திங்கள், 16 மார்ச், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (7)


  • ஒரு நல்ல/தவறான பெண்ணை பற்றி ஒரு ஆண் விமர்சிக்கும் விமர்சனமே அவன் குணத்தை வெளிக் காட்ட போதுமானதாக இருக்கிறது..
  • நம் அன்பை மட்டுமே பெறுபவர்கள் பதிலுக்கு பரிசாக கஷ்டத்தை மட்டுமே கொடுக்கின்றனர்....
  • காய்த்த மரம் மட்டுமல்ல, இங்கு பல காய்க்காத மரங்களும் கல்லடி படுகின்றன...
  • இருவருக்கு இடையில்  ஒரு பிரச்சனை என்றால்  இருவருமே குற்றவாளியாக  பார்க்கப்படுகிறார்கள் அவரவர் எதிர் தரப்பின் மூலம்...!!!!
  • நல்ல நண்பர்களுக்கு நல்ல உள்ளத்தை விட வேறு தகுதி தேவை இல்லை, அறிவுரை கூற.........
  • கஷ்டப்படாமல் லட்சியத்தை அடைய முடியாது..
  • நம்மை விட்டு விலகணும்னு நினைப்பவர்களிடம் இருந்து நாமும் விலகி இருக்கறதுதான் நம்மோட சுயமரியாதையை காப்பாற்றும் செயல்..
  • அழகிய கனவுகளுடனான சயனமும், இயற்கை அழகை ரசிக்கும் ஜன்னலோர பயணமும் சில நிமிடங்கள் நம்மை மறக்க வைத்து சந்தோசம் தருபவை..
  • அலட்சியப்படுத்துபவர்களை ஒரு விதை முளைக்க போடப்படும் உரம் என எடுத்துக் கொண்டால் கூடும் அவர்களின் எண்ணிக்கையும் லாபமே...!!!
  • ஒரு செல்போனோ அல்லது டெலிபோன் டைரியோ தொலைந்து போனால் கூடவே சில, பல நண்பர்களும் தொலைந்து போகிறார்கள்..



எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (6)


  • நீதியை விலை பேசும் நீதியரசர்கள் இருக்கும் வரையிலும், அநீதிக்கு காவல் காக்கும் காவலர்கள் இருக்கும் வரையிலும், இந்த வியாபாரத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் நீதி என்பது வார்த்தையில் மட்டுமே இருக்கும் சில அப்பாவிகளுக்கு...
  • நாம செய்கிற நல்லது கெட்டதுக்கு பலன் அடைஞ்சே ஆகணும்.. நல்லது நம்ம காலத்துல அறுவடை ஆனால் நாம பாக்கியசாலிகள்.. கெட்டது நம்ம காலத்துல அறுவடை ஆனா நம் வாரிசுகள் பாக்கியசாலிகள்..
  • நீதியை தீர்மானிக்கும் பொறுப்பை நிதி எடுத்த பிறகு , எதற்கு வெட்டியாக நீதிமன்றங்கள்?
  • நாட்டுல நிதித்துறையும், நீதித்துறையும் சரியா இருந்தாலே ஒரு சீரான நிலையில் நாட்டின் நிலைமை இருக்குன்னு புரிஞ்சுக்கலாம்..,ஆனால்..??
  • நிதித்துறை குளறுபடியால "அப்பாக்கள் பாதிக்கப்படறாங்க"
  • நீதித்துறை குளறுபடியால் "அப்பாவிகள்" பாதிக்கப்படறாங்க...
  • வாழ வழி கேட்பவனுக்கு வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குழி பறிக்காமலாவது இருங்கள்.....
  • சந்தேகம் சந்தோஷத்தை அழிச்சுடும்...
  • ஒருத்தருக்கு நாம முக்கியமான்னு தெரிஞ்சுக்காம, அவங்களை நமக்கு முக்கியமானவங்களா நினைக்கிறதுல இருந்துதான் பல மனக்கஷ்டங்கள் ஆரம்பமாகுது..
  • குழந்தைகளிடம் இருந்து குழந்தைத்தனத்தை சீக்கிரமே விரட்டி விடுகிறது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்,சினிமா காட்சிகளும்...........


எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (5)



  • டயப்பெர்(Diaper)-களின் உதவியால் குழந்தை வளர்ப்பு கொஞ்சம் சுலபமாகி இருக்கிறது  இன்றைய இளம் தாய்மார்களுக்கு...!!!.
  • ஒரு திருமணமான ஆணுக்கு அவன் அம்மாவின் கருத்து சர்க்கரையை போன்றும், மனைவியின் கருத்து தேயிலை பொடியை போன்றதும் ஆகும். இரண்டும் தேவைக்கேற்ப கலந்தால்தான் வாழ்க்கை என்னும் தேநீரை சுவையாக பருக முடியும்..
  • ஏதாவது ஒரு கல்யாணத்துக்கோ அல்லது வேறு விஷேசங்களுக்கோ புறப்படுவதற்கு முன் பெரும்பாலான வீடுகளில் எழும் வார்த்தை
         "அவங்க நமக்கு எவ்வளவு மொய் வச்சாங்க"
  • பெரும்பாலான திருமணமான பெண்களுக்கு அவர்களின் கணவரின் குணத்தையோ அல்லது பணத்தையோ வைத்துதான் இச்சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் நிர்ணயிக்கபடுகிறது....
  • தலைக்கனம் உள்ளவர்கள், மற்றவர்கள் மனதில் கனமாக இருப்பதில்லை...
  • அழகு என்பது பார்ப்பவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது...அதில் பலருக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருந்தாலும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரே அழகி அவரவர் தாய்தான்..
  • லஞ்சம் வாங்கவும் கூடாது , கொடுக்கவும் கூடாது என்று இதயத்திலிருந்து வீராப்பாக பேசும் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு அரசு வேலை கிடைத்தால் தனது கொள்கையிலிருந்து கிழே இறக்கி விடப்படுகிறார்கள் சூழ்நிலையாலும் தேவைகளாலும்.....
  • நம்மால் அறிந்து கொள்ள முடியாத, ஆனால் நம்முடனே இருக்கும் முக்கியமான எதிரி நம் எதிர் மறை எண்ணங்கள்தான்....
  • அழுகை பலருக்கு கோழைகளின் ஆயுதமாக தெரியலாம்.. ஆனால் உண்மையில் சோதனையில் வரும் "அழுகை" கஷ்டங்களுக்கு தற்காலிக தீர்வு அளிக்கும் ஒரு மருந்து... (குழந்தைங்க அழுகை எல்லாம் இதில் சேராது..)
  • இள வயதில் தவறிய மனிதர்களும், நாம் தொலைத்து பார்க்க முடியாத மனிதர்களும்தான் என்றும் இளமையுடன் வாழ்கின்றனர் நம் மனதில்....

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (4)

  • வாழ்க்கை வலிகளை மட்டும் தருவதில்லை, அதிலிருந்து மீள பல வழிகளையும் தந்திருக்கிறது... சரியான வழியை தேர்ந்தெடுப்போர் நிம்மதியாக வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர்....
  • சிலருக்கு நமக்கு கஷ்டம் கொடுத்து பார்த்து ரசிப்பதில் மட்டுமே இஷ்டம்... நாமும் அதை இஷ்டப் பட்டு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதில் அவர்களுக்கு நஷ்டம்.. 
  • ஒரு காரணமும் இல்லாமல் சிலர் நம்மை விட்டு விலகுவதற்கு, நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியங்கள் முடிவுக்கு வந்ததே காரணம்.......
  • நாம் கஷ்டப்படும் காலங்களிலும், நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் காலங்களிலும்தான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உள்ளத்தை நன்கு அறிய முடிகிறது....
  • நாம் உண்மையாக நேசிக்கும் சில நண்பர்கள், நம்மை நேசிக்கவில்லை என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருப்போம்.. கொஞ்சம் திரும்பி பார்த்தால், நம்மை நேசிக்கும் சிலரின் உண்மையான நட்பை நாமும் புரிந்து கொள்ளாமலிருப்போம், நம்மை அறியாமலே.....
  • வாழ்க்கையில் மறைந்து விட்ட மனிதர்களின் (நெருங்கிய உறவுகள் தவிர) பிரிவின் வலியை விட , இழந்து விட்ட உறவுகளின் பிரிவின் வலியே அதிகம்.....
  • நட்புகளின் நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருபவரே நட்பு கொள்ள சிறந்தவர்...
  • பட்ட அவமானம் மனதில் இருந்தால்தான் சாதிக்கும் உணர்வை மனம் கொடுத்துக் கொண்டே இருக்கும்...
  • ஒரு போட்டோ தேவைங்கிற பட்சத்துல, எது நல்லா இருக்கோ அதை எடுத்துக்கலாம்னு, நிறைய போட்டோஸ் எடுத்து வைப்போம்... அப்புறம் அதுல ஒரு போட்டோ தேர்வு பண்றதுக்கு படற பாடு இருக்கே.... அதே போலதான் தேவைக்கு அதிகமா எது இருந்தாலும் குழப்பம் மட்டுமே மிஞ்சும்...
  • அவமானப்படுத்தியவரை, அவமானப்படுத்தியதை மறந்து மன்னிக்கலாம்.. ஆனால் அவமானத்தை மறந்தும் மன்னிக்க கூடாது...

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (3)


  • போராடி "பெற்ற" நீதியை பணம் "எளிதாக" சாகடித்து விடுகிறது....
  • புகழ்ச்சிக்கு மயங்காதவன் , தன்னை புகழ்கிறவர்களுக்கு அடிமையாவதில்லை
  • ஒருவரை பார்த்தவுடன் "எடை" போடுபவர் வாழ்வில் "தடை" தயங்கி தயங்கிதான் வரும்...
  • பெரியவர்களிடம் அவமரியாதையாக பேசும் வார்த்தைகள் பந்தை போன்றது.. அப்படி வீசப்படும் பந்து காலச் சக்கரத்தின் ஓட்டத்தில் உருண்டு நம்மிடமே திரும்ப வரும்..
  • முயற்சித்த பலருக்கு முதலில் ஏமாற்றத்தை கொடுத்து விட்டுதான் மாற்றத்தை கொடுத்திருக்கிறது "வெற்றி"
  • நம் தாயால் மறுக்கப்பட்ட சில உரிமைகள் , இப்போது நம்மால் நம் பெண் குழந்தைகளுக்கும் மறுக்கப்படுகிறது... அன்று பாரபட்சமாக தெரிந்தது இன்று பாதுகாப்பானதாக தெரிகிறது...
  • தாய், தந்தை பார்க்க சாதித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...
  • குறை கூறி ஒப்பிட்டு பேசப்படும் குழந்தைகள், ஒப்பனைக்காக மட்டுமே படிக்கின்றனர்..
  • இன்னும் நன்றாக படித்திருக்கலாம் என உண்மையாக ஏங்குவது 
           மாணவர்கள் அல்ல, மாணவர்களாய் இருந்தவர்களே....!!!!
  • சில மனிதர்கள் நமக்கு ஏற்படுத்தும் விபத்து காயங்களையும், வலியையும், கண்ணீரையும் மட்டும் தருவதில்லை, கூடவே அனுபவம் என்ற பாதுகாப்பு கவசத்தையும் கொடுக்கிறது... அதற்கு பிறகு அப்பாதுகாப்பு கவசத்தை அணிந்து செல்பவர்கள் அவ்விபத்திலிருந்து தப்பிக்கிறார்கள்... அணிய மறப்பவர்களும், மறுப்பவர்களும் விபத்தை சந்தித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.. 

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (2)


  • பிறரின் அலட்சியம்தான் நம்மை ஒரு லட்சியம் எடுக்க வைக்குது...
  • யாரையாவது குறைவா மதிப்பிட்டோம்னா, அவங்க நம்மை விட எல்லாவற்றிலும் நிறைவா இருக்கறத பார்க்க வேண்டிய காலமும் வரும்...
  • மனைவியின் அன்பு, கணவன் வாழ்வில் இடறி விழ போகும்போது கைகொடுக்கும் ஒரு ஊன்றுகோல். பெரும்பாலான கணவர்களுக்கு ஊன்றுகோல் ஊன்றும் வயதில்தான் அதன் அருமை புரிகிறது.....
  • ஒருவரின் துரோகத்தை மன்னித்து மறப்பவனுக்கு, துரோகம் இழைத்தவனே வைக்கும் இன்றைய பெயர் "இளிச்சவாயன்"....
  • அநியாயத்தை தட்டிக் கேட்பவருக்கு, அநியாயம் செய்பவர்கள் மட்டுமல்ல, அநியாயம் செய்பவர்களின் நட்புகளும், உறவுகளும் கூட அந்நியமாகி போகிறார்கள்....
  • சிலர், அவர்களது காரியம் ஆகும் வரைதான் நம்முடன் இருப்பர்.காரியம் முடிந்தவுடன், நமக்கும், அவர்களுக்குமான நட்புக்கும் "காரியம்"செய்து விட்டு, அவர்களின் காரியத்தை பார்க்க சென்று விடுவர்....
  • எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றால், நிறைய பொய் பேசுவதிலும் வல்லவர்களாக இருக்க வேண்டும்.. பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாகததால் சிலருக்கு நல்லவர்களாகவும், சிலருக்கு கெட்டவர்களாகவும் தென்படுகின்றனர்...
  • காலத்தில் கேட்காத மன்னிப்பு காலம் முழுவதும் அழ வைக்கும்...
  • ஒரு சாதனையாளரின் திறமையும், மதிப்பும் உள்ளூர்வாசிகளுக்கும், உறவுகளுக்கும் தெரியாது., அப்படியே தெரிந்தாலும் வாழ்த்த மனமிருக்காது....
  • சந்தோஷமான நேரங்களை வேகமாகவும் சோகமான நேரங்களை மெதுவாகவும் கடக்கிறது மனம்...

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (1)

  • நான் போடும் பெரும்பாலான பதிவுகளின் பின்னால் ஒரு சில நினைவுகளும், சில மனிதர்களும் இருக்கிறார்கள்... ஓய்வு நேரத்தில் நான் எழுதிய ஒவ்வொரு பதிவாக பார்க்கும்போது ஒரு அழகிய ஆல்பத்தை பார்ப்பது போல பழைய நிகழ்வுகளையும் , சம்பந்தப்பட்ட மனிதர்களையும் என் மனதில் நிறுத்தி விட்டு போகிறது... ஆக ஒவ்வொரு பதிவுகளும் எனக்கு ஒரு புகைப்படத்தை போலதான்.....
  • தம் அனுபவத்தில் பாடம் கற்பவர்கள் தோற்றுக்கொண்டே இருக்க மாட்டார்கள். மற்றவர்கள் அனுபவத்தில் பாடம் கற்பவர்கள் தோற்கவே மாட்டார்கள்.
  • தர்மம் நம் தலையை மட்டுமல்ல நம் தலை முறையையும் காக்கும் 
  • துரோகியே மரணப் படுக்கையிலோ, மரணித்தோ இருந்தாலும், அவர்கள் செய்த சில உதவிகளும், நல்லவைகளும்தான் தான் முதலில் மனதில் தோன்றி கண்ணீரை வரவழைக்கின்றன
  • வாயை குறைச்சா வம்பும் குறையும், உடம்பும் குறையும்..
  • யாராவது ஒன்றுக்கு இரண்டு தடவை ஒரே கேள்வியை கேட்டால் எட்டிப்பார்க்கும் கோபம், குழந்தைகள் பல தடவை கேட்டால் வாலை கூட நீட்டுவதில்லை..
  • நண்பர்களின் உயர்வில் ஆண்களுக்கு இருக்கும் சந்தோஷம், தோழிகளின் உயர்வில் பெண்களுக்கு இருப்பதில்லை...
  • வாழ்க்கைல பல தடவை அவமானப்பட்டு, பல பேரோட வார்த்தைகளால் காயப்படறப்போ, அலட்சியம் என்ற களிம்பை பூசி, தன்னம்பிக்கை என்ற மருந்து எடுத்துக்கிட்டா காலம் என்ற மருத்துவர் கண்டிப்பா அதை குணப்படுத்திடுவார்.... 
  • பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சு கொடுக்கிற வரை பொண்ணுங்களோட ஆரோக்கியத்துல கவனம் எடுத்துக்கிற சில அம்மாக்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்தவுடன் மருமகன்கள் ஆரோக்கியத்தை பத்தி கவலைப்பட ஆரம்பிச்சுடுவாங்க....இந்தப் பையன் இவகிட்ட வந்து மாட்டிக்கிட்டானே என்றுதான்... (நம்ம சமையல் அப்புடீ.....................................)
  • உப்புமா பெறாத விஷயத்துக்கெல்லாம் இந்த நேரத்தை அதுல பயன்படுத்தியிருக்கலாம்ல அப்படின்னு "டைம் மேனஜ்மென்ட்" பத்தி வகுப்பெடுக்க கணவர்கள் உபயோகிக்கும் வார்த்தை.....
1990-க்கு முன் - அக்கம் பக்கம் போய் கதை பேச நேரம் இருக்குல்ல..
1990-க்கு பின் - 24 மணி நேரமும் டிவி-க்கு முன்னாடியே உக்கார நேரம்
இருக்குல்ல..
2010-க்கு பின் - பேஸ்புக்கே கதின்னு இருக்க நேரம் இருக்குல்ல...
  • குழந்தைகளின் தவறை சரி செய்ய நமக்கு சொல்லப்பட்ட கட்டுக்கதைகளையே கட்டவிழ்க்க வேண்டியிருக்கிறது....