால் உயிர்.. என்னிடம் சில நேரம் காட்டும் கோபத்தையும், பிடிவாதத்தையும் மருந்துக்கும் கூட அவள் அப்பாவிடம் காட்ட மாட்டாள்.. சில நேரம் கையில் உள்ளதை கோபத்தில் என் மீது வீசி எறிவாள்.. இது போல அப்பாகிட்ட நடப்பியா, என கோபமாக கேட்டால் உடனே "அப்பாவுக்கு வலிக்கும்" என பதில் வரும்.. "அம்மாவுக்கு வலிக்காதா" என கேட்டால் "வலிக்கட்டும்" என ஒற்றை சொல்லை அலட்சியமாக வீசி விட்டு நிற்பாள்.. இது போல் அல்லாது பல அழகிய மலைக்க வைக்கும் பேச்சுகளும் அவளிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்..

இப்போதே குழந்தைத்தனம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் பருவமோ என யோசிக்கும் அதே வேளையில் இந்த காலத்தில் இதுதான் குழந்தைத்தனம் என என் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அவர்களின் குறு(கரு)ம்பான பேச்சுகளை என்னை மறந்து ரசித்து வருகிறேன்...

பிரம்மாக்கள்

வான் மேகம் பிரசவிக்கும்
மழைக்கும்
பெண் தேகம் பிரசவிக்கும்
மழலைக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு....!!!!
...
தங்களை ரசிப்பவர்களின்
சூழ்நிலையை
வரமாக்குவதில்
இவை இரண்டுமே
பிரம்மாக்கள்....!!!!

பொக்கிஷம்

நினைவுகளை
சுமந்து நிற்கும்
எதுவுமே
பொக்கிஷம்தான் ...!!!!
...
மட்டுமல்ல
கால ஓட்டத்தில்
நி(இ)ல்லாமல் போன
அவை
விட்டு சென்ற
நினைவுகள் கூட
பொக்கிஷமே...!!!!!