புதன், 26 ஆகஸ்ட், 2015

நியாபகச் சின்னங்கள்

வீடு முழுக்க உன் துணிகளே அடைச்சிருக்கு.. அதனால பீரோ-ல உள்ள வேண்டாததுகள வெளிய போட்டுட்டு துணிகளை பீரோவில் அடுக்கி வைன்னு நான் இங்க வந்ததில் இருந்தே அம்மா சொல்லிட்டு இருந்தாங்க... எந்த வேலையையும் சொன்ன உடனே செய்ய எனக்கு நேரம் இல்லாததால (சொன்ன உடனே செஞ்சு பழக்கம் இல்லாததுனாலன்னு நீங்க மாத்தி படிச்சுட்டா நான் பொறுப்பில்ல) பீரோ என் அம்மா சொன்ன வேண்டாததுகளை சுமந்துட்டே இத்தனை நாளா எனக்காக காத்துட்டு இருந்தது...

சரி, இன்னைக்கு அதுல இருந்த வேண்டாததுகளை அப்புறப்படுத்தி அதுக்கு ஒரு விமோசனம் கொடுக்கலாம்னு வேலையில் இறங்க ஆரம்பிச்சேன்..

அம்மா சொன்ன வேண்டாததுகள்ல முதலிடம் பிடிக்கிறது புத்தகங்கள்..

நான் படித்த துறை சார்ந்த புத்தகங்கள் என் பீரோல பின்பக்க வரிசைல அணிவகுத்துட்டு இருக்கும்.. படித்த(?) பாட புத்தகங்கள் பின்னால் வேலைக்கு போகும்போது உதவும்னு எடுத்து அடுக்கி வச்சது.. ஆனால் நான் போன வேலைகளுக்கு நான் எடுத்து வைத்த புத்தகங்களை நான் ஒருபோதும் தீண்டிக் கூட பார்த்ததில்லை.. உண்மையில் நான் படித்தது நான் பார்த்த வேலைக்கு பயன்படவில்லை என கூட சொல்லலாம்.. அனுபவத்தின் மூலமே வேலையை கற்றுக் கொண்டேன்..

இப்போ, அவைகளை எடுத்து போடலாமான்னு யோசிச்சப்போ, இனி பின்னாலே வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தா, இந்த இடைவெளியில் வேலை செய்வதில் விட்ட தொடர்பை போக்க, இந்த புத்தகங்கள் தேவைப்படுமே என்ற எண்ணம் தோனுச்சு.. உடனே அவைகள் அந்த இடத்தை தக்க வைக்க ஒத்துக்கிட்டேன்...

அடுத்த வரிசைல அவள் விகடன் இதழ்கள் 2 பெரிய பைகளிலும் , அதன் சமையல் இணைப்புகள் இரு சிறிய பைகளிலும் ஆக்கிரமித்து இருந்தன..
இதுக்கு முன்னே சொல்ல ஒரு பெரிய கதையே இருக்கு..(இதுவே பெரிய பதிவு, இதுக்கு உள்ளேயும் பெரிய கதையான்னு நினச்சு சோர்ந்து போகாதீங்க, சுருக்கமா சொல்லிடறேன்..) அந்த இதழ்களை நான் கிட்டத்தட்ட 13 வருடங்களா தொடர்ந்து வாங்கி படிக்கிறேன்.... நான் இப்போ வெளிநாட்டில் இருக்கும் நேரங்களில் என் அப்பா எனக்காக இங்கு வாங்கி வைப்பார்.. வாங்கிய புத்தகங்களை எல்லாம் (சிலது தெரிந்தவர்களுக்கு படிக்க கொடுத்து திரும்ப வந்ததில்லை..) சேமித்து வைத்துக் கொள்வேன்.. அதை வெளியில் போட மனமிருக்காது.. 7 வருடங்களுக்கு முன் நான் வேலைக்கு சென்றிருந்த சமயம், பரண் மேல் இரு பெரிய பைகளில் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் என் தந்தை எடைக்கு போட்டு விட்டார்.. இது ஒரு மாதம் கழித்துதான் எனக்கு தெரியும். அன்று நான் வீட்டில் போட்ட ஆர்ப்பாட்டத்தை பார்த்த என் அப்பா, திரும்ப எடைக்கு போட்ட கடைக்கே சென்று கேட்டிருக்கிறார்.. ஆனால் கொட்டிக் கிடந்த புத்தகக் குவியல்களில் எப்படி தேடிக் கொடுப்பது என கேட்கவும் , ஏதும் செய்ய முடியாமல் திரும்பி வந்து விட்டார்.. அதிலிருந்து தினசரி நாளிதழ்களை விலைக்கு போடும்போது கூட தப்பித் தவறி நான் வாங்கிய புத்தகங்கள் ஏதேனும் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வார்..

ஆனால் அதற்கு பின்னான காலங்களில் பலர் இரவல் வாங்கி சென்ற புத்தகங்கள் திரும்ப வராததினால் கிடைக்கும் புத்தகங்களை மட்டும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேன்.. ஆனால் சமையல் இணைப்புகளை யாருக்கும் கொடுக்காததால் அவைகள் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும்.. (அவ்வளவு சமையல் புத்தகங்கள் இருந்தும், என் அம்மாவிடம் கேட்டு எழுதி சென்ற சாம்பார், மீன்/கருவாட்டுக்குழம்பு, கறிக்குழம்பு மற்றும் புளிக்குழம்புதான் மாறி மாறி என் வீட்டு சமையல் அறையில் சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்..)

இவைகளை வெளியில் போட மனம் வரவில்லை.. காரணம் என்னதான் படித்த புத்தகங்களாக இருந்தாலும், சில வருடங்கள் கழித்து அவைகளை மீண்டும் படிக்கும்போது, ஏற்கனவே படித்த போது நிகழ்ந்த பழைய சம்பவங்கள் வந்து தாலாட்டுவதோடு, படிக்கும் விஷயங்களும் ஒரு மலர்ச்சியை கொடுக்கும்.. இதை உணர்ந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்..
வளர வேண்டிய பிள்ளைகள் இருப்பதால் எப்போதும் போல இப்போதும் சமையல் இணைப்புகளும் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டன...

அடுத்து பொன்மொழிகள்,தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஜோதிடம், என் கணிதம், அழகுக்கலை, சமையல் கலை , தன்னம்பிக்கை நூல்கள், சில நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள் , சுய முன்னேற்ற நூல்கள்,சித்த வைத்தியம், அக்குபஞ்சர் என ஒரு வரிசை.......

உண்மையில் இவற்றில் சில புத்தகங்களை மட்டுமே முழுமையாக படித்து முடித்து இருக்கிறேன்.. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்கு வரும் போதும் , இம்முறை இந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என நினைப்பேன்.. ஆனால் இங்கு வரும்போது பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் பட்டுப்புடவைகளை கூட தவறாமல் மடிப்பு கிழியாமல் இருக்க மறுபக்கம் திருப்பி மடித்து வைக்க புரட்டியிருக்கிறேனே தவிர , இந்த புத்தகங்களை அதன் பிறகு ஒரு முறை கூட புரட்டி பார்த்தது இல்லை..( இந்த முறை ஒன்னையாவது படிச்சு முடிக்கணும்..,ம்ம்ம், பார்ப்போம்..)

அடுத்து ... அடுத்து, அடுத்துன்னு ரொம்ப நீளமா இழுக்கறேன்னு சலிச்சுக்காதீங்க.... இன்னும் ரெண்டு பத்தி-தான்.....

அடுத்து முழுவதும் உபயோகப்படுத்த நினைத்து சில தேதிகளை மட்டுமே நிறைத்து இருக்கக்கூடிய டைரிகள் மற்றும் வாழ்த்து அட்டைகள்.......

படிக்கும் காலத்தில் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள்களின் போதெல்லாம் தோழிகளிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள்.. ஒவ்வொன்றை பிரிக்கும்போதும் அவர்களின் எழுத்துக்களில் உள்ள வாழ்த்து ஆயுளுக்குள் வரும் எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்தான வாழ்த்துக்களாக தோன்றும்.. எனவே அவைகள் பத்திரமாக மீண்டும் அந்த கவருக்குள் எடுத்து வைக்கப்பட்டன..

டைரி.....அன்று நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொரு முறை டைரிகளை பிரித்து படிக்கும்போதும், இன்றும் காட்சியாகி விட்டு செல்லும்.. அதே போல அதில் உள்ள பழைய தொலைந்த நண்பர்களின் காலாவதியான தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள்.... அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என தெரிந்தும், ஒரு சின்ன ஆசை, என்றேனும் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கிக் கொண்டால் தேவைப்படுமே என்று.. கல்லூரியின் கடைசி நாள் அன்று தன் நட்பின் அடர்த்தியை தாள்களில் பதிந்து விட்டு சென்ற தோழிகளின் ஆட்டோக்ராப் ஒரு டைரி முழுவதும்...

இப்படி நினைவுகளை தாங்கும் இவைகளை இழக்க எப்படி மனம் வரும்...??????????

ஆக மொத்தம் எடுத்தத எடுத்தபடியே வச்சுட்டு பீரோவ சாத்திட்டேன்..

இனியும் என் அம்மா வேண்டாதவைகளை அப்புறப்படுத்த சொல்வாங்க, அந்த வேண்டாதவைகள் என் மனதிற்கு வேண்டியவைகள் என அறியாமல்...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.