நான் சிறுமியாக இருந்தபோது சின்ன கைக்குழந்தைகளை தூக்கி வைத்து விளையாடவும், அவர்களை குளிக்க வைத்து , அலங்காரம் பண்ணி விடவும் மிகவும் ஆசை இருக்கும்.. பக்கத்தில் சிறு குழந்தைகள் உள்ள வீடென்றால் நாளின் முழு நாளும் அவர்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆசை கூட இருக்கும். அப்படியே அப்போது சிறு பிள்ளைகள் இருந்த வீடுகளில் நாகாரீகம் கருதி முழு நாளும் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போது அவர்களின் வீடு சென்று குழந்தையை பார்த்துக் கொள்வதோ அல்லது என் வீட்டுக்கு கொண்டு வந்து திரும்ப அவர்கள் கேட்கும் நேரம் கொடுத்து அனுப்புவதோ வழக்கம்.. அவர்களுக்கு ஏதாவது வேலை இருந்தால் கூட குழந்தையை என் பொறுப்பில் விட்டு விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் வந்து வாங்கி செல்வர்..
இந்த ஆசை எதுவரை சென்றதென்றால் என் டீன்-ஏஜில் கூட அம்மாவிடம், "அம்மா ஏதாவது ஆதரவற்ற இல்லத்தில் ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாமா" என கேட்கும் அளவிற்கு இருந்தது..
என் இரு குழந்தைகளுக்கும் அதே போல சிறு குழந்தைகள் மீது ஆசை. மகனை விட மகளுக்கு சிறு குழந்தைகளை பார்த்தால் கொள்ளை பிரியம்.. மகனுக்கு ஆண் குழந்தைகள் பிடிக்கும் என்றால் பெண்ணுக்கு பெண் பிள்ளைகளை பிடிக்கும்.. குழந்தை பிறந்திருக்கும் வீடுகளுக்கு பிள்ளையை காண செல்வதென்றால் கூட பாய் பேபி என்றால்தான் வருவேன் என மகனும் கேர்ள் பேபி-ஐ பார்க்க மட்டும்தான் வருவேன் என மகளும் கூறுவர்...
இரவு படுக்கும்போது பிள்ளைகளுக்கு கதை சொல்லியோ, அவர்களுக்கு பிடித்த பாடல்கள் பாடியோ அல்லது அவர்கள் தங்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டோ தூங்குவது வழக்கம் .. இரு நாட்களுக்கு முன்னர் அப்படி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மகள் இதற்கு முன் கேட்டது போலவே அப்போதும் "அம்மா, எனக்கு தங்கச்சி பாப்பா வேணும், சாமிகிட்ட கேளுங்க , அப்போ சாமி கொடுக்கும் இல்லையா"என்க "நோ,எனக்கு தம்பி பாப்பாதான் வேணும்" என மகன் கேட்க ஆரம்பித்தான்.. இந்த கேள்வி சிறு குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் எதிரொலிக்கும் கேள்விதான்..
உடனே நான் , "தங்கங்களா, சாமி எனக்கு ஒரு பையனும் , ஒரு பொண்ணும் போதும்-னு டாக்டர்கிட்ட சொல்லி, ஒரு ஆபரேஷன் பண்ண சொல்லிட்டாங்க.. சோ இனிமே தங்கச்சி, தம்பி பாப்பா எல்லாம் வர மாட்டாங்க" என்றேன்.. உடனே பெண் "அண்ணா -க்கு அப்புறம் சின்ன பாப்பாவா என்னை கொடுத்தாங்க , அப்போ எனக்கு அப்புறம் நான் விளையாட ஒரு சின்ன பாப்பா சாமி கொடுக்கணும் இல்லையா "என ஆவேசமாகக் கேட்டாள்...
உடனே வந்த சிரிப்புடன் "என்ன சொன்ன, திரும்ப சொல்லு" எனக் கேட்க, வெட்கப்பட்டவாறே இடைவெளி விட்டு விட்டு மெல்லமாக முன்னர் கூறியதை திரும்ப கூறினாள்.. "சரி, சரி சாமி தருவாங்க, உனக்கு தங்கச்சி பாப்பா கிடைச்சா என்ன செய்வ" எனக்கேட்க "சோறு ஊட்டுவேன், தோசை ஊட்டுவேன், பால் குடிக்க வைப்பேன், டிரஸ் போட்டு விடுவேன் " என பெண் குழந்தைகளுக்கே உரிய ஆசைகளை பட்டியலிட்டாள் .. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஒளியை வார்த்தைகளில் அளவிட முடியாது..
உடனே ரோஹித், "எனக்கு ஒன்னு இல்ல, 5 தம்பி பாப்பா வேணும், அவங்க கூட நான் WWF -ல வர்றது போல சண்டை போடணும்" என கை காலை தூக்கி சண்டை போடுவதை போல ஆக்சனிலேயே காண்பித்தான்... அடிக்கொரு முறை தங்கையை சீண்டுவது, அவளை அடித்து விட்டு ஓடுவது , வீட்டில் சில வேண்டாத வேலைகள் செய்து வைத்து நமக்கு கூடுதல் வேலைகள் கொடுப்பது, .. இப்படி நீளும் பட்டியலின் படி ஒரு ஆண் குழந்தைக்குரிய அத்தனை சேட்டைகளும் நிறைந்திருக்கும் இவன் ஒருவனையே சமாளிக்க முடியவில்லையே, இதில் 5 ஆண் குழந்தைகள் எனக்கு கிடைத்திருந்தால் ,நான் எப்படி இருந்திருப்பேன் என்று எண்ணியவுடனே பயத்தில் தலையை சிலுப்பிக் கொண்டேன்..
அது எப்படியோ, சிறு குழந்தை பருவத்திலேயே யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே பெண் குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது , அதற்கு சோறூட்டுவது, பாத்திரங்களை வைத்து சமைத்து விளையாடுவது என இருக்க, ஆண் பிள்ளைகளோ வாகன பொம்மைகளை வைத்து ஓட்டுவது, சாகச கதாபாத்திரங்களின் பொம்மைகளை வைத்து சண்டை போடுவது போல விளையாடுவது என தங்கள் பாலினத்திற்குரிய விளையாட்டுகளையே விளையாடுகின்றனர்.. இதில் மாறி விளையாடும் குழந்தைகள் தங்கள் குணத்தில் கொஞ்சம் எதிர் பாலினத்தவரின் இயல்பை கொண்டிருக்கின்றனர்..
பின் ஏதேதோ பேசியதில், ஆரம்பத்தில் பேசியதை மறந்தபடி உறங்கி விட்டனர்.. மறுநாள் காலையில் சாப்பிடும் வேளையில் மகள் தன் மடியில் இருந்த பொம்மையிடம் பேசியவாறே ஒவ்வொரு வாய் தோசை துண்டுகளையும் பொம்மையின் வாய்க்கு அருகில் கொண்டு சென்று பின் தன் வாய்க்குள் இட்டுக் கொண்டிருந்தாள் ..
-19-2-2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.