புதன், 20 மே, 2015

பேசும் கலை


ஒரு சில வார்த்தைகள் சொல்லப்படும் விதத்திலும்
ஒரு சில வார்த்தைகள் எடுக்கப்படும் விதத்திலும்
ஆரம்பமாகிறது பிரச்சனை...!!!
நல்ல வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளாகும்
கெட்ட வார்த்தைகளும் நல்ல வார்த்தைகளாகும்
அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தால்...!!!
ஆனால் பேசும் வார்த்தைகள்
எல்லாவற்றையும் நல்லவைகளாக்கலாம்
பேசும் கலை மட்டும் அறிந்திருந்தால்...!!!!!!!

எண்ணம்போல் வாழ்வு

கடக்கும் ஒவ்வொரு இரவிலும்
நித்திரை அழைக்கும் முன்
உனை நேரில் திரும்ப காண்பது
போலான காட்சியை
என் மனக்கண்ணில் ஓட விடுகிறேன்...
காலம் இதை உண்மையாக்க
எண்ணம் கொண்டிராமல் போனாலும்
எனதிந்த எண்ணம் என்றாவது ஒருநாள்
காலத்தை உண்மையாக்க வைக்கும்
என்ற நம்பிக்கையில்......!!!!!!!

ஒட்டி இருக்கும் நினைவுகள்

மனதில் இருந்து
என்னை விரும்பாத
சில மனங்களையும்
அவர்களால் நிகழ்ந்த
சில விரும்பாத செயல்களையும்
உதறி விட முயல்கிறேன்
இருந்தும் என் சிந்தையையும் நேரத்தையும்
தன்னகத்தே ஈர்த்து
பலம் இழந்த வெற்றுடலாய் எனை ஆக்கி
குதூகலிக்கின்றன அந்நினைவுகள்......!!!!!

மறுமுகம்

சில பாராட்டுகளுக்கு பின்
ஒளிந்திருக்கும் பொறாமையையும்
சில மட்டம் தட்டுதல்களுக்கு பின்
மறைந்திருக்கும் ஆற்றாமையையும்
அறிந்தும் அறியாதது போல்
புன்னகைத்தவாறே அச்சூழல் கடக்கிறேன்
சில மனிதர்களின்
மறுமுகங்களை
பார்க்க வித்திட்ட சூழ்நிலைக்கு
நன்றி சொல்லியபடி......!!!!

மழை...

வீட்டினுள் பல கடமைகளுக்குள்
சிக்குண்டிருக்கும் வேளையில்
ஆயிரம் கவிதைகளை தருகிறேன்
வெளியே வா என
அழைத்துக் கொண்டிருக்கிறது
மழை..!!!

தவற விட்ட கவிதை...!!!!

கவனியாமல் விட்ட
விதானத்தின் மேல்
அமர்ந்திருந்த பறவையால்
தவற விட்டேன்
ஒரு கவிதையை...!!!!

குழந்தையின் சிரிப்பு!!!!!

பதில் தெரியாத
பல கேள்விகளை
எழுப்புகிறது
உறக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின் சிரிப்பு!!!!!






----------------------



மழலையின் சிரிப்பில் 
ஏமாற்றம் இல்லை
வஞ்சகம் இல்லை
சோகம் இல்லை
எதிர்பார்ப்பு இல்லை
பொறாமை இல்லை
கேலி இல்லை
சிரிப்பு மட்டுமே இருக்கிறது 

-------------------------------

அரபு நாட்டில் மழை.....

அரபு நாட்டில்
மழை மிக அரிது!
மழைப் பொழிவை
குழந்தைகளுக்கு
காண்பிக்கவும்
மழை நீரில்
காகிதக் கப்பல் விட
கற்றுக் கொடுக்கவும்
அரபு நாட்டில்
வாய்ப்பில்லையெனக்கு.......
அப்படியே அரிதாக
மழை பெய்தாலும்
தூறலை மட்டும்
சாரலாக விட்டு
செல்லும் பால்கனியில்.....
ஆனால்
தொலைக்காட்சிகளின்
புண்ணியத்தால்
சிறிதளவு நீங்குகிறது
அக்குறை....
ஆம்!
இந்தியாவில்
மழை என்று
வரும் செய்திகளில்
காட்டப்படும் காட்சிகளின்
மூலம்
இங்கிருந்தே
அனுபவிக்கிறேன்
மழை பெய்யும்
சூழலை....
பாலைவனத்து மண்ணில்
இருந்து நுகர்கிறேன்
மழைக்கு முன் வரும்
மண்வாசனையை..
வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும்
முடங்கியிருக்கும்
எனக்கு உண்மையிலேயே
உணர முடிகிறது
அவ்வற்புதத்தை.....
ஆம்!
படிக்கையிலும்
பார்க்கையிலும்
உணர முடிகிற
மழை ஓர்
அற்புதம்தான்..........
- இது நான் இங்கு வந்த ஆரம்பத்தில் எழுதியது... ஆனால் இப்போது
மேனியில் மோதும் சில்லென்ற காற்றும்
தார் சாலையிலும், மண் சாலையிலும்
குழிந்த பகுதியில் தேங்கிய நீரின் மேல்
விழுந்து வட்டமாக பரவும் நீர் துளிகளும்
வேகமாக கடக்கும் வாகனத்தின்
சக்கரத்தால் மெல்ல உயர்ந்தெழும்
நீரின் எழுச்சியும்
சட சடவென விழுவதால்
எழும் மண்ணின் வாசனையும்
சாரலை பன்னீரை போல்
தூவும் வகையில் மிதமாகவும்
தாளிக்கும் ஓசையுடன் வேகமாகவும்
இவ்வாறு நேரத்துக்கு ஒரு ரூபத்தில் வருகை தந்து
மழைக்கு தூரமான தேசம் இதுவென
நான் நினைத்தது தவறு என
கடந்த மூன்று மாதங்களாக
சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது மழை !!!!...

மோதும் எண்ணங்கள்

மோதிக் கொண்டிருக்கும்
எண்ணங்களுக்கு பயந்து
கிட்ட வர மறுக்கிறது
தூக்கம்...!!!

கனவின் தொடர்ச்சி

எழுப்புதலால் துண்டிக்கப்பட்ட
அழகிய வாழ்க்கையை
திரும்ப வாழ்ந்தே தீருவது
என கனவுலகில்
பிரவேசிக்க ஆயுத்தமானேன்...!!!
விட்ட வாழ்க்கையின் தொடர்ச்சியை
கண்களில் ஏற்றிக் கொண்டு
தொடர போன என்னை
சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த
உறக்கம் அணைத்துக் கொண்டது....!!
திரும்ப நித்திரை முடிந்து எழும்போது
வேறு ஒரு வாழ்க்கையிலிருந்து
வெளி வருகிறேன்...!!!
முன்னமே தொடரப்போன
வாழ்க்கையை தொடர்ந்தேனா
அல்லது தொடர்ச்சியிலேயே
இன்னொரு வாழ்க்கையில்
இணைந்தேனா என்ற
குழப்பத்துடனேயே
புலர்கிறது இன்றைய
என் காலைப்பொழுது....!!!

குடி எங்கள் மாநிலத்தை காக்கும்..

குடி குடியை கெடுக்கும்
ஆனால்
எங்கள் மாநிலத்தை காக்கும்..
ஊருக்கொரு "டாஸ்மாக்"
இதில் ஆண்டு வருமானம் இவ்வளவு
உயர வேண்டும் என "டார்கெட்"
சுடுகாட்டுக்கு போகும்
உயிர்களின் எண்ணிக்கை
முக்கியமல்ல அரசுக்கு
சாராயக் கடைக்கு வரும்
வருமானமே முக்கியம்...
ஆண்டுக்கு 20% அதிகரிக்குது
டாஸ்மாக் வருமானம்
ஆனால் குடிப்பவன் மொத்தமாக
இழக்கிறான் தன்மானம்..
ஊருக்கு ஒரு கடை திறந்து
அமோகமாக நடக்குது வியாபாரம்
இதில்
ஊடகங்களில் குடிக்கும் காட்சி
வரும்போதெல்லாம்
"குடிப்பழக்கம் நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடு" என்று விளம்பரம்..
ஏற்று நடத்த பல நல்ல
சில்லறை வணிகங்கள் இருந்தும்
மனிதர்களை சில்லறை காசு
பெறாதவர்களாக ஆக்கும்
இந்த வணிகம் எதற்கு?
ஆம்....
உங்கள் கஜானாவே குடிமகன்களை
நம்பித்தானே உள்ளது..
குடிமகன்கள் வயிற்றை நிரப்பட்டும்
நீங்கள் கல்லாவை நிரப்புங்கள்!!!!

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (10)


  1. ஒரு நெருங்கிய மரணத்தை காணும்போதோ அல்லது நெருங்கிய ஒருவரை அவரின் மரணத்தருவாயில் சந்திக்கும்போதோ . வாழ்க்கை இவ்வளவுதான் , இதற்குள் எதற்கு இத்தனை போட்டி , பொறாமை என்று எழும் எண்ணம் அங்கிருந்து வெளியேறியவுடன் தன் சுயம் இழந்து நீர்த்து போய் விடுகிறது....
  2. அனுபவம் வாய்ந்த ஒவ்வொரு மனதிலும், விரிக்கவும் விவரிக்கவும் முடியாத பல ரகசியங்கள் தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லாமல் சுருண்டு படுத்துக் கொண்டுதானிருக்கின்றன.....
  3. மிக நெருங்கிய உறவுகளைத்தவிர ((கணவன் மனைவி, பெற்றோர்) மற்ற உறவுகளின் உறவு நீடிக்க வேண்டுமென்றால் சிறிது இடைவெளி மிக மிக அவசியம் ....
  4. நிலைகளில் இருப்புக்கொள்ள மறுக்கும் மனம் நிலையில்லா சம்பவங்களின் பின்னாலேயே அணிவகுத்து செல்கிறது
  5. சுய முன்னேற்ற நூல்களையோ , தன்னம்பிக்கை நூல்களையோ வாசிக்கும்போது கடவுள் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது....
  6. நம்பிக்கையே நட்பு உள்ளிட்ட எந்த ஒரு உறவையும்  தாங்கும் மூலதனம்..
  7. தன்னம்பிக்கையின் நிழலில் ஒதுங்கி நிற்கும் நபர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன கவலைகள்.....
  8. சுய சம்பாதனை இல்லாத ஆணோ பெண்ணோ, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் தனக்கு நெருங்கியவர்களிடமே தன் சுயமரியாதையை இழக்க நேரிடுகிறது

  9. மற்றவர் மனங்களை துல்லியமாக காட்டும் கண்ணாடி, நமக்கு வரும் கஷ்டங்கள்தான்....
  10. காட்டப்படும் பாசத்தின் பின்னால் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டியிருப்பதை அறிய நேரும்போது, அந்நபர் அதுவரை காட்டிய அன்பு சந்தேகிக்கப்படுவது மட்டுமின்றி அவர் மீது மனதில் இருந்த நன்மதிப்பும் உதிர்ந்து விடுகிறது....



எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (9)

  1. வாழ்விலோ, தொழிலிலோ இடறி விழுந்தவரை பார்த்து கைக்கொட்டி சிரித்தோ அல்லது கை நீட்டி ஏசியோ காயப்படுத்தும் போது, நாம் இடறி விழுந்தபோது ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட காயங்களின் வடு கண்ணுக்கு தெரிவதில்லேலை நமக்கு.....
  2. அலட்சியங்களை அலட்சியப் படுத்துபவர்களுக்கு வாழ்வில் லட்சியங்களே இருக்காது.
  3. பெரும்பாலும் நாம் அன்பு என்ற நீரை ஊற்றி வளர்க்கும் நட்பு என்ற மரம் நமக்கு இளைப்பாறுதல் தேவைப்படும்போது நிழல் தருவதில்லை.. நாம் கவனிக்காமல் விட்ட அல்லது அலட்சியப்படுத்திய மரங்களே (நட்புகளே) நமக்கு ஆசுவாசம் தேவைப்படும்போது நிழல் கொடுக்கின்றன...... .
  4. வென்றவர் அனைவரும் தோற்றதுண்டு..
    தோற்றவர் அனைவரும் வென்றதில்லை..
  5. நன்றி மறந்தவர்கள், நாம் அறிந்தவர்களுக்கு செய்யும் உதவியையும் நிறுத்தி விடுகிறார்கள்...
  6. நாம் ஒரு காரணத்தைக் குறித்து குறை கூறுபவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது 
    நம்மை குறித்துக் குறை கூற......!!!!
  7. ஒரு பாராட்டு பல பாராட்டுகளை பெற்றுத் தரவல்லது 
  8. ஒரு புது பிரச்சனையோ, நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சனையோ திரும்ப கிளர்ந்தெழும்போது, அவை மற்ற எதிலும் மனதை செலுத்தவிடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டேதான் இருக்கிறது.
  9. ஒரு விஷயத்தில் நம் மீது குற்றம் இல்லை என நம் மனதுக்கு தெரிந்தாலும், பிறரால் குற்றம் சாட்டப்படும் போது, எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே ஓரளவு நிம்மதியை மீட்டு தருகிறது.
  10. தற்கொலை என்பது கடக்க முடியாத பிரச்சனைகளால் எடுக்கும் முடிவல்ல, பிரச்சனைகளை கடக்க முடியாது என எண்ணும் எண்ணத்தால் எடுக்கும் முடிவே.......

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (8)

  • வெறும் கண்ணீர் மட்டும் வெற்றியின் சிகரம் எட்டாது..
  • நம் குணத்தை போலவே மற்றவர்களின் குணங்களும் என்ற எண்ணமே மற்றவர்களின் செயல்பாடுகளை குறித்து கவலை கொள்ள அடிப்படை காரணம்..
  • பிரச்சனைகள் தொடங்கும்போதுதான் பிரார்த்தனைகளும் தொடங்குகின்றன..
  • நல்லது செய்யும் போது அப்பா குழந்தையாகவும், குறும்பு செய்யும்போது அம்மா குழந்தையாகவும் மாறிட்டு இருக்கு அப்பா, அம்மாவின் குழந்தை...
  • சட்டம் படித்துதான் நீதிபதியாகணும்னு அவசியமில்லை, ரெண்டு குழந்தைகளுக்கு பெற்றோரா இருந்தாலே போதும்.. தீர்ப்பு சொல்ல அடிக்கடி வழக்கு வந்துட்டே இருக்கும்....
  • கடனும், வறுமையும் நம் முன் ஆடும் போது, நம் முன் இருந்த சில உறவுகளும் நட்புகளும் மாயமாகி விடுகின்றனர்...
  • ஒருவரின் "வெற்றி" தரும் அவரின் மீதான ஒட்டு மொத்த பார்வையை விட அவர் " மரணம்" தரும் அவர் மீதான பார்வை குவியல்கள் அதிகம்.....
  • என்னை விட வேகமாக கிளம்புகிறது நேரம்....
  • சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட சாதிக்க தூண்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது....
  • ஒருவரின் குணத்தை பார்த்தோ, பழகும் விதத்தை பார்த்தோ இச்சமூகம் அவனை பார்ப்பது குறைவு.. பெரும்பாலும் ஒரு மனிதன் மற்றவர்களின் வார்த்தைகளின் மூலமே பார்க்கப்படுகிறான்..

திங்கள், 18 மே, 2015

சுவரொட்டி

எப்போதும் சிடுசிடுப்புடன்
சிரிக்க மறந்த நடத்துனரின்
முகத்தை சற்றும் மாற்றமில்லாமல் 
பிரதிபலிக்கிறது
சாலையின் தடுப்பில் ஒட்டப்பட்டிருக்கும்
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி...!
முகம் முழுக்க மஞ்சளுடன்
ஒரு ரூபாய் நாணய அளவுக்கு
குங்குமத்தை திலகமாக
இட்டபடி காட்சியளிக்கும்
தோழியின் தாய் சுமங்கலியாகவே
சென்றடைந்ததை பறை சாற்றுகிறது
மளிகைக்கடையின் அருகில்
ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி....!
நேரில் பார்த்தால் சிரித்தபடி
கடந்து செல்லும் அளவுக்குண்டான
சிநேகம் கொண்டிருந்த ஒப்பந்ததாரரின்
இளவயது மரணத்தை சுட்டிக்காட்டுகிறது
ஆரம்பப்பள்ளி மதில் சுவரில்
ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி..!
வளர்ந்த இடம் விட்டு தூரம் இருந்தாலும்
எனக்கும் பிறந்த வீட்டினருக்கும்
அறிந்தவர்களின் சுக துக்க செய்திகள்
எங்களின் நல விசாரிப்புகளுடனே
பகிரப்பட்டு விடுகின்றன...!
நான் அறிந்து என் வீட்டார்
அறியாதவர்களின்
சுக செய்திகள் என் காதுக்கு
எட்டாமல் போனாலும்
அவர்களின் மறைவு செய்தியை
ஒவ்வொரு முறை
பிறந்தக விஜயத்தின்போதும்
தவறாது தெரியப்படுத்தி விடுகின்றன
சுவரொட்டிகள்.....!!!!

ஞாயிறு, 17 மே, 2015

மழலை கவிதைகள்

நான் அடித்து
வந்த அழுகையை
"வலிக்குதா" என்ற
என் வார்த்தைக்காக
ஓடி வந்தணைத்து
திருப்பி கொடுத்தாய்
என்னிடம்.....!!!



--------------------------

எவ்வித சந்தர்ப்பத்திலும்
சந்தோஷத்தில் முழுதும்
லயிக்காத மனம்
தோற்று விடுகிறது
குழந்தையின் சிரிப்பிடம்....!!!

---------------------------

நாம் சோர்ந்திருக்கும்போது
வந்தணைத்து ஸ்பரிசத்தால்
தேற்றும் குழந்தையிடம்
காண முடிகிறது
தாயின் அரவணைப்பை....!!!

---------------------------

குழந்தைகள் இவ்வுலகை
கற்றுக் கொள்ள
ஆரம்பிக்கும் முன்
நாம் கற்றுக் கொள்ள
நிறைய இருக்கிறது
அவர்களிடமிருந்து....!!!

------------------------------

ஒவ்வொரு வார்த்தையும்
தனித்துவமான அழகை
பெறுகின்றன
குழந்தைகளால்
முதல் முறையாக
பேசப்படும் பொழுது...!!!

அம்மா வீட்டு தீபாவளி


சிறு வயதில் தீபாவளி
ஒரு வாரம் முன்னதாகவே
ஆரம்பித்துவிடும் பட்டாசுகளுடன்...!!!

வீட்டில் யாருக்கும் பிடிக்காத
துணியை எடுக்க பிடிவாதம்
பிடித்து வெற்றிகரமாக
வாங்கிய புதுத்துணிக்கு
தீபாவளியன்று பட்டாசு சிதறல்கள்
கொடுத்தது திரும்ப
அணிய முடியாதபடி ஓட்டைகளை
பிடிவாதத்திற்கு பரிசாக ...!!!

பலகாரங்களை அம்மா செய்ய செய்ய
ஒரு பிடி பிடித்து விட்டு
தீபாவளியன்று ஒன்று கூட
சாப்பிட பிடிக்காத
திகட்டல் முடிந்து விடும்
அடுத்த நாளிலுருந்து...!!!

காலையில் அம்மாவின்
பேச்சுக்கிணங்க தலையில் எண்ணெய்
வைத்து முதலில் யார் சென்று
குளித்து விட்டு வருவது
என்ற போட்டி சகோதரர்களுடன்...!!!

காலையில் முதலில்
யார் வெடிப்பது பட்டாசுகளை
என்ற போட்டி மனப்பான்மை
எட்டிப்பார்க்கும் எங்களுடன்
பக்கத்து வீட்டு நண்பர்களுக்கும்...!!!

தீபாவளியன்று அப்பாவுக்காக
சன் டிவி-யில் போடப்படும்
சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தை
விட்டுக் கொடுத்து விட்டு
மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும்
நாம் விரும்பும் நிகழ்ச்சிகளை
பார்க்க முடியவில்லையே என்ற
பாடாய்படுத்தும் ஏக்கம்...!!!

பெண்தான் ஒவ்வொரு வீட்டிற்கும்
பலகாரம் கொண்டு சென்று
கொடுக்க வேண்டும் என்று
என் மற்றவரின் மீதான சுட்டிக்காட்டல்களையும்
மீறி கொடுத்தனுப்பும் அம்மா....!!!

கடந்த சில தீபாவளிகளில்
அண்டை வீட்டு சிறுவர்களை
அழைத்து இரவன்று பட்டாசுகளை
வெடிக்க செய்து பார்த்து ரசித்தது...!!!

கடந்த தீபாவளியில் ஒன்றரை வயது
மகனுக்காக கம்பித்திரி மத்தாப்பு
சுற்றிக்காட்டி ரசிக்க வைத்தது...!!!

ஆனால் இத்தீபாவளி....!!!

தீபாவளி எப்போது என்று
என் அம்மா சொல்ல கேட்க
வேண்டிய நிலை....!!!

தீபாவளி என்ற குதூகல
பண்டிகையின் கொண்டாட்டங்களை
இழந்திருக்கும் பிள்ளைகள்...!!!

முகநூலில் நண்பர்களின்
பதிவுகள் வாயிலாகவே
தீபாவளி கொண்டாட்டத்தை
நினைத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை...!!!!

ஆனால் ஒரே ஆறுதல்...!!!

அவரவர் பணிகளின் காரணமாக
பிரிந்திருந்த சூழ்நிலையில்
இதுதான் நானும் என் கணவரும்
சேர்ந்திருக்கும் முதல் தீபாவளி...!!!
எங்களை பொருத்தவரை
தலை தீபாவளி...!!!

என் கணவரை துணிக்கடையில்
மணிக்கணக்கில் காத்திருக்க
வைத்த பாக்கியத்தை
எனக்களித்ததும்
இந்த தீபாவளிதான்...!!!

இப்படி சின்ன சந்தோசங்களை
தவிர பல முன் கொண்டாட்டங்களை
இழக்க வைத்திருக்கிறது
இந்த தீபாவளி....!!!

இருந்தாலும் எந்த நாளையும்
அழகாக்குவது
நம் எண்ணங்கள்தானே...!!!
காத்திருக்கிறேன்
அந்நாளை அழகுபடுத்த
நல்ல எண்ணங்களுடன்..!!!

தர்மம் தலைமுறையையும் காக்கும்..


தர்மம் நம் தலையை
மட்டுமல்ல
நம் தலைமுறையையும்
காக்கும்..

நாம் செய்த உதவியை
சிலர் மறந்து விடுவர்
நாட்கணக்கிலேயே!
ஆனால்
நாம் கொடுத்த
ஒரு அரிசி பருக்கையை கூட
வரவாக வைத்திருப்பான்
இறைவன்
நம் கணக்கிலேயே!

நாம் ஒருவருக்கு
சரியான நேரத்தில்
செய்யும் உதவி
மற்றொருவர் மூலம்
இக்கட்டான நேரத்தில்
நமக்கும் உதவும்!

நம் பிள்ளைகளுக்கு
நாம் சேர்க்கும்
மண்ணும் பொன்னும்
பிறரால் களவாடவும்
கையகப் படுத்தவும்
படலாம்!
ஆனால்
இறைவனின் பாதுகாப்பில்
நாம் சேர்க்கும்
புண்ணியத்தை
கன்னமிட முடியாது
யாராலும்!

நாம் நம் சந்ததிகளுக்கு
சேர்க்க வேண்டியது
புண்ணியம் என்ற
சொத்தை!
இன்றே
நம் பிள்ளைகளுக்கும்
கற்றுக் கொடுப்போம்
இவ்வித்தை!

கையிலெடுப்போம்
தினம் ஒருவருக்கு
உதவுவது என்ற
கொள்கையை
கொடுப்போம்
நம் சந்ததிக்கு
அதன் மூலம்
வசந்தமான
வாழ்க்கையை...

நம் ஊரில் உள்ள ஒவ்வொரு
பள்ளியிலும் நடக்கும்
ஆண்டு விழாக்களில்
தவறாமல் கலந்து கொள்கின்றனர்
மகாத்மாவும், மகாகவியும்...!!!

மதிப்பு

சாலையில் வரையப்பட்ட
அழகிய வெங்கடாஜலபதி
படத்தின் மேல்
சில்லறை காசுகள்....!!!
இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
மதிப்பு என்பது
மனிதர்களுக்கு மட்டுமல்ல,
கடவுளுக்கும் பொருந்தும் போல...!!!

மாஞ்சா கயிறு

நூல் படித்து
பெற்ற பட்டம்
பலருக்கு வாழ்க்கை
கொடுத்திருக்கிறது...!!!

நூல் பிடித்து
விட்ட பட்டம்
சிலரது வாழ்க்கையை
முடித்திருக்கிறது....!!!

வயது வரம்பு

ஒட்டு போட உண்டு
வயது வரம்பு...
அரசுப்பணி ஓய்வுக்கு உண்டு
வயது வரம்பு...
குழந்தையை தத்தெடுக்க உண்டு
வயது வரம்பு...
தேவைப்படுவோருக்கு இரத்தம் கொடுக்க உண்டு
வயது வரம்பு..
இப்படி இன்னும் பலவற்றுக்கும் உண்டு
வயது வரம்பு...
ஆனால்
ஆள்பவருக்கு இல்லை
வயது வரம்பு....
இதில்
"இளைஞர்களே நாட்டின் முதுகெலும்பு" ...!!!