திங்கள், 13 ஜூலை, 2015

குழந்தை தொழிலாளர்

கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை...
மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்த நேரம்.... பார்வைக்கு 8 அல்லது 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கேட்டை தட்டி . எங்கள் வரவுக்காக காத்திருந்தான்.. அம்மாவும், அப்பாவும் எனக்கு முன்னே வெளியில் சென்றனர்.. வீட்டுக்கு முன் வளர்ந்திருந்த வேண்டாத புல்லையும், செடிகளையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமா என கேட்டான்.. "நீ ரொம்ப சின்ன பையனா இருக்கியேப்பா, உன்னால் இதை சுத்தம் செய்ய முடியுமா" என அம்மா கேட்டதும், செய்ய முடியும் அக்கா என அவன் கூறினான்.. உடனே அப்பாவும் "இதன் மூலம் அவனுக்கு ஒரு வருமானமும் கிடைக்கும்" என கூறினார்.. ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கியா என அம்மா கேட்க 9-ம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை தினங்களில் மட்டும் இப்படி வெளியில் வேலை தேடி வருவதாகவும் கூறவே , சரி முன்பக்கம் மட்டும் சுத்தம் செய்தால் போதும் , வீட்டுக்கு தென்புறம் உள்ள பகுதியில் மிகுதியாக வளர்ந்திருந்த புதர்களை சுத்தம் செய்ய வேண்டாம் என அம்மா கூறினார்.. அவன் வேலை செய்ய தொடங்கினான்...
.
முழு நேர குழந்தை தொழிலாளர்களை எதிர்க்கும் மனம் படித்துக் கொண்டிருக்கும் பகுதி நேர குழந்தை தொழிலாளிகளை எதிர்க்க முன் வருவதில்லை...
இடை இடையே அவனிடம் தம்பி வேலை செய்ய முடியுதா என நான் கேட்க , சிரித்தவாறு முடியுதுக்கா, இதுல ஒன்னும் இல்லை என சொல்லியவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்..
15 நிமிடங்களுக்குள் வேலையை முடித்து விட்டு வந்து நின்றவனுக்கு அம்மா டீ போட்டு வைத்து வீட்டினுள் கூப்பிட, வீட்டினுள் வர சங்கோஜப்பட்டு நின்றவனை அப்பாவும் அழைக்க உள்ளே வந்தான்.. சேரில் உட்காரவும் கூச்சப்பட்டு நின்றவனை உட்காருப்பா என இரு முறை சொன்னதும் உட்கார்ந்து டீ குடிக்க ஆரம்பித்தான்.. அம்மா சமையலை கவனிக்க உள்ளே செல்ல, அப்பாவும் வெளியில் வேலையில் இருக்க அவனிடம் பேச்சு கொடுத்து அவன் குடும்ப நிலையை கேட்க தொடங்கினேன்...
அவன் வீட்டுக்கு ஐந்தாவது பிள்ளை என்றும் அவனுக்கு மேல் இரு அக்காக்கள், இரு அண்ணன்கள் மற்றும் ஒரு ஒரு தம்பி உள்ளதாகவும் கூறினான்..
அப்பா முன்பு கட்டிட வேலையில் மேஸ்திரியாக இருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட விபத்தில் காலில் பட்ட காயத்தால் பக்கத்தில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினான்.. மேலும்
அவனின் அம்மாவும் வீட்டு வேலைக்கும் , அண்ணன்களும், ஒரு அக்காவும் கம்பெனியில் வேலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினான்.. ஒரு அக்காவுக்கு திருமணம் முடிந்து விட்டதாம்..
தம்பி 6-வது படிப்பதாகவும், 8-வது வரை உடுமலைபேட்டையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி இருவரும் படித்ததாகவும், எட்டாவது வரைதான் அங்கு உள்ளதால் இவன் மட்டும் இங்கு ஆரம்பத்தில் படிக்க வந்ததாகவும் கூறினான்..பின்னர் இவனின் தம்பி மட்டும் அங்கே இருப்பதை அம்மா விரும்பாததால் அவனும் இங்கு உள்ள பள்ளியில் படிப்பதாகவும் கூறினான்..
பள்ளி விடுமுறை தினங்களில் இருவரும் வேறு சில சிறுவர்களுடன் ஒன்றாக வந்து, வேலை தேடுவதற்காக ஒவ்வொரு திசையில் செல்வதாகவும் கூறினான்.. இப்போது தம்பி அடுத்த தெருவுக்கு சென்றுள்ளதாக கூறினான்...
இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே இவனை தேடி இவன் தம்பியும் வந்து கேட் பக்கம் நின்றிருந்தான்.. உள்ளே அழைத்ததும், வந்தவன் சோபாவில் அமர சொன்னதும் பரவா இல்லைங்க என மறுதலித்து, பிறகு வற்புறுத்தல் காரணமாக சோபா இருக்கையில் முன்புறம் தள்ளி ஒரு நெளிதலோடு அமர்ந்தான்.. அம்மா அவனிடம் டீ சாப்பிடறியா என கேட்க, இல்லக்கா வேண்டாம் என கூறினான்..
நாங்கள் பேசுவதை ஏற்கனவே உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அம்மா, பெரியவனிடம் நன்றாக படிப்பாயா என கேட்கவும், நான்தான் முதல் ரேங்க் என கூறினான்.. உடனே சிறியவனும் நானும் முதல் ராங்க்தான், உடுமலை-ல படிக்கிற வரைதான் 2-வது ராங் எடுத்துட்டு இருந்தேன் என குதூகலத்துடன் கூறினான்..
வசதி வாய்ப்பு இருந்தும் படிப்பதற்கு சோம்பல் படும் பல பிள்ளைகளுக்கு (நானும் படிக்கும்போது அப்படிதான் இருந்தேன்) மத்தியில் இவர்களை பார்க்கும்போது ஒரு வித சந்தோசமும், ஏக்கமும் கலந்த உணர்ச்சி வெளியானது...
பிறகு இருவரும் கிளபுவதற்கு தயாராக, அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சமையல் முடுஞ்சுடும், சாப்பிட்டுட்டு போங்க என கூறவே, இல்லை, அம்மா சமைச்சு வச்சு காத்துட்டு இருப்பாங்க என கூறினர்..
இனி இந்த பக்கம் வரும்போது வீட்டுக்கு வாங்கப்பா என அம்மா கூறியதும் சந்தோசமாக தலையசைத்து எங்கள் ஒவ்வொருவரிடமும் கிளம்புகிறோம் என சொல்லி விட்டு கிளம்பினர்...
இரண்டு மூன்று முறை பேருந்து வேறு இடங்களிலும் 20 வயதுற்குள்ளான பையன்கள் வந்து , அக்கா எப்படி இருக்கீங்க, என்னை அடையாளம் தெரியுதா என கேட்டுள்ளனர்.. நலத்தை சொல்லிவிட்டு அவர்கள் யார் என்று நியாபகத்தில் இல்லை என கூறி இருக்கிறேன்.. நாங்க மலை-ல இருக்கோம்.. என சின்ன வயசுல உங்க வீட்டுக்கு கொய்யாக்கா பறிக்க வருவோம் என கூறி நியாபகத்தில் வைத்து என்னிடம் வந்து பேசி இருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு அது சுத்தமாக நினைவில் இருந்தது இல்லை.. ஆனாலும் அவர்கள் வந்து பேசும்போது மனம் மிக சந்தோஷத்தில் இருக்கும்.. பின் அப்பா, அம்மாவை பற்றி விசாரித்து விட்டுப் சென்றிருக்கிறார்கள்.
நம் வாழ்வின் சில கட்டங்களில் கடந்து போகும் சிலரை கடந்த காலத்தை போலவே பின்னோக்கி அனுப்பி விடுகிறோம்.. அதன் பின் அவர்கள் நம் நினைவிலும் இருப்பதில்லை.. சில சமயம் அவர்கள் தொடர்புடைய சம்பவங்களும் நம் நினைவில் இருப்பதில்லை.. ஆனால் அப்படிப்பட்ட சிலர் நம்மை நினைவில் நிறுத்தி வைத்திருப்பது ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும்..
அதுபோலவே இனி வருகிறேன் என கூறி சென்ற இச்சிறுவர்களை நினைக்கும்போதும் எனக்கு அதுதான் தோன்றியது.. இனி நான் இங்கு இருக்கும் நாட்களிலும் திரும்ப வரலாம் அல்லது நான் சென்றதும் இங்கு வரலாம், இல்லையெனில் இனி வீட்டுக்கு வராமல் கூட இருக்கலாம்.. ஒரு வேளை மற்ற சிறுவர்களை போல் வெளியில் எங்கேனும் என்னை பார்த்து , வந்து பேசலாம்.. அப்போது காலங்கள் அவர்களுக்கு கொடுத்த உருவ வளர்ச்சியில் நான் அவர்களை அடையாளம் காணுவது கடினமாக கூட இருக்கலாம்.. ஆனால் அவர்களை பற்றி நான் சேகரித்து வைத்துள்ள நினைவுகள் அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டதுமே வெளிப்படும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.