செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

தனிமை விரும்பும் மனம்

பக்கத்து பிளாட்டில் யாரோ அழைப்பு மணியை தட்டுகிறார்கள் ..
அழைப்பு மணியின் சத்தத்துக்கு கதவு திறக்கப்படாமல் இருக்க மறுபடியம் மறுபடியும் அழுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.. வந்திருப்பவர் அந்த பிளாட்டில் வசிப்போருக்கு நெருங்கியவர் என அடிக்கொருமுறை குறைந்த இடைவெளியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அழைப்பு மணி உணர்த்தியது...
வெளியில் சென்று விசாரித்து வருமளவுக்கு பழக்கமும் இல்லை, தைரியமும் இல்லை .. எங்கள் வீட்டிலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு தவிர்த்த அழைப்பு மணி அழைப்பின்போது கதவைத் திறக்கவே தயக்கம். டோர் லென்ஸின் வழி பார்வையை விட்டு அறியாத நபர்களாக இருந்தால் பெரும்பாலும் அமைதியாக நகர்ந்து விடுவதே வாடிக்கையாகி இருக்கிறது.. இதில் அடுத்த பிளாட் அழைப்புக்கு எப்படி கதவை திறப்பது..
தட்டப்பட்ட அழைப்பு மணி ஓசைகளுக்கு பதில் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவர் லிஃப்டினுள் நுழைவதையும் தானியங்கி அறிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..
பக்கத்து வீட்டுக்கு ஆள் இல்லாத போது வரும் தபால்காரர் , காஸ் டெலிவரி செய்பவர் , எங்களுக்கு அறிமுகம் இல்லாத அவர்களின் சொந்தங்கள் என எல்லோரையும் விசாரித்து, அவர்களுக்கு தகுந்த தகவல் கூறி அனுப்பி, குறிப்பிட்ட அண்டை வீட்டு நபர்கள் வீட்டுக்கு வந்ததும் தகவல் தெரிவித்த நாட்கள்தான் நினைவுக்கு வந்து போகின்றன..
அபார்ட்மெண்ட் வாழ்க்கையில், அதுவும் வேறு வேறு பாஷைகளாகக் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அருகருகே வசிக்கும்போது அண்டை வீட்டுக்காரருடன் சுமூக உறவுக்கு வழிவகை இல்லாமல், பார்த்தால் நலம் விசாரிக்குமளவுக்கோ அல்லது புன்னகையை பரிமாறி விட்டோ செல்லுமளவுக்குத்தான் அபார்ட்மெண்ட் அண்டை வீட்டு உறவு நிலை இருக்கிறது.. யாருமே (நான் உட்பட) அண்டை வீட்டினருடன் சுமூக உறவுடன் பழக்கம் கொள்ள இப்போதெல்லாம் விருப்புவதில்லையோ எனது தோன்றுகிறது.. பாதுகாப்பு என்ற உண்மை இல்லாத வார்த்தையையும் துணைக்கு அழைக்க முடியாது..
இதுவே அவர்கள் பழகியவர்களாக இருந்தால் அந்த வீட்டுக்குரியவர் வந்ததும் யாரோ வந்து விட்டு போனார்கள் என சொல்லலாம்.. ஆனால் அவர்களே நமக்கு யாரோவாகிப் போன இந்த காலத்தில் கண்டும் காணாமல் நகர சொல்கிறது சூழ்நிலை..
ஆம், உண்மைதான்,உலகம் முழுவதும் ஒரு நொடிக்குள் நட்பை தேடி, அவர்களை அறிந்து நட்பை பேண முடிகிறது .. ஆனால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் பெயர் , சில நேரங்களில் யார் வசிக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள விரும்புவதில்லை..
தனிமை விரும்பும் மனம், சில மனித மனங்களை பற்றிய பயம் என தோதாக கூற காரணங்கள் பல இருப்பினும் , ஏதோ ஒன்றை இழந்தது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.. ஆனாலும் ஒரு விந்தை அதை மீட்டுக் கொள்ள மனமும் விரும்புவதில்லை..

- ஷார்ஜா 
  31-5-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.