செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

2

என் பதின்பருவத்தில் என நினைக்கிறேன்... ஒரு முறை நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம்.... கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு உட்கார இடம் கிடைத்திருந்ததால் பெரிய அவஸ்தையில்லை. அதன் பின்னான நிறுத்தத்தில் என நினைக்கிறேன் , ஒரு கணவன், மனைவி மூன்று குழந்தைகள் (எட்டு வயதிற்குள் இருப்பர்) , கூட ஒரு திருமணமான பெண் (அந்த மனைவியின் தங்கை என சாயலே சொன்னது ) அப்பெண்ணுடைய கைக்குழந்தை என நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறினர் ...
பிள்ளை பெற்ற தன் தங்கையை குடும்பத்துடன் கணவன் வீட்டுக்கு விட்டு வர வந்திருக்கின்றனர் என்பது அவர்களின் செயலில் புரிந்தது.. அந்த 3 குழந்தைகளும் சித்தியின் மடியில் இருந்த கைக்குழந்தையிடம் விளையாட்டு காண்பித்து சிரித்தபடி இருந்தனர்.. பின் உறங்கி எழுந்ததும் அவர்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன் நெருங்கப்போகும் வேளையில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் முகம் கழுவி , பவுடர் , போட்டு , கொண்டு வந்திருந்த பூவையும் தலையில் சூடி என சிறு அலங்காரத்தை அமர்ந்திருந்தபடியே ஆர்வத்தோடு செய்து கொண்டார் . பிள்ளைக்கும் தண்ணீர் விட்ட டவல் மூலம் முகம் துடைத்து மையிட்டு பவுடர் பூசி தன் அக்கா பிள்ளைகளுடன் பேசியபடியே அலங்கரித்து விட்டார்.. அப்பெண்ணின் அக்காவும் முகம் கழுவி பொட்டு வைத்து , பூச்சரத்தை சிறு சிறு துண்டுகளாக்கி , தன் 3 பிள்ளைகளுடன் தானும் வைக்க , எல்லோரும் இறங்க தயாராயினர்..
கிளம்பும்போது இருந்த கூட்டம்,பல நிறுத்தங்களில் காணாமல் போயிருக்க அவர்களை , அக்குழந்தைகளின் பேச்சு மற்றும் சிரிப்பால் கவனித்து வந்து கொண்டிருந்த நான் , ஏதேச்சையாக அவர்கள் ( நாங்கள் இறங்க வேண்டியதற்கு முந்தைய நிறுத்தம் ) இறங்கப்போகும்போதும் கவனித்தேன்.
அவர்களை வரவேற்க அப்பெண்ணின் கணவரே வந்திருந்தார்.. மூன்று குழந்தைகளில் ஒன்றை கையில் தூக்கியவாறே தன் மனைவியை அவர் ஓரப்புன்னகையுடன் பார்த்த பார்வையும் அந்த பார்வைக்கு வெட்கப்பார்வை மூலம் பதிலளித்த அப்பெண்ணின் பார்வையும், பிரிந்திருந்த சிறு கால இடைவெளி மற்றும் வார்த்தைகளில் சொல்லவியலாத சில உணர்வுகளை பரிமாறிக்கொண்டதை கண்டேன் . அந்த பார்வைகள் தெளித்த காதல் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை..
இரு மாதங்களுக்கு முன் தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.. முன்புறம் இறங்கும் வரிசையில் இருந்து 3 -வது இருக்கையில் அமர்ந்திருந்தேன்.. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறே ரசிக்கும்படியான சில பாடலைகளை ரசித்துக் கொண்டும் ரசிக்க இயலாத பாடல்கள் ஒளிபரப்பாகும் ஜன்னல் வழியில் பார்வையோடு நினைவையும் விட்டுக் கொண்டிருந்தேன்.
பேருந்து சிங்காநல்லூர் நிறுத்தத்தில் நின்றபோது , நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணின் இதழ்கள் மெலிதான சிரிப்பையும் , விழிகள் ஒரு நேரான பார்வையையும் முன்புறம் பேருந்து இறங்கும் இடத்தைப் பார்த்து சிந்திக் கொண்டிருந்தன.. அவளின் பார்வை போன திசையை பார்த்தபோது அப்பேருந்தின் நடத்துனர் படியில் நின்றவாறே தன் பார்வைக்கணைகளையும் அப்பெண்ணின் மேல் விட்டுக்கொண்டிருந்தார்..
அப்பெண்ணிற்கு 18 -22 வயதிற்குள்தான் இருக்கும்.. மெலிதான தேகம்.. மாநிறம்... ஒவ்வொருவர் பார்வைக்கும் அழகு இது என வரையறுத்து சொல்லப்பட்ட லக்ஷணங்களுக்குள் இப்போதைக்கு இல்லாமல் இருந்தாலும் , வரும்காலத்தில் கொஞ்சம் உடல் பூசினாற்போலானாலும் லக்ஷணத்துடன் காட்சியளிக்கும் தோற்றத்துடன் இருந்தாள்..
பேருந்து கிளம்பும் வரை அப்பெண்ணையே அந்த இளம் வயது நடத்துனரும் பார்த்துக் கொண்டிருந்தார்.. காரணம் அதன் பின்னர்தான் புரிந்து கொள்ள முடிந்தது.. அந்த பெண் வழக்கமாக அப்பேருந்தில் பயணிக்கும் பெண் போல.. ஆதலால் அப்பெண் ஏறுவார் என நடத்துனர் அடிக்கடி அப்பெண்ணை பார்த்தவாறே காத்துக் கொண்டிருக்க , அப்பெண்ணோ ஏறாமல் நடத்துனரின் அவஸ்தையை ஒரு ஓரப்பார்வையுடனும், குறும்பு சிரிப்புடனும் ரசித்துக் கொண்டிருந்தாள்..
பேருந்து எடுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக ஓட்டுநர் ஹாரன் ஒலிக்க விட்டவாறே நடத்துனருக்கு சிக்னல் கொடுக்க , நடத்துனருக்கோ அப்பெண் ஏறாமலிப்பது ஒரு ஏமாற்றத்தோடு , அவஸ்தையையும் கொடுத்துக் கொண்டிருந்தது.. பின் ஒருவழியாக அப்பெண் ஏறாமலேயே பேருந்து கிளம்பியது..
இதில் அப்பெண்ணின் குறும்பு தெறித்த பார்வையும்,சிரிப்பும் அவளை பேரழகியாகவே என் கண்ணுக்கு காட்டியதோடு மட்டுமல்லாமல் , என் மனதுக்குள்ளும் அவள் சிரிப்பும், பார்வையும் செல்ல வழி செய்திருந்தது.. (அப்பெண்ணின் வீட்டு ஆட்கள் மட்டும் அப்பெண்ணின் செய்கையை பார்த்திருந்தால் அவர்கள் ரத்தம் கொதித்திருக்கும் என்பது வேறு )..
ஒரு காதலனை/காதலியை (இதில் காதலிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு ) ஏங்க விட்டு வேடிக்கை பார்க்கும் சில ஆரம்ப காலத்து காதல் விளையாட்டு இது.. அதாவது ஒருவரின் காதலை ஏற்கவும் இல்லாமல் , அவர்களை விலகிப்போகவும் விடாமல் வைக்கும் காதல் தந்திரம் இது  ..
உண்மையில், காதல் உணர்வில் அழகானது பார்வை பரிமாற்றங்கள்தான்.. இது போன்ற பரஸ்பர காதல் பார்வையானாலும் சரி, ஒருவரின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பார்வையானாலும் சரி அல்லது ஒருவருக்கு ஏக்கத்தை உண்டு பண்ணி அதை ரசிக்கும் ஓரப்பார்வையானாலும் சரி , சம்பத்தப்பட்டவர்களுக்கு அதனதன் சம்பந்தப்பட்ட உணர்வுகளானாலும் இதை நேரில் பார்க்க நேர்பவர்களுக்கு (விதிவிலக்கு : மேற்சொன்னபடியே திருமணமாகாத ,சம்பத்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் காண்பது ..) நிச்சயம் அவை கவிதைகளே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.