எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (10)
- ஒரு நெருங்கிய மரணத்தை காணும்போதோ அல்லது நெருங்கிய ஒருவரை அவரின் மரணத்தருவாயில் சந்திக்கும்போதோ . வாழ்க்கை இவ்வளவுதான் , இதற்குள் எதற்கு இத்தனை போட்டி , பொறாமை என்று எழும் எண்ணம் அங்கிருந்து வெளியேறியவுடன் தன் சுயம் இழந்து நீர்த்து போய் விடுகிறது....
- அனுபவம் வாய்ந்த ஒவ்வொரு மனதிலும், விரிக்கவும் விவரிக்கவும் முடியாத பல ரகசியங்கள் தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லாமல் சுருண்டு படுத்துக் கொண்டுதானிருக்கின்றன.....
- மிக நெருங்கிய உறவுகளைத்தவிர ((கணவன் மனைவி, பெற்றோர்) மற்ற உறவுகளின் உறவு நீடிக்க வேண்டுமென்றால் சிறிது இடைவெளி மிக மிக அவசியம் ....
- நிலைகளில் இருப்புக்கொள்ள மறுக்கும் மனம் நிலையில்லா சம்பவங்களின் பின்னாலேயே அணிவகுத்து செல்கிறது
- சுய முன்னேற்ற நூல்களையோ , தன்னம்பிக்கை நூல்களையோ வாசிக்கும்போது கடவுள் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது....
- நம்பிக்கையே நட்பு உள்ளிட்ட எந்த ஒரு உறவையும் தாங்கும் மூலதனம்..
- தன்னம்பிக்கையின் நிழலில் ஒதுங்கி நிற்கும் நபர்களிடமிருந்து விலகியே நிற்கின்றன கவலைகள்.....
- சுய சம்பாதனை இல்லாத ஆணோ பெண்ணோ, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் தனக்கு நெருங்கியவர்களிடமே தன் சுயமரியாதையை இழக்க நேரிடுகிறது
- மற்றவர் மனங்களை துல்லியமாக காட்டும் கண்ணாடி, நமக்கு வரும் கஷ்டங்கள்தான்....
- காட்டப்படும் பாசத்தின் பின்னால் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டியிருப்பதை அறிய நேரும்போது, அந்நபர் அதுவரை காட்டிய அன்பு சந்தேகிக்கப்படுவது மட்டுமின்றி அவர் மீது மனதில் இருந்த நன்மதிப்பும் உதிர்ந்து விடுகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.