புதன், 23 நவம்பர், 2016

12

இப்போது நினைவில் வராத ஏதோ ஒன்றை ரோஹித் சொன்னதற்கு,"ஓகே மை சன்" என்றேன்.. உடனே சிரித்துக்கொண்டே "என்னம்மா, நீங்களும், அப்பாவும் என்னை மை சன்-ன்னு கூப்டறீங்க , நான் என்ன அந்த சன்-ஆ" என பால்கனி கதவின் வழி தெரிந்த சூரியனைக் காட்டினான்..
"அது sun நீ son" என விளக்கிக் கூறியதை புரிந்துகொண்டானா இல்லையா என சுதாகரிப்பதற்குள் , "அப்போ நிகிதாவ எப்படி கூப்பிடுவீங்க" எனக்கேட்டான்.. "நிகிதா அம்மாக்கும் அப்பாக்கும் டாட்டர் " என்றேன்.. "ஹஹாஹா, டாட்டரா, அப்போ அவ ஊசி போடுவாளா" என சிரித்தபடி கேட்டான்.. ஊசி போடறது டாக்டர் , மகள்-னா டாட்டர் என ஸ்பெல்லிங் உடன் விளக்கினேன்.. மேற்கொண்டு கேள்வி எதுவும் எழுப்பாததால் விளங்கியது என நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த தின்பண்டமும்,டிவி-யில் ஓடிக்கொண்டிருந்த டோராவும்தான் மேற்கொண்டு அவனை கேள்வி எழுப்ப தோன்ற விடவில்லை என அதற்கு பின்னான அவன் பேச்சுகளால் புரிந்தது..
எப்போதுமே "என்னவாக ஆகப்போறீங்க" என பிள்ளைகளிடம் கேட்டால் , ரோஹித் "டாக்டராவேன்" எனவும் நிகிதா துப்பாக்கி போல் கை விரல்களைச் சுட்டி "நான் CID " (புகழ் ஜீ தமிழ் டிவி-க்கே) எனவும் கூறுவாள்..
சில நாட்கள் கழித்து திடீரென கோபித்துக் கொண்டவனாக , "நான் மட்டும் மை சன் , ஆனா நிகிதா மட்டும் டாக்டரா , நானும் டாக்டர் ஆகணும்" என்றான்.. "அவ டாட்டர் தங்கம், நீ டாக்டர் ஆகணும்னா நல்லா படி டாக்டராயிடுவே" என திரும்ப ஸ்பெல்லிங் சொல்லி விளக்கி கூறினேன்.. அதை காதில் வாங்கிக் கொள்ளாதவனாக "அப்போ நிகிதா மட்டும் ஸ்கூல்-க்கே போகல, ஆனா இப்பவே அவள டாக்டர்ன்னு சொல்றீங்க , போம்மா , நானும் இப்பவே டாக்டராகணும்" என வார்த்தையில் வீம்பும் பிடிவாதமும் கொண்டு அழவும் தொடங்கி இருந்தான்.. புரிய வைக்க முடியாதென்று தோன்றியதும் வேறு பேச்சை மாற்றிக் கொண்டேன்..
அவன் இப்படி சொல்வதும் , நான் பேச்சை மாற்றுவதும் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது.. எங்காவது டாட்டர், டாக்டர் என வார்த்தை வந்தாலே இதை ஆரம்பித்து விடுவான்..
ஒருமுறை வாட்சப்பில் இருந்த அவன் டீச்சரின் குடும்ப புகைப்படத்தை அவனிடம் காட்டினேன்.. அவருக்கு பள்ளியில் படிக்கும் இரு வளர்ந்த மகள்கள்.. , போட்டோவை பார்த்தவன், "உனக்கு தெரியுமா , இவங்க ரெண்டு பேருமே டாட்டர்ஸ், மேம் சொன்னாங்க (ஏதோ ஒரு நாள் பெண்கள் பள்ளிக்கு வந்திருக்கும்போது பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தி வைத்து இருப்பார் போல ), ஆனா நான் மட்டும் டாட்டர் இல்ல" என சிணுங்கினான்.. அவங்க டீச்சரோட பொண்ணுங்க தங்கம் , அதான் டாட்டர்ஸ்-னு சொல்லி இருக்காங்க, நான் நிகிதாவ டாட்டர்னு சொன்னேன்ல அது போல" என சொன்னதும் , எப்பவும் நிகிதாவை மட்டும் டாக்டர் ஆக்கு, என்னை ஆக்காதே" என ஏன்தான் புகைப்படத்தை காண்பித்தோமோ என்று நினைக்கும் அளவுக்கு பேசி கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..
நேற்று பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையை கழற்றாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட தொடங்கினான்.. "தங்கம், டிரஸ் கழட்டு, நான் இப்ப வாஷ் பண்ணினாதான் நீ நாளைக்கு ஸ்கூல்க்கு போட்டுட்டு போக முடியும்" எனக் கூறினேன்.. "இல்லை, முடியாது"என விட்டேத்தியாக பதில் கூறினான்..
"ஓகே, எனக்கு என்ன,யூனிபார்ம் டிரஸ் இல்லேன்னா ஸ்கூல்-ல உன்னை சேர்க்க மாட்டாங்க, அப்புறம் ஸ்கூல்க்கு போக முடியாது, ஸ்கூல்-க்கு போய் படிச்சாதான டாக்டர் ஆக முடியும், ஸ்கூல்-க்கு போகலேன்னா நீ நினச்சது போல டாக்டர் ஆகவும் முடியாது" என அசால்ட்டாகக் கூறினேன்..
உடனே "நான் டிரஸ் கழட்டறேன்" எனக் கூறியவன் , கழட்டிக்கொண்டே கேட்டான், "ஆமா, நீங்களும் ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சீங்கன்னு சொன்னீங்கல்ல, அப்போ நீங்க ஏன் டாக்டராகல", :o :o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.