திங்கள், 30 மே, 2016

அதிக சேட்டைகள் செய்வர் என்று தெரிந்தும், வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறார்களே என்று , கணவர் வெளிநாடு செல்லும் நாட்களிலெல்லாம் பிள்ளைகளை அக்கம்பக்கம் உள்ள இடங்களுக்கு தனியாக அழைத்து சென்று வருகிறேன்.. கடந்த வாரம் அப்படி கொஞ்சம் தொலைவிலுள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றிருந்தேன்..

உள்ளே நுழைந்ததும் , அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த Inflatable Jumping  castles  மற்றும் inflatable  slide  உள்ள பகுதிக்கு சென்று அங்கு விளையாட வேண்டும் எனக்கூறினான்.. ஏற்கனவே ஒருமுறை சென்றபோதும் அங்கு விளையாட வேண்டும் எனக் கேட்டிருந்தான்..  ஒரு மணிநேரம் வரை விளையாடலாம்.. ஆனால் சிறிது நேரத்திலேயே ஆசைக்கு  விளையாடிவிட்டு திரும்ப வந்து விடுவான், அந்த காசுக்கு சாப்பிடவாவது ஏதேனும் வாங்கிக் கொடுக்கலாம் என்று அனுப்பவில்லை..

அன்றும் அதையே நினைத்தவாறு முதலில் அங்கு சென்று விளையாடறேன் என் கெஞ்சிக்கொண்டு நின்றவனைப்பார்த்து "நீ சின்ன பையன், அதனால் உன்னை உள்ள விடமாட்டாங்க"எனக் கூறினேன்..  "அப்போ , என்னை தூக்க சொல்லும்போது நீ பெரிய பையனாகிட்டன்னு ஏன் சொல்ற"எனக் கேட்டான்.. இவனிடம் பேசி சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும் , விளையாட விட தீர்மானித்தேன்..

பெண்ணிடம் நீ அவ்வளவு மேல ஏற மாட்ட,விழுந்துருவ, அதனால் அம்மாகிட்ட இரு" என்று சொன்னதும் "எனக்கு  மட்டும் ஆசை இருக்காதா"என நீட்டி முழக்கினாள்..  இருவருக்கும் 30 திர்ஹாம்ஸ்  ஆகும் என பர்சை பிரித்தால் , வரும்போது டாக்ஸி-க்கு 10 திர்ஹாம்ஸ் கொடுத்தது போக  மொத்தமே 30 திர்ஹாம்ஸ் மற்றும் சில  சில்லரைகளும்தான்  இருந்தன..

பொதுவாக பர்சில் வீட்டு செலவுக்கென இருக்கும் பணம் முழுவதையும் வைக்கும் பழக்கத்தை சமீபமாகத்தான் நிறுத்தி இருந்தேன்.. அப்படி அந்த மாத செலவுக்குரிய பணம் முழுவதையும்  பர்சில் வைத்திருந்தால், மாத கடைசிக்கு நாள்கள் இருக்கும் முன்பே பணம் முழுவதும் செலவாகி இருக்கும்.. என் கை அப்படி.. பர்சில் காசு இருந்தால் பார்த்ததெல்லாம் வாங்க தோன்றும்..ஆதலால் குறிப்பிட்டளவு பணத்தை எடுத்து வைத்து அது செலவழிந்ததும்தான் பீரோவில் உள்ள பணத்தை எடுப்பதை சில மாதங்களாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்..

இங்கு வரும்போதும் பக்கம்தானே போகிறோம் , இதற்குள் செலவு அடங்கி விடுமென நினைத்திருந்தேன்.. இவன் இதில் விளையாட இன்றும் கேட்பான் என எண்ணவில்லை..

ரோஹித்திடம் நீ போய் விளையாடு,  விளையாடிட்டு கொஞ்ச நேரத்துலையே வரக் கூடாது , நான் நிகிதாவ கூட்டிட்டு அந்த பக்கம் எல்லாம் சுத்திக்காட்டி விளையாட விட்டுட்டு , வர்ற வரைக்கும் விளையாடிட்டு  இருக்கணும், தேடக் கூடாது என எச்சரித்தேன்.. "நிகிதாவையும் அனுப்புங்க" எனக்கூறினான்.. "காசு கொண்டு வரல" என சொல்லி அவனை அனுப்பி விட்டு , தேடுவானோ என்னவோ என்று வெளியில் இருந்த  ஸ்டோன் பெஞ்சில்  அவனைபார்த்தவாறு பெண்ணுடம் அமர்ந்தேன்.. அப்போது ஒரு சிறுவனும் அங்கு விளையாட பணம் வசூலித்துக் கொண்டிருந்த அரபுப் பெண்ணின் இரண்டு வயதிற்கும் உள்ளான பெண் குழந்தையும்  மட்டுமே அதில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ..

மடியிலிருந்த நிகிதாவோ , "அந்த அக்கா(?) என்னை விட சின்னதா இருக்கு , அந்த அக்கா விளையாடுது" என அந்த பெண் குழந்தையைக் காண்பித்துக் கேட்டாள். காசு கொண்டு வரல தங்கம்" எனக் கூறியதும் "அப்போ நாளைக்கு இங்க வரும்போது என்னை விளையாட விடனும் , ஒகே வா" எனக் கேட்டு என் "ஒகே" வை வாங்கி சமாதானம் அடைந்தாள்.. இப்போதெல்லாம் அவளை சமாளிப்பது ரொம்பவும் சுலபமாக இருக்கிறது.. அவளுக்கு பிடிக்காததை சாப்பிட சொல்லி வற்புறுத்தினால் கூட  , "நாளைக்கு எனக்கு இது கொடுக்கக்கூடாது , ஒகே வா" , என சமாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விடுகிறாள்..

என்னை பார்த்து சிரித்துக்கொண்டே slide -ல் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தான்.. சும்மா உட்கார்ந்து இருப்பதற்கு , பெண்ணை பக்கத்திலுள்ள தளவாடங்களுள் விளையாட விடலாமென அழைத்து சென்றேன்..

வந்ததிலிருந்து இடையிடையே "மெஹந்தி போடறீங்களா" எனக் கேட்டு நின்ற சில  அரபிப்பெண்களை "வேண்டாம்" என்று புன்னைகயோடு கடக்க வேண்டியிருந்தது.. இந்த பூங்காவில் சிறிய உணவு விடுதியும், சில சிறு சிறு கடைகளும் இருந்தாலும் சில பெண்கள் இப்படி துணிகள், வாசனை திரவியம் விற்பது  என கேட்டு வந்து விற்று செல்வர்..அவர்களுக்கான வருவாய் ஈட்டெடுப்பு இது..

 சென்ற 10 நிமிடத்தில் ஏதோ உறுத்த, தேடுவானோ என்று பார்க்க வந்தால் அழுத முகத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.. அங்கு காசு வாங்கிக் கொண்டு இருந்த அரபிப்பெண், "நீங்கள் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளுங்கள் , அப்போது அழ மாட்டான் "என அரபியில் சொன்னதை , அவர் அங்கிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டிய செய்கையால் புரிந்து கொண்டேன்..

நிகிதாவும்  நானும் உட்புறம்  போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம்.. ரோஹித்தும் குதூகலத்துடன் விளையாட சென்றான்.. அங்கு அமர்ந்தவாறே பின்புறம் கம்பி வலைக்கு பின்னால்  எதேச்சையாகப் பார்த்தபோது மூன்று வயதை ஒத்த ஒரு சிறுவன் கையிலிருந்த இரு ஜீப் பொம்மைகளை கம்பிகளுக்கு மேல் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தான்.. ஆரஞ்சு சட்டையும் , ப்ளூ three fourth  டிரௌசரும் போட்டிருந்த சிறுவன் தன் முன்பக்க மேல் பற்களை நான்கைந்தை  புழுவுக்கோ,எதுக்கோ கொடுத்திருந்தான்..

நான் பார்ப்பதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டு இரு ஜீப் பொம்மைகளையும் ஒன்றோடொன்று மோதுவது போல காண்பித்து சிரித்தான்.. நானும் சிரித்தேன்.. உடனே அந்த slide -ஐ காண்பித்து  ஏதோ மெதுவாக சிரித்தவாறே சொன்னான்.. அதை வைத்து அல்லாமல்  அவன் கண்களில் தெரியும் குழந்தைத்தனமான ஏக்கத்தை உள்வாங்கி . அதில் அவன் விளையாட வேண்டும் எனக்கூறியதைப் புரிந்து கொண்டேன்.. உடனே நெஞ்சில் ஒரு இனம் புரியாத இயலாமையான உணர்வு ஏற்பட்டது.. என்னிடம் போதுமான  பணம் இல்லை என எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.. அப்படி என்னால் வாய் திறந்து சொல்லவும் மனம் வரவில்லை ..  கையறு நிலையில் உள்ளபோது செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன் கலந்த சிரிப்பை உதிர்த்து விட்டு இல்லையென தலையாட்டினேன்..

அவன் சிரித்தவாறே இருந்தான்..அப்போது பக்கத்தில் ஓடி வந்த  அவனை விட சிறிய இன்னொரு  சிறுவன் இந்த சிறுவனை தள்ளி விடுவதும் , மண்ணை எடுத்து அவன் தலையில் போடுவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தான்..அவனை பார்த்தும் சிரித்தவாறு எதிர்ப்பு காட்டாமல் நின்று கொண்டிருந்தான்..

எனக்கு மனம் கனத்துப்போயிருந்தது.. வீட்டுக்கு போக டாக்ஸி-க்கு பணம் வேண்டும்.. அதை எடுத்து மீதம் பார்த்தால் பர்சில் 7 திர்ஹாம்சுக்கு மேல்  இல்லை.. எங்கு வெளியில் சென்றாலும் கூடுதலாக பணம் எடுத்துக் கொண்டு போக கணவர் அறிவுறுத்துவது தோன்றி மறைந்தது..

என் பிள்ளைகள் இது போல மேலும் சில அதிக விலை கொடுத்து விளையாட ஆசைப்பட்டபோது , சில நேரங்களில் மறுத்து இருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் கூட இது போல என் மனம் துடித்ததில்லை.. ரோஹித் அரை மணி நேரம் விளையாடி இருப்பான் , மீதி அரை மணி நேரம் அந்த பிள்ளையை விளையாட விட முடியுமா , எனக் கேட்கவும் மனம் துடித்தது.. அது இயலாது எனத் தெரிந்ததால் கேட்கவும் இல்லை..

அப்போது , ஒரு தம்பதி தங்கள் இரு சிறு குழந்தைகளுடன் உள்ளே நுழைந்து பணம் செலுத்தி பிள்ளைகளை விளையாட விட்டனர்.. அப்போது வாயில் கதவை அவர்கள் அடைக்கவில்லை. பணம் வாங்கும் அரபுப் பெண்ணும் பிள்ளைகள் விளையாடும் பின்பகுதிக்கு சென்றார்.. அப்போது இந்த சிறுவனும் கூட இருந்த குட்டி சிறுவனும்  மெதுவாக நடந்தபடி உள்ளே வந்தார்கள்.. இவர்களைப்பார்த்தால் அந்த அரபுப்பெண் என்ன சொல்வாரோ என  எனக்குள்  சிறு பதட்டம் எழுந்தது.. நான் நினைத்தது போலவே , பின்பக்கமிருந்து வந்த  அந்த அரபுப்பெண் அந்த இரு சிறுவர்களையும் "போங்க போங்க" என சிறிது கடுமையாக அரபியில் சொல்லவே இருவரும் வெளியேறினர்..

நான் என்னவோ போல் அமர்ந்திருந்தேன்.. அவர் ,சிறிது நேரம் பிள்ளைகளை ஆசைக்கு விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது.. ஆனால் காசு வாங்காமல்  விளையாட விட்டால் அவருக்கும்  ஏதும் பிரச்சனை வரலாம் எனவும் தோன்றியது.. அப்பெண்ணின் குழந்தை, அந்த குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்த  அவருக்கு தெரிந்தவர்கள்  போல் இருந்த ஒரு வளர்ந்த பையன் மற்றும் பெண்  எல்லாம் காசு கொடுக்காமல்தான் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நான்கைந்து பிள்ளைகளே விளையாடிக்கொண்டு இருந்த இடத்தில் அந்த சிறுவர்களை  ஒரு ஐந்து நிமிடமேனும் அந்த பெண் விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது..

திரும்ப அந்த சிறுவனை கவனித்தேன்.. அவன் வெளியில் நின்றவாறு, Jumping  castles -ல் குதித்து விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் சந்தோசத்தை சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்..  இடையிடையே என்னுடன் வந்து சென்று கொண்டிருந்த மகனிடம் , அந்த சிறுவன் கேட்டதை சொல்லி, அவனையும் காண்பித்தும்  இருந்தேன்.. என்னால் அங்கு அதற்கு மேல் அமர்ந்து இருக்கவும் முடியவில்லை.. மகனை அழைத்து :நாம போவோமா" எனக்கேட்டேன்.. அவனும் "சரி" என்று சொல்ல வெளியே வந்தோம்..

அதற்குள் அந்த சிறுவன்
எங்கோ சென்றிருந்தான்.. என்னிடம் இருந்த பைசாவுக்கு  அந்த சிறுவனுக்கு ஒரு சாக்லட் வாங்கிக் கொடுத்தால் கூட என் மனம் கொஞ்சம் அமைதி அடையும் எனத் தோன்றியது..என் இயலாமையையும் , மன வருத்தத்தையும் ரோஹித்திடம் (அவன்தான் அப்போது பக்கத்தில் இருந்த பெரியவன்)சொல்லியவாறே நடந்து வந்து கொண்டிருந்தேன்..

சிறிது தூரம் வந்ததும் "ஆரஞ்சு ஷர்ட் போட்ட பையன் அங்க இருக்கான் பாரும்மா" எனக்காட்டினான்.. மெஹந்தி போட்டு விடும் சிறு பெண்கள் இருந்த குழுவில் அமர்ந்து இருந்த சிறுவன் எதையோ use  and  throw  தட்டில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..  என்னை  அவன் பார்க்கும்போது, அவனைப்பார்த்து சிரித்தவாறே பிள்ளைகளிடம்  "அந்த தம்பிக்கு டாட்டா சொல்லு தங்கம்"எனக்கூறினேன்.. நான் சொல்லி முடிக்கும் முன் என்னை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தவன் எனக்கு டாட்டா காட்டினான்..

சிரித்தவாறு நாங்களும் கை அசைத்து  விட்டு வந்தோம்.. பணம் மட்டும் கூடுதலாக கொண்டு சென்றிருந்தால் ஒரு மனத்திருப்தியோடு வந்திருப்பேன்.. இப்போது மனத்திருப்தி இல்லாத ஒரு அனுபவப் பாடத்தோடு வந்தேன்..

அந்த பகுதி வளைவில் திரும்போது அவனை மீண்டும் ஒரு முறை பார்க்கலாமென திரும்பினேன்..  முன்பு நின்றிருந்த விளையாட்டு பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்..

வெள்ளி, 20 மே, 2016

மாற்றத்துக்கான சாவி

ஏனோ இதுவரை அல்லாத சொல்லவியலாத மனவருத்தம் நேற்றைய தேர்தல் முடிவுக்கு பின் இருந்தது.. முக்கியமாக சில தலைவர்களின் தோல்வி.. அதுவும் திருமாவின்  குறைந்த வாக்கு எண்ணிக்கையிலான தோல்வி மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.. பின்னர் வந்த அவரின் அறிக்கை அவர் மேல் இன்னும் நம்பிக்கை ஊட்டியது..

அந்த தலைவர்களின் மேல் மற்றவர்களுக்கு சொல்ல எந்த குற்றச்சாட்டுகள்  இருந்தாலும் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மாற்றத்திற்கான அடித்தளமாக எனக்கு பட்டன..  ஏற்கனவே பல முறை ஆண்டும், பல கெட்ட பெயர்கள் சூழ்ந்தும்  இருக்கிற கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதியை நம்பும் மக்கள் இதுவரை ஆளாத  ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் அதிகமிருந்தது..

பின் இலவசங்களுக்கும் பணத்துக்கும் மக்கள்  அடிமைப்பட்டு கிடக்கும்போது என்ன செய்ய இயலும் என்ற எண்ணம் வந்துவிட்டது..
நேற்று நெருங்கிய தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , நாங்கள் 3 பேரும் நாம் தமிழருக்குத்தான் ஒட்டு போட்டோம், ஆனால் திரும்ப அதிமுக வந்தது எங்களைப் போல பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது, ஆனால் என்ன செய்ய , நமக்கு யார் ஆண்டாலும் ஒரே மாதிரிதானே வாழ்க்கை , தனிப்பட்ட முறையில் நாம் பாதிக்கப்படவில்லையே, அதனால் வருத்தம் வேண்டாம் என கூறினார்..

யோசித்துப்பார்க்கையில் என்னைபோல போல மாற்றத்தை விரும்பும் பலரும் விலைவாசி உள்ளிட்ட பொது பிரச்சனையில் மக்களோடு மக்களாக பாதிக்கபடுவோமே தவிர  எந்த ஆட்சி வந்தாலும் தனிப்பட்டவகையில் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லைதான்..  ஆனால் ஈழப்படுகொலை நடந்த சமயத்தில் இருந்த ஆட்சி சுயநலத்திற்காக நடந்து கொண்ட விதமும் , மதுவிலக்குக்குக்காக போராடிய சசிபெருமாளின் மரணமும் மற்றும் பல மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகளும் மனதில் இருக்கின்றனவே..

மதுவால் உங்களுக்கு தனிப்பட்ட பாதிப்பு இல்லையென்றால், அதனால்  மட்டும் எவ்வளவு பேர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என உங்களை சுற்றி பார்க்கவில்லையென்றால் கூட  ஒருமுறை மெனக்கெட்டு அருகிலிருக்கும் ஆல்கஹால்  De -addiction  சென்டர்  சென்று பார்த்து வாருங்கள்.. இளைய சமுதாயம் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருப்பதை உணர்வீர்கள்..

ஆழ யோசித்திப்பார்க்கும்போது ஒன்று புரிந்தது.. இணையத்தில் பரவும்,விவாதிக்கப்படும் பல  உண்மை அரசியலை வாசிப்பது ஒட்டு போடும் மக்களில் எவ்வளவு பேர்? உண்மையில் மக்களில்  பலர் இணையம் உபயோகிப்பதில்லை.. நம் வீடுகளிலேயே அதற்கு சாட்சிகள் இருப்பர்.. மீதம் உள்ளவர்களில் செய்திகளின் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்பவர்கள் எத்தனை பேர்? குறிப்பாகப் பெண்கள்... பெண்கள் பலரும் சீரியலைத் தவிர நாட்டு நடப்புகளை அறிய என்ன பார்க்கின்றனர்? எவ்வளவு பெண்களுக்கு கல்லூரிப் பருவத்தினருக்கு நாட்டு  நடப்பை பற்றி தெரியும்?

எனக்குத் தெரிந்த வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்த ஆட்சி அமைந்ததற்கு  தன் வருத்தமான,கோபமான,ஆதங்கத்தை தன் பதிவில் வெளியிட்டு இருந்தார்.. ஆனால் உண்மையில் சொந்த நாட்டில் இருக்கும் மனைவியும் தான் விரும்பாத கட்சிக்குதான் ஆதரவு அளிக்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை..

பல ஆண்களும்  இப்படிதான் இருக்கின்றனர்.. நாட்டு நடப்பை தன் வீட்டு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பான வழியை அவர்களுக்கு திறந்து கொடுப்பதில்லை.. நாளேடுகளை படிக்க சொல்லி ஊக்கப்படுத்துவதோ, தான் அறிந்த நாட்டு நடப்புகளைப் பற்றி அவர்களிடம் விவாதிப்பதோ இல்லை.. ஒட்டு போடும் நாளில் மட்டும் அவர்களுக்கு இந்த கட்சிக்கு ஒட்டு போடு என்று சொல்வதோடு தன் கடமை முடிவுறுவதாக நினைக்கின்றனர்.. அப்படி சொல்லும்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் பகுதியில் ஓட்டுக்காக  அளிக்கப்பட்ட  பணமும், இலவசங்களும் கொடுக்கும் வசதிதான் பெரிதாகத் தெரியுமே தவிர எல்லாம் அறிந்த தன் வீட்டு ஆண்கள் சொல்லும் சொல்லல்ல.. மேலும் குருட்டுத்தனமாக இவருக்கு மாற்று இவர்தான் என கணிக்கின்றனர்..

இன்னொரு முக்கிய குறை,பல செய்திகளை பல காரணங்களால் மறைத்து வரும் ஊடகங்கள்.. எடுத்துக்காட்டுக்கு சாதிக் பாட்சா கொலையை பற்றி கொலையாளி அளித்த வாக்குமூலத்தை எவ்வளவு ஊடகங்கள் வெளியிட்டன.. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதுவும் செய்தவர்களுக்கு  எதிரான  ஆட்சி உள்ள மாநிலத்திலேயே.. உற்றுப்பார்த்தால் ஒருவருக்கொருவர் மற்றவரை காப்பாற்றித்தான் வருகின்றனர்.. ஏனெனில் இருவரின் மேலுமே குற்றம் உண்டு..இது போல இன்னும் பல பெரிய இடத்து விஷயங்கள்..

இதே  ஒரு சாதாரண மக்களில் ஒருவன் ஒரு கொலையிலோ  கொள்ளையிலோ ஈடுபட்டிருந்தால்  செய்திகளின் முதன்மை செய்தியாக ஆக்க கண் மூக்கு காது என வைத்து  அமோகமாக வியாபாரம் செய்திருப்பர்.. தெரியாமல் சிக்கிகொண்ட பேரறிவாளனின் உண்மை நிலை வெளிப்படையாகத் தெரிந்தும் எவ்வளவு ஊடகங்கள் அதை வெளிச்சமிட்டன? காசும், பதவியும் இருப்பவனுக்குத்தான் அரசாங்கமும், ஊடகமுமே தவிர சாதாரண மக்களுக்காக இல்லை..

அதனால் நாட்டு நடப்பை அறியாத மக்களை  குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..

ஆகையால் நல்ல ஆட்சிக்கான மாற்றத்தை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புபவர்கள் இனியாவது நாட்டு நடப்புகளை தன் குடும்ப உறுப்பினர்கள் அறிந்து கொள்ள பாதுகாப்பான வழியை திறந்து கொடுங்கள்.. நல்ல மாற்றத்துக்கான சாவி அதில்தான் ஒளிந்து இருக்கிறது.. அதை கொண்டுதான் திறக்க முடியும் நம் தமிழகத்துக்கான நிரந்தர விடியலை..


- 20-5-2016

புதன், 18 மே, 2016

அரசியல் தெளிவு

வாழ்க்கையில் இன்று கற்றுக் கொண்ட  விஷயம், இனி இந்த அதிமுக,திமுக உடன்பிறப்புகளிடம் மட்டும் அரசியல்  பற்றி  பேசவே கூடாது என்பதுதான்..

கட்டாயமாக எல்லோரும்  ஒட்டு போட வேண்டும் மற்றும் இதுவரை ஆண்ட கட்சிகளைத் தவிர ஆளாத கட்சிக்கு(எதுவாகினும்-சுயேட்சைகள் உட்பட) வாக்கு அளித்து ஒரு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும்,  அப்படி நீங்கள்  ஒட்டு போடுகிற கட்சி ஜெயிக்கிறதோ, இல்லையோ அது பெரிய விஷயமில்லை.. ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகள் திரும்பவும் வந்து,முன்பு செய்த அராஜகங்களை, ஊழலை , துரோகத்தை இனியும் செய்தால் அதில் நம் பங்கு  குற்ற உணர்ச்சி இல்லை என்று திருப்தியாவது பட்டுக்கொள்ளலாம்-  இரண்டு நாட்களுக்கு முன்பே  இப்படி எல்லாம் போட்டு பதிவொன்றை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்..

ஆனால் பாருங்கள், நாம் கருத்தோ அறிவுரையோ சொல்வதற்கு முன் நாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற நியதி புரிந்திருந்ததால் , நான் பதிவு செய்யவில்லை.. ஏனெனில்  எங்கள் இருவருக்கும் ஓட்டு ஸ்லிப் ஏதும் கொடுக்கப்படவில்லை  (கடந்த தேர்தலின்போதும் எங்களின்  பெயர் விட்டு போயிருந்தது) என்ற தகவல் , இப்போது அங்கு ஓட்டு போடுவதற்காக செல்ல இயலாத சூழ்நிலை  , வசதி வாய்ப்பு என   எல்லாம் சேர்ந்து ஓட்டு போட செல்லவில்லை..

நான் ஓட்டு போடாம எப்படி மற்றவர்களை ஓட்டு போடுங்க என்று சொல்வதென விட்டு விட்டேன்..

இரு நாட்களுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக எழுதி  இருந்த ஒரு நண்பருக்கு,என்னை போலவே ஒரு திமுக அதிமுக ஆட்சி திரும்ப அமைய வேண்டாம் என நினைக்கும் ஒரு நண்பர் "திமுக செஞ்சது மறந்துட்டீங்களா" எனக் கேட்டார்..  அதிமுக இப்படி செஞ்சாங்களே நீங்க அங்க கேள்வி கேட்க முடியுமா என்ற ரீதியில்தான் இருந்ததே தவிர திமுக செய்ததை ஒத்துக்கொள்ளும் மனநிலை அவரிலிருந்து  எட்டிப்பார்க்கவே இல்லை.. பதில் சொல்ல இயலாமல் போகவே நீங்க அதிமுக தான் , அதான் இப்படி பேசறீங்க என கேள்வியை மாற்றி போட்டு அதிலேயே இருந்தார்.. இப்படி ஒருசிலர்தான்  இருப்பார்கள் என நினைத்திருந்தேன்..

Exit Poll கருத்துக்கணிப்பை பார்த்ததும் கொஞ்சம், இல்லையில்லை நிறையவே ஏமாற்றம் இருந்தது.

ஆதலால் நண்பர்கள் மற்றும் உறவு வட்டத்தில் நெருங்கியவர்களிடம் அவர்கள் ஓட்டு போட்ட கட்சிகளை பற்றி நானே சிறு கருத்துக்கணிப்பு நடத்த துவங்கினேன்.. ,மநகூ , நாம் தமிழர், திமுக,அதிமுக, பிஜேபி, பாமக என சரிசமமாகத்தான் இருக்கிறது.. நிறைய இடங்களில் இழுபறி இருக்கும் என்றும் தெரிகிறது..

அதிமுக,திமுக இரு கட்சிகளை தவிர்த்து ஓட்டு போட்டதாக சொன்னவர்களிடம் ஒரு ஸ்மைலியை அனுப்பி விட்டு கடந்திருக்கிறேன்.. ஆனால் இரு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டவர்களிடம் (அரசியலில் தீவிர நாட்டம் இல்லாதவர்கள்) கேட்கப்போன போது கிடைத்த சில பதில்களோ, எங்க ஏரியா-ல  அதிமுக எல்லோருக்கும் பணம் கொடுத்துருக்காங்க..அதனால் திமுக-க்கு போட்டேன் , வீட்ல போட சொன்னாங்க அதனால் போட்டேன் என்பது போல அற்ப காரணங்களே...

நாமும் இப்போதுதானே அரசியலை உள்வாங்கி இருக்கிறோம், கடந்த தேர்தல்களின்  போது ஆழ யோசிக்காமல் பெற்றோர் சொன்னதற்காகவும், இருக்கிற ஆட்சி போக வேண்டும் என்ற இது போல அற்ப காரணங்களுக்காகத்தானே போட்டிருக்கிறோம் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன்..

கட்சியில் தீவிரமாக இருப்பவர்களிடம் கேட்கப்போனபோதுதான் வெறுத்துப்போனது..  அதிமுக நண்பரிடம் ஒரு தப்பை  சொல்லி கேட்கப்போனால் திமுக இதை செய்ததே என இன்னொன்றை எடுத்து நீட்டுகிறார்கள்.. திமுகவிடம் அவர்கள் செய்த தப்பை கேட்கப்போனால் அதிமுகவின் தப்பை வாயிலேயே முன்னெச்சரிக்கையாக  வைத்து இருக்கிறார்கள்.. இப்படி , மது விலக்கிலிருந்து ஆரம்பித்து 2G , சொத்துக்குவிப்பு, 570 கோடி , சாதிக் பாஷா என வந்து  நிற்கிறது அவர்களின் குற்றச்சாட்டு பட்டியல்.. ஆக மொத்தம் ஒன்றுதான் தெளிவாக புரிந்தது, அவரவர் கட்சி தலைமை செய்த தவறை இருவருமே ஒத்துக் கொள்வதில்லை.. அந்த கட்சிகளைத் தீவிரமாக ஆதரிக்கும் எல்லோருமே இப்படிதான் இருக்கிறார்கள் என புரிந்தது..

இரண்டு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கற அளவுக்கு சம்பாதிச்சு இருக்காங்களே ,  நாம வருஷம் முழுவதும் மாடு மாதிரி உழைச்சா கூட அதுல ஒரு பங்கை சம்பாதிக்க முடியுமா "என்ற எண்ணம்  ஏன் இவர்களுக்கு எழவே மாட்டேன் என்கிறதென்று  இதுவரை எனக்கு புரியவில்லை.. எந்த அளவுக்கு அவர்கள் கொள்ளை அடித்திருந்தால் இந்த அளவுக்கு ஒட்டுக்கென்று பணத்தை அள்ளித் தெளிக்க முடியும் என்றும் யோசித்து பார்ப்பதில்லை.. இதெல்லாம் யார் பணம்?, நமக்கு அடிப்படை வசதிகளாக மாறி வந்து இருக்க வேண்டிய பணம்தானே? திரும்பவும் ஓட்டு போட்டு கொள்ளை அடிக்க விடுகிறவர்களை என்ன சொல்வது? அரசியலில் இருப்பவர்கள் ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஆதாயம் உண்டு என்று சொல்லலாம்.. அரசியல் சாராத அல்லது தொண்டர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களும் இப்படி செய்தால் நாடு எங்கு தாங்கும்?

இதில் என் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமோ , இந்த இரு கட்சிகளையும் குறிப்பிடத்தகுந்த  நல்ல காரணங்களை குறிப்பிடாமல் ஆதரிக்கிறவர்களைப் பார்க்கும்போது , நீங்க இன்னும் வளரணுமே என்று சொல்லத் தூண்டுமளவுக்கு  வந்திருக்கிறது..  அமாம் அவர்கள் இன்னும் புத்தி அளவில் வளரத்தான்  வேண்டியிருக்கிறது..

(குறிப்பு : நான் எந்த குறிப்பிட்ட கட்சியையும் ஆதரிப்பவளில்லை.. மாற்றாக வேறு எந்த கட்சிக்காவது ஓட்டு போட்டிருக்கலாமே என்று நான் சொன்னதிலிருந்தே இதை புரிந்திருப்பவர்கள் மிக மிக புத்திசாலிகள் :) )

-18-5-2016