வெள்ளி, 23 அக்டோபர், 2015

அண்ணன்

இது 2014 பிப்ரவரியில்  எடுத்த புகைப்படம். என் மனதிற்கு நெருக்கமான சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று... ஒரு அண்ணாவோ, அக்காவோ நமக்கு உடன்பிறந்தவர்களாக இல்லையே என்ற ஏக்கம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு,, ஒருவேளை இல்லாததின் மேலும் கிடைக்காததின் மேலும்தான் நமக்கு ஆசை இருக்கும் என்ற உண்மையும் காரணமாக இருக்கலாம்..

சில நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும், மனக்காயம் பட்ட பொழுதுகளிலும் அண்ணன் இருந்திருந்த...ால் தட்டிக் கேட்டிருப்பானே என்ற எண்ணம் தலை தூக்கும்... அதே போல் பள்ளி நாட்களுக்கு பிறகு தூய நட்பை கொண்ட தோழிகள் கிடைக்காததாலோ என்னவோ, நம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளவும் , ஒரு தோழியாக நம்முடன் சேர்ந்து பயணிக்கவும் ஒரு சகோதரி இல்லை என்ற ஏக்கமும் இருந்ததுண்டு.... அப்படி உள்ளோரை பார்க்கும்பொழுது ஆசைப்பட்டும் இருக்கிறேன்.. நான் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரை நான் அண்ணா என்றுதான் அழைத்ததுண்டு, மனதிலும் ஒரு அண்ணன் என்ற ஸ்தானத்தில் வைத்ததுண்டு.. ஆனால் அலுவலக கேட் தாண்டிய பிறகு நாம் எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேக கண் கொண்டு பார்க்கும் சமுதாயத்தால் , அலுவலகத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காவோ, சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவோ அவர்களை அழைக்க முடியாத அளவிற்கு தடை போடப்பட்டிருந்தேன்.. இப்போது திருமணத்திற்கு பின் , நான் என் எண்ணங்களை , ஆசைகளை, வலிகளை பகிர்ந்து கொண்டு தோள் சாய ஒரு நல்ல கணவன் கிடைத்ததால், இப்போது அந்த ஏக்கத்திற்கு வழியே இல்லை.. ஆனால் திருமணத்திற்கு முந்தைய பருவத்தில்அந்த வெறுமையை உணர்ந்திருக்கிறேன் .

நான் இழந்ததை என் மகள் இந்த சிறுவயதிலிருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறாள் அவளின் அண்ணனின் மூலமாக... சிறுசிறு சண்டைகள் போட்டாலும் தங்கையை அவன் யாருக்காகவும் , எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. எங்கேனும் செல்லும்போது அவளையும் உடன்கூட்டி வர அடம்பிடிப்பதாகட்டும், அவளை நடக்கவிடாமல் எங்களை தூக்க சொல்லும் அக்கறையிலாகட்டும், நாங்கள் அவளை கண்டிக்கும்போதோ அடிக்கும்போதோ எங்களிடம் காட்டும் கோபத்திலாகட்டும் ஒரு பாசமுள்ள அக்கறையுள்ள அண்ணன் வளர்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.