"எலிபெண்ட் மில்க்"
----------------------------
ரோஹித்-க்கு அவன் வயதுக்கு தகுந்த உயரம் இல்லை.. வளர வளர உயரம் வந்து விடும் என்ற என் நினைப்பு அதை கவலை படும் விஷயமாக எனக்கு சுட்டியதில்லை.. ஆனால் அவனுக்கு தன் நண்பர்கள் அளவுக்கு தான் உயரம் இல்லை என்ற எண்ணம் உண்டு.. ஆதலாம் டிவியில் உயரம் வரும் என்று எந்த ஊட்டச்சத்து பானத்தை காமித்தாலும் வாங்க சொல்லி கேட்பான்..
இங்கு ஒரு மாலுக்கு சென்ற போது சிறிய கார் ஓட்டிப் பார்க்க வேண்டும் என மிகவும் ஆசைபட்டான்..ஆனால் அது ஓட்டுவதற்கு என அவர்கள் குறிப்பிட்டிருந்த உயரத்தை விட சில இன்ச் உயரம் குறைவாக இருந்ததால் இவனை அவர்கள் ஓட்ட விடவில்லை.. அதிலிருந்து ஏதாவது நல்லதை , இதை சாப்பிட்டா வளருவே என சாப்பிடக் கொடுத்தால் , சாப்பிட்டு முடித்ததும் "இனி கார் ஓட்டற அளவுக்கு நான் வளர்ந்துட்டேனா , பாரு" என உடனே தன் உயரத்தை அளக்க சொல்வான்..
அவன் போர்ன்விடா மட்டும்தான் குடிப்பான்.. அவன் தங்கைக்கு போர்ன்விட்டா (சாக்லேட் ப்ளேவர் )கொடுத்தால் ஒரு மணி நேரம் ஆனாலும், அடித்து குடிக்க வைத்தால் ஒழிய கப்பில் உள்ள போர்ன்விடாவின் அளவு குறையவே குறையாது... இதனால் இருவருக்கும் தனித்தனியாகக் கலந்து குடிக்க வைக்க வேண்டி இருந்தது..
இன்றும் வழக்கம்போல் இருவரிடமும் யாருக்கு பீடியாசுயூர் வேண்டும் எனக் கேட்டவுடன் , எனக்கு போர்ன்விட்டாதான் வேணும் என சொல்லியவாறே சமையலறையில் என்அருகில் வந்து நின்று கொண்டான்.. "ஒன்னே சாப்டுட்டு இருக்கக்கூடாது தங்கம், பீடியாசுயூர், பால், பூஸ்ட், போர்ன்விட்டான்னு மாறி மாறி குடிக்கணும், இப்ப பீடியாசுயூர் கலக்கறேன் , குடி" என்றேன்..
உடனே "இதை குடிச்சா வளருவாங்களா" என்றான் , "ஆமா தங்கம் வளருவே" என்றேன்.. உடனே , "அம்மா , எனக்கு எலிபெண்ட் பால் வாங்கி கொடும்மா , நான் வளர்வேன்" என சொன்னான்.. வந்த சிரிப்பை அடக்கியவாறே , "அதை குடிச்சா வளருவேன்னு யார் சொன்னாங்க" என கேட்டேன்..
"ம்ம்,டிவி-ல சொன்னாங்க, உனக்கு தெரியாதா , எலிபெண்ட் எவ்வளவு பெருசா இருக்கும், சோ எலிபெண்ட் பால் குடிச்சா நானும் நல்லா வளருவேன், பெனிட்டும் (வகுப்புத் தோழன்) அதுதான் குடிப்பான் , அதான் அவன் பெருசா இருக்கான், நானும் பெனிட் மாதிரி வளரனும், எனக்கு வாங்கிக் கொடு "என்றான்..
எங்க கிடைக்கும் எனக்கேட்டதும் , "லுலு(LuLu)-ல இருக்கும் , போய் வாங்கி தா" என்றான்.. "எனக்கு இருக்குமான்னு தெரியல , அப்பாகிட்ட சொல்லு, அப்பா வாங்கித் தருவார் , கிடைக்கலேன்னா , அப்பாவ எலிபெண்ட வாங்கிட்டு வந்து வீட்ல கட்டி வைக்க சொல்லு, நாம கறந்துக்கலாம்" என சொன்னதும் "சரிம்மா, ஆனா அது ரொம்ப பெருசா இருக்குமே , வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாதே" என சொல்லியவாறே யோசனையுடன் நகர்ந்தவன், அவன் அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கிறான்..
-ஷார்ஜா
21-3-2016
இதுதான் அந்த "எலிபெண்ட் மில்க்"காம்"
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
2 நாட்களுக்கு முன் திடீரென "அம்மா, எலிபெண்ட் மில்க் ,இங்க வா இங்க வா" என ஹாலிலிருந்து கத்தினான்.. வந்து பார்ப்பதற்குள் வேறு விளம்பரம் மாறி விட்டிருந்தது.. அப்போதுதான் எலிபெண்ட் மில்க் என அவன் சொன்னது நான் நினைத்ததல்ல எனப் புரிந்தது.. "ஏன் லேட்டா வந்த" எனக் கோபப்பட்டவனை சமாதானப்படுத்தி "அடுத்தமுறை வந்தா காமி" என்றதற்கு "சுட்டி டிவியில்தான் வரும், நீ என்கூட பார்த்துட்டே இரு" என்று சொல்லி இருந்தான்..
இன்று அந்த விளம்பரம் வந்ததும் இந்த " "ப்ளூ எலிபெண்ட் மில்க்"-தான் வேணும்" என காண்பித்து நான் அறியாத எலிபெண்ட் மில்க்கின் புதிரை விடுவித்தான் ...
-ஷார்ஜா
26-3-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.