மார்த்தாண்டத்திலிருந்து கோவை, இரவு நேர பேருந்து பயணம். முன்னிருக்கையில் தனியாளாக நாகர்கோவில் வரை வந்தேன். நாகர்கோவிலில் இரவு உணவை முடித்துக் கொண்டு பேருந்தில் ஏறும்போது என் இருக்கைக்கு பக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி அமர்ந்திருந்தார். பின் ஒரு சில நிமிடங்களில் பேருந்தில் ஏறிய அப்பெண்ணின் தந்தை, வாங்கி வந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, அவள் காலுக்கடியில் இருந்த bag -ஐ மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் தூக்கி வைத்து விட்டு, இறங்கியதும் போன் செய்யுமாறு கூறி விட்டு கீழிறங்கி பேருந்து கிளம்பவும், தன் பெண்ணைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்.
பேருந்து திருநெல்வேலி வரும் வரை எனக்கு அப்பெண்ணின் மீது கவனம் இல்லை. பேருந்தில் ஒலித்த பாடல்களிலும், தடுத்தாலும் வரும் எண்ண அலைகளிலும் மூழ்கிக் கிடந்தேன்.
திருநெல்வேலி பஸ் ஸ்டேண்ட் வந்ததும், "பஸ் சாந்தி அல்வா கடை பக்கம் வருது பார்" என்ற அவசரம் மற்றும் பதட்டம் தேக்கிய அப்பெண்ணின் குரல் மிக மெலிதாகக் கேட்டது. காதில் மாட்டி இருந்த earphone -ன் வழி பேசிக் கொண்டிருந்தாள். உடன் படிக்கும் தோழி யாராவது வருவார்கள் போல என எண்ணி நானும் அப்பெண்ணின் பார்வையத் துரத்தினேன். "இந்த பக்கம் , பஸ் முன்னாடி வந்துருக்கு " என்ற சத்தம், தான் எதிர்பார்த்தவரைக் கண்டதும் அடங்கிப் போனது".
அது 21 வயதுக்குள் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன். அவனும் earphone மூலம் வெளியில் பேசுவது தெரியாதது போல பேசிக் கொண்டிருந்தான். அவளின் நண்பனாக இருக்கும் என யூகித்தேன்.
பேருந்தில் படிகளுக்கு கீழிருந்த நடத்துனர் ஒவ்வொருவராக டிக்கெட் வாங்கி ஏற்ற ஆரம்பித்திருந்தார். "ரெண்டு சீட் சேர்ந்து கிடைக்குமான்னு கேளு" என இவள் கூற , அந்த இளைஞனும் நடத்துனரிடம் கேட்டு விட்டு, "இல்லை" என்பது போல அவளைப் பார்த்து தலையசைத்துக் கொண்டு கூறினான். உடனே இவள் கீழிறங்கி, தானும் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் மறுத்து தலையசைத்து தெரிந்தது. நடத்துனருக்கு அவர்களின் மனம் புரியாதா, என்ன? ஆனால் எந்த அலட்டலுமின்றி பேப்பரில் என்ட்ரி போட்டுக்கொண்டே தலையசைத்துக் கொண்டிருந்தார். பின் இவள் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவர்களிருவருக்கும் பதட்டம் தீரவில்லை.
"என்ன செய்யறது, திரும்ப கேட்டுப் பாரு" என இவள் கூற, அவனோ அடுத்த பேருந்தில் போகலாம், இறங்கி வா" என சொல்லியிருப்பான் போல.
இடையே அவனை நான் கவனித்துக் கொண்டிருப்பதை அறிந்தவன், கொஞ்சம் பின் பக்கம் சென்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.
"நான் எப்படி இறங்க, bag மேல வச்சு இருக்கு , இப்ப இறங்கினா என்ன நினைப்பாங்க" என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவள், "பஸ் எடுத்துருவாங்க போல" என புலம்பிக்கொண்டிருக்க, அவனோ தன் கோபத்தை ஒரு பேருந்தின் பின்புறம், அவள் பார்வைக்கு படாமல் சென்று நின்று காட்டியவாறு, கீழிறங்க வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
அவளுக்கோ பேருந்தை எடுத்து விடுவார்களோ என்ற பதட்டம், என்ன செய்வதென்று குழப்பம். எனக்கோ இந்த பெண் இறங்கிவிடுவாளோ, சீக்கிரம் பேருந்து எடுக்கமாட்டார்களா என்ற பதட்டம். இடைப்பட்ட நேரத்தில் என் எண்ணத்தில், மகளைப் பேருந்தில் ஏற்றி விட்டு சென்ற அந்த தந்தையும் உருவம் மின்னலடித்து செல்கிறது.
கண்பார்வை அற்ற ஒரு தம்பதி அருகிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். பேருந்து இங்கு நின்றதும், அந்த கணவனை ஒருவர் கூட்டிக்கொண்டு கழிவறைக்கு சென்று இருந்தார். அவர்களுக்காக பேருந்து காத்துக் கொண்டிருந்தது.
அவர்கள் சீக்கிரம் வந்து , பேருந்து எடுத்து விட வேண்டுமென்ற பதட்டம் எனக்குள்... அது அவர்களிருவரையும் மிஞ்சி இருந்தது. அந்த ஐந்து நிமிடங்களை இப்போது நினைத்தாலும், நெஞ்சுக்குள் அந்த பதட்டம் ஒட்டிக் கொள்கிறது.
ஒருவழியாக அவ்விருவர் பேருந்தில் ஏறி, பஸ் கிளம்பியதும்தான், முழு பதட்டம் நீங்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பேருந்து கிளம்பியதும், அவள் தலையில் கையை வைத்துக் கொண்டாள். முகத்தில் அவ்வளவு ஏமாற்றம். பின்னும் சிறிது நேரம் ஏதோ மெதுவாக அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
பின் யோசித்தேன். நான் ஏன் இவ்வளவு பதட்டம் அடைந்தேன்? இவள் அங்கு செல்லாதது எனக்கு ஏன் மனநிறைவைத் தருகிறது? இவர்களைப் போல ஜோடிகளை என் பல பேருந்து பயணங்களில் பார்த்திருக்கிறேன். பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அல்லது ஸ்லீப்பர் வண்டி என்றால் ஒரே படுக்கையில் புக் செய்து விட்டு நிறுத்தம் வந்ததும், தனியாக இறங்கி ,அழைத்து செல்ல வந்த வண்டியில் ஏறி அமரும் பெண்கள் ரகசியமாக காதலனுக்கு கண்கள் மூலம் விடை கொடுக்கும் காட்சிகளையும் கண்டிருக்கிறேன். பின் இவர்கள் மீது எனக்கென்ன வன்மம்?
காதலுக்கு நான் எதிரி இல்லை என்றுதானே சமீபத்தில் கூட யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தேன்."அவரவர் வாழ்க்கை தேர்வு,அவரவர் முடிவு" என்றுதானே பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தேன். பின் எப்படி?
அந்த தந்தையின் உருவம் (முகம் மறந்து விட்டிருந்தது) நினைவில் வந்தது. தன் மகள் பாதாகாப்பாக சென்று இறங்குவாள் என்ற அவரின் தன் மகளின் மேலான நம்பிக்கை கண் முன் வந்தது.
கொஞ்சம் புரிந்தது... "நானும் ஒரு தாய். எனக்கும் மகள் இருக்கிறாள்".
- 6/5/2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.