ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு தங்கம்...
உனக்கும் தங்கச்சிக்கும் இடையில் நடந்த சின்ன அழுகை சண்டையால் அவளை ரூம்-க்குள்ள கூட்டிட்டு போய் தாழ் போட்டு இருந்தேன் .. அந்த நேரம் அவசரமா ஏதோ எழுதிட்டு இருந்த...
கொஞ்ச நேரத்துல ஜன்னல் வழி -ல சண்டை போட்ட உன் தங்கச்சி மூலமே இதை கொடுத்து , "அம்மாட்ட கொடுத்து படிக்க சொல்லு" ன்னு சொல்ற..,
அலட்சியமா படிக்கறது போல உன் முன்ன காட்டிக்கிட்டாலும் ஒரு ஆர்வத்தோடதான் தங்கம் இதை படிக்க பிரிச்சேன்.. படிக்க ஆரம்பிச்சதும் எனக்குள் எழுந்த உணர்வு கண்ணீர் படலமா என் கண்ணை மறச்சதை நீ கொஞ்சம் உத்து பார்த்திருந்தா கண்டுபிடிச்சுருப்ப... ஆனால் கொஞ்சம் முன்ன நீ உன் தங்கைகிட்ட பிடிச்ச அடமும், என் நெகிழ்ச்சியை நீ பார்க்கக் கூடாதுன்ற எண்ணமும் கலந்து , உன் தங்கச்சிகிட்ட கொடுத்து உன் காது கேட்கவே , "தாத்தாகிட்ட காமி"-ன்னு சொல்றேன்...
நீயும் அவ பின்னாடியே போறே.. உன் தாத்தா வாசிக்க ஆரம்பிச்சதும் வழக்கம்போல அவர் சில திருத்தங்களை உன்கிட்ட சொல்றார்..
"வேண்டாம் அப்பா" அவன் எப்படி எழுதினானோ அப்படியே இருக்கட்டும் , அதுலதான் உயிர் இருக்கும்" னு சொல்ல தோணுது.. ஆனால் ஏதோ தடுக்குது.. பேசாம இருக்கேன் .. நான் வாசிச்ச உன் வார்த்தைகள் எனக்குள்ள ஓடிட்டு இருக்கு...
"வேண்டாம் அப்பா" அவன் எப்படி எழுதினானோ அப்படியே இருக்கட்டும் , அதுலதான் உயிர் இருக்கும்" னு சொல்ல தோணுது.. ஆனால் ஏதோ தடுக்குது.. பேசாம இருக்கேன் .. நான் வாசிச்ச உன் வார்த்தைகள் எனக்குள்ள ஓடிட்டு இருக்கு...
அழறேன் தங்கம்.. உனக்கு காமிக்க கூடாதுன்னு மறைக்கவும் செய்யறேன்.. ஆனா வெளிய வந்தப்போ அம்மாம்மா என் கண்ணை உத்து பார்த்தப்பவே அவங்க அதை புரிஞ்சுட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. அவங்க ஏதுவும் சொல்லல .. ஏன்னா இது ஆறுதலுக்காக வந்த அழுகை இல்ல..
இடைல நீ சொல்ற , "அம்மா என்னை அடிச்சாலும் எனக்கு அம்ம்மாவைதான் பிடிக்கும், அது அம்மாவுக்கு தெரியறதே இல்லை"னு.. இல்லை தங்கமே, அதை நீ எனக்கு பல சந்தர்ப்பங்கள்ல உணர்த்தியிருக்க.. ஆனா அதை நான் தெரிஞ்சுக்கிட்டதா வெளிக்காட்ட முடியாம இந்த சமுதாயம் ஏற்படுத்தி/பழக்கப்படுத்திக் கொடுத்த சூழல் தடுக்குது..
நீ எனக்கு நல்ல மகனா இருக்க.. அதனாலதான் இந்த வயசுலயே உனக்கு நான் கடந்து வந்த அவமானங்கள் , சந்தோசங்களை பகிர்ந்துக்கறேன்.. அது மூலமா யாரையும் தாழ்வா நினைக்காதன்னு பாடம் எடுக்கறேன்.. நான் சொல்றது உன் மனசுக்குள்ள போய்டுச்சுன்றதை நான் புரிஞ்சுக்கறதுக்கான பதில் உன் கண்ணீர்தான்.. 
அப்பப்போ நடக்கற நிகழ்வுகளையும் உன்கிட்ட சொல்றேன்.. சிலவற்றுக்கு நீ கொடுக்கற ஆறுதல் , உன்னை சின்ன பையன்னு நான் சொல்றனேன்னு என்னையே வெட்கப்பட வைக்கும்..
நான் உங்களுக்கு நல்ல அம்மாவா இருக்கல..பிள்ளைக தேவைகள் மட்டுமே வாழ்க்கையா கொண்டு வாழற சில அம்மாக்கள் போல நான் இல்ல.. இங்க அம்மம்மா அந்த பொறுப்பை எடுத்துக்கறதால என்னவோ நான் ரொம்பவே சோம்பேறியா இருக்கேன்.. எனக்கு புரியுது.. சில சமயங்கள் நீங்க ரெண்டு பேரும் கூட சொல்வீங்க..
அதனால் நீ என்னை உயர்வா எழுதின வார்த்தைகளில் உண்மை இல்லை ..ஆனால் உன் மனசுப்படி நீ எழுதின அதே வார்த்தைகளில் பொய்யுமில்லை .... அதுதான் என்னை அழ வைக்குது..
தங்கமே , அது என்ன ஒரு வீடு வரைஞ்சு இருக்க .. புரியுது .... என் வீட்டுக்கான கனவு உனக்கு தெரியும்.. அப்போ சொல்வ, அப்பா, அம்மாக்காக வீடு கட்டி தரதுக்கு முன்னாடி , நான் கட்டி தருவேன்னு
.. குட்டி , பல கோடி போட்டு நீ வீடு கட்டிக்கொடுத்தாலும் , நீ கட்டின இந்த பென்சில் வீடு தந்த சந்தோஷத்துக்கு ஈடாகுமான்னு தெரியல .. அவ்ளோ சந்தோசமா இருக்கு குட்டி ...
நான் என் பழைய காலத்தை நினைவுபடுத்தும் பொருட்களை , நினைவுகளை சேமிக்கல.. அதனாலேயே உங்க ரெண்டு பேருக்குமான நினைவுகளை போட்டோக்கள், எழுத்துக்கள் மூலமா சேமிச்சுட்டு வர்றேன்..
2 வாரம் முன்ன கூட உங்களை பத்தி 3 வருசத்துக்கு முன்ன எழுதினத வாசிச்சு காட்டினப்போ, நீங்க அடைஞ்ச குதூகலத்தை ரொம்பவே ரசிச்சேன்.. அந்த குதூகலத்துக்கு என்னால முடிஞ்சது நிச்சயம் செய்வேன் தங்கம்...
கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை கூப்பிட்டு, "இதை எனக்கு எதுக்கு கொடுத்த "ன்னு கேட்கறேன்.. அம்மாவுக்கு என் பர்த்டே கிப்ட்"-ன்னு சொல்ற.. உடனே உன் முன்ன பேப்பர அப்படி இப்படி திருப்பி எங்க பர்த்டே-ன்ற வார்த்தையே இல்லையேன்னு சொல்றேன்.. எனக்கு பர்த்டே ஸ்பெல்லிங் மறந்துடுச்சு , அதனால் நாளைக்கு நேர்லவே சொல்றேன்னு சொல்ற
...
போன வருஷம் நீ ,பர்த்டே கேக் பார்த்து "ஹாப்பி பர்த்டே சௌம்யா" -ன்னு சௌம்யா-ல உள்ள O-வ D-யா மாத்தி எழுதி கொடுத்த ஒரு சின்ன துண்டு சீட்டு, இதோ இந்த லெட்டர்-ஐயும் எதிர்பார்த்து, என் சேமிப்பு பெட்டகத்துல காத்திட்டு இருக்கின்றது உனக்கு தெரியுமா ...
இதெல்லாம் சாதாரண பொருட்களா/பரிசா கண்ணுக்கு தெரியலாம்.
ஆனா, இவைகள் எல்லாம் உனக்கு பின்னாளில் புரிய வைக்கும் தங்கம் , "மனம் இனித்து கொடுக்கும் சில பரிசுகள் விலையில் மதிப்பிழந்திருக்கலாம் .. ஆனால் மதிப்பில் எந்த விலைக்குமே ஈடாகாது" .. ன்னு ...
லவ் யூ தங்கம்...
- 8 -10 -2018
திங்கள்
திங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.