செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கனக்கும் சுமை

உயிரற்ற மர மேசைகளுக்கும்
உயிரிருந்தும் நம்மிருவரின்
அந்நொடி உயிரறியாத
இரண்டு ஆத்மாக்களும் நடுவே
உன்னால் கசக்கி எறியப்பட்ட 
நினைவுகளை இன்றுவரை
பத்திரப்படுத்தி வருகிறேன்....
சமய சந்தர்ப்பம் பார்த்து வரும்
உன் நினைவுகளின் போது
அவற்றை எடுத்து திரும்ப
புரட்டிப் பார்ப்பேன்...
சிறு ஏக்கத்தையும் உன்னிடம்
கேட்கத் துடித்த கேள்விகளையும்
மூச்சுக்காற்றின் வழி தென்றலாய்
அதில் வருடவிட்டு மூடிவிடுவேன்..
மனம் இந்த உலக வாழ்வியலுக்குள்
பொருந்தும் கணமெல்லாம்
இந்த விலை போகாத
வெற்று நினைவுகள் எதற்கு
பாரமாக என கேட்டுப் பார்க்கும்....
கசக்கி எறிந்த நினைவுகளின்
சில துகள்களாவது அவள்
முந்தானை விளிம்பில்
தொங்கிக் கொண்டிருந்த
நூலின் வழி சென்று
அவள் மனதில் கலந்திருக்கும்..
அந்நினைவுத்துகள்கள்
அவள் மனதை அரிப்பதை
அறியப்போகும் கணம்
நான் சுமக்கும் அவள் நினைவுகளின்
கனத்தை இறக்கி வைப்பேன் என
அதற்கு உறுதிமொழி
கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்...

தொலைந்த சூழல்

ஒரு பெருமழை நாளில்
முன்திட்டில் அமர்ந்து
மாமரக் கிளைகளின் வழி
மண்ணைத் துளைத்து
வாசத்தைக் கிளப்பிய மழையை 
ரசித்துக் கொண்டிருந்தேன்..
மனம் லயித்துப்போன நேரத்தில்
துளிகளை உதிர விட்டுக்
கொண்டிருந்த சில மாவிலைகளையும்
பாதியளவு இடத்தை மட்டும் நனையக்
கொடுத்திருந்த திண்ணையையும்
மழையில் குளித்துக் கொண்டிருந்த
முன் வீட்டு ஓடுகளையும்
அந்நாளுக்கு சாட்சியாக்கினேன்...
கால ஓட்டத்தில் திண்ணை
இல்லாமலே போயிருந்தது
ஓட்டுக்கூரையோ சிமெண்ட் கூரை
வரவால் காணாமல் போயிருந்தது.
மீதம் இருந்த சாட்சிகளை
தாங்கிக் கொண்டிருந்த
மாமரத்தின் அடியில்
நின்று தேடிக் கொண்டிருக்கிறேன்
அந்த மாவிலைகளை..

குழந்தை மனது

தான் மனதில் நினைத்த
எவரிடமோ தானாகவே
உரையாடிக்கொண்டிருக்கிறாள்
குழந்தை...
சிரித்தவாறே சிறிது நேரம்
ரசித்து விட்டு பாதியிலேயே
யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்
என வினவுகிறேன்...
நான் கவனித்திருந்ததை அறிந்ததும்
அவள் முகத்தில் மாற்றம் வரும் என
எதிர்பார்த்திருந்தது
தோல்வியில் முடிகிறது...
அதே உணர்ச்சியோடு சற்று முன்
என்னிடம் கேட்ட விஷயத்தை சொல்லி
அதைதான் இப்போதும் உன்னிடம்
கேட்டுக்கொண்டிருந்தேன் என
படு சாதரணமாக சொல்கிறாள்...
அவள் பதிலில் புரிந்தது
சில நேரங்களில்
குழந்தையின் மனது
குழந்தை மனது அல்ல என்று...

பிள்ளைகளுக்கு காய்ச்சல்

கடும் குளிரினூடே
ஒருவித வெம்மையின்
தாக்கத்தை வீடெங்கும்
உணர முடிகிறது...
எப்போதும் வருகை தந்து விடும்
டோராவும் சோட்டா பீமும்
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளேயே
அடைபட்டிருக்கிறார்கள்...
டெடிபேர் பொம்மைகளும்
கார் பொம்மைகளும்
ஸ்பரிசச் சூடு கிடைக்காமல்
முடங்கிக் கிடைக்கின்றன...
மாலை நேரங்களில்
கூட்டி எடுக்கையில்
நிரம்ப வரும் குப்பையோ
வெகுவாகக் குறைந்திருக்கிறது...
கொஞ்சல்களும் குறும்புகளும்
எதிரொலித்த சுவர்களின் மேல்
இருமலும் முனகலும்
தங்கள் ஆதிக்கத்தை
தொடுக்கின்றன....
மொத்தத்தில் பிள்ளைகளின்
அன்றாடங்களை குலைத்து
கொடும் அமைதியான நேரங்களைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது
அவர்களைப் பிடித்திருக்கும்
பொல்லாக் காய்ச்சல்...