திங்கள், 28 டிசம்பர், 2015

பசங்க 2 (ஹைக்கூ)

பசங்க 2 - படம் நல்லா இருக்கு, பாருங்க என் சில நண்பர்கள் கூறி இருந்தனர்.. குழந்தைகள் படம்தானே , டிவி-யில் போடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம், "வந்த இரு படங்களில், இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, போய் பார்ப்போம்" என்ற கணவரின் சொல்லில் காணாமல் போயிருந்தது..

தமிழ் நாடனின்(சூர்யா) சிறு வயது அறிமுகத்திற்கு பின் , இரு குழந்தைகள்  கருவாக  உருவாவதிலிருந்து அக்குழந்தைகளை, அவர்களின் குடும்பம், சூழ்நிலையை சுற்றி  படம் நகர்த்தப்படுகிறது.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் கடைசியில் வரும் காட்சிகளும்  கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்...

பின் அந்த இரு குழந்தைகளின் சேட்டைகள் ஆரம்பிக்கும்பொழுது என் பிள்ளைகள் முன் இருக்கையை பிடித்து நின்றுகொண்டு ஆர்வமாக படம் பார்க்க துவங்கி விட்டனர்.. அதுவும் நயனா  சொல்லும் கதையில் வரும்  ஸ்பைடர் மேன், டோரா வந்த பிறகு , தன்   ஆதர்ச கதாபாத்திரங்கள் பெரிய திரையிலும் வந்த மகிழ்ச்சியை  பின்புறம் என்னை பார்த்து சிரித்து பகிர்ந்து கொண்டான் மகன்..

அதீத திறமையுள்ள   இரு  குழந்தைகள் இப்போதுள்ள கல்விமுறைக்கும், பள்ளி முறைக்கும் இணங்க முடியாமல் செய்யும் சேட்டைகளும் , அதனால் அவர்கள் பெறும் தண்டனைகளும், பெற்றோர்களின் திணறலும்  என காட்சிகள் ரசிக்கவே வைக்கின்றன..  விருந்தினர்கள் முன் தம்  பிள்ளைகளின் திறமையை வெளிச்சம் போட்டு காண்பிக்க துடிக்கும் இன்றைய பெற்றோர்களின்  எண்ணத்தையும் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் பிள்ளைகளின் சேட்டைகளை சகிக்க முடியாமல் , அவர்களை விடுதியில் சேர்க்கும் காட்சியின்போது என்னை அறியாமலேயே கண்கள் துளிர்த்தது..

சூர்யா-அமலாபால் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும், தித்திப்பையும், ஏதோ ஒரு ஏக்கத்தையும் கொடுத்து விட்டுப் போகிறது..

வசனங்களை கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.. படம் வருவதற்கு முன்னரே பரிச்சயமாகி விட்ட இப்படத்தின், "குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க , கேட்ட  வார்த்தையைத்தான் பேசுவாங்க" என்ற வசனமும் சரி, "மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” என்பது போன்ற பல வசனங்களும் படத்துக்கு கூடுதல் பிளஸ்.. அதிலும் "ஒரு 70 கிலோ உருவம் ஒரு 17 கிலோ உருவத்த போட்டு அடிக்கிறது எவ்வளவு பெரிய வன்முறை இல்ல" என்ற வசனம் ஒரு குற்ற உணர்ச்சியை என்னிலிருந்து கிளப்பி விட்டது..

கடைசியில் பிள்ளைகள் மேடையில் தங்கள் திறமையை காட்டி விட்டு வந்ததும், அவர்களை வெளியில் அழைத்து வந்து , உங்களுக்குத்தான் பரிசு கிடைச்சு இருக்கு.. உங்கள் பரிசுகளை ஜட்ஜ்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன் என சூர்யா சொல்வதும், மற்ற பிள்ளைகளும் நல்லா பண்ணினாங்க , உங்களுக்கு கிடைச்சு அவங்களுக்கு கிடைக்கலன்னா அவங்க மனசும், அவங்க பெற்றோர் மனசும்  கஷ்டப்படும் இல்லையா அதுதான் என சமாதாம் கூறுவதும்தான்    கொஞ்சம் என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை..

பரிசு என்பதே அவர்களின் மற்றும் மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் என்றிருக்கும்போது, அதை மறைமுகமாக பெற்றுக்கொள்ளலாம் என்று காட்டி இருப்பதை விட, தோல்வியையும் சுலபமாக எடுத்து , வெற்றியை நோக்கி மீண்டும் முன்னேற உத்வேகம் காட்டுவது போலான காட்சிகளை இணைத்திருந்தால், இந்த நல்ல படத்தில் இதுவும் ஒரு கருத்தாக இருந்திருக்கும்..

எனினும் மொத்தமாக பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளனர்...  படம் முடிந்து வெளியில் வரும்போது , ஒரு படம் பார்த்த திருப்தியை விட , ஒரு  பாடம் படித்த திருப்திதான் எழுந்தது..

எந்த படமாக இருந்தாலும் பார்த்து விட்டு வெளியில் வரும்போது , பிள்ளைகளிடம் "படம் பிடிச்சு இருந்துதா" என கேட்பது வழக்கம்.. இந்த முறை மகனாகவே முன்வந்து , "படம் நல்லா இருக்கும்மா" எனக் கூறினான்..

"உனக்கு அதுல யாரை பிடித்தது"எனக் கேட்டேன், "டாக்டர்" என கூறினான்....

பிரிவு

நேசித்தலும் 
நேசிக்கப்படுதலும் 
சாகாவரம் 
பெற்றவை அல்ல....

உள்ளப்பிணைப்பு
உடைபடும்போது
நேசித்த தடயங்கள்
கூட மறைந்து போகின்றன....

மிஞ்சி நிற்பது
முன் நடந்த
இறுதி யுத்தத்தின்
காட்சிகள் மட்டுமே.....

புதன், 23 டிசம்பர், 2015

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (11)


  1. முன்பிருந்ததை விட வாழ்க்கை(நிலை)யில் சரிந்தவர்களும், சரிந்ததாக நினைத்துக்  
        கொண்டிருப்பவர்களும் பழைய தொலைந்த நட்புகளை தேடுவதில்லை..
  2. அன்பை விதைத்தால் அன்பேதான் முளைக்கும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் தவறு. பெரும்பாலும் துரோகமும், அலட்சியமும், அவமதிப்புமே முளை விடுகின்றன...
    இதற்கு தீர்வு....
    தகுந்த இடம் பார்த்து அன்பை விதைக்கும் தெளிவு வேண்டும்
    அல்லது
    முளைப்பது எதுவாக இருந்தாலும் அதை அன்பாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும்.
  3. வாய்ப்புகளை சூழ்நிலைகளுக்காக தவிர்த்து விடாதீர்கள். விட்டால், பின் வாய்ப்புக்கான சூழ்நிலைக்காக காக்க வேண்டி இருக்கும்.
  4. நிராகரிப்பு என்பது மிகுந்த வலி கொண்டது. அதுவும் காரணமறியா நிராகரிப்பு என்பது வலியோடு அவஸ்தையும் கூடியது....
  5. (பல)செயல்களை பொறுத்தவரை வாழ்க்கையும் ஒரு வட்டம்தான். வாழ்க்கை நம்மை எப்படி தள்ளிக்கொண்டு போனாலும் திரும்ப அதே செயல்களில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. என்ன, இப்போது அந்த செயல்கள் வேறு ஒருவரால் செய்யப்பட்டிருக்கும், அவ்வளவுதான்........
  6. நேர்மையானவர்கள் யாரிடமும் விலை போவதில்லை.. துரதிர்ஷ்டம், நேர்மையும் இங்கு எங்கும் விலை போவதில்லை...
  7. வலியை விட கொடியது அந்நேரம் உடனிருப்பவர்கள் அதை அலட்சியம் செய்வது
  8. ஒரு பாராட்டிலோ அல்லது வெற்றியிலோ திருப்தியடைந்து விட்டால், அதுதான் கடைசி பாராட்டாகவோ, வெற்றியாகவோ இருக்கும்...
  9. சுயம் மறைத்து பழகும் எந்த உறவும் நீடித்து செல்வதில்லை....
  10. சிலரிடம் ஆறுதலைத் தேடி நாம் சொல்லும் விஷயங்களே, நமக்கான சாட்டைகளாக மாறி விடுகின்றன.....

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கண்ணீர் எனும் மருந்து

"கண்ணீர் விடுவது ஆணுக்கு அழகல்ல" , "கண்ணீர் விட்டே பெண்கள் காரியத்தை சாதிச்சுடுவாங்க" அழுகையைப் பற்றி இப்போதும் கூட நம் காதுகளில் சில சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்தான் இது... ஆனால் என்னைப் பொருத்தவரை "அழுகை ஒரு மருந்து".. அது கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து....

இங்கு தன் கண்ணீரால் தலையணையை ஈரப்படுத்தாத ஒருவருமே இருக்க முடியாது....

நான் பிறந்ததிலிருந்து தேவைகளுக்காக அழுத அழுகை இப்போது ஆறுதலுக்காக தேவைப்படுகிறது...எனக்கு அழுகையை பரிசாகக் கொடுத்து ரசிக்க காத்திருந்தவர்களும் உண்டு , தங்களை அறியாமல் என்னை அழ வைத்தவர்களும் உண்டு....

பொது இடங்களில் வரம்பு மீறி காயப்படும்போது பீறிட்டு வரும் அழுகையை அடக்கி வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட அழுகையை வெளிக்கொணர யாருமில்லாத இடம் தேடி இருக்கிறேன்.. இருந்தும் பொதுவான இடங்களில் நாம் மறைந்திருந்து அழுதாலும் பின்னர் நம் முகம் காட்டிக் கொடுத்து விடுமே என அதை என் வீடு வரை கொண்டு செல்வேன்... சில நேரம் என் தாய் மடியில் படுத்து ஆறுதல் தேடுவேன்.. அவர் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அச்சமயம் தேற்றினாலும் இரவில் படுக்கும்போது யாருமறியாமல் கண்ணீர் விட்டு அழுவது மட்டுமே மனசை லேசாக்கும்... சில சந்தர்ப்பங்களில் என் அழுகை எனக்கு தரும் ஆறுதலை நான் உணர்வதற்குள்ளேயே, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த அமைதியான உறக்கத்தைக் அழுகை கொடுத்து விடும்... இந்த உலகில் உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கும் வளர்ந்த மனிதர்கள் யார்? சந்தோஷமாக இருக்கும் நிமிடங்களிலும் கவலை என்னும் பாரம் எடை குறைந்தாவது முதுகில் தொற்றிக்கொண்டுதானே உள்ளது...

சில நேரங்களில் சில சம்பவங்களால் கட்டுப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வரப்படும் அழுகை வீட்டில் உள்ள குதூகல சூழலால் என்னை அறியாமல் என்னை விட்டு போயிருக்கும்.. போயிருக்கும் என்றவுடனே நிரந்தரமாக அச்சம்பவங்களை பற்றிய வலி தரும் அழுகை போயிருக்கும் என்று அர்த்தமல்ல.... மற்றொரு நாள் மனம் பாரமாக இருக்கும்போது இந்த சம்பவமும் அதே போல் முன்பு காயப்பட்ட சம்பவங்களும் வரிசையாக வந்து கண்ணீரைக் கொடுத்து என் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்....

வீட்டினுள் நான் நினைத்து நினைத்து அழும் அளவுக்கான சம்பவங்கள் இதுவரையில் நடந்ததில்லை . ஏதோ அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்... இப்படி ஆழ வைத்த சிறு சிறு சம்பவங்கள் கூட காலப்போக்கில் மறக்கக்கூடியவையாகவே இருந்தன... இப்போது இந்த சிறு சிறு சம்பவங்களுக்கு அழுததை நினைத்தால் சிரிப்பாக இருக்கும்... ஆகையால் இவை அதிக காலத்துக்கு கண்ணீரை இழுத்துக்கொண்டு வந்ததில்லை...

ஆரம்பத்தில் கண்ணீர் துயரப்படும்போது வரும் வேதனை ஊற்றாக தெரிய ஆரம்பித்தது மாறி நாளடைவில் மன அழுத்தம் போக்கும் மருந்தாகத் தெரிய ஆரம்பித்தது.. என் பெற்றோரோ, கணவரோ தரும் தேற்றுதலை விட ஆழ்ந்த ஆறுதலை அது தருகிறது... ஆனால் அதுவே தினசரி அழுவதற்காக காரணம் தேடும் வகையில் முற்றிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன்.....

நான் யாருக்கும் தொந்திரவு தராத மௌனமான அழுகையை நேசிக்கிறேன், எனக்கு அழுகையை தரும் மனிதர்களை அதை விட நேசிக்கிறேன்....

ஆடு பகை , குட்டி உறவா?

"ஆடு பகை , குட்டி உறவா?"இது வெறும் வாக்கியமாக மட்டும் இல்லாமல் நம்மில் பலரின் செயலாகவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது..

சின்ன குழாயடி சண்டை முதல் பெரிய சொத்து பிரச்சனை வரை என பெரியவர்களுக்குள் வரும் பிரச்சனைகளால் அந்த இல்லங்களில் உள்ள விவரம் புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களும் முன்பிருந்த உறவுகளிலிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர்...

இது போல பெரியவர்களுக்குள் எழுந்த மனப் பிரச்சனைகளால் ஒரு குடும்பம் போல உறவாடிய, நாங்கள் தூக்கி வளர்த்த சிறுவர்கள் (5 வயது முதல் ) நாம் ஆசையாக கூப்பிட்டு நலம் விசாரிக்கும்போது எடுத்தெறிந்து பேசி சென்றதை கேட்டு, இவனுக்கு நடந்தது என்னன்னு தெரியுமா, நாம என்ன தப்பு செஞ்சோம்னு இந்த பையன் இப்படி பேசிட்டு போரான்மா என என் அம்மாவிடம் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த குழந்தைகள் எங்கள் வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு செல்லும்போது மனம் வலிக்கும்... அவங்க வீட்ல பேச கூடாது, போக கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க, பிள்ளைக என்ன செய்யும் என சமாதானப் படுத்துவார்......

இப்போது என் பெற்றோர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கும்போது அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. (என் பெற்றோர்
என்பதற்காக நான் இதை கூறவில்லை) அவர்கள் மனவருத்தம் அடைந்து பேசாமல் இருந்த சிலரிடமும் , இவர்களை சில காரணங்களினாலும் , காரணமே இல்லாமலும் ஒதுக்கி வைத்திருக்கும் சிலரிடமும் நாங்கள் பழகக் கூடாது என தடை போட்டதில்லை.. இதன் பலன் என்னவெனில் , இப்படி பேசாமல் இருந்த உறவுகள், நண்பர்கள் எல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பழையது மறந்து அழைத்துக் கொள்வர். அதே போல் துக்க காரியங்களுக்கு முன்னால் வந்து நிற்பர்...

புகைப்படங்களை பிள்ளைகளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்போது எனக்கு மனவருத்தம் உண்டாக்கியவர்களோ , உதாசீனப்படுத்தியவர்களோ அதில் ஏதேனும் இடத்தில் தென்படும்போது (அவர்களை முடிந்தவரை நேரில் பார்ப்பதை தவிர்ப்பேன்..நேரில் பார்க்க நேரும்போது குறைந்தது சிரித்து விட்டாவது செல்வேன், சிலரை பார்க்காதது போல் சென்றிருந்தால் அவர்கள் அதற்கு முன் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களாக இருப்பர், இம்முறை நாம் பார்த்து திரும்பவும் அவர் அவ்வாறு செய்தால் மன சஞ்சலம் உண்டாகுமே என தவிர்த்திருப்பேன்.. ) உடனே என் பிள்ளை (அவன் அறிந்தவர்களை)சந்தோஷமாக அவர்களை சுட்டிக்காட்டி குதூகலப்படுவான்.. அப்போது நம்மை வெறுத்தவர்கள் மேல் நம் மகன் இவ்வளவு பாசமாக இருக்கிறானே என்று மனம் சஞ்சலப்படும்தான்... ஆனால் நம்மை பிடிக்காதவர்களுக்கு நம் பிள்ளைகளையும் பிடிக்காது என எவ்வாறு நினைக்க முடியும் என்று சஞ்சலத்தை மாற்றிக் கொள்வேன்... என் பிள்ளைகள், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்த கெட்டவர்களிடம் மட்டும் அவர்கள் பேசாமல் இருக்கட்டும் என்ற மனப்பக்குவத்தை வரவழைத்துக்கொண்டேன்... (இதுவே தீய நடத்தை உள்ளவர்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலக்கியே வைப்பேன்)

பிள்ளைகளுக்கும் நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களாகவே அறிந்து கொள்வர்... அந்த அனுபவம்தான் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என கற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும்.. அதை விடுத்து, நமக்கு ஆகாதவர்கள் தீயவர்கள் என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது, பிறரை வெறுத்தல் எனும் நஞ்சை ஊற்றி வளர்ப்பதற்கு சமம்...

பிள்ளைகளின் கனவு

"அண்ணா குத் பாய்" என்ற மகனின் சத்தத்தை கேட்டு அருகில் படுத்திருந்த அவன் முகத்தை பார்த்தேன்.. அவன் ஆழ்ந்த உறக்கத்தில் உளறி விட்டு சலனமேதும் இல்லாமல் உறங்கிக் கொடிருந்தான்.. கனவில் தன்னை பற்றி குறை கூறும் யாரோ ஒருவருக்கு (நானோ, அவன் தந்தையோ அல்லது மற்றவரோ ) கூறும் பதிலாகவோ அல்லது தன்னை அடையாளப்படுத்தி பிறரிடம் அறிமுகம் செய்து வைக்கவோ அந்த வார்த்தையை அவன் கனவில் கூறிக் கொண்டிருந்திருக்கலாம்...

னால் எனக்கு இது புதியதாக இருந்தது.. பேசத் தெரியாத குழந்தை பருவத்தில் அவன் இருந்த போதும், அவன் தங்கை இருந்தபோதும் உறக்கத்தின் போது அவர்கள் சிரித்தும் அழுது சிணுங்கியும் கண்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம் அதை மற்றவர்களிடமும், பெற்றவர்களிடமும் கூறும்போது, கடவுள் வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பார், பூனை வந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும், முன் ஜென்மத்து மனிதர்களை சந்தித்த நினைவோ அல்லது அந்த சம்பவங்களின் நினைவோ எட்டி பார்த்திருக்கலாம் என கூறப்பட்ட காரணங்களால், அதற்கு மேல் அவற்றை தாண்டி நான் சிந்தித்ததில்லை..

பிள்ளைகளுக்கு நமக்கு வருவதை போல் உறக்கத்தில் கனவுகள் வரும் என எனக்கு தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்வின் போதுதான் அதை உணர்ந்தேன்... அவனுக்கும் ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என இது உணர வைத்தது.. அவன் என் மூலம் வருகை தந்து வாழ வந்தவன் என்ற உண்மை விளங்கியது.. இதை உணர்ந்தபோது அவன் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கத் தோன்றியது... உறக்கத்தில் வருகிற கனவுகளுக்கு மட்டுமல்ல, அவன் வளர வளர அவனை உறங்க விடாமல் செய்கிற அவனின் லட்சிய கனவுகளுக்கும் மதிப்பளித்து, வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க மனம் முழுமையாக இசைந்து வருவதை உணர்ந்தேன்.....

கடந்து போன காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத என் ஆசைகளையும் வரும்காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என் லட்சியகளையும் என் பிள்ளைகளின் முதுகின் மேல் இறக்கி வைக்க நினைத்திருந்த என் எண்ணமும் மெல்ல மாறியது... என்னால் முடிந்தால் என் கனவுகளை லட்சியங்களை நிறைவேற்றி கொள்ள பார்க்கிறேன்.. இவற்றை என் பிள்ளைகளின் முதுகில் இறக்கி வைத்தால் அவர்களின் கனவுகளை லட்சியங்களை இறக்கி வைக்க அவர்கள் அவர்களின் பிள்ளைகளை தேடுவர்...

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் லட்சியங்களை பிள்ளைகளின் மேல் திணித்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால் ஒவ்வொருவரின் லட்சியங்களும் ஒரு தலைமுறை தாண்டிதான் (சிலருக்கு மட்டுமே ) பலிதம் ஆகும் என்பது மட்டுமல்ல நாம் வாழ வந்த நம் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் முடிந்து போகும் என தோன்றியது..

என் கண்முன் என்னால் உருவாக்கப்பட்டிருந்த அறியாமை என்னும் திரையை இச்சம்பவம் அகற்றியது....

" அண்ணா குத் பாய் " என உறக்கத்தில் உளறி முடித்திருந்த மகனின் கன்னத்தை "நீ குட் பாய்தான் செல்லம்" என மெல்ல வருடி விட்டேன்.. அந்த வருடலின் உணர்வு கூட அறியாதவனாக ஆழ்ந்த உறக்கத்தின் கனவுகளுக்குள் அவன் சிக்கிக் கொண்டிருந்தான்.....

5

எப்போது இந்தியாவுக்கு வந்தாலும் என் பிறந்த வீட்டிலும் , புகுந்த வீட்டிலும் இருக்கும் திருமண ஆல்பங்களை ஒரு முறை புரட்டுவது என் வழக்கம்.. என்னதான் வீடியோ கவரேஜ் பண்ணி எடுத்து இருந்தாலும் , புகைப்படத்துல பார்க்கிற ஒரு திருப்தி வரவே வராது... அதுவும் இல்லாம, சிடி எடுத்து போட்டு பார்த்து முடிக்கறதுக்குள்ள வர்ற இடையூறுகள் திருப்திக்கு பதிலா அலுப்பையே தரும்கிறதால என் சாய்ஸ் ஆல்பம்தான்....

இப்போதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்பில் அடுக்கி வைத்திருந்த ஆல்பங்கள், அங்கு இங்கு நகரும்போது கண்ணை உறுத்தவே பார்ப்பதற்காக எடுத்தேன்..கூடவே பிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன்... அது தவறு என்று, எடுத்து இரு பக்கங்களை திருப்புவதற்குள் உணர்ந்து கொண்டேன்.. வரிசையாக பார்க்கலாம் என்று எடுத்தால் பசங்க நான்கைந்து பக்கங்களை ஒன்றாக சேர்த்து எடுத்தும், முன்னால் உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதற்கு திரும்ப திருப்பியும் என அலம்பல் செய்ததோடு அல்லாமல் இருவரும் ஆல்பத்தை புரட்டிப் பார்க்க சண்டையும் போட்டுக் கொள்ளவே திருமண ஆல்பத்தை பெண்ணிடமும், திருமண வரவேற்பு ஆல்பத்தை எடுத்து மகனிடமும் கொடுத்து விட்டு அவர்கள் பார்த்து வைத்து விட்டால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என உள் அறையில் வேறு வேலை பார்க்கத் திரும்பினேன்.

அதே நேரம் பக்கத்து வீட்டிலிருக்கும் ஒருவர் பிள்ளைகளை பார்க்க வர இவர்கள் ஆல்பம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் தானும் அருகில் அமர்ந்து கொண்டு மாமா எந்த போட்டோல இருக்கேன்னு கண்டுபிடி என மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. இடையில் அவர் நீ எங்கடா, போட்டோவுல காணுமே எனக் கேட்க, நானும் அனிசிதாவும் (அனிஸ்ரீயா) துபாய்ல இருந்தோம் என்ற அவன் பதிலும் என் காதில் விழுந்தது..

இடையில் அங்கிருந்த என் கவனம் திசை மாறி நான் செய்து கொண்டிருந்த வேலையின் மீது விழுந்த சில நிமிடங்களுக்குள் "சவிதா இங்க வா" என கோபத்துடன் அவன் அழைக்கும் குரல் கேட்கவே ஹாலுக்கு வந்து என்னவென கேட்க "ஏன் முதித்துக்க" எனக் கேட்க நான் புரியாமல் முழிக்க , பக்கத்து வீட்டுக்காரரோ , நீ பின்னாடி தலைமுடி அலங்காரம் முத்து எல்லாம் வச்சு பண்ணி இருந்தே இல்லையா, அந்த போட்டோவ பார்த்துட்டு கூப்பிட்டான் எனக் கூறவே சிரித்தவாறும், முத்து வைத்தா சிகையலங்காரம் செய்து இருந்தாங்க என்ற யோசனையுடனும் சரி என்று சொல்லி விட்டு உள்ளே திரும்ப எத்தனிக்கையில் திரும்பவும்" சவிதா இங்க பாரு, முதித்து இருக்க" என என் சிகையலங்காரம் தெரியுமாறு எடுத்திருந்த, ஆல்பத்தில் நான்கைந்து பக்கங்களுக்கு முன்னிருந்த போட்டோவை திரும்ப எடுத்து என்னிடம் காண்பித்தான்.. நான் புரியாமல் விழிக்க , இந்த போட்டோல நல்லா இருக்க, இந்த போட்டோல ஏன் முத்தித்து இருக்க என கோபமாக அருகிலிருந்த மற்றொரு போட்டோவுடன் ஒப்பிட்டுக் காண்பிக்கும்போதுதான் அவன் சொல்லிக் கொண்டிருந்தது புரிந்து அடக்க முடியாத சிரிப்பும் தொற்றிக் கொண்டது...

அதாவது நான் சுவற்றை பார்த்தவாறு நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு , நான் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கோபப்படுகிறான் என புரிந்தது.. அதை பக்கத்து வீட்டுக்காரரிடமும் நான் தெளிவாக சொல்ல அவரும் அடக்க முடியாத சிரிப்பில் கலந்து கொண்டார்.. மேலும் அவன் "இப்படி முத்திது இருந்தா செத்து போயிடுவே" என சொல்ல என் அம்மாவும் வந்து எங்களுடன் சிரிப்பில் கலந்துக் கொண்டார்....

"தங்கம், அம்மாவோட ஹேர் ஸ்டைல் போட்டோல தெரியறதுக்காக அம்மா திரும்பி நின்னு இருக்கேன்டா" எனக் கூறவும் உடனே அந்த குறிப்பிட்ட போட்டோ உள்ள பக்கத்தின் பின் பக்கத்தை பார்ப்பதற்காக திருப்பினான்.. பின்னர் முன்னும் பின்னும் பார்த்தவாறு என்னிடம் , "பின்னாடி அம்மா மூஞ்சி தெரியல, அப்போ முத்தித்துதான இருக்கே" என திரும்ப அவன் கோபமாகக் கேட்க எங்களின் சிரிப்பு மேலும் தொடர்ந்தது....

அவன் கேட்ட கேள்விகள் எனக்கும் எதுவும் அறியாத சிறு வயதில் மனதில் தோன்றியவைகள்தான்.. ஆனால் மனதில் எழும் கேள்விகளை எல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கி அனுபவத்தின் வாயிலாகவே தெளிவு பெற்றவள் நான்.. அதற்கு பதில் தர காலமும் அவகாசம் கூட எடுத்தது.. ஆனால் இப்போதுள்ள குழந்தைகளின் நுண்ணிய அறிவும் , கேட்டு பதில் வாங்கும் சூட்டிப்பும் என்னை உண்மையிலேயே மலைக்க செய்கின்றன.. நாமும் உண்மையையும், எதார்த்தத்தையும் தெளிவாக எடுத்துக் கூறப்பழகினால் இப்போதுள்ள இப்படிப்பட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்ப்பதும் சுலபம் என்றே தோன்றுகிறது..

கூடவே கேள்வி கேட்கும் நிலைக்கு வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்காக, .. இனி அவர்கள் கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான பதில்களை உடைய கேள்விகளுக்கு பொறுப்பான, அறிவார்ந்த பதிலை அளிக்க நானும் என் அறிவை வளர்க்க வேண்டுமே என்ற சிறு பயமும் தோன்றியது...
(படத்தில் இருப்பது மாடலே.......)

4

சப்பாத்திக்கு மாவு பிசஞ்சுட்டு இருக்கும்போதே பையன் பக்கத்துல வந்து , "அம்மம்மா வீட்லயும்,அம்மம்மா இதை பால்(Ball ) மாதிரி செஞ்சு போடுமா , நான் அதை எடுத்து சாப்பிடுவேன்"எனக் கொஞ்சி சொல்லிக்கொண்டே அதில் கையை விட போனான்.. உடனே அவனை தடுத்து , "இதை இப்படியே சாப்பிட்டா வயிறு வலிக்கும், அம்மா சப்பாத்தி போட்டு தர்றேன் , அப்போ சாப்பிடு" என சொல்லியும் அங்கேயே சுற்றி கொண்டு இருந்தான்..
பாத்திரத்துக்குள் கையை விட போவதும் , நான் திட்டியதும் எடுப்பதுமென செய்கை தொடர்ந்து கொண்டே இருந்தது..
சீக்கிரம் பால்(Ball ) மாதிரி பிடிம்மா, என்று சொல்லிக்கொண்டே இருந்தவன் நான் உருண்டை பிடித்து வைத்து , தேய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் கவனிக்காத நேரத்தில் சிறு பகுதியை எடுத்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு "அனிஸ்ரீயா, நான் எடுத்துட்டேன்" என சிரித்துக் கொண்டே ஹாலுக்கு ஓடினான்.. "இனி இங்க வந்து பாரு"என திட்டி விட்டு வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
உடனே அடுத்தவள் நானே அறியாதவாறு ஆட்டத்துக்குள் நுழைந்தாள்.. அம்மா தண்ணி வேணும் என அருகில் வந்தவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க நான் எழுந்த போது, அவளும் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு "அண்ணா நானும் எடுத்துட்டேன்" என ஓடினாள்.. குரலில் அவ்வளவு துள்ளல்....
"இனி 2 பேரும் இங்க வந்து பாருங்க, மாவை அப்படியே தின்னக்கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டீங்களா" என சத்தம் போட்டுக்கொண்டே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்..
திரும்ப மெல்ல பயந்து கொண்டே மாவை எடுப்பதற்காக நான் கவனிக்கிறேனா என நோட்டம் விட்டு மெல்ல வந்து கொண்டிருந்தான்..
இப்போது திடீரென ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது..
நானும், என் தங்கச்சியும் ரொம்ப சின்ன பசங்களா இருக்கும்போது என் அம்மா சப்பாத்திக்கு மாவு தேய்ச்சுட்டு இருப்பாங்க.. மாவை அப்படியே சாப்பிடக்கூடாதுன்னு அம்மா மாவுக்கு காவல் இருந்துட்டே , சப்பாத்தியும் தேய்ச்சுட்டு , எங்களையும் கவனிச்சுட்டே இருப்பாங்க.. அப்போ , அம்மா கவனிக்காத நேரம் பார்த்து , நானும் என் தங்கையும் போட்டி போட்டுட்டு, மாவை கொஞ்சம் பிச்சுட்டு வந்து சாப்பிடுவோம் பாருங்க...... ப்ச்.... அது ஒரு பசுமையான காலம்ங்க... அது இனியெல்லாம் வராது.....
-
-
-
-
-
-
-
-
-
இப்படி ஒரு பதிவு பின்னாளில் ரோஹித் ரெஜிகுமாரால் முகநூலில் போடப்படலாம்..
அதனால் அவங்களை சும்மா மிரட்டற மாதிரி மிரட்டிட்டு மாவு எடுக்க போகும் போது கவனிக்காத மாதிரி விட்டுட்டு இருந்தேன்..
முகநூலில் பின்னால் வரப்போற ஒரு பதிவை கெடுத்த பாவம் நமக்கெதுக்குங்க tongue emoticon grin emoticon grin emoticon grin emoticon .....

3

அடுப்பில் சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும்போது நிகிதா(மகள்) அங்கு வந்து , "அம்மா அங்க வாம்மா " என டிவி-யில் எதையோ காட்ட நொடிக்கொருதரம் அழைத்துக் கொண்டிருந்தாள்..
"இதோ, இந்த சப்பாத்தியை பாத்திரத்துல வச்சுருக்கேன்ல , அதை மூடி வச்சுட்டு வர்றேன்" என தட்டை எடுத்து மூடி வைப்பதை பார்த்தவள் , " அம்மா அது மூடி இல்லம்மா, தட்டு" எனக்கூறினாள்... புரிந்ததும் மெல்ல வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு " தட்டுதான், ஆனால் இதை மூடி வைக்கிறோம்ல, அதான் சொன்னேன்" என புரிய வைக்க போராட, "போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல" என சொன்னவளிடம், திரும்ப விளக்க முயற்சிக்க, திரும்பவும் அவள் அதையே கூறிவிட்டு, என் மறுவிளக்கத்தை எதிர்பார்க்காமல் "அங்க வா " எனக்கூறிக்கொண்டே ஹாலுக்கு திரும்பினாள்.. "நான் சரியாதானே பேசறேன்" என சங்கிலி முருகன் அவர்கள் ஒரு படத்தில் கூறும் குழப்ப மனநிலையுடன் பின்தொடர்ந்தேன்..
இதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு, டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒளிபரப்பப்பட்ட ஹேர் ஆயில் விளம்பரத்தை பார்த்து விட்டு, "பார்த்தியா , அமம்மாவுக்கும் நிறைய முடி கொட்டிட்டே இருக்கு , இனி அம்மாவும் இததான் வாங்கி பார்க்கணும்" என பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
"ஆமாம்மா, அம்மாவுக்கு நிறைய முடி விழுந்துருச்சு" என என் முடியை தடவிக்கொண்டே ரோஹித் சொல்ல , உடனே நிகிதா, "அம்மா , எனக்கும் நிறைய முடி விழுகுதும்மா" என்று சொல்ல அவள் விழுவதாக கூறிய முடியை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் ஆனது..
அதாவது தன் நெற்றியில் புரண்டு விழும் முடியை முன்புறம் குனிந்தவாறே தொட்டு காண்பித்து, "இதோ எனக்கும் முடி விழுது" என சோகத்துடன் கூறிக்கொண்டிருந்தாள் grin emoticon grin emoticon grin emoticon grin emoticon ....
சின்ன பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி அடிக்கொருதரம் ரசிக்க வைக்கும் நிகழ்வுகள்.. ரசித்துக்கொண்டே , சேமித்துக்கொண்டும் இருக்கிறேன் அந்த நினைவுகளை smile emoticon ....

பகல் கனவு

நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது விழிப்பு வந்து விட்டது..ஆனால் கண்களை திறக்க முடியவில்லை.. திறக்க முயற்சித்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.. அலாரம் அடித்ததாக நினைவு.. அதனால் எழுந்தே ஆக வேண்டிய கட்டாயம்..ஆனால் கண்களை திறக்கவே முடியவில்லை..
பக்கத்தில் படுத்திருந்த என் பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி மட்டும் கண்கள் திறக்க முயற்சித்து பாதி வெற்றி பெற்று மீண்டும் தோல்வியுறும் தருணங்களில் தெரிகிறது.. எப்படியோ எழுந்து நின்று விடுகிறேன்.. இப்போது அவளை நான் தூக்கி வைத்திருக்கவில்லை.. ஆனால் என் பார்வைக்கு அருகிலேயே யாரோ அவள் படுத்தவாக்கிலேயே தூக்கி வைத்திருப்பதாக தெரிகிறது..
யார் தூக்கி வச்சுருக்காங்க என அதிர்ந்து கேட்டதும், "நான்தான் , இன்னைக்கு வெளில போயிட்டு லேட்-லாதான் வேலைக்கு வருவேன்னு சொல்லி இருந்தேன்ல" என வேலைக்காரப் பெண்ணின் குரல் மட்டும் தெளிவாக கேட்கிறது.. ஆனால் கண் திறந்து பார்க்க முடியவில்லை..
சாவி எப்படி கிடைத்திருக்கும் என நினைவு வர அவளிடம் இருந்த சாவியால் திறந்திருப்பாள் என்று ஊகித்துக் கொள்கிறேன்..
உடனே"கொஞ்சம் முன்னதான் அம்மாவுக்கு போன் பண்ணினேன்" என நான் சொன்னவுடன் "ஏன் பண்ணிணே" எனக் கோபித்துக் கொள்ளும் குரலில் கேட்கிறாள்.. " இல்லை சும்மாதான் , தம்பியும் இப்ப வந்துட்டே இருக்கேன்னு சொன்னான் " என எங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டோடு பொய் சொல்கிறேன்.. ஏனெனில் வந்த உருவம் யாரென்று இன்னும் என் கண்ணில் தெளிவாக படவில்லை.. இப்போதும் இமைகளை நன்றாக திறக்கும் முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது..
ஒருவேளை முகம் கழுவினால் கண்களை திறக்க முடியுமோ என்ற எண்ணம் வர மெதுவாக அவளை கையைப் பிடிக்க சொல்லி குளியலறைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.. நுழைந்ததும் அது அவள்தானா என்ற என் உறுத்தும் சந்தேகத்தால் திரும்ப அவளை பார்க்க முயன்றவாறே கதவை சாத்துவதற்கு தயாராகிறேன்..
இப்போதும் ஏதோ தெளிவில்லாத உருவம் மட்டும் அங்கே தெரிகிறது..
முட்டி மோதி, கஷ்டப்பட்டு இமைகளுக்கு உந்துதல் கொடுத்து திறந்தபோதுதான் அது கனவு என்றே புலப்பட்டது..
ஒருவேளை உண்மையிலேயே அலாரம் அடித்து இருக்குமோ என , பக்கத்தில் கைபேசியை வைக்காததால் வரவேற்பறையில் கடிகாரத்தை பார்க்க எழுந்து போனேன்.. ஏற்கனவே முழித்து விட்டிருந்த பெண்ணும் என்னுடனேயே எழுந்து வந்தாள்..
மணி 11.25 AM என்றிருந்தது.. பள்ளி சென்றிருக்கும் மகனை அழைத்து வருவதற்காக 12 மணிக்குதான் அலாரம் வைத்திருந்தேன்..
அசதியால் தூங்கி 1 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு கனவா? பகல் கனவும், காணும் நேரத்தை பொறுத்து பலிக்கும் என்று படித்த நினைவு, திடீரென எழுந்ததால் வந்த தலைவலியின் கூடவே வந்தது..
இருந்தும்,நினைவிலிருக்கும் கனவுகளை குறித்து வைக்கும் பழக்கமிருப்பதால் அந்த வலியுடனேயே டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன்.. (ஏனெனில் கனவில் மறந்துவிட்ட நினைவுகளை மீட்டெடுப்பது சிரமம்) இப்போது இதிலும்....

2

"நாளைக்கே எனக்கு பர்த்டே வைக்கணும்" ஜெகனுக்கும் , பெனிட்டுக்கும் சாக்லேட் கொடுக்க மாட்டேன், மேம்-க்கும், மத்த பிரெண்ட்ஸ்க்கும்தான் கொடுப்பேன்" என பள்ளிப்பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபத்துடன் கூறினான்..
"ஏன் தங்கம்" என கேட்டதும் "இன்னைக்கு கிளாஸ்-ல ஒரு ப்ரெண்ட்-க்கு பர்த்டே.. எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தான்.. நான் பேக்-ல வச்சுருந்தேன், பஸ்-ல வரும்போது, ஜெகன் என் பேக்-ல இருந்து என் சாக்லட்டை எடுத்து தின்னுட்டான், சோ அவனுக்கும் , பெனிட்டுக்கும் (இதற்கு முன் சண்டையிட்ட காரணத்தால் பெனிட்டும் அந்த லிஸ்டில் சேர்ந்திருந்தான்..) கொடுக்க மாட்டேன்" என நான் எழுதியது போல் அல்லாமல் வரிசை மாறி மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சொல்லி முடித்தான்..
"சரி,உன் பர்த்டே-க்கு இன்னும் 8 மந்த்ஸ் இருக்கு.. அப்போ பார்த்துக்கலாம்" என கூறினேன்.. அதெல்லாம் தெரியாது, எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும், அவ்ளோதான் என ஸ்ட்ரிக்ட்-ஆக சொல்லி விட்டு போகோ-வில் சோட்டா பீமுடம் ஐக்கியமாக சென்று விட்டான்..
மறுநாள் எழுந்ததும், இதை ஆரம்பிப்பானோ என்று பயந்திருந்தேன்.. ஆனால் அதை மறந்து விட்டிருந்தது அந்த காலை நேர பரபரப்பை கொஞ்சம் குறைவாக்கி இருந்தது..
ஒரு வாரம் கடந்த நிலையில், இன்று காலை, அவனுக்கு ஷூ போட்டு விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் "பர்த்டே" என்னும் வார்த்தை எவ்வாறோ எங்கள் பேச்சில் உள்நுழைந்து விட்டது.. (இப்போது யோசித்துப் பார்த்தால் நினைவுக்கு வரவில்லை.. ) உடனே அதை பிடித்து விட்டான்..
"எனக்கு பர்த்டே கொண்டாடனும், நான் ஸ்கூலுக்கு கொண்டு போய், கிளாஸ்-ல எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கணும் என்று கூறினான்..(இந்த ஒரு வாரத்தில் ஜெகன் மற்றும் பெனிட் மீதுள்ள கோபம் அவன் இன்னும் குழந்தை என்ற காரணத்தால் காணாமல் போய்விட்டிருந்தது..)
அவன் வகுப்பில் இருந்து "பிரெண்டுக்கு பர்த்டே" என அடிக்கடி சாக்லேட் கொண்டு வருவது வழக்கம். ஒரு முறை டீச்சர்-க்கு பிறந்தநாள் என்று கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட், சாக்லேட் என கொண்டு வந்தான்.. நேற்றும் சாக்லேட் கொண்டு வந்திருந்தான்..
"உனக்கு ஆகஸ்ட்-லதான் பர்த்டே வரும், அப்போ உங்க ஸ்கூல்-ல சம்மர் ஹாலிடேஸ் விட்டுருப்பாங்க.. சோ நீ உன் பிரெண்ட்ஸ்-க்கு சாக்லேட் கொடுக்க முடியாது" என சொன்னதும் அழ ஆரம்பித்து விட்டான்..
"இல்லை, நான் சாக்லேட் கொடுக்கணும், எனக்கு நாளைக்கே பர்த்டே வைக்கணும்" என சிணுங்கவே, "சரி, அனிஸ்ரீயா பர்த்டே-க்கு நீ உன் கிளாஸ்-ல போய் சாக்லேட் கொடு" என்று சொன்னாலும், "நோ, எனக்கு எல்லோரும் ஹாப்பி பர்த்டே சொல்லணும்,என் பர்த்டே க்குத்தான் சாக்லேட் கொடுப்பேன்" என அழ ஆரம்பித்தான்.. அவனால், பிறந்தநாள் எப்போது வரும் என்று புரிந்து கொள்ளவும் முடியவில்லை..
"சரி, நாம இந்தியால ஸ்கூல்ல சேர்ந்ததும் அங்க கொடுப்போம்" எனவும் , "சும்மா வேணா சாக்லேட் கொண்டு போய் கொடுக்கறியா" எனவும் என் சமாதானங்கள் நீண்டு கொண்டு சென்றும் , அவை எதுவுமே அவனை சமாதானமாக்கவில்லை..
"என்னப்பா, கஷ்டமா இருக்கு , இப்படி ஏங்கறான்" என என்னவரிடம் சொன்னபோது "நாம என்ன பண்ண முடியும்" என அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டார்..
பள்ளி கிளம்பும்போது , "எனக்கு பர்த்டே வைக்க மாட்டே இல்ல", என சொல்லிக்கொண்டே, கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க கிளம்பினான்.. கஷ்டமாக இருந்தது..
வரும்போது அவன் அதை மறந்திருந்தாலும் , ஆசை மனதின் உள்ளே இருந்து கொண்டேதானே இருக்கும்.. வரப்போகும் நாட்களில் சக மாணவர்களில் யாரேனும் பிறந்தநாள் கொண்டாடும்போது அது மீண்டும் எட்டிப் பார்க்கத்தானே செய்யும்..வகுப்பில் ஒரு பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடும்போது, மற்ற எல்லா பிள்ளைகளுக்கும் தனக்கும் இப்படி எல்லோரும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும்...
பிள்ளைகளின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்து பார்க்கவேண்டும் என்ற என் ஆசை , இந்த விஷயத்தில், அது எப்படி என்ற யோசனையிலேயே உள்ளது....

வார்த்தை ஆயுதம்

நீ தாக்கிய வார்த்தை
ஆயுதத்தை திரும்ப
உனக்கே திருப்புகிறேன்....
உன்னை காயப்படுத்த
வேண்டும் என்பதற்காக அல்ல
அதன் கூர் எவ்வளவு
காயப்படுத்தும் என்பதை
உணர வைப்பதற்காக....


---------------------------



கத்தியை விட கூரானது
ஒரு கடுஞ்சொல்
சுலபமாக நெஞ்சில் இறங்கி
உடல் முழுவதும் பரவி
காயத்தின் அடையாளத்திற்கு
குருதியாக கண்ணீர்....







கருத்து சுதந்திரம் மீறப்படுகிறதா?


வலைதளங்களில் பத்திரிக்கைகள் மூலம் பதிவிடும் பதிவுகளுக்கு வரும் விமர்சனங்களை எல்லாம் படித்திருக்கிறீர்களா? சிலர் இன்டர்நெட்/மொபைல் ரீசார்ஜ் என விளம்பரம் செய்திருப்பர்.. சிலர் ஊடகங்களுக்கு இதுதான் முக்கிய செய்தியோ என குறை கூறி அலுப்பை காண்பித்திருப்பர்.. ஆனால் அந்த விமர்சனங்களில் முக்கால்வாசி குதர்க்கமான, கிண்டலான, நேரில் சொல்ல தயங்குகிற விமர்சனமாகத்தான் இருக்கும்..
அதுவும் அது சினிமா/அரசியல் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய பதிவாக இருந்தால் வரும் விமர்சனங்கள் கண் கொண்டு படிக்க முடியாதவையாக இருக்கும்..பதிவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆணாக இருந்தால் அவர்களின் கடந்த/இப்போதைய பொது வாழ்க்கை, ஜாடைமாடையாக சொல்வது போல சில தனி வாழ்க்கை பிரச்சனைகளை பற்றி மேலோட்டமாக விளாசி தீர்த்திருப்பர்.. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெண்களாக இருந்தால் அவ்வளவுதான்.. ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களைப்பற்றி பேசுவதற்கென்றே கற்பு என்ற வார்த்தையை கையிலெடுத்து வக்கிரமான, ஆபாசமான வார்த்தைகளால் கருத்துப் பக்கத்தை அசிங்கம் செய்திருப்பர்..
இவர்கள் அந்த பெண்களை யாரிடம் எல்லாம் இணைத்துப் பேசுகிறார்களோ, அந்த ஆண்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.. ஏனென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரிய சொத்துதானே இங்கு..
சில நடிகைகள் ட்விட்டரில் பதியும் தனிப்பட்ட/குடும்ப புகைப்படங்களை முகநூலில் சிலர் அதற்கென பக்கம் ஆரம்பித்து அவர்கள் பெயரில் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் போடப்படும் படங்களுக்கு வரும் விமர்சனங்களில் அவர்களின் குடும்பப் பெண்களை கூட விட்டு வைக்காமல் கிண்டல் என்ற பெயரில் தன் வக்கிர புத்தியை காண்பித்திருப்பர்... அரசியலைச் சார்ந்த சில பெண்களை அவர்களின் உருவத்தை வைத்து விமர்சிப்பது எனவும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.. அப்படி விமர்சித்து இருப்பவர்களின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால் சிலர் நல்ல நல்ல செய்திகளின் ஷேர்களும் , சிலர் சிறந்த மனிதர் என்பதை காண்பிக்கும் விதமாக பதிவுகளும் இட்டிருப்பர்...
இது பத்திரிக்கைகள் பதிவிடும் பதிவு என்று மட்டும் அல்லாது தனி நபர்கள் சில அரசியல்/சினிமா பிரபலங்களைப் பற்றி பதியும் பதிவுகளுக்கும் விமர்சனங்களாக இருக்கும்.. இதை எதிர்த்து விமர்சிக்கும் ஒரு சிலருக்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லா விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.. அப்படியெனில் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்களின் பொது வாழ்க்கையை மட்டும் விமர்சியுங்களேன்..அதற்காக ஆபாசமாக, அந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை/நடத்தையை விமர்சிக்க வேண்டாமே... அதையே அவர்களுடன் இணைத்து பேசப்பட்ட அரசியல்வாதி/ நடிகர்களின் மீது அவர்கள் தெளிப்பதில்லை...
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் எல்லா விமர்சனங்களையும் தாங்க வேண்டுமெனில், அப்படி கூறுபவர்கள் தங்கள் குடும்பப்பெண்களை பின்னர் ஏன் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறார்கள் என தெரியவில்லை.. வேலைக்கு வெளியில் வரும் பெண்ணும் குடும்பத்திலிருந்து சமூகத்துக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்.. அந்த பெண்களின் மீது வேறொருவர் ஆதாரமில்லாத குற்றத்தைக் கூறி இப்படி இழிவாக பேசினால் இவர்கள் அதை ஆமோதித்து எளிதாக கடந்து விடுவார்களா? .
இப்போது சிம்பு-அனிருத் கூட்டணி பெண்களை கொச்சைப்படுத்தி இசையமைத்து பாடியுள்ள பாடலுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோருமே எதிர்ப்பு கிளப்பியுள்ளோம்.. ஆனால் அரசியல்/சினிமா துறை சம்பந்தப்பட்ட பெண்களைப் பற்றி தனித்து கூறப்படும் ஆபாசமான கருத்துக்களுக்கு ஒட்டுமொத்தமாக எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.. ஓரிருவர் அதன் பின்னாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் வாயை அடைக்குமளவுக்கு சம்மந்தப்பட்ட/சம்பந்தமே இல்லாத காரணங்களை வக்கிர முறையில் தெரிவித்து வாயடைப்பர்.. அவர்கள்தான் இப்போது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பின் மேல் வியப்பு..
பெண்களை மொத்தமாக ஆபாசமாக பேசினால்தான் இங்கு தப்பா? தனியொரு பெண்ணை பற்றி இழிவாக விமர்சிப்பது குற்றமில்லையா?இப்படி சொல்வதால், அந்த பாடலை ஆமோதிக்கிறேன் என்ற அர்த்தமில்லை.. மிகவும் கண்டிக்கக்கூடியதுதான்..தண்டிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அதையும் அரங்கேற்றியே ஆக வேண்டும்..
நான் சொல்ல வருவது , ஒட்டுமொத்த பெண்களின் மீது வரும் விமர்சனத்தை எதிர்க்கும் நாம் தனிப்பட்ட பெண்களைப் பற்றி கூறப்படும் விமர்சனங்களையும் எதிர்க்க ஆரம்பிக்க வேண்டும்.. இன்று அந்த பெண்கள் , நாளை நம் குடும்பப் பெண்களாகக் கூட இருக்கலாமல்லவா?
கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.. ஆனால் அந்த கருத்தை ஆபாசமில்லாமல்/இழி சொற்களை பயன்படுத்தாவண்ணம் நாகரீகமாக தெரிவிப்போமே.. அதே போல் தனிப்பட்டவர்களின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாமே..நீங்கள் விமர்சிக்கும் பெண்களுக்கும் குடும்பம் இருக்குமே, உங்களைப் போன்றே ஒரு உறவும் அதை படிப்பாரே?
அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவுவதை தடுக்கவென கூறி , அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதென தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் கடந்த காங்கிரஸ் அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.. பின் கடந்த மார்ச்சில் சுப்ரீம் கோர்ட் அந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்..
நாம் மேலும் தரம் தாழ்ந்து, வக்கிரமான எல்லை மீறிய விமர்சனங்களைக் கொடுத்து நமக்கு கிடைத்துள்ள இந்த கருத்து சுதந்திரம் என்ற வாய்ப்பை இழக்க வேண்டுமா?

இரவு

இரவின் நிசப்தத்துக்கு 
எதிராக சீரான ஒலியைக் 
கொடுத்து சுழன்று 
கொண்டிருக்கிறது 
மின்விசிறி....!!!!

அறை முழுவதும் பரவி
மேனியை சில்லென
வருடுகிறது அது தரும்
குளிர் காற்று....!!!!

மின்விசிறியின் சத்தத்துக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
தோற்றுக் கொண்டிருக்கிறது
எங்களின் மெல்லிய
மூச்சொலி....!!!!

சாளரத்தின்
திரைச்சீலையையும் மீறி
ஒளியை உள் அனுப்பிக்
கொண்டிருக்கிறது
அம்புலி....!!!!

என்னைத்தவிர அனைவரும்
கனவில் வாழ்ந்து கொண்டிருக்க
அறையில் தெரியும்
ஒவ்வொன்றுடனும் உறவாடிக் கொண்டிருக்கிறது
என் நினைவு....!!!!

இவை எல்லாவற்றையும்
மௌனமாக
தன் பார்வையால்
விழுங்கிக் கொண்டிருக்கிறது
இரவு....!!!!

கறை



எல்லோருக்குமே
உதறினாலும் உதிராத
சில காயங்கள்
மன ஓரத்தில் ஒட்டி
பல நேரங்களில் 
உறுத்திக் கொண்டே இருக்கும்....!!!!
மனதை அழ வைத்த
அந்த உறுத்தல்கள்
நாளாக நாளாக
உதறவும் நீக்கவும் முடியாத
கறையாக படிந்து விடும்....!!!!
படிந்திருக்கும் அந்த கறை
வெறுமனே கரைய வைக்கும்
காரணியாக மட்டுமல்லாமல்
வாழ்வில் உயர வைக்கும்
ஊக்கியாகவும் இருக்கும்....!!!!
அதை அழ வைக்கும்
கண்ணீர் பெருக்கியாக
எடுக்கிறோமா
அல்லது
வாழ வைக்கும்
உந்து சக்தியாக
எடுக்கிறோமா
என்பதில்தான் இருக்கிறது
ஒவ்வொருவரின் எதிர்காலமும்....!!!!

மனம்




உங்களால் 
முட்டாள்தனமாகபார்க்கப்படும்
என் செய்கைக்காக
பரிதாபத்தையும் ஆதங்கத்தையும்
கலந்த வார்த்தைகளை
என் மீது வீசாதீர்கள்...!!!!


அந்த செய்கையின்
நினைவுகள்
எழுப்பப்படும் போதெல்லாம்
உங்களை விட 
மிக சிறப்பாகவே
அதை செய்து கொண்டிருக்கிறது
என் மனம் ....!!!!!


--------xxxxxx-----------



வழக்கமான புன்னகை
தவிர்க்கப்படும்போதோ
பழக்கமான பார்வை
திசைமாறும்போதோ
காரணம் தேடி
வரையறுக்க இயலா
பல காரணங்களுக்குள்
சிக்கித் தவிக்கிறது மனது...

--------xxxxxxx-------------

நிஐங்களோடு தர்க்கம் செய்து ஓய்ந்த மனம் பின் அதன் நினைவுகளோடு கூட தர்க்கம் செய்ய முனைவதில்லை.


-------xxxxxxxx-------

நடுசாமத்தில் கேட்கும் கூர்க்காவின் விசில் சத்தம் தூக்கத்தில் இல்லாதோர்க்கு தம் பணி குறித்து நினைவூட்டும் அலாரம் ஒலியா திருடர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒலியா குழப்பத்திலேயே மனது...!!!

--------------xxxxxxxxxxxxxxxx---------

ஆழ்மனம்

துயில போகும் நேரத்தில் 
மின்னலிடும் பல வர்ண 
நினைவுகளின் சாயங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துக் கொண்டிருக்கிறது அது...!!!

அதனூடே வேறு சில
தான் விரும்பிய
நிறங்களையும் சேர்த்து
அவையனத்தின்
சேர்க்கையை திட்டமிட்டு
உறக்கத்துக்காக காத்திருக்கிறது...!!!

உறக்கம் உள்நுழைந்ததும்
அதன் துணையுடன்
எவரிடமும் உள்ளது உள்ளபடி
காட்ட இயலாத
"கனவு" என்னும்
அற்புத ஓவியத்தை
படைக்க ஆரம்பிக்கிறது...!!!!

உறக்கம் உறங்க போகும்
சூழல் தெரியும் போது
ஓவியத்தின் சில நிறத்திட்டுக்களை
மட்டும் உதிர்த்து விட்டு
உறக்கத்துடனேயே
சலனமில்லாமல் நகர்கிறது
அது என்ற

"ஆழ்மனம்"....!!!!