சனி, 9 ஏப்ரல், 2016

பணத்தைத்தேடி (வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம்)

நாங்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கு அடுத்து இருக்கிறது ஒரு சிறிய குடியிருப்பு.. ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட ஹாலோ ப்ளாக் கட்டிடம் அது ..சின்னச்சின்ன அறைகளே ஒரு வீடாக பிரிக்கப்பட்டிருப்பதை திறந்த பாதை வழியின் வழியே பார்த்தால் தெளிவாக தெரியும்.. அந்த சிமென்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மேல் பழைய தலையணைகள் சிலவும், சோபா குஷன்களும், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலியின் பகுதிகளும் சிதறிக்கிடக்கும்..
வெளிநாட்டிலிருந்து தனியே இங்கு வந்து வேலை பார்க்கும் ஆண்களை கொண்ட குடியிருப்பு அது என போகப் போக தெரிந்தது.. என் பார்வையில் பட்டவரை இந்தியர்களும் பாதியளவு இக்குடியிருப்பில் உள்ளனர்.. அவர்கள் அனைவரும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என அந்தக்குடியிருப்பின் இத்தோற்றமே காட்டிக் கொடுக்கும்..
சில நாட்களுக்கு முன் அந்த பாதையின் ஒரு பக்கத்தில் பழுதடைந்த குளிர்சாதனப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.. ஜன்னலின் வழி பார்க்க நேரும்போது இதை ஏன் இங்கு வைத்துள்ளார்கள் எனத் தோன்றியிருக்கிறது.. ஒருநாள் ஒரு இளைஞன் அதை திறந்து அதில் ஏதோ ஒன்றை வைத்து விட்டு எடுக்கும்போதுதான் , இதை வெளியில் வைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தும் அலமாரியாக பயன்படுத்துகிறார்கள் எனத் தோன்றியது.. இப்போது அது அங்கு இல்லை..
அந்த பாதையின் வெயில் படாத ஒரு மூலையில், யாராலோ பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட.கூடிய விலைக்கு சொந்தமான, அழகை பாதிக்கு மேல் இழந்து , கம்பீரத்தை மட்டும் தக்க வைத்திருக்கும் இரு நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும்..
இதுவரை சொன்னது எந்த பின்புலத்தில் அவர்கள் வசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை விவரிக்கவே..
இந்த வெள்ளிக்கிழமை அந்த நாற்காலிகளில் இருந்த இருவருக்கு அவருடன் தங்கி இருந்த இன்னொருவர் முடி வெட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்..
அன்றொரு நாள், இங்குள்ள பெரிய மாலுக்கு சென்றபோது பிள்ளைகளின் விளையாட்டுப்பகுதிக்கு செல்ல முயன்றோம்.. அப்போது அங்கு தரையை கூட்டிக் கொண்டிருந்த நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு தொழிலாளி , எங்களைக் கூப்பிட்டு (எங்களைப்பார்த்ததும் தமிழ் ஆட்கள் எனப் புரிந்ததோ என்னவோ) "இங்கு எல்லா விளையாட்டுக்கும் பணம் அதிகம், இங்க கொடுக்கற காசுக்கு பிள்ளைகளுக்கு நல்லதா சாப்பிட வாங்கிக் கொடுங்க" எனக் கூறினார்..
பிள்ளைகள் சந்தோஷமாக அங்கு விளையாடட்டும் என அங்கு கூட்டி சென்றிருந்தாலும், எங்களை விட வயதில் மூத்தவர் கூப்பிட்டு சொன்னதால் , அவர் வார்த்தைகளை நிராகரித்ததாக இருக்க வேண்டாமே என நான் " சரிங்க " என்ற வார்த்தையின் மூலமும், என் கணவரும், அவர் நண்பரும் அவருக்கு கை கொடுத்து விடை பெற்றதின் மூலமும் அவரின் வார்த்தைகளை ஏற்று விட்டோம் என சொல்லி, அங்கு செல்லாமல் திரும்பினோம்.. அவருக்கு கூப்பிட்டு சொல்லத் தோன்றியதே என அன்று முழுவதும் அவரைப் பற்றிய பெருமை எங்கள் பேச்சில் இருந்தது..
இங்கு உணவை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஆட்களிலிருந்து, ஓட்டல்களில் டேபிள் துடைக்கும் பணியாளர்கள் வரை அவர்களின் சிறு சிறு செயல்கள் மூலம் அவர்களின் "சேமித்தாக வேண்டும்" என்ற மனோநிலையை கவனித்திருக்கிறேன்... நான் கவனிக்க முடியா தூரத்தில் இன்னும் லட்சம் பேர் இருப்பார்கள் இவர்களைப் போல..
இப்படி ஏதேனும் ஒரு தேவைக்காகவோ, வாழ்க்கை வசதிக்காகவோ, குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டு, வெளிநாட்டில் தனியாக வேலைக்கு வந்து , அத்தியாவசிய செலவு கூட செய்யாமல், குறைந்த வாடகையில் பங்கு போட்டு தங்கி , தங்கள் குடும்பத்தினரின் வேறு ஏதாவது செலவுக்கு பயன்படட்டும் என சேமித்து அனுப்பும் இவர்களை போன்றவர்களுக்குத்தான் பணத்தின் மதிப்பு நன்கு தெரியும்...
ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டாலே, நிறைய வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை போல நினைத்துக் கொண்டும், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் நமக்கு ஏதும் கொண்டு வரவில்லையே என குறை கூறும், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும், காதும், வாயும் வைத்திருக்கும் உறவுகளும், நட்புகளும் அறிவார்களா,
இப்படிப்பட்ட சின்னச்சின்ன தியாகங்களும், உறவுகளற்ற தனிமையின் வலியும் சேர்ந்துதான் அவர்களின் உறவுகளை சொகுசாக வாழ வைக்கிறதென....
ஏன்,சொகுசை அனுபவிக்கும் குடும்பத்தினர்கள் கூட புரிந்து கொள்வதில்லை.. குடும்பத்தினரிடம் கஷ்டங்களை வெளிக்காட்ட இவர்களும் விரும்புவதில்லை..
இப்போது கூட நான் மேற்கூறிய சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரின் உறவோ , நட்போ இப்படி பேசிக் கொண்டிருக்கக்கூடும், "அவனுக்கென்ன , அவன் வெளிநாட்டுல இருக்கான்"......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.