திங்கள், 30 மே, 2016

அதிக சேட்டைகள் செய்வர் என்று தெரிந்தும், வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறார்களே என்று , கணவர் வெளிநாடு செல்லும் நாட்களிலெல்லாம் பிள்ளைகளை அக்கம்பக்கம் உள்ள இடங்களுக்கு தனியாக அழைத்து சென்று வருகிறேன்.. கடந்த வாரம் அப்படி கொஞ்சம் தொலைவிலுள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றிருந்தேன்..

உள்ளே நுழைந்ததும் , அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த Inflatable Jumping  castles  மற்றும் inflatable  slide  உள்ள பகுதிக்கு சென்று அங்கு விளையாட வேண்டும் எனக்கூறினான்.. ஏற்கனவே ஒருமுறை சென்றபோதும் அங்கு விளையாட வேண்டும் எனக் கேட்டிருந்தான்..  ஒரு மணிநேரம் வரை விளையாடலாம்.. ஆனால் சிறிது நேரத்திலேயே ஆசைக்கு  விளையாடிவிட்டு திரும்ப வந்து விடுவான், அந்த காசுக்கு சாப்பிடவாவது ஏதேனும் வாங்கிக் கொடுக்கலாம் என்று அனுப்பவில்லை..

அன்றும் அதையே நினைத்தவாறு முதலில் அங்கு சென்று விளையாடறேன் என் கெஞ்சிக்கொண்டு நின்றவனைப்பார்த்து "நீ சின்ன பையன், அதனால் உன்னை உள்ள விடமாட்டாங்க"எனக் கூறினேன்..  "அப்போ , என்னை தூக்க சொல்லும்போது நீ பெரிய பையனாகிட்டன்னு ஏன் சொல்ற"எனக் கேட்டான்.. இவனிடம் பேசி சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும் , விளையாட விட தீர்மானித்தேன்..

பெண்ணிடம் நீ அவ்வளவு மேல ஏற மாட்ட,விழுந்துருவ, அதனால் அம்மாகிட்ட இரு" என்று சொன்னதும் "எனக்கு  மட்டும் ஆசை இருக்காதா"என நீட்டி முழக்கினாள்..  இருவருக்கும் 30 திர்ஹாம்ஸ்  ஆகும் என பர்சை பிரித்தால் , வரும்போது டாக்ஸி-க்கு 10 திர்ஹாம்ஸ் கொடுத்தது போக  மொத்தமே 30 திர்ஹாம்ஸ் மற்றும் சில  சில்லரைகளும்தான்  இருந்தன..

பொதுவாக பர்சில் வீட்டு செலவுக்கென இருக்கும் பணம் முழுவதையும் வைக்கும் பழக்கத்தை சமீபமாகத்தான் நிறுத்தி இருந்தேன்.. அப்படி அந்த மாத செலவுக்குரிய பணம் முழுவதையும்  பர்சில் வைத்திருந்தால், மாத கடைசிக்கு நாள்கள் இருக்கும் முன்பே பணம் முழுவதும் செலவாகி இருக்கும்.. என் கை அப்படி.. பர்சில் காசு இருந்தால் பார்த்ததெல்லாம் வாங்க தோன்றும்..ஆதலால் குறிப்பிட்டளவு பணத்தை எடுத்து வைத்து அது செலவழிந்ததும்தான் பீரோவில் உள்ள பணத்தை எடுப்பதை சில மாதங்களாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்..

இங்கு வரும்போதும் பக்கம்தானே போகிறோம் , இதற்குள் செலவு அடங்கி விடுமென நினைத்திருந்தேன்.. இவன் இதில் விளையாட இன்றும் கேட்பான் என எண்ணவில்லை..

ரோஹித்திடம் நீ போய் விளையாடு,  விளையாடிட்டு கொஞ்ச நேரத்துலையே வரக் கூடாது , நான் நிகிதாவ கூட்டிட்டு அந்த பக்கம் எல்லாம் சுத்திக்காட்டி விளையாட விட்டுட்டு , வர்ற வரைக்கும் விளையாடிட்டு  இருக்கணும், தேடக் கூடாது என எச்சரித்தேன்.. "நிகிதாவையும் அனுப்புங்க" எனக்கூறினான்.. "காசு கொண்டு வரல" என சொல்லி அவனை அனுப்பி விட்டு , தேடுவானோ என்னவோ என்று வெளியில் இருந்த  ஸ்டோன் பெஞ்சில்  அவனைபார்த்தவாறு பெண்ணுடம் அமர்ந்தேன்.. அப்போது ஒரு சிறுவனும் அங்கு விளையாட பணம் வசூலித்துக் கொண்டிருந்த அரபுப் பெண்ணின் இரண்டு வயதிற்கும் உள்ளான பெண் குழந்தையும்  மட்டுமே அதில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ..

மடியிலிருந்த நிகிதாவோ , "அந்த அக்கா(?) என்னை விட சின்னதா இருக்கு , அந்த அக்கா விளையாடுது" என அந்த பெண் குழந்தையைக் காண்பித்துக் கேட்டாள். காசு கொண்டு வரல தங்கம்" எனக் கூறியதும் "அப்போ நாளைக்கு இங்க வரும்போது என்னை விளையாட விடனும் , ஒகே வா" எனக் கேட்டு என் "ஒகே" வை வாங்கி சமாதானம் அடைந்தாள்.. இப்போதெல்லாம் அவளை சமாளிப்பது ரொம்பவும் சுலபமாக இருக்கிறது.. அவளுக்கு பிடிக்காததை சாப்பிட சொல்லி வற்புறுத்தினால் கூட  , "நாளைக்கு எனக்கு இது கொடுக்கக்கூடாது , ஒகே வா" , என சமாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விடுகிறாள்..

என்னை பார்த்து சிரித்துக்கொண்டே slide -ல் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தான்.. சும்மா உட்கார்ந்து இருப்பதற்கு , பெண்ணை பக்கத்திலுள்ள தளவாடங்களுள் விளையாட விடலாமென அழைத்து சென்றேன்..

வந்ததிலிருந்து இடையிடையே "மெஹந்தி போடறீங்களா" எனக் கேட்டு நின்ற சில  அரபிப்பெண்களை "வேண்டாம்" என்று புன்னைகயோடு கடக்க வேண்டியிருந்தது.. இந்த பூங்காவில் சிறிய உணவு விடுதியும், சில சிறு சிறு கடைகளும் இருந்தாலும் சில பெண்கள் இப்படி துணிகள், வாசனை திரவியம் விற்பது  என கேட்டு வந்து விற்று செல்வர்..அவர்களுக்கான வருவாய் ஈட்டெடுப்பு இது..

 சென்ற 10 நிமிடத்தில் ஏதோ உறுத்த, தேடுவானோ என்று பார்க்க வந்தால் அழுத முகத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.. அங்கு காசு வாங்கிக் கொண்டு இருந்த அரபிப்பெண், "நீங்கள் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளுங்கள் , அப்போது அழ மாட்டான் "என அரபியில் சொன்னதை , அவர் அங்கிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டிய செய்கையால் புரிந்து கொண்டேன்..

நிகிதாவும்  நானும் உட்புறம்  போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம்.. ரோஹித்தும் குதூகலத்துடன் விளையாட சென்றான்.. அங்கு அமர்ந்தவாறே பின்புறம் கம்பி வலைக்கு பின்னால்  எதேச்சையாகப் பார்த்தபோது மூன்று வயதை ஒத்த ஒரு சிறுவன் கையிலிருந்த இரு ஜீப் பொம்மைகளை கம்பிகளுக்கு மேல் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தான்.. ஆரஞ்சு சட்டையும் , ப்ளூ three fourth  டிரௌசரும் போட்டிருந்த சிறுவன் தன் முன்பக்க மேல் பற்களை நான்கைந்தை  புழுவுக்கோ,எதுக்கோ கொடுத்திருந்தான்..

நான் பார்ப்பதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டு இரு ஜீப் பொம்மைகளையும் ஒன்றோடொன்று மோதுவது போல காண்பித்து சிரித்தான்.. நானும் சிரித்தேன்.. உடனே அந்த slide -ஐ காண்பித்து  ஏதோ மெதுவாக சிரித்தவாறே சொன்னான்.. அதை வைத்து அல்லாமல்  அவன் கண்களில் தெரியும் குழந்தைத்தனமான ஏக்கத்தை உள்வாங்கி . அதில் அவன் விளையாட வேண்டும் எனக்கூறியதைப் புரிந்து கொண்டேன்.. உடனே நெஞ்சில் ஒரு இனம் புரியாத இயலாமையான உணர்வு ஏற்பட்டது.. என்னிடம் போதுமான  பணம் இல்லை என எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.. அப்படி என்னால் வாய் திறந்து சொல்லவும் மனம் வரவில்லை ..  கையறு நிலையில் உள்ளபோது செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன் கலந்த சிரிப்பை உதிர்த்து விட்டு இல்லையென தலையாட்டினேன்..

அவன் சிரித்தவாறே இருந்தான்..அப்போது பக்கத்தில் ஓடி வந்த  அவனை விட சிறிய இன்னொரு  சிறுவன் இந்த சிறுவனை தள்ளி விடுவதும் , மண்ணை எடுத்து அவன் தலையில் போடுவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தான்..அவனை பார்த்தும் சிரித்தவாறு எதிர்ப்பு காட்டாமல் நின்று கொண்டிருந்தான்..

எனக்கு மனம் கனத்துப்போயிருந்தது.. வீட்டுக்கு போக டாக்ஸி-க்கு பணம் வேண்டும்.. அதை எடுத்து மீதம் பார்த்தால் பர்சில் 7 திர்ஹாம்சுக்கு மேல்  இல்லை.. எங்கு வெளியில் சென்றாலும் கூடுதலாக பணம் எடுத்துக் கொண்டு போக கணவர் அறிவுறுத்துவது தோன்றி மறைந்தது..

என் பிள்ளைகள் இது போல மேலும் சில அதிக விலை கொடுத்து விளையாட ஆசைப்பட்டபோது , சில நேரங்களில் மறுத்து இருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் கூட இது போல என் மனம் துடித்ததில்லை.. ரோஹித் அரை மணி நேரம் விளையாடி இருப்பான் , மீதி அரை மணி நேரம் அந்த பிள்ளையை விளையாட விட முடியுமா , எனக் கேட்கவும் மனம் துடித்தது.. அது இயலாது எனத் தெரிந்ததால் கேட்கவும் இல்லை..

அப்போது , ஒரு தம்பதி தங்கள் இரு சிறு குழந்தைகளுடன் உள்ளே நுழைந்து பணம் செலுத்தி பிள்ளைகளை விளையாட விட்டனர்.. அப்போது வாயில் கதவை அவர்கள் அடைக்கவில்லை. பணம் வாங்கும் அரபுப் பெண்ணும் பிள்ளைகள் விளையாடும் பின்பகுதிக்கு சென்றார்.. அப்போது இந்த சிறுவனும் கூட இருந்த குட்டி சிறுவனும்  மெதுவாக நடந்தபடி உள்ளே வந்தார்கள்.. இவர்களைப்பார்த்தால் அந்த அரபுப்பெண் என்ன சொல்வாரோ என  எனக்குள்  சிறு பதட்டம் எழுந்தது.. நான் நினைத்தது போலவே , பின்பக்கமிருந்து வந்த  அந்த அரபுப்பெண் அந்த இரு சிறுவர்களையும் "போங்க போங்க" என சிறிது கடுமையாக அரபியில் சொல்லவே இருவரும் வெளியேறினர்..

நான் என்னவோ போல் அமர்ந்திருந்தேன்.. அவர் ,சிறிது நேரம் பிள்ளைகளை ஆசைக்கு விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது.. ஆனால் காசு வாங்காமல்  விளையாட விட்டால் அவருக்கும்  ஏதும் பிரச்சனை வரலாம் எனவும் தோன்றியது.. அப்பெண்ணின் குழந்தை, அந்த குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்த  அவருக்கு தெரிந்தவர்கள்  போல் இருந்த ஒரு வளர்ந்த பையன் மற்றும் பெண்  எல்லாம் காசு கொடுக்காமல்தான் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நான்கைந்து பிள்ளைகளே விளையாடிக்கொண்டு இருந்த இடத்தில் அந்த சிறுவர்களை  ஒரு ஐந்து நிமிடமேனும் அந்த பெண் விளையாட விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது..

திரும்ப அந்த சிறுவனை கவனித்தேன்.. அவன் வெளியில் நின்றவாறு, Jumping  castles -ல் குதித்து விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் சந்தோசத்தை சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான்..  இடையிடையே என்னுடன் வந்து சென்று கொண்டிருந்த மகனிடம் , அந்த சிறுவன் கேட்டதை சொல்லி, அவனையும் காண்பித்தும்  இருந்தேன்.. என்னால் அங்கு அதற்கு மேல் அமர்ந்து இருக்கவும் முடியவில்லை.. மகனை அழைத்து :நாம போவோமா" எனக்கேட்டேன்.. அவனும் "சரி" என்று சொல்ல வெளியே வந்தோம்..

அதற்குள் அந்த சிறுவன்
எங்கோ சென்றிருந்தான்.. என்னிடம் இருந்த பைசாவுக்கு  அந்த சிறுவனுக்கு ஒரு சாக்லட் வாங்கிக் கொடுத்தால் கூட என் மனம் கொஞ்சம் அமைதி அடையும் எனத் தோன்றியது..என் இயலாமையையும் , மன வருத்தத்தையும் ரோஹித்திடம் (அவன்தான் அப்போது பக்கத்தில் இருந்த பெரியவன்)சொல்லியவாறே நடந்து வந்து கொண்டிருந்தேன்..

சிறிது தூரம் வந்ததும் "ஆரஞ்சு ஷர்ட் போட்ட பையன் அங்க இருக்கான் பாரும்மா" எனக்காட்டினான்.. மெஹந்தி போட்டு விடும் சிறு பெண்கள் இருந்த குழுவில் அமர்ந்து இருந்த சிறுவன் எதையோ use  and  throw  தட்டில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..  என்னை  அவன் பார்க்கும்போது, அவனைப்பார்த்து சிரித்தவாறே பிள்ளைகளிடம்  "அந்த தம்பிக்கு டாட்டா சொல்லு தங்கம்"எனக்கூறினேன்.. நான் சொல்லி முடிக்கும் முன் என்னை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தவன் எனக்கு டாட்டா காட்டினான்..

சிரித்தவாறு நாங்களும் கை அசைத்து  விட்டு வந்தோம்.. பணம் மட்டும் கூடுதலாக கொண்டு சென்றிருந்தால் ஒரு மனத்திருப்தியோடு வந்திருப்பேன்.. இப்போது மனத்திருப்தி இல்லாத ஒரு அனுபவப் பாடத்தோடு வந்தேன்..

அந்த பகுதி வளைவில் திரும்போது அவனை மீண்டும் ஒரு முறை பார்க்கலாமென திரும்பினேன்..  முன்பு நின்றிருந்த விளையாட்டு பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.