வியாழன், 2 ஆகஸ்ட், 2018

23



பிள்ளைகளுக்கு பள்ளிக்கு மட்டம் போடுவதற்கு  பல காரணங்கள் கிடைத்து விடும்.. அவை நம்ப முடியாதவையோ, உண்மையானவையோ, நகைப்பு/எரிச்சலை தருபவையோ, எவையாக இருப்பினும் அவற்றை பிடிவாதத்துடன் வெளிப்படுத்தி விடுப்பு எடுத்துக் கொள்ளும் திறமை சில பிள்ளைகளுக்கு உண்டு..  அது இப்போது என் மகனுக்கு வசப்பட்டிருக்கிறது..

நானும் அப்படி மட்டம் போட்டிருப்பேனோ என யோசித்து பார்க்கையில் அப்படிப்பட்ட நினைவுகள் ஏதும் சிக்கவில்லை.. ஆரம்பத்தில் அவன் "இங்க உள்ள பள்ளி நன்றாக இல்லை என்பதிலிருந்து , இங்கு  தப்பே இல்லாத சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அடிக்கறாங்க" அதனால ஸ்கூல்-க்கு போக மாட்டேன் எனக் கூறி அழுது அடம் பிடித்து ஒரிரு நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறான்.. "அடிக்காமல்  சொன்னாலே நாங்க புரிஞ்சுகிட்டு நல்லா நடந்துப்போம், அப்படிதான துபாய் ஸ்கூல் -ல  மிஸ் பண்ணினாங்க .. இவங்க எல்லாத்துக்கும் அடிக்கிறாங்க " என கூறும் காரணம் ஒத்து போனதால் ஏதும் செய்ய இயலா நிலையில் கண்டித்து அனுப்பும் நிலையும் இல்லாமல் போயிருக்கிறது..

இப்போதெல்லாம் அந்த காரணங்கள் முன்னேற்றமடைந்து "தலை வலி, வயிறு வலி " என்று வளர்ந்திருக்கின்றன.. பொய் என தெரிந்தாலும் செய்யும் அடத்தால் வீட்டில் இருந்து விடுவான்.. நேற்றும் அதுபோலவே தலை வலி எனகூறி , எல்லோரும் அறிவுறுத்தியும்  கேட்காமல் வீட்டில் இருந்து விட்டான்.. வழக்கம் போலவெ பள்ளி வேன் சென்றதும் அவன் தலை வலியும் காணாமல் போய்விட்டது..

பையன் அப்படி என்றால் பெண் அதற்கு எதிர்மாறானவள்.. ஒரு நாளும் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மனம் வராது.. எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் நிறைய உண்டு..

அப்படிபட்டவளே இன்று "நேற்று அண்ணன் போகாததால் நானும் போக மாட்டேன்" என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.. இன்று வீட்டில் பெரியவர்கள் வெளியூர் சென்றதால் நானே எல்லாமும் சமாளிக்க வேண்டியும்  இருந்ததால் எனக்கும் டென்சன் எகிறியது .. வீட்டில் இருக்க வைக்கலாமே என தோன்றினாலும் , இன்று உள்ள நடன வகுப்பும் , அடுத்த வாரம் தொடர்ந்து இரு வாரங்கள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழலும் உள்ளதால் காதில் வாங்காமல் அடுத்ததுத்து உள்ள வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.. இவள் அவனை போல பிடிவாதம் பிடிக்க மாட்டாள் என்பதும் முக்கிய காரணம்.

உடை எல்லாம் மாற்றி, வேன் வந்த பிறகு திரும்பவும் அழுகையோடே அடம் பிடித்து நின்றாள்.  வேன் நிற்கிறதே என்ற பதட்டம் என்னை தொற்ற அவளை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். அழுதுகொண்டே வந்தவள் , உடனே "எனக்கு கலர் பென்சில் வேணும்" என கேட்டாள்.  "அதுக்கா போக மாட்டேன்னு சொன்னே" எனக் கேட்டதும் "ஆமாம்" என தலையசைத்தாள்.

அவளிடம் ஏற்கனவே க்ரேயான்ஸ் இருந்தாலும் " கடந்த மாதம் அவள் அப்பா நண்பர் மூலம் கொடுத்தனுப்பிய க்ரேயான்ஸ்-ல் அவள் கண் இருந்தது.. அதை மேலும் தூண்டியது அதற்கு முந்தைய தினம் அவள் அண்ணன் அவன் அப்பா கொடுத்தனுப்பிய கலர் பென்சிலை என்னிடம் அடம் பிடித்து வாங்கியதுதான்..  அவனின் பிடிவாதத்தில் அவனிடம் கொடுத்து விட்டென்.. "உன்னிடம் உள்ள க்ரேயான்ஸ் தீரட்டும் " என இவளை சமாளித்து வைத்திருந்தேன்..

இப்போதும் அவளுக்கு உடனடி தேவை  க்ரேயான் இல்லை.. அவளிடம் ஒரு பழக்கம் உண்டு.. எதற்கேனும் அடம் பிடிப்பாள்.. நான், தரவே மாட்டேன் என நிற்கும்போதோ, அடிக்க செல்லும்போதோ , "ஓகே, அப்போ , நாளைக்கு எனக்கு இது வாங்கி தரணும் என்றோ அல்லது எங்காவது கூட்டி செல்ல வேண்டுமென்றோ கூறுவாள். நான் "சரி" என்றதும் . பழைய காரணத்துக்கான பிடிவாதத்தையும் விட்டு விடுவாள்.. இப்போதும் அதெ டெக்னிக்-தான்..

உடனே அவளை எதிர் வீட்டுக்காரரிடம் விட்டு விட்டு வீட்டினுள் சென்று க்ரேயான்ஸ் எடுத்து வந்து  கொடுத்தென்.. சிரித்துக் கொண்டெ அவள் அதை வாங்கும்போது, காத்திருந்த வேனை பார்த்ததும் எனக்கு  கொஞ்சம் கோபமும் வர "பிடிவாதம் பாரு " என கையில் மெல்ல கிள்ளினேன்.. உடனே அவள் முகம் சுருங்கி போயிற்று.. எனக்கும் என்னவோ போலானது.. வேனில் ஏறி அமர்ந்தும் திரும்பி பார்க்காமல் சென்றாள்.

அவள் பொதுவாகவே ரொம்பவும் சென்சிடிவ் டைப்.. திட்டினாலே அழும் குணமுடையவள்..  பொதுவாக மற்றவர் முன் குழந்தைகளை திட்டுவதும், அடிப்பதும் கூடாது என்ற எண்ணமுடைய நானே , கோபம் தூண்டி விட, அவள் வேனில் இருக்கும் அனைவரும் பார்க்க இப்படி நடந்து கொண்டேனே என வேதனையாக உள்ளது ..

இதை நினைத்தே இதுவரை எந்த வேலையும் ஓடவில்லை.. ஒரு தாயின் மனம் எப்படிப்பட்டது என்பதை வலியோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன்... இனி மாலை நடன வகுப்பு முடிந்து  அவளை பார்க்கும் வரை  மட்டுமல்லாமல் , வரும் வழியில் அவளுக்கு பிடித்த ஐஸ் க்ரீம் வாங்கி கொடுக்கும் வரை என் மனம் சமாதனமடையப் போவதில்லை என்பது மட்டும் உறுதி...


- 2-8-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.