பொய்களையும் ரசித்து சிரிக்க முடியுமென்றால் அது , விபரமறியா பிள்ளைகள் முதல் முறையாக சொல்லும் கற்பனை கலந்த பொய்களாக மட்டுமே இருக்கும்.. அதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவை பொய்களாக தெரியாமல் இவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்ற அவர்களின் அனுமானங்களாகவும் இருக்கும்..
இரு பிள்ளைகளுக்கும் அவர்கள் பிறந்தபிறகு அங்கிருந்த , நடந்த சூழ்நிலைகளை கதைகளாகக் கூறியதுண்டு.. ஆர்வமாகக் கேட்பர்.. இரு பிரசவமும் சிசேரியன் என்பதால் சில சமயங்கள் முதுகு வலியால் அவதிப்படும் போ...தும், "நீங்கள் பிறக்கும்போது முதுகில் போட்ட ஊசியால்தான் அம்மாவுக்கு முதுகில் வலி" என்றும் கூறி இருக்கிறேன்.. அதே போல , பெண்ணிடம் , நீ பிறந்தவுடன் சிறிது நேரம் அழவில்லை , நீ அழலையேன்னு டாக்டர்கிட்ட கேட்டேன், பின் அவர் உன் முதுகைத் தட்டியதும்தான் நீ அழுதாய் ,அப்போதுதான் உன் குரலை முதல் முறை கேட்டேன் "என்றும் கூறி இருக்கிறேன்..
என் கதை சிசேரியன் என்பதால், எல்லோருக்கும் பிள்ளைகளை ஆபரேஷன் செய்துதான் எடுப்பார்கள் என்பதுதான் இப்போது வரை அவர்களது எண்ணம்..
ஒருநாள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த மகனிடம் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை கிண்டலாகக் கூறியதும் , சிணுங்கிக்கொண்டே கோபத்தில் என் முதுகில் லேசாகத் கைகளைக் கொண்டு குத்தினான்.. உடனே, :பார்த்தியா, அம்மாவுக்கு ஏற்கனவே முதுகுல ஊசி போட்ட இடத்துல வலி இருக்குன்னு சொல்லி இருக்கேன் , திரும்ப நீ அங்கேயே அடிக்கற இல்ல" , என பொய்க்கோபத்துடன் சொல்ல , "அம்மாக்கு அங்க ஒன்னும் ஊசி போடல , நான்தான் ஊசி போடும்போது உங்க வயித்துல இருந்தேனே , எனக்குத் தெரியும் , நான் ஊசி போட்ட இடத்துல உங்களை அடிக்கலை" எனக் கூறினான்..
அதைக்கேட்டதும் ரசித்தவாறு சிரிக்கத் தொடங்கினேன் , உடனே இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் சமயலறைக்குள் வந்து " அம்மா , நான் பிறக்கும்போது உங்களுக்கு ஊசி போட்ட இடமும் எனக்குத் தெரியும்மா , அந்த ஊசி அப்படியே என் கால்ல பட்டுச்சு, ஆனா எனக்கு வலிக்கவே இல்லை, அதான் நான் பிறக்கும்போது அழவே இல்லை" என நடந்ததை ஆர்வமாக விவரிப்பவது போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவே மேற்கொண்டு வந்த சிரிப்பையும் சிறிது நேரம் நிறுத்த முடியவில்லை .. திரும்ப நினைத்து நினைத்துப் பார்த்து சிரித்ததோடு அல்லாமல் அம்மாவிடமும், கணவரிடமும் சொல்லி அவர்களையும் சிரிக்க வைத்தேன்..
உண்மையில் கவிதைகளில் நடமாடும் பொய்களை விட , சூது அறியா மழலைகளின் கற்பனை பொய்கள்தான் கொள்ளை அழகு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.