அவள் என் சிறு வயது தோழி... வீடும் அருகருகே இருந்தது.... படிப்பும் ஒரே பள்ளியில்... எப்போதும் துரு துருவென இருப்பாள்.. துணிச்சல் நிறைந்தவள்... கூச்சம் என்பதே அவளிடம் நான் பார்த்தறியாதது.... விழாக்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதாகட்டும், பள்ளியில் ஆசிரியர்களிடம் எதிர் கேள்வி கேட்கும் துணிச்சலாகட்டும், அவளின் அம்மாவின் அலுவலகத்துக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ எங்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆணை போல எங்களை வழிநடத்தி செல்லும் அக்கறையாகட்டும், இவை அனைத்திலும் அவளின் தனித்தன்மை பளிச்சிடும்.. என் அம்மா, அவளை போல் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என எனக்கு அறிவுறுத்தும் அளவுக்கு அவளின் நடவடிக்கைகள் இருக்கும்..
ஒரு முறை அவளின் தாயின் அலுவலகத்துக்கு துணைக்கு என்னை அழைத்துக் கொண்டு போனாள்.. திரும்பி வரும் வழியில் உள்ள டெலிபோன் பூத்தில் , சென்று போன் செய்ய வேண்டும் என கூறினாள். போனில் பேசி கொண்டு இருந்தவள் திடீரென என் கையில் கொடுத்தாள். அவள் யாரிடம் பேசிக் கொண்டிருந்தால் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது.. நான் மறுத்தும், என் கையில் கொடுத்தாள்.. நான் வாங்கி பேசிய பொழுது ஒரு ஆண்குரல்.. கொஞ்சம் தயங்கி, தடுமாறி பேச ஆரம்பித்தது..நல விசாரிப்புக்கு பின் அவளிடம் கொடுத்து விட்டேன்.. அடுத்து பேசிய அவளிடம் அந்த முனையிலுருந்தவர் ஏதோ சொல்ல, நீங்க என்னை ஏமாத்திட்டீங்கன்னா என்ன செய்றது, அதான் என் ப்ரெண்ட்-கும் தெரியட்டும்னு கொடுத்து பேச சொன்னேன் என்றவள், பேசி முடித்த பிறகு தான் அவரை விரும்புவதாகவும், தன் உறவினர் வீட்டுக்கு அருகில் அவர் இருப்பதாகவும் கூறினாள்.. பின் சில மாதங்களில் நாங்கள் வேறு இடத்துக்கு குடிமாறி வந்து விட்டோம்.. எங்களிடையே தொடர்பும் விட்டு போனது.. எப்போதாவது பேருந்தில் பார்த்தால் பேசிக் கொள்வோம்.. ஒரு முறை பேருந்தில் பார்த்த போது அவள் நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமமும், புது மஞ்சள் தாலி கொடியும் அவளுக்கு சமீபத்தில் திருமணமானதை உறுதி செய்தன.. ஏற்கனவே அழகான அவள் திருமண பூரிப்பில் இன்னும் அழகாக இருந்தாள்.. பேருந்தில் அதிக கூட்டமிருந்ததால் அவளால் என்னிடம் வந்து பேச முடியவில்லை.. இறங்கும்போது சிரித்தவாறே கையசைத்து விட்டு போனாள்.
அதற்கடுத்த சில மாதங்களில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்து அதிர்ந்தேன்.... பின் ஒரு நாள் அவள் வீட்டுக்கு சென்ற போது, அவள் காதலித்தவரையே திருமணம் செய்து வைத்ததாகவும், அவள் மாமியார் திட்டி விட்டதற்காக தாய் வீட்டில் வந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்கள். நாங்கள் பழகிய நாட்களில் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அவள், மாமியாரின் வார்த்தைகளில் மனொமொடிந்து தற்கொலை செய்து கொண்டதாக அறிந்த போது என்னுள் வந்த வியப்பு இன்னும் அகலவில்லை.. ..அங்கு வாழ விருப்பம் இல்லை என்றாலும், என் வீட்டிலாவது நான் அவளை வைத்து பார்த்திருப்பேன்.. இப்படி செய்து விட்டாலே என அந்த தாய் அழுதது இன்னும் என் கண்களில் இருக்கிறது.. அவள் தன் கண்ணீர் தீர மரணத்தை தழுவிக் கொண்டு, அந்த கண்ணீரை அவள் தாய்க்கு கொடுத்து விட்டு போய் விட்டாள்....
தற்கொலை கோழைகளின் ஆயுதம் என்பார்கள்..உண்மையில் தற்கொலை செய்து கொள்ளவும் துணிவு வேண்டும்.. ஆனால் அந்த துணிவை வாழ பயன்படுத்திக் கொள்ள அந்த நேரத்தில் மறந்து விடுகின்றனர்..எவருக்கும் தம் உயிரை இழக்க விருப்பம் இருக்காது.. தற்கொலை அளவுக்கு ஒருவர் செல்வாரானால் , பிரச்சனைகளின் பளுவை தாங்க முடியாததே காரணம்...சாக வேண்டும் என முடிவு எடுக்க ஒரு நொடி போதும்..அதற்கு தயாராகும் நிமிடங்களில் மனம் மாறி முயற்சியை கைவிடுபவர்களும் உண்டு.. ஆனால் அந்த நிமிடங்களிலும் மனம் மாறாமல் , தன் மரணம்தான் பிரச்னைக்கு தீர்வு என்று முடிவெடுப்பவர்களே, இறுதியில் தன்னை மாய்த்துக் கொள்கிறார்கள்.. ஆனால் உண்மையில் அவர்களின் தற்கொலை அவர்களின் வாழ்விற்குதான் முடிவே தவிர, பிரச்சனைகளுக்கு அல்ல.. பிரச்சனைகளை மறக்க வைக்குமே தவிர, பிரச்சனைகளை முடித்து வைக்காது.... மேலும் அவர்கள் துயரை வேறு வடிவில் அவர்களை சார்ந்தவர்களின் மேல் இறக்கி வைத்து விட்டு செல்கிறார்கள்...நேற்று நாம் கண்ட துன்பம் இன்று இல்லை என்பதை மனதில் வைத்தாலே, இன்று மலை போல் தெரியும் பிரச்சனைகளுக்காக தன் வாழ்வை முடிக்க துணிய மாட்டார்கள்..
தற்கொலை எண்ணம் வருபவர்கள் "எல்லாம் கடந்து போகும்".... என்ற மந்திரத்தை நினைவில் அதிகம் சுழல விட்டாலே அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விடலாம்...
தற்கொலை எண்ணம் வருபவர்கள் "எல்லாம் கடந்து போகும்".... என்ற மந்திரத்தை நினைவில் அதிகம் சுழல விட்டாலே அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விடலாம்...
இப்போது அவள் வாழ வேண்டிய வாழ்க்கை இன்னொரு பெண்ணுக்கு போய், அவள் கணவன் தன் புது மனைவியுடனும், குழந்தையுடனும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.... அன்று சாக வேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது " இந்த துன்பமும் கடந்து போகும் என்ற எண்ணம் அவளுக்குள் வந்திருந்தால் இன்று இவ்வுலகில் ஒரு மலராக வலம் வந்திருப்பாள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.