செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

1

அப்போது எனக்கு 9 அல்லது 10 வயதிருக்கும்.. நாகர்கோவிலுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம்.. என் அம்மா பாட்டியின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு பிறந்திருந்த குழந்தையை பார்க்க என்னையும் தம்பியையும் அழைத்து சென்றார் .. அந்த குழந்தையின் தாய் அம்மாவுக்கு தூரத்து சொந்தம் என்பதோடு சிறு வயது தோழியும் ஆவார்..
நாங்கள் அவர்கள் வீட்டுக்கு பிள்ளையை பார்க்க சென்றபோது ஒரு 11 வயது சிறுவனும் 5 வயது சிறுமியும் (வயது பின்னால் நான் கணக்கு போட்டு கூறுவது ஆகும், அப்போது வயது அனுமானிக்க முடியாத இரு உருவங்கள் மட்டுமே என் நினைவில் இன்றும் உள்ளனர் ) Iஎங்கள் பின்னாலயே சுற்றி சுற்றி வந்தும், அம்மாவும் நானும் அவர்களின் சகோதரனை தூக்கும்போது சந்தோசமாக, குதூகலமாக எங்களை பார்த்தபடியும் இருந்தனர்..
எனக்கு சிறு பிள்ளைகள் என்றால் அப்போதே மிகவும் இஷ்டம்.. குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது என்றால் கொள்ளை பிரியம்.. பில்லியை தவற விட்டுவிடுவேனோ என்றே பயம் இருந்தாலும் தூக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் விடவே மாட்டேன்.. ஒருமுறை என் சித்தி பெண்ணை (அவளுக்கு மூன்றிலிருந்து 6 மாதத்திற்கும் உள்ளான வயதிருக்கும், எனக்கு 8 வயதிருக்கும்) நான் தூக்கி என் தாத்தா வீட்டில் தூக்கி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவள் எம்பியதால் தலையோடு உடம்பு கீழே தொங்குகிறது,, காலை மட்டும் நான் விடாமல் பிடித்திருந்தேன். அருகில் வேறு யாருமில்லை, எப்படி தூக்குவது என்று திணறியவாறே, ஒரு வழியாக அப்படியே மெதுவாக தரையில் அவளை மெதுவாக படுக்க வைத்து பின் தூக்கிக் கொண்டேன்.. அந்த நினைவு வேறு அப்போதிருந்த பதட்டத்தோடு இப்போது நினைவுக்கு வந்து போகிறது..
இந்த குழந்தை எனக்கு பயமில்லாமல் தூக்குவதற்கு ஏற்றவாறு மிகவும் எடை குறைந்திருந்தது.. சுலபமான தூக்கும் எடை என்பதால் குதூகலத்தோடு என் முகத்தை பார்த்தவாறு மேலே தூக்கி சிரிக்க அவனை சிரிக்க வைக்க முயன்று கொண்டிருந்தேன்.. கூட வந்த என் தம்பி என்னை கிண்டல் செய்ய வேண்டும் என்பது போலவே அந்த குழந்தை அப்போது ஒரு வேலை செய்தது.. ஜட்டியும் அணிவிக்காததால் நேராக என் நெஞ்சின் மீது ஈரமாக்கினான்.. அதற்கு பின் என் தம்பி காண்போரிடமெல்லாம் கொஞ்சம் கற்பனை சேர்த்து என் முகத்தில் எந்த குழந்தை ஈரம் பண்ணினான் என என்னை கிண்டல் செய்து வெறுப்பேற்றியதுதான் இப்போது நினைவில் இருக்கிறது...
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் அந்த குழந்தையில் தாயிடம் இந்த சம்பவத்தை கூறி , உங்களுக்கு நினைவிருக்கிறதா எனக் கேட்டேன்.. "இல்லை" என்றவர் "அப்போது அவன் உன் மீது ஈரம் பண்ணியபோது அருவருப்பாக இருந்ததா" எனக்கேட்டார்.. "இல்லை, சிறு குழந்தைதானே , இதில் அருவருப்பு உண்டாக என்ன இருக்கிறது ஆன்டி" எனக் கூறினேன்.. உடனே அவர், "அதனால்தான் உனக்கு உடனே பிள்ளை கிடைத்திருக்கிறது" எனக் கூறினார்..
பொதுவாக எந்த குழந்தையாவது நம் மடியில் ஈரம் பண்ணினால் உறவு விட்டுப் போகாது என்பர்.. எனக்கு அந்த வார்த்தையில் அதன் பின்னான சம்பவத்தின் மூலம் பெரிய நம்பிக்கையே வந்து விட்டது... எப்படி என சொல்லட்டுமா....
அந்த குழந்தையின் தாய்தான் என் மாமியார்.. அந்த குழந்தை என் கொழுந்தனார்.. கூட இருந்த சிறுவன்தான் என் கணவர்... இப்போது அந்த நினைவை இங்கு பதிவிடுவதற்கும் காரணம் உண்டு.. எங்களின் திருமணத்தை பற்றி யோசிக்கும்போதெல்லாம், அவ்வப்போது இந்த நினைவும் நெஞ்சில் வந்து விடும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.