திங்கள், 11 ஏப்ரல், 2016

மறுக்கப்படும் நீதியும் ஒரு தாயின் தொடரும் போராட்டமும்

உத்தரபிரதேசத்தில் தன் வாழ்வாதாரத்துக்காக  சாலையோரம் இருந்து  தட்டச்சு செய்து கொடுத்து வந்த ஒரு வயதானவரின் தட்டச்சு இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து ஒரு காவலர் உடைத்தது  இணையத்தில் பலத்த எதிர்ப்பையும், அம்முதியவரின் மீது பரிதாபமும் ஏற்பட வைத்தது.. காவலரின் செயலை அறிந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக வாங்கி கொடுக்க உத்தரவு பிறப்பித்து வாங்கியும் கொடுக்கப்பட்டது..

வாங்கிய கடனுக்கு தவணை கட்டாததால் விவசாயியை தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகளைக் கண்டித்தும் கிளம்பிய எதிர்ப்பு, அதற்கு பின்னான நாட்களில்  வேறு இடத்தில் தவணை செலுத்ததால் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளை மக்களே சிறை பிடிக்கும் அளவுக்கும் சென்றது.. சில நடிகர்களின் உதவியால் அவரின் டிராக்டரும் மீட்கப்பட்டது..

இவர்களின் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாலும் அவர்களின் மீது குற்றம் சொல்ல எதிர்த்தரப்புக்கு ஒரு காரணமும் இருந்தது.. ஆனாலும் பார்வைக்கு தெரிந்த இது போன்ற தாக்குதல்களில் உடனியாகப் பரிதாபப்பட்டு எதிர்க்கும் நமக்கு, பார்வைக்கு தெரிந்தும் தெரியாமலும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக குற்றமே செய்யாமல் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இரு முதியவர்களைப் பற்றி அச்செய்தி வரும்போது பரிதாபப்பட்டு (மேற்சொன்ன சம்பவங்களில் எழுந்த எதிர்ப்பில் பாதி கூட இதற்கு இருக்காது என்பது வேறு விஷயம்) வேறு செய்தி வந்தவுடம் இதை  மறக்கவும் வைக்கப்படுகிறோம் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் ...

சக மனிதர்களோ ,வேறு உயிரினங்களோ  தங்கள் உடலின் தாக்குதலை எதிர்கொள்வதை பார்க்கும்போது மட்டும்தான் எல்லோருக்கும்  கண்ணீரும் பரிதாபமும் வருமோ என்ற சந்தேகம் இவர்களைப் பற்றி பார்க்கவோ, படிக்கவோ நேரும்போதெல்லாம் என்னுள் எழுவதுண்டு..

கடந்த சில மாதங்களாக  பேரறிவாளன் பற்றிய செய்திகளைப் பார்த்தாலோ , தொலைக்காட்சியில் கேட்க நேர்ந்தாலோ  மேற்கொண்டு படிக்காமலும், பார்க்காமலும்  ஒரு வருத்தத்தோடு கடந்து விடுவேன்.. ஏனெனில்அவரை சுற்றி அரசியல்வாதிகளாலும் மற்றும் சிலராலும் பின்னிவைக்கப்பட்டு இருக்கும் சதிகார வலை பின்னலில் இருந்து அவரை எடுப்பது போல் கை நீள்வதும் பின் எடுக்காமல் விடுவதுமென வேடிக்கை காட்டி பிழைக்கும் அரசியல்வாதிகளின் செயல் உண்டாக்கும்  வெறுப்பை தாண்டியும் பேரறிவாளன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் நிலை என்னை சில மணித்துளிகள் வேதனையில் போட்டு வாட்டி எடுக்கும்.. இன்னொன்று இதை படித்து வேதனை மட்டுமே படக்கூடிய நிலையில்தானே நாம் இருக்கிறோம் என்ற தவிப்பும்...

இன்று பேரறிவாளின் தாய் அற்புதம்மாளைப் பற்றி ஒரு பதிவை எதேச்சையாகப் படிக்க நேர்ந்தது.. திரும்ப அந்த பாரம் நெஞ்சில் அடைந்திருக்கிறது.. இது எழுதியும் தீராத பாரம்..

குற்றமே செய்யாதபோதும் ,அதை அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியே பல வருடங்களுக்குப் பின் ஒப்புக்கொண்டபோதும் அவரின் விடுதலை என்பது அரசியல்வாதிகளை பிழைக்க வைக்கும் ஒரு வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது..  தெரியாமல் பாட்டரி(Battery ) வாங்கிக் கொடுத்தது என்றாலும் அது தவறுதான் என கூறினால்,25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்ததை கணக்கில் கொண்டாவது தீர்வு எடுக்கலாமே என்று நமக்கு இருக்கும் பரிதவிப்பு அரசியல்வாதிகளுக்கு வரவேயில்லை..

இந்த நேரத்தில் சஞ்சய் தத் வேறு நினைவில் வந்து நீதியை நினைக்க வைத்து  எரிச்சலை கிளப்பி விட்டுப் போகிறார்.. மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் சரப்ஜித் சிங்கின் நினைவு கூட வந்து வாட்டுகிறது..

25 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கு , ஒரு மனிதனுக்கு கிடைத்திருக்க வேண்டிய சந்தோஷம் , மனதிருப்தி , நெகிழ்ச்சி, ஆனந்தக்கண்ணீர், குடும்ப வாழ்வு, குழந்தைகள் எல்லாவற்றையும் பறித்து விட்டு போராட்டத்தையும் , வேதனையையும் , கண்ணீரையும் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் ஆள்பவர்களை கொண்ட நாட்டில் நாமும்தான் வேறு என்ன செய்ய இயலும், சிறிது நேரத்தில் இதை மறந்து வேறு சொந்த வேலையிலோ, பொது செய்தியிலோ மனதை செலுத்துவதைத்தவிர...

பேரறிவாளனுக்கும், அவரின் பெற்றோருக்கும் ஒவ்வொருமுறையும் விடுதலை என ஆசை காட்டி எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகத்தை செய்து கொண்டு வருகின்றனர்.. இப்போது கூட இத்தேர்தலுக்கு முன்னர் மகன் விடுதலை செய்யப்படுவார் என்று அந்தத்தாய் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டதே....இருந்தும் இன்னும் கூட  நம்பிக்கையை  மனதிலும் கண்ணீரை விழியிலும் ஏந்தி அந்தத்தாய் போராடிக்கொண்டே இருக்கிறார்.. அந்தத்தாயின் இத்தனை வருட கண்ணீர் போராட்டத்திற்காகவாவது  பேரறிவாளனின் விடுதலை சாத்தியப்படவேண்டும் என்று ஆசை..

பரிதாபப்பட்டாலும் கோபப்பட்டாலும்  கடவுளிடம் வேண்டுவதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ள பலரில் ஒருத்தியாக ஒரு தாயின் போராட்டம் அந்த தாய் எதிர்பார்க்கும் நல்ல முடிவுடன் முடிய பிரார்த்திக்கிறேன்..

சனி, 9 ஏப்ரல், 2016

பயணத்துளி - 1

இம்முறை இந்தியா சென்று இரு நாட்களில் திரும்ப வேண்டிய சூழல்.. தனியாகவே சென்றிருந்தேன்.. தனிமையில் செல்லும் பயணங்கள் ஆரம்பத்தில் இருந்த மனிதர்களின் மீதான பயத்தை இப்போதெல்லாம் கொடுப்பதில்லை.. மனதில் இருந்த அச்சமும், கூச்சமும் கொஞ்சம் விலகி எதுவென்றாலும் எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்று மாறி இருக்கும் மனநிலை கூட காரணமாக இருக்கக்கூடும்..
இன்னொன்று, எவரிடமும் எளிதாகப்பேசி பழகி விடும் குணமும் கூட காரணியாக இருக்கலாம்.. சில வருடங்களுக்கு முன் கோவையிலிருந்து தனியாக நாகர்கோவில் சென்ற பயணத்தின்போது ஒரு பெரியவர் அறிமுகமானார்..இப்போது எங்கள் குடும்பத்துடனும் நட்பில் இருக்கும் அந்த பெரியவரின் அறிமுகத்தையும், அந்தப் பயணத்தை பற்றியும் எழுத வேண்டுமென்றால் தனியாகப் பதிவு போட வேண்டி வரும்.. போட வேண்டிய நாள் வரும்போது பதிவிடுகிறேன்..
இப்போது தனியாக செல்லும்போது பக்கத்து இருக்கையில் ஒரு பெண் இருக்க வேண்டுமே என்ற சின்ன வேண்டுதல் மட்டுமே இருந்தது.. கொஞ்சம் அசவுகரியமாக உணர மாட்டோமே என்றுதான்.. ஆனால் போகும்போதும் வரும்போதும் அது வாய்க்கவில்லை.. தன் ஜன்னல் ஒர இருக்கையை எனக்குத்தந்து அறிமுகமான ஒரு தம்பியின் இயல்பான பேச்சு இந்தியா செல்லும்போது அசவுகரியத்தை உணர வைக்கவில்லை..
வரும்போது எனக்குக் கொடுக்கப்பட்ட இருக்கையை பார்த்ததும், "ஜன்னல் ஒர இருக்கைதான் , கொஞ்சம் தலையை அந்தப்பக்கம் சாய்த்துக் கூட தூங்கலாம்"என நினைத்துக் கொண்டே உள்ளே வர அந்த இருக்கையில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்தார்.. அதற்கு அடுத்து அப்பெண்ணின் கணவர்.. நான் மூன்றாம் இருக்கையில் அமர்ந்தேன்..
கைக்குழந்தையுடன் ஒரு பெண் நடுவிலோ ,கடைசி இருக்கையிலோ உட்கார்ந்து இருப்பது சங்கோஜம் கொடுக்கும் என உணர்ந்து இருந்தும், என்னிடம் கேட்டு உட்கார்ந்து இருக்கலாமே என்ற வறட்டு எண்ணம் எட்டிப் பார்க்க அந்த ஆணிடம் என் பயணச்சீட்டை காண்பித்து "இது அந்த இருக்கைதானே" என்றேன்.. அவர் "இல்லை, உங்களுக்கு இந்த இருக்கைதாங்க" என்றார்.. குழப்பத்துடன் மேலே போட்டிருந்த இருக்கைகளின் வரிசையை பார்த்ததும் நான் நினைத்தது தவறெனப் புரிந்தது..
அந்த ஆண் அடிக்கடி தன் கைபேசியை எடுத்து குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டும், தன் மனைவியிடம் காட்டிக்கொண்டும் இருந்தார்.. இன்னொருவர் புகைப்படங்களை அனுமதியின்றி பார்ப்பது அநாகரீகம் என்பதால் பார்க்காமல் திரும்பி இருந்தாலும்,அப்படி திரும்பும்போது என் கண்ணில் பட்ட புகைப்படங்களை வைத்து சொல்கிறேன்..
இதற்கு இடைப்பட்ட சமயங்களில் ,குழந்தைக்கு பசி எடுக்கும்போதெல்லாம் அந்த பெண் குழந்தைக்குப் பாலூட்ட , இவர் தன் மனைவியை கொஞ்சம் மறைத்தவாறே முன்புறம் குனிந்து அமர்ந்திருப்பார்.. பின் குழந்தை குடித்து முடித்ததும் , குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்து பின் தன் மடியில் கிடத்துவார்.. சிறு குழந்தை ஆதலால் அடிக்கொருமுறை முறை பசிக்கு அழும்போதும் தன் மனைவியிடம் குழந்தையை கொடுப்பார்.. தான் முன்புறம் குனிந்து மனைவியை மறைத்திருப்பார்..
அந்தப்பெண்ணின் முகம் தூக்கம் இல்லாததும் சேர்த்து சோர்வாக இருந்தாலும் பிள்ளைக்கு பசிக்கும்போதெல்லாம் எவ்வித சலிப்பும் இல்லாமல் குழந்தையை வாங்கிக் கொள்வதெல்லாம் பார்த்தபோது ஒரு பரிபூரண தாய் தந்தையை கண்ட திருப்தி இருந்தது.. குறிப்பாக மனைவியின் நிலை அறிந்த நல்ல கணவனை...
இதற்கு முன் என் மகன் கைக்குழந்தையாக இருந்தபோது விமானத்தில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன்.. அவனை மடியில் கிடத்திக் கொண்டே இருக்க வேண்டும், நானாகக் கொடுத்தால்தான் அவனை மடியில் வாங்கி படுக்க வைத்துக் கொள்வார்..அவனுக்கு பசிக்கும்போது எதிரில் யாராவது பார்க்கிறார்களா என அச்சத்துடனேயே அந்த சந்தர்ப்பங்களைக் கழிக்க வைத்தவாறு நிம்மதியாக சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் நினைவு வந்தது.. காரணங்களையும் , இந்தக் காட்சிகளையும் அவரை திட்டுவதற்கு ஏற்ப மனதில் அடுக்கி வைத்துக் கொண்டேன்..
இறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது , அக்குழந்தை முழித்து இருந்தது.. அதற்கு வேறு துணி உடுத்தி அந்தப்பெண் குழந்தையை தன் கணவரிடம் கொடுக்க , அவர் மடியில் நிற்க வைத்தவாறு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்.. அழகான அக்குழந்தை என்னைப் பார்த்து அடிக்கொருமுறை அழகாக சிரிக்கவும் செய்தது.. குழந்தைக்கு மை எதுவும் போடாமல் விட்டிருந்தனர்..
அந்த ஆணிடம் "குழந்தை பேர் என்னங்க " எனக் கேட்டேன். அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.. "குழந்தைக்கு நெற்றி ஓரத்துலயாவது சின்ன கருப்பு பொட்டு வைங்க" எனக்கூறினேன். சரி எனத் தலையாட்டினார்.. பின், "சாரி, என் சீட் அதுவாவே இருந்தாலும் கூட நான் இங்க உட்கார்ந்து, உங்க மனைவியை அங்க உட்கார வச்சு இருக்கறதுதான் உங்க மனைவிக்கு கன்வீனியன்ட்டா இருந்து இருக்கும்.. நான் அப்போ கேட்டதுக்கு சாரி" எனக் கேட்டுக்கொண்டேன்.. உடனே அவர் பரவாயில்லை என தலையாட்டினார்.. (உண்மையில் நான் பேசியது அவருக்கு கேட்டதா எனத்தெரியவில்லை , ஏனெனில் நான் பேசியது எனக்கே கேட்காதது போல் காது சிறிது நேரத்திற்கு அடைத்திருந்தது..)
பின் அவர்கள் குழந்தையை ஜன்னல் ஓரம் பார்க்க விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.. எனக்கு சலிப்பாக இருந்தது.. சின்ன பிள்ளையை எவ்வளவுதான் புகைப்படம் எடுப்பார்கள்..
இதே போல்தான் முந்தின நாள் டவுன் ஹால் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது.. சென்று திரும்பும்போது பேருந்தில் எனக்கு இரு புறமும் இருந்த பெண்கள் மொபைல்களுடனேயே வாழ்ந்து கொண்டு இருந்தனர்.. ஒருவர் மெல்லிய சத்தத்தில் பேசிக்கொண்டே வந்தார்.. இந்தப்பக்கம் அமர்ந்திருந்த பெண் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார்.. அரை மணி நேரம் கடந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும் வரை அவர்கள் தங்கள் பக்கத்தில் உள்ளவர்களை உணரவில்லை.. அதன் பின்னும் அவர்கள் இறங்கும் வரையே தன்னை சுற்றி உயிர்களும் , சூழலும் உள்ளதை அறிய மாட்டார்கள் எனப் புரிந்தது..
"சே, என்ன பெண்கள் , இந்த மொபைல் எப்படியெல்லாம் சீரழிக்குது" என அப்போது நினைத்த நினைப்பு இங்கு குழந்தையை வைத்து அவர் புகைப்படங்களாக எடுக்குக்கொண்டிருக்கும்போது திரும்பவும் தோன்றியது...
ஏனோ, நான் இது போல அலப்பரைகள் பண்ணிக்கொண்டிருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்களும் இது போல் நினைத்து இருப்பார்களோ என்ற எண்ணம் இதை எழுதும்போது கூட பெரிய குற்ற உணர்ச்சியாகத் தோன்றவே இல்லை.. நாமும் இது போல்தானே இருந்தோம் என்று கொஞ்சம் சகித்துக் கொள்ள மட்டுமே முடிகிறது..
வயது மாற மாற எண்ணங்களும் மாறும் போல..

பணத்தைத்தேடி (வெளிநாட்டு வாழ்க்கையின் மறுபக்கம்)

நாங்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கு அடுத்து இருக்கிறது ஒரு சிறிய குடியிருப்பு.. ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட ஹாலோ ப்ளாக் கட்டிடம் அது ..சின்னச்சின்ன அறைகளே ஒரு வீடாக பிரிக்கப்பட்டிருப்பதை திறந்த பாதை வழியின் வழியே பார்த்தால் தெளிவாக தெரியும்.. அந்த சிமென்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மேல் பழைய தலையணைகள் சிலவும், சோபா குஷன்களும், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலியின் பகுதிகளும் சிதறிக்கிடக்கும்..
வெளிநாட்டிலிருந்து தனியே இங்கு வந்து வேலை பார்க்கும் ஆண்களை கொண்ட குடியிருப்பு அது என போகப் போக தெரிந்தது.. என் பார்வையில் பட்டவரை இந்தியர்களும் பாதியளவு இக்குடியிருப்பில் உள்ளனர்.. அவர்கள் அனைவரும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என அந்தக்குடியிருப்பின் இத்தோற்றமே காட்டிக் கொடுக்கும்..
சில நாட்களுக்கு முன் அந்த பாதையின் ஒரு பக்கத்தில் பழுதடைந்த குளிர்சாதனப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.. ஜன்னலின் வழி பார்க்க நேரும்போது இதை ஏன் இங்கு வைத்துள்ளார்கள் எனத் தோன்றியிருக்கிறது.. ஒருநாள் ஒரு இளைஞன் அதை திறந்து அதில் ஏதோ ஒன்றை வைத்து விட்டு எடுக்கும்போதுதான் , இதை வெளியில் வைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தும் அலமாரியாக பயன்படுத்துகிறார்கள் எனத் தோன்றியது.. இப்போது அது அங்கு இல்லை..
அந்த பாதையின் வெயில் படாத ஒரு மூலையில், யாராலோ பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட.கூடிய விலைக்கு சொந்தமான, அழகை பாதிக்கு மேல் இழந்து , கம்பீரத்தை மட்டும் தக்க வைத்திருக்கும் இரு நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும்..
இதுவரை சொன்னது எந்த பின்புலத்தில் அவர்கள் வசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை விவரிக்கவே..
இந்த வெள்ளிக்கிழமை அந்த நாற்காலிகளில் இருந்த இருவருக்கு அவருடன் தங்கி இருந்த இன்னொருவர் முடி வெட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன்..
அன்றொரு நாள், இங்குள்ள பெரிய மாலுக்கு சென்றபோது பிள்ளைகளின் விளையாட்டுப்பகுதிக்கு செல்ல முயன்றோம்.. அப்போது அங்கு தரையை கூட்டிக் கொண்டிருந்த நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு தொழிலாளி , எங்களைக் கூப்பிட்டு (எங்களைப்பார்த்ததும் தமிழ் ஆட்கள் எனப் புரிந்ததோ என்னவோ) "இங்கு எல்லா விளையாட்டுக்கும் பணம் அதிகம், இங்க கொடுக்கற காசுக்கு பிள்ளைகளுக்கு நல்லதா சாப்பிட வாங்கிக் கொடுங்க" எனக் கூறினார்..
பிள்ளைகள் சந்தோஷமாக அங்கு விளையாடட்டும் என அங்கு கூட்டி சென்றிருந்தாலும், எங்களை விட வயதில் மூத்தவர் கூப்பிட்டு சொன்னதால் , அவர் வார்த்தைகளை நிராகரித்ததாக இருக்க வேண்டாமே என நான் " சரிங்க " என்ற வார்த்தையின் மூலமும், என் கணவரும், அவர் நண்பரும் அவருக்கு கை கொடுத்து விடை பெற்றதின் மூலமும் அவரின் வார்த்தைகளை ஏற்று விட்டோம் என சொல்லி, அங்கு செல்லாமல் திரும்பினோம்.. அவருக்கு கூப்பிட்டு சொல்லத் தோன்றியதே என அன்று முழுவதும் அவரைப் பற்றிய பெருமை எங்கள் பேச்சில் இருந்தது..
இங்கு உணவை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் ஆட்களிலிருந்து, ஓட்டல்களில் டேபிள் துடைக்கும் பணியாளர்கள் வரை அவர்களின் சிறு சிறு செயல்கள் மூலம் அவர்களின் "சேமித்தாக வேண்டும்" என்ற மனோநிலையை கவனித்திருக்கிறேன்... நான் கவனிக்க முடியா தூரத்தில் இன்னும் லட்சம் பேர் இருப்பார்கள் இவர்களைப் போல..
இப்படி ஏதேனும் ஒரு தேவைக்காகவோ, வாழ்க்கை வசதிக்காகவோ, குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டு, வெளிநாட்டில் தனியாக வேலைக்கு வந்து , அத்தியாவசிய செலவு கூட செய்யாமல், குறைந்த வாடகையில் பங்கு போட்டு தங்கி , தங்கள் குடும்பத்தினரின் வேறு ஏதாவது செலவுக்கு பயன்படட்டும் என சேமித்து அனுப்பும் இவர்களை போன்றவர்களுக்குத்தான் பணத்தின் மதிப்பு நன்கு தெரியும்...
ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டாலே, நிறைய வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை போல நினைத்துக் கொண்டும், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் நமக்கு ஏதும் கொண்டு வரவில்லையே என குறை கூறும், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும், காதும், வாயும் வைத்திருக்கும் உறவுகளும், நட்புகளும் அறிவார்களா,
இப்படிப்பட்ட சின்னச்சின்ன தியாகங்களும், உறவுகளற்ற தனிமையின் வலியும் சேர்ந்துதான் அவர்களின் உறவுகளை சொகுசாக வாழ வைக்கிறதென....
ஏன்,சொகுசை அனுபவிக்கும் குடும்பத்தினர்கள் கூட புரிந்து கொள்வதில்லை.. குடும்பத்தினரிடம் கஷ்டங்களை வெளிக்காட்ட இவர்களும் விரும்புவதில்லை..
இப்போது கூட நான் மேற்கூறிய சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரின் உறவோ , நட்போ இப்படி பேசிக் கொண்டிருக்கக்கூடும், "அவனுக்கென்ன , அவன் வெளிநாட்டுல இருக்கான்"......

தேடல்

தூக்கத்தில் இருந்து விழிக்கும்போதே மனதில் சொல்ல முடியாத பாரம்..
அந்த பாரத்தைக் கொடுத்தது சற்று முன் கனவில் வந்த சுகுணாவின் நினைவுதான்...
கனவு முடிந்து விழித்து இருந்தால் இந்த பாரம் இருந்திருக்காதோ எனத் தோன்றியது..
சுகுணா என் பள்ளி வகுப்புத் தோழி.. பள்ளியில் ஒன்றாக படித்தவர்களில் நினைவில் இருக்கும் சிலரில் ஒருத்தி.. என் கூச்ச சுபாவத்தால் பள்ளி நாட்களில் எனக்கு என்று நட்பு வட்டம் மிக குறைவு.. அந்த குறுகிய நட்பு வட்டத்தில் இவளும் ஒருத்தி..
ஆறாம் வகுப்பில் இருந்து சேர்ந்து படித்தோம்.. 8-ம் வகுப்பு வரை மட்டுமே நெருங்கிய பழக்கம் இருந்தது.. பின்வந்த இரு ஆண்டுகளும் வகுப்பில் இடம் மாறி உட்கார வைக்கப்பட்டதால் அந்த நெருக்கம் கொஞ்சம் தளர்ந்தது..
அதுவரை என் வீட்டுக்கு வரும் 3 தோழியருள் நிச்சயம் அவள் இருப்பாள்.. அவள் வீட்டுக்கும் சிலமுறை சென்றிருக்கிறேன்.. அவள் அப்பா அம்மா தங்களின் செல்லத்தை மொத்தமாக அவளுக்கே கொடுக்குமாறு வீட்டுக்கு ஒரே பெண்ணாயிருந்தாள்..
கடைசியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வாங்க சென்றபோது நேரில் பார்த்து பேசியதுதான்..
பின் சில வருடங்களுக்கு முன் மாலை நேரத்தில் உறவினர்களுடன் சாலையைக் கடந்து கொண்டிருந்த அவளை பேருந்துக்குள் இருந்து பார்க்க நேர்ந்தது.. இறங்கி சென்று பேசும் ஆசை இருந்தாலும் ,பேருந்தில் நிரம்பியிருந்த கூட்டமும், இந்த பேருந்தை விட்டால் இனி அடுத்த பேருந்துக்கு மணிக்கணக்காக காத்திருக்க வேண்டுமே என்ற நினைப்பும் என்னை இறங்க விடவில்லை..
அதற்கு முன்னமே தொடர்பில் இருந்த சில தோழிகளின் வழியாக அவள் படித்துக் கொண்டிருந்த படிப்பை அறிந்திருந்தேன்.. பின் அதே தோழி மூலமும் மற்றும் பத்தாம் வகுப்பில் அவளுக்கு நெருக்கமாகியிருந்த இன்னொரு பெண்ணின் மூலமும் அவளின் காதல் திருமணத்தையும், வேலையையும் , குழந்தையை பற்றியும் அறிந்து கொண்டேன்..
அவளின் தொலைபேசி எண்ணை கேட்டும் அவர்களிடம் இல்லாததால் பெற இயலவில்லை..
மதிய உணவு இடைவேளைகளில் சேர்ந்து சென்று வாங்கும் வேக வைத்த மரவள்ளி கிழங்கு ,உப்பு மிளகாய்த்தூள் தூவிய மாங்காய் , அவள் வீட்டிலும் பள்ளியிலும் கரைந்த சில நிமிடங்கள், பள்ளியில் பேசிய சில வார்த்தைகள் இவற்றை தவிர்த்து வேறு எதுவும் நினைவில்லை..
அவளைப் பற்றிய நினைவை அவ்வப்போது கிளறுவது அவள் தோன்றும் கனவுகள்தான்.. அத்தனை கனவிலும் பள்ளி தேர்வுகளில்தான் இருவரும் சந்தித்து உரையாடி இருப்போம்.. இது என்ன மாயமென புரியவில்லை..
கனவில் அவள் வருகின்ற நாளெல்லாம் அவளை இனி நேரில் சந்திக்க முடியாதோ என்ற எண்ணம் மனதை கலங்க வைத்து கண்களையும் கொஞ்சம் கலங்க வைக்கும்..
இத்தனைக்கும் அவளை விட என்னிடம் நெருங்கிப் பழகிய தோழிகளும் பிரிந்துதான் உள்ளனர்.. ஆனால் எங்களின் இருப்பை, நலத்தை பரஸ்பரம் தொலைபேசி மூலமாவது பேசித் தெரிந்திருந்தோம்.. சுகுணாவிடம் பேசக் கூட இயலவில்லையே என்ற நினைப்பு கூட பார்த்து பேச வேண்டும் என்ற தவிப்புக்கு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது..
சுகுணா மட்டுமல்ல ,தற்போதுள்ள நிலை எதுவுமே அறியாத இன்னும் இரண்டு மூன்று பள்ளி, கல்லூரி தோழிகளின் நினைவும் கனவுகளின் மூலம் கிளப்பிவிடப்பட்டு மனதை பரிதவிக்க வைக்கும்.. பின் இயல்பு வாழ்க்கை அந்த பரிதவிப்பை சில நிமிடங்களிலேயே நிறுத்தி வைக்கும்..
முகநூல் வந்ததற்கு பின்னர் அவளையும் , மற்ற தோழிகளையும் அதன் மூலம் தேட ஆரம்பித்தேன்..
ஆண்களென்றால் தங்கள் பெயர் அல்லது அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்திருப்பர்.. அவர்களின் அப்பாவின் பெயரை தெரிந்து வைத்திருந்தால் தேடுவது கடினமில்லை.. ஆனால் பெண்களை தேடுவதில்தான் சிரமம் உண்டு.. அதுவும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு விட்டு போன பெண்களை தேடுவது மிக சிரமம், காரணம் நமக்கு தெரியாத அவர்களின் கணவரின் பெயரை பின்னால் இணைத்திருப்பதுதான்..
இருந்தும் கடைசியாக சந்தித்த தோழி அவளின் பணியிடத்தை கூறியதை நினைவில் வைத்து தேடினேன்.. நான்காவது முறையோ, ஐந்தாவது முறையோ தேடும்போது அவள் கிட்டினாள்.. அந்த நிமிட சந்தோஷம் சொல்ல இயலும் சொல்லில் அடங்காது..
உடனே நட்பு அழைப்பை அனுப்பி , இன்பாக்ஸ்-ல் நலம் விசாரிக்கவும் செய்தேன்.. அவளும் பார்த்தவுடம் பதிலளித்தாள்.. அவளுக்கு தங்களின் புகைப்படங்கள் எதுவும் அவள் சுவற்றில் போடும் வழக்கமில்லை.. இன்பாக்ஸ்-க்கு அனுப்பினாள்.. இப்படி அவளின் குடும்பத்தையும் , என் குடும்பத்தையும் புகைப்படங்களில் பார்த்துக் கொண்டோம்.. தொலைபேசி எண்கள் பரிமாற்றப்பட்டு , தொலைபேசியிலும் பேசினோம்...
இரு நாட்கள் இருந்த அந்த குதூகல உணர்வு பின் மறைந்து போனது.. ஆரம்பத்தில் ஏதாவது பண்டிகையின் போதோ , பிறந்த நாட்களின் போதோ அனுப்பும் வாழ்த்துக்களின்போது மட்டுமே தொடர்பில் இருந்தோம்... இப்போது முகநூல் காண்பிக்கும் அவள் பிறந்தநாளில் ஒரு வாழ்த்தை போடுவதுடன் தொடர்பு ஒரு எல்லையில் நிற்கின்றது..
அவளை பார்த்ததும் நிறைய பேச வேண்டும் என தேக்கி வைத்திருந்த வார்த்தைகள் எதுவும் என்னால் வெளியிடப்படவே இல்லை.. பேச தோன்றவே இல்லை.. அந்த துடிப்பு அவளை கண்டதும் திருப்தியில் மறைந்தனவோ என்னவோ...
கனவுகளின் மூலம் என்னை பல நாட்கள் கலங்கடித்த தோழி, இன்று எல்லோரையும் போலவே என் நட்பு பட்டியலில் சாதரணமாக இருக்கிறாள்..
இப்போதெல்லாம் அவள் என் கனவில் வருவதேயில்லை..
இப்போது கனவில் எப்போதாவது தோன்றி ஏக்கத்தை கிளப்பும் இன்னொரு தோழியை தேடிக்கொண்டே இருக்கிறேன்..

திங்கள், 28 மார்ச், 2016

10

பல நேரங்களில் ரோஹித்தின் பேச்சும் , புத்தி கூர்மையும், நியாபக சக்தியும் வியப்பில் ஆழ்த்தும்..ஒரு நாள் ஏதோ அசர அடிக்கும்படி அவன் பேசியதற்கு, "இந்த வாய் எங்க இருந்து வந்ததோ" என சொல்லி சலித்துக் கொண்டேன்.. "உன்கிட்ட இருந்துதான்" என உடனடி பதில் கிடைத்தது..
அவனின் சேட்டைகள் , பள்ளியில் அவனின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன்.. சில குறும்புத்தனமான பேச்சுகளை , குறை போல என் அம்மாவிடம் சொன்னாலும் கூட என் மனதுக்குள் ஒரு குதூகலம் இருக்கும்.. "என்கிட்டே இருந்துதான் இந்த வாய் வந்ததுன்னு சொல்றான்மா" என்றதும் , "பின்ன, நீ எப்படியெல்லாம் பேசின" என சொல்லி மடக்கினார்..
ஆனால் உண்மையில் நான் இவன் அளவுக்கு புத்தி சாதுர்யத்தோடு பேசிக்கொண்டிருந்தேனா என யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவில் வரவில்லை.. சில நேரம் வாக்குவாதம் செய்து அதில் எப்படியும் வேறு யாரும் திரும்ப ஒரு வார்த்தை வைக்காதவாறு திணறடித்து இருக்கிறேன்.. "நீ வக்கீலுக்கு படி, நல்லா வருவா" என்ற வீட்டில் யாரோ சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு , வக்கீலாக ஆவது போல கனவும் கூட கண்டிருக்கிறேன், ஆனால் எனக்கு தெரிந்து இது எல்லாம் 10, 11 வயதுக்கு மேல்தான்..
ஒரு நாள், உள்ளே ஸ்போக்ஸ் இல்லாத சக்கரத்தின் படத்தில் 17 எண்ணிக்கையில் ஸ்போக்ஸ் போட்டு வருமாறு அவனின் வொர்க் ஷீட்டில் இருந்தது.. உடனே "ஸ்கேல் எடுத்து வா , போடலாம்" என்றேன்.. பள்ளிக்கு ஸ்கேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் அதை டேபிள் டிராயரில் வைத்து இருந்தேன்..
அவன் அங்கு செல்லால் அவனின் பேகில் இருந்து இன்னொரு பென்சிலை எடுத்தான்.. புரியவில்லை போல என நினைத்து , "டேய், ஸ்கேல் எடு" என்றேன்.. "இரும்மா", என்றவன் நோட்டை வாங்கி பென்சிலை ஸ்கேலாக பயன்படுத்தி இன்னொரு பென்சிலின் மூலம் ஸ்போக்ஸ் போட்டான்.. இது எனக்கு தோன்றாத அளவுக்கு எவ்வளவு .......யா இருக்கேன்னு தோனுச்சு...நான் எந்த அளவுக்கு சமயோசித புத்தியில கீழ இருக்கேன்னு சொல்ல இந்த இன்சிடெண்டெ போதும்..
மட்டுமல்ல , யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் சொல்லும் குறைக்கோ , கிண்டலுக்கோ இப்படி பதில் சொல்லி இருக்கலாமோ என சிறிது நேரம் கழித்துதான் சிலருக்கு தோன்றும்.. அந்த சிலரில் நானும் ஒருத்தி.. அதனாலேயும் கூட அவனின் உடனடி பதில்களில் ஆச்சரியத்தில் மூழ்கி போகிறேன்...
அன்று ஒரு நாள், முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் இளையவள் தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவன் தராததால் என்னிடம் "அம்மா , அண்ணாகிட்ட எனக்கு தர சொல்லுங்க " என சிணுங்கினாள்.. "நீ கேட்க கூடாது தங்கம், அண்ணா குடுத்துதான் நீ சாப்பிடணுமா , நீ எடுத்து சாப்பிடு , ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரே மாதிரிதான" என அவளிடம் கூறிவிட்டு "கவரை ரெண்டு பேருக்கும் நடுவுல வச்சு சாப்பிடு" என ரோஹித்திடம் கூறினேன்..
"நோ, அவ என்னை "மங்கி அண்ணா"-ன்னு அப்பவே கூப்பிட்டா, அதுக்கு சாரி சொன்னாதான் நான் கொடுப்பேன்" என அவன் கூறிய உடனேயே நிகிதாவும் "சாரி அண்ணா" எனக் கூறினாள்..
"சாரி, சாரி ன்னு சொல்லிட்டே எடுத்து சாப்பிடு , என் காதுல சாரி கேட்டுட்டே இருக்கணும்" என அவளிடம் கூறினான்.. நான் அவனிடம் கோபமாக, "அவதான் ஒரு டைம் சாரி கேட்டுட்டா இல்ல, அப்புறமும் ஏன் சாரி சாரி ன்னு சொல்லிட்டு இருக்கணும் , நீ சாரி சொல்லாத" , என சாரி-யை சொல்லத் தொடங்கியிருந்த நிகிதாவை நிறுத்தினேன்..
உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் , "அம்மா மட்டும் அன்னைக்கு 1,2,3 சொல்லிட்டே இரு , என் காதுல நீ சொல்றது கேட்டுட்டே இருக்கணும்னு சொன்னே இல்ல, நான் மட்டும் சொல்லக்கூடாதுன்னு சொல்ற" என சொன்னதும் ஆடிப் போய் விட்டேன்..
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் நடந்தது அது.. KG 1 வகுப்பு தொடங்கி முதல் நான்கு மாதங்கள் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமிருந்தது... அதன் பின் இங்கு வரும்போது இரண்டு மாத கோடை விடுமுறை பாதி நாட்களைத் தாண்டி இருந்தது.. இருந்த ஒரு மாதத்துக்குள் 3 மாத சிலபஸ்-ஐ அவனுக்குள் ஏற்றியாக வேண்டுமே என்ற நிலை.. அதில் ஆரம்பத்தில் அவனின் மறதியை பற்றி அப்போதைய நேர பதிவில் கூட கூறி இருப்பேன்..
எனவே அவனை ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என சொல்லி அடுக்களையில் மற்ற வேலைகளில் இருப்பேன்.. இப்போது இது யோசித்து பார்த்தால் ஒழிய நினைவுக்கு வராத நிலையில் இருக்கிறது எனக்கு.. ஆனால் அவனின் நொடி தாமதிக்காத இந்த நியாப சக்தி என்னை ஆச்சரியப்படத்தான் வைத்தது..
"அது அப்படி இல்ல தங்கம்" என என் வழக்கமான சமாளிப்பு கலந்த புரிய வைக்கும் வார்த்தைகளை அவனிடம் கொட்ட தொடங்கி இருந்தேன்....
-ஷார்ஜா
  23-3-2016

9

"எலிபெண்ட் மில்க்"
----------------------------
ரோஹித்-க்கு அவன் வயதுக்கு தகுந்த உயரம் இல்லை.. வளர வளர உயரம் வந்து விடும் என்ற என் நினைப்பு அதை கவலை படும் விஷயமாக எனக்கு சுட்டியதில்லை.. ஆனால் அவனுக்கு தன் நண்பர்கள் அளவுக்கு தான் உயரம் இல்லை என்ற எண்ணம் உண்டு.. ஆதலாம் டிவியில் உயரம் வரும் என்று எந்த ஊட்டச்சத்து பானத்தை காமித்தாலும் வாங்க சொல்லி கேட்பான்..
இங்கு ஒரு மாலுக்கு சென்ற போது சிறிய கார் ஓட்டிப் பார்க்க வேண்டும் என மிகவும் ஆசைபட்டான்..ஆனால் அது ஓட்டுவதற்கு என அவர்கள் குறிப்பிட்டிருந்த உயரத்தை விட சில இன்ச் உயரம் குறைவாக இருந்ததால் இவனை அவர்கள் ஓட்ட விடவில்லை.. அதிலிருந்து ஏதாவது நல்லதை , இதை சாப்பிட்டா வளருவே என சாப்பிடக் கொடுத்தால் , சாப்பிட்டு முடித்ததும் "இனி கார் ஓட்டற அளவுக்கு நான் வளர்ந்துட்டேனா , பாரு" என உடனே தன் உயரத்தை அளக்க சொல்வான்..
அவன் போர்ன்விடா மட்டும்தான் குடிப்பான்.. அவன் தங்கைக்கு போர்ன்விட்டா (சாக்லேட் ப்ளேவர் )கொடுத்தால் ஒரு மணி நேரம் ஆனாலும், அடித்து குடிக்க வைத்தால் ஒழிய கப்பில் உள்ள போர்ன்விடாவின் அளவு குறையவே குறையாது... இதனால் இருவருக்கும் தனித்தனியாகக் கலந்து குடிக்க வைக்க வேண்டி இருந்தது..
இன்றும் வழக்கம்போல் இருவரிடமும் யாருக்கு பீடியாசுயூர் வேண்டும் எனக் கேட்டவுடன் , எனக்கு போர்ன்விட்டாதான் வேணும் என சொல்லியவாறே சமையலறையில் என்அருகில் வந்து நின்று கொண்டான்.. "ஒன்னே சாப்டுட்டு இருக்கக்கூடாது தங்கம், பீடியாசுயூர், பால், பூஸ்ட், போர்ன்விட்டான்னு மாறி மாறி குடிக்கணும், இப்ப பீடியாசுயூர் கலக்கறேன் , குடி" என்றேன்..
உடனே "இதை குடிச்சா வளருவாங்களா" என்றான் , "ஆமா தங்கம் வளருவே" என்றேன்.. உடனே , "அம்மா , எனக்கு எலிபெண்ட் பால் வாங்கி கொடும்மா , நான் வளர்வேன்" என சொன்னான்.. வந்த சிரிப்பை அடக்கியவாறே , "அதை குடிச்சா வளருவேன்னு யார் சொன்னாங்க" என கேட்டேன்..
"ம்ம்,டிவி-ல சொன்னாங்க, உனக்கு தெரியாதா , எலிபெண்ட் எவ்வளவு பெருசா இருக்கும், சோ எலிபெண்ட் பால் குடிச்சா நானும் நல்லா வளருவேன், பெனிட்டும் (வகுப்புத் தோழன்) அதுதான் குடிப்பான் , அதான் அவன் பெருசா இருக்கான், நானும் பெனிட் மாதிரி வளரனும், எனக்கு வாங்கிக் கொடு "என்றான்..
எங்க கிடைக்கும் எனக்கேட்டதும் , "லுலு(LuLu)-ல இருக்கும் , போய் வாங்கி தா" என்றான்.. "எனக்கு இருக்குமான்னு தெரியல , அப்பாகிட்ட சொல்லு, அப்பா வாங்கித் தருவார் , கிடைக்கலேன்னா , அப்பாவ எலிபெண்ட வாங்கிட்டு வந்து வீட்ல கட்டி வைக்க சொல்லு, நாம கறந்துக்கலாம்" என சொன்னதும் "சரிம்மா, ஆனா அது ரொம்ப பெருசா இருக்குமே , வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாதே" என சொல்லியவாறே யோசனையுடன் நகர்ந்தவன், அவன் அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கிறான்..

-ஷார்ஜா 
  21-3-2016


இதுதான் அந்த "எலிபெண்ட் மில்க்"காம்"
------------------------------------------------------------------------
2 நாட்களுக்கு முன் திடீரென "அம்மா, எலிபெண்ட் மில்க் ,இங்க வா இங்க வா" என ஹாலிலிருந்து கத்தினான்.. வந்து பார்ப்பதற்குள் வேறு விளம்பரம் மாறி விட்டிருந்தது.. அப்போதுதான் எலிபெண்ட் மில்க் என அவன் சொன்னது நான் நினைத்ததல்ல எனப் புரிந்தது.. "ஏன் லேட்டா வந்த" எனக் கோபப்பட்டவனை சமாதானப்படுத்தி "அடுத்தமுறை வந்தா காமி" என்றதற்கு "சுட்டி டிவியில்தான் வரும், நீ என்கூட பார்த்துட்டே இரு" என்று சொல்லி இருந்தான்..

இன்று அந்த விளம்பரம் வந்ததும் இந்த " "ப்ளூ எலிபெண்ட் மில்க்"-தான் வேணும்" என காண்பித்து நான் அறியாத எலிபெண்ட் மில்க்கின் புதிரை விடுவித்தான் ...

-ஷார்ஜா 
26-3-2016

8

சின்ன வயசுல நீ என்னவா ஆக விரும்பறன்னு யார் கேட்டாலும் என் பதில் டீச்சர் என்பதாகத்தான் இருக்கும்.. உண்மையில் அப்போது அது மன விருப்பமாக இருந்ததில்லை. எல்லோரும் அவரவர் குறிக்கோளை சொல்லும்போது இதை என் குறிக்கோளாக வெறும் வாய் மட்டும் சொல்லும் வார்த்தையாகவே வைத்து இருந்தேன்..
ஆனால் நான் பணிபுரிந்த காலங்களிலும், இப்போது வீட்டில் இருக்கும் நேரங்களிலும் ஆசிரியர் துறையை தேர்ந்தேடுத்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றும்.. அதற்கு காரணம் விடுமுறை, குறிப்பிட்ட நேர பணி என்பதையும் தாண்டி மனதிற்கு திருப்தியளிக்கும் பணியாக இருந்திருக்குமே என்ற நிதர்சனம்தான்..
காலையில் ஆறரை மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும் என்ற காரணத்தால் பகல் நேரங்களில் மகனை தூங்க விடுவதில்லை.. ஆதலால் இரவு 9 மணிக்கு படுத்து 6 மணிக்கு எழுந்து விடுவான்.. பள்ளியிலிருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருப்பான்.. இல்லையென்றால் டிவி பார்ப்பான்.. மாலையில் ஹோம் வொர்க் முடித்து விட்டு சாப்பிட்டு தூங்கி விடுவான்..
அன்று டிவி பழுதாகி இருந்தது.. சிறிது நேரம் பொம்மைகளை வைத்து தங்கையுடன் விளையாடி விட்டு சலித்ததும் என் போனை வாங்கி கேம் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.. நாலு சுவற்றுக்குள் பொழுதை கழித்தாக வேண்டும் என்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் டிவியும் அன்று துணைக்கு இல்லாததால் அவன் மனநிலை புரிந்து அவனை எழுப்பவில்லை..
மதியம் தூங்கியதால் இரவு 10.30 ஆகியும் தூங்க வராமல் ஸ்கெட்ச் எடுத்து கலர் பண்ணிக்கொண்டிருந்தான்.. காலைல ஸ்கூலுக்கு போகணும், இன்னும் தூங்காம இருந்தா காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியாது எனக் கூறினோம்..
"நாளைக்கு ஸ்கூல் போகல" என்றவனிடம் "இன்னும் ஒரு வாரம்தான் ஸ்கூல் , அப்புறம் 10 டேஸ் லீவ், அதுக்கு அப்புறம் kg -2 போய்டுவ, அப்போ இந்த டீச்சர் இல்லடா, வேற டீச்சர் தான் உனக்கு , சோ இப்போ லீவ் போடாம இந்த டீச்சர் நடத்தற கிளாஸ்ல நல்லா படிக்கவும் செய், என்ஜாய் பண்ணவும் செய்"என்று சொன்னதும், வந்து படுத்தவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் திரண்டு வழிய ஆரம்பித்து இருந்தது..
எந்த காரணத்துக்காக அழுகிறான் என புரியாமல் பதட்டத்துடன் , "ஏன் தங்கம் அழறே" என கேட்டதும், "எனக்கு இந்த மிஸ்தான் வேணும், வேற மிஸ் வேண்டாம் , இந்த மிஸ்கிட்டவே படிக்கறேன்மா" என அழுது கொண்டே கூறினான்..
"இந்த மிஸ் kg 1 மட்டும்தான் எடுப்பாங்க, நீ kg 2 போகறே இல்ல தங்கம்" எனக்கூறியதும் "இல்ல, நான் kg 2 போக மாட்டேன் , அப்போ வீட்லதான் இருப்பேன்" எனக் கூறிவிட்டு அழுதான்..
"இனி மேல மேல நிறைய டீச்சர்ஸ் மாறுவாங்க, அம்மாக்கும் நிறைய டீச்சர்ஸ் மாறினாங்க , இப்ப யாரும் எங்க இருக்காங்கன்னே தெரியாது.., பட் நீ இந்த ஸ்கூல் ல படிக்கற வரை kg 1 மிஸ்ஸ பார்க்கலாம், அம்மாகிட்ட அவங்க நம்பர் இருக்கு , நீ பெரியவனானதுக்கு அப்புறம் கூட நாமளோ அவங்களோ எங்க போனாலும் டச்-ல இருக்கலாம்"என சொல்லியதற்கு பதில் ஏதும் கூறாமல் அழுது கொண்டே தூங்கிப் போனான்..
சொல்லாம விட்டு இருக்கலாமோ , அவன் அந்த இயல்புக்கு தக்க மனதை மாற்றியிருக்கத்தானே போகிறான் என தோன்றியது.. இருந்தும் எங்களுக்கு அடுத்து வெளியில் ஒருவரின் பிரிவை நினைத்து (அதுவும் முதன் முதலில் ஆசிரியரை ) அவன் அழுதது அந்த ஆசிரியரின் மதிப்பை எங்களுக்குள் இன்னும் உயர்த்தியது..அப்படியே, ஆசிரியர் ஆகி இருக்கலாமோ என்ற என் எண்ணத்தையும் கூட....

-ஷார்ஜா 
 13-3-2016