வியாழன், 24 நவம்பர், 2016

16

அன்று பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே கோபமாக , "பெனிட் என்னை முடால்-னு (முட்டாள் என்பதுதான் அவன் உச்சரிப்பில் முடால்(mutaal ) , அதுவும் "மு"-வுக்கு அடுத்து "டா"வை நீட்டி சொல்வது கூட கேட்க அழகாக இருக்கும் என்பது வேறு ) சொன்னான்.. இனி நான் அவன்கிட்ட பேச மாட்டேன்.. அன்னைக்கு நாம மனாமா-ல பார்த்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணி , அவன் அம்மாகிட்ட பெனிட், ரோஹித்-ஐ முடால்-னு சொல்றான்னு சொல்லுங்க.. அவனை அப்படி சொல்லக்கூடாதுன்னு மிரட்டி வைக்க சொல்லுங்க" என்றவன் உடனே குரலை கோபத்தில் இருந்து கொஞ்சம் தாழ்த்தி "திட்ட மட்டும் சொல்லுங்க , அடிக்க சொல்லாதீங்க" என்றான்..

அவன் சொல்ல சொன்ன ஆன்ட்டி, எங்களுக்கு நன்கு பரிச்சயமான தோழி .. என் தங்கையை போன்று.. ஒரு முறை இங்குள்ள ஒரு மாலில் அவருடன் எதிர்பாராத விதமாக பெனிட்டின் குடும்பத்தையும் நாங்கள் சந்திக்க நேர்ந்திருந்தது.. அவர்கள் இரு குடும்பமும் முன்பே பழக்கம் என்பதும் அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது..

குழந்தைகள் எந்த வார்த்தையையும் அர்த்தம் தெரிந்து பேசுவதில்லை என்பதால் அவனை சமாதானப் படுத்த முயன்றேன்.. அவனோ விடுவதாக இல்லை .. அந்த ஆன்ட்டி-க்கு போன் பண்ணுங்க என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான்.. சமாளிக்க முடியாது என தோன்றவும் அவங்க நம்பர் என்கிட்டே இல்லை, ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போறப்போ சொல்லலாம் என்று ஒருவாறு சமாதானப் படுத்தி வைத்தேன்.. அதன்பின்னும் இரு நாட்கள் இதே குற்றச்சாட்டை வீட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தான்..

சில நாட்களுக்கு பின் அவன் அவன் தங்கையுடன் சண்டை போடும்போது அவளை முட்டாள் எனக் கூறினான்.. "அண்ணா, என்னை முட்டாள்-னு சொல்றான் " என அவள் கூறவே "அவள் முட்டாளா , அவ அம்மா சொல்றதை எல்லாம் எவ்வளவு அழகா புரிஞ்சு கரெக்ட்டா செய்யறா , அவளை முட்டாள்-னு சொல்றே ...எதை சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாம இருக்கவங்கவங்களையும் , புரிஞ்சுக்க முடியாம நல்லா படிக்காத பசங்களையும், எதுவும் தெரியாதவங்களையும்தான் முட்டாள்-னு சொல்வாங்க.. நிகிதாதான் க்லவர் கேர்ள் ஆச்சே" எனக் கூறினேன்..

உடனே சற்றும் தாமதிக்காமல் "ஓ, அப்போ என்னை நல்லா படிக்க மாட்டேன்னுதான் பெனிட் அப்படி சொன்னானா , என்னை அப்படி நினைச்சுட்டானா, இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன்" என எரிச்சலுடன் வார்த்தைகளை கூறி முடித்தான்..அவன் மனம் பெனிட்டை நோக்கி செல்லும் என்பது அப்போது நானே அறியாததுதான்..

அடுத்த நாள் பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே , "இன்னைக்கு நான் வாங்கின ஸ்டார்-ஐ (அவன் வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை அல்லது வகுப்பு டெஸ்ட்-களை நன்றாக எழுதினால் நோட்டிலும், சரியாக சொன்னால் (ஓரல் ) கையிலும் சின்ன ஸ்டார் வரைந்து கொடுப்பார் அவன் ஆசிரியை) பென்னட்-கிட்ட காண்பிச்சு,நானா முடால் , இனி என்னை முடால்-னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன், அவன் ஒன்னுமே சொல்லல, இனி அப்படி கூப்பிட மாட்டான்னு நினைக்கிறேன்"என்றான்.. அவன் குரலில் தன்னை நிரூபித்து விட்ட திருப்தி தெரிந்தது..இருந்தும் அடுத்த வந்த நாட்களில் சில நாட்கள் அவன் முட்டாள் எனக் கூறுவதாக இங்கு வந்து கோபப்படுவான்..

ஏறக்குறைய இரு மாதங்கள் கழித்து எங்களுக்கு தெரிந்த அந்த தோழியின் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது.. பிள்ளைகளை அவர்கள் அப்பாவிடம் விட்டு விட்டு தனியாக செல்ல இருந்தவளை, (மணி மாலை 6-ஐ தண்டி இருந்ததால் மனதில் யாராவது துணைக்கு வந்தால் நன்றாக இருக்குமே எனது தோன்றியது, அதை ஓரிருமுறை கிளம்பும்போது வார்த்தைகளிலும் தெரிவித்து இருந்தேன்.. அவர் அலுவலக வேலையை லேப்டாப்பில் செய்து கொண்டிருந்ததால் அவரை அழைக்கவும் இல்லை)ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

ரோஹித், "அம்மா தனியா போக வேண்டாம்மா, அம்மாக்கு பயமா இருக்கும்ல , அதனால் நான் துணைக்கு வர்றேன்" எனக் கூறினான்.. ஜான் பிள்ளை-னாலும் ஆண்பிள்ளை-ன்ற பழமொழி அப்போது என் நினைவில் வந்தது.. அவன் வார்த்தைகளை நினைத்து பெருமைப்படவும் செய்தேன்.. இத்தனைக்கும் அந்த தோழியின் வீட்டுக்குத்தான் போகிறோம் என அவனுக்குத் தெரியாது..

அங்கு சென்றதும் இவனை பார்த்து , பென்னட்டோட Friend தான ரோஹித்.. அன்னைக்கு நாம மால்-ல பார்த்ததுல இருந்து , எப்பவும் என்னை பார்த்தா ரோஹித்-அ பத்தி கேட்டுட்டே இருப்பான்,ரோஹித் வீடு உங்களுக்கு தெரியுமா, ரோஹித் அம்மாகிட்ட பேசுவீங்களா , எங்க வீட்டுக்கு ரோஹித்த கூட்டிட்டு வர சொல்லுங்கன்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்" எனக் கூறினார்..

"இவனும் சில முறை அதே போல உன் மூலமா அவங்க அட்ரஸ் கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாம், நம்ம வீட்டுக்கு அவங்க அம்மாவை பெனிட்-ஐ கூட்டிட்டு வர சொல்லுங்க" என சொல்வதையும் கூறினேன்.. கூடவே
"பெனிட் இவனை க்ளாஸ்ல முட்டாள்னு சொல்றதாவும், அவங்க அம்மாகிட்ட உன்மூலமா அதை சொல்ல சொல்லி கண்டிக்க உனக்கு போன் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணினான் " எனவும் சொன்னேன்.. அவரும் "இருக்கும்க்கா , அவன் சொல்லி இருப்பான் , ஏன்னா அவன் அக்கா அவனை அடிக்கடி அந்த வார்த்தையை சொல்லி கூப்பிடுவா" எனக் கூறினார்.. இவன் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.. பின் வேறு சில விஷயங்கள் பேசி விட்டு நாங்கள் கிளம்பினோம்..

வரும் வழியில் "அம்மா , பெனிட் அந்த ஆன்ட்டிகிட்ட என்ன சொன்னானாம்" எனக் கேட்க "நீயும் கேட்டுட்டுதானே இருந்த" எனக் கூறினேன்.."இருந்தாலும் நீ சொல்லும்மா" எனக்கேட்கவும் "நீ சொல்றது போலவே அவனும் அந்த ஆன்ட்டிகிட்ட உன்னை அவங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடறானாம், உன்னை பத்தி அவங்ககிட்ட எப்பவும் விசாரிக்கறானாம்" எனக் கூறினேன்..

உடனே கொஞ்சம் சாந்தமான குரலில் கூறினான் "அப்போ இனிமே பெனிட் என்னை முடால்-னு கூப்பிட்டா ப்ராப்லம் இல்லை " :) :) :) :)

குழந்தைகளிடம்தான் கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.